நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும் இடதுசாரி முன்னணியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டு உள்ளார். விமான நிலையத்தின் அதிகாரிகள் பொலிஸார் முன்னிலையில் கலாநிதி விக்கிரமபாகுவைத் தாக்கியதாக ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. கலாநிதி விக்கிரமபாகுவை வரவேற்பதற்காக கட்சி ஆதரவாளர்களும் மனித உரிமைவாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் மனித உரிமைவாதிகளும் சட்டத்தரணிகளும் கூடி இருந்ததாகவும் அவர்களுக்கு முன்னிலையிலேயே சீருடை அணிந்த அதிகாரிகள் கலாநிதி விக்கிரமபாகுவைத் தாக்கியதாகவும் அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.
அண்மையில் லண்டன் வந்திருந்த கலாநிதி விக்கிரமபாகு லண்டனில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்விலும் உரையாற்ற அழைக்கப்பட்டு இருந்தார். மேலும் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் கலாநிதி விக்கிரமபாகு கலந்துகொண்டு இலங்கை அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் 100,000 பேர்வரை மரணமடைந்ததாகவும் கலாநிதி விக்கிரமபாகு தெரிவித்து இருந்தார்.
விமானநிலையத்திற்கு வெளியே கலாநிதி விக்கிரமபாகு வரவும் ஒரு டசின் வரையான சீருடை அணிந்த விமானநிலைய அதிகாரிகள் விக்கிரமபாகுவைச் சூழ்ந்து ‘துரோகி’ என முழக்கமிட்டு உள்ளனர். ‘மகிந்தவால் இணைக்கப்பட்ட நாட்டை, துரோகி பிரிக்கப் பார்க்கிறாய்!” என சீருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள் முழங்கி உள்ளனர். மேலும் கலாநிதி விக்கிரமபாகு வானில் ஏறி அவ்விடத்தை நீங்கும்வரை இவர்கள் கோசம் எழுப்பி உள்ளனர்.
கலாநிதி விக்கிரமபாகுவின் வருகை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற எம்ரிவி ஊடகவியலாளர் பிரேம் லால் லங்கா ஈ-நியூஸ் ஊடகவியலாளர் சாந்த விஜயசூரிய ஆகியோரும் தாக்கப்பட்டதாக அச்செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
டிசம்பர் 02ல் ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஜனாதிபதி ராஜபக்ச உரையாற்ற இருந்ததற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு கலாநிதி விக்கிரமபாகுவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தனவும் முக்கிய காரணமாக இருந்ததாக அரச தரப்பில் தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ள நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்று உள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள லங்கா சாசமாஜக் கட்சி உறுப்பினருடன் தொடர்பு கொண்ட போது கலாநிதி விக்கிரமபாகு மீது எவ்வித தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஆனால் அவரைக் காண வந்திருந்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சிருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள் சிலர் ‘துரோகி’ என்றும் ‘நாட்டைப் பிரிக்க வந்த துரோகி’ என்ற வகையிலும் கோசங்களை எழுப்பியதாகவும் தெரிவித்தார். கோசங்களை எழுப்பியவர்கள் கலாநிதி விக்கிரமபாகுவை ஏற்றிச் செல்ல வந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இத்தாக்குதலினால் வாகனம் மிக மோசமாக சேதமடைந்து உள்ளது.
நவம்பர் 28ல் கலாநிதி விக்கிரமபாகு தேசம்நெற் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். (இன்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன உடன் சந்திப்பு.) நீண்டகாலமாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்து வருகின்ற கலாநிதி விக்கிரமபாகு சென்ற கூட்டத்திலும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்து இருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு உடன் தொடர்புகொள்ள முயற்சிக்கப்பட்ட போதும் உடன் தொடர்புகொள்ள முடியவில்லை.