12

12

தமிழ் கட்சிகளின் அரங்கம் – தமிழ்தேசியக்கூட்டமைப்பு சந்திப்பில் பொது விடயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

Sivajilingam_M_Kதமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் நேற்று சனிக்கிழமை நடத்திய சந்திப்பில் இனப்பிரச்சனைக்கு தகுந்த தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கும் விடயத்தில் இணைந்து செயற்பட இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

இதன்போது பொதுத்தீர்வுத்திட்டம் ஒன்றைக் காணும் வகையில் ஆறு பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கூட்டமைப்பின் சார்பில் மூவரும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் சார்பில் மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சனைக்கான தீர்வு காணும் வகையில் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதெனவும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் நேற்றுப் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழு தனது சிபார்சுகளை இரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் பேச்சாளரும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்,கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை. இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியமர்வு, தமிழ் பிரதேசங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றமை, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் போன்ற விடயங்களில் தமிழ் கட்சிகள் இணைந்து செயற்படுவது முக்கியமானது எனவம், தமிழ் கட்சிகள் யாவும் ஓரணியில் நின்று சமர்ப்பிக்கும் யோசனைகளை அரசாங்கம் நிராகரிக்க முடியாது எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை அலுவலகங்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பம்.

வடமாகாண சபை அலுவலகங்கள் ஜனவரி மாதம் தொடக்கம் யாழ்ப்பாணத்தில் இயங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான சம்பிரதாய நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. வடமாகாண சபையின் ஏழு அலுவலகங்கள் நேற்று பால் காய்ச்சி சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகம் திருநெல்வேலியிலும், உள்ளுராட்சி அமைச்சின் அலுவலகம் கைதடியிலும், திட்டமிடல் அலுவலகம் கல்வியங்காட்டிலும், கணக்காய்வுத் திணைக்களத்தின் அலுவலகம் நாயன்மார்கட்டிலும், வடமாகாண ஆளுநரின் அலுவலகம் சுண்டுக்குழியிலும், கூட்டுறவு ஆணையாளர் அலுவலகம் நல்லூரிலும், திறைசேரி அலுவலகம் றக்கா வீதியிலும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் இவ்வலுவலகங்கள் யாழ்ப்பாணத்தில் செயற்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் மீள்குடியேறியுள்ள மக்கள் மத்தியில் நிலவும் காணிப் பிரச்சினைகள்.

கிளிநொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் மத்தியில் காணிப்பிரச்சினைகள் பெரும் சிக்கலான ஒன்றாகியுள்ளது. காணிப் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகள் அன்றாடம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வந்த வண்ணமுள்ளன.

கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றபட்டு வருகின்ற நிலையில், முன்னர் காணிகளை விற்றவர்கள் மீண்டும் அக்காணிகளைப் பிடித்து வருவதால் அக்காணிகளை கொள்வனவு செய்தவர்கள் சிக்கல்களுக்குள்ளாகி வருகின்றனர்.

கிளிநொச்சியில் பெருமளவு காணிகள் காணிஉறுதிகள் வழங்கப்படாமல் அனுமதிப்பத்திரங்கள் வழங்கபட்ட நிலையிலுள்ளதால் அவற்றை விற்பனை செய்வதற்கு அதிகாரம் இல்லை. ஆனால், உறவினர்களுக்கு அக்காணியை மாற்றம் செய்வதாக காணி அலுவலங்களில் மாற்றங்களை மேற்கொண்டு காணிகள் விற்பனை செய்யப்படும் வழக்கம் உள்ளது. இவ்வாறு விற்பனை செய்யபட்ட காணிகளில் பழைய உரிமையாளர்கள் தங்களது காணி என உரிமை கோரி வருகின்றனர். இவ்வாறான பிரச்சினைகள் தினமும் காணி அலுவலகத்திற்கும் பொலிஸ் நிலையத்திற்கும் வந்தவண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரணைமடுக்குளத்தில் மீன்பிடிக்க படையினர் அனுமதி மறுப்பு.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு அத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட அனுமதி மறுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இரணைமடுக்குளத்தில் மீன்பிடித் தொழிலை தங்கள் வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டு ஈடுபட்டு வந்த குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

இரணைமடுக்குளத்தின் அண்மையிலுள்ள சாந்தபுரத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்கள் இம்மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளன. இக்குடும்பங்கள் தற்போது மீண்டும் அத்தொழிலை மேற்கொள்ள படையினர் அனுமதிக்கவில்லை என சம்பந்தப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். மீன்பிடி அமைச்சு அனுமதி வழங்கியுள்ள போதும் படையினர் இதற்கு அனுமதி வழங்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இத்தொழிலை நம்பி வாழ்ந்த குடும்பங்கள் தற்போது பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள அச்சமூட்டும் கொள்ளைச் சம்பவங்கள்!

யாழ்.குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் குடாநாட்டில் காணப்பட்ட கொள்ளை மற்றும், கடத்தல் சம்பவங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால், குடாநாட்டு மக்கள் அச்சம் கொள்ளும் வகையிலான கொள்ளைச் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.

நேற்றிரவு யாழ்.சங்கானையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமும் கொள்ளையிடப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் கத்தி வெட்டுக்குள்ளாகிய சம்பவமும் அப்பகுதி மககள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கானை இழுப்பைத்தாழ் முருகமூர்த்தி ஆலய பிரதம குருக்கள் வீட்டிற்குள் கொள்iளையிட வந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அவரது மோட்டார் சைக்கிகளை அபகரித்துச் சென்றதுடன் அவரையும் அவரது இரு மகன்மார்களையும் துப்பாக்கியினால் சுட்டும், வாளால் வெட்டியும் காயப்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த நித்தியானந்த குருக்களும், அவரது இரு மகன்மார்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆலய குருக்கள் வவுனியாவிலிருந்து புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்து கொண்டு நேற்று சனிக்கிழமை சங்கானையிலுள்ள தங்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு 8.40 மணியளவில் அவரது வீட்டிற்கு வந்த மூவர் மோட்டார் சைக்கிளை களவாட முற்பட்டுள்ளனர் இதனைத் தடுக்க முற்பட்ட குருக்களையும் அவரது இரு மகன்மாரையும் துப்பாக்கியினால் சுட்டும் வாளால் வெட்டியும் கொள்ளையர்கள் காயப்படுத்தியுள்ளனர். சம்பவத்தில் சி.நித்தியானந்த குருக்கள் (வயது 56) அவரது மகன்மாரான ஜெகானந்தசர்மா (வயது 26) சிவானந்தசர்மா (வயது 32) ஆகியோரே கொள்ளையர்களினால் காயப்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.