அண்மைக் காலமாக தேசம்நெற் இணையத்தில் வெளியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தொடர்பான நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதி வரலாற்றை மிகச் சரியாகவே மீள் பரிசீலனைக்கும் மீளாய்வுக்கும் உட்படுத்தி உள்ளது. இன்று மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்ட போதும் அன்றைய தவறுகளில் இருந்து இன்று போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. அதனால் இந்த வரலாற்றுப் பதிவுகள் இன்றைய காலகட்டத்தின் மிக அவசியமான தேவையாக உள்ளது.
மே 18 2009ல் முடிவுக்கு வந்துள்ள தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் சரி பிழைகளை நின்று நிதானித்து ஆராயாமல் மீண்டும் எழுந்தமானமான கோசங்களின் அடிப்படையில் அடுத்த நகர்விற்கு தயாராகி உள்ளனர். இன்றைய மோசமான முடிவுக்கு பொறுப்பான அதே அரசியலும் அரசியல் சக்திகளுமே மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்பட்டு உள்ளனர். கடந்தகால தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் அவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக அவர்களுடைய உரிமைகளைப் பறிக்கவே வழிவகுத்தது.
போராட்டத்தை முன்னெடுத்த நான் உட்பட தற்போது எமது தாயக மக்களில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வந்து பாதுகாப்புப் பெற்றுக் கொண்டோம். அன்று எம்மை நம்பிய மக்கள், எம்மால் கைவிடப்பட்டனர். அன்று அந்த மக்களுடன் நின்று போராட்டத்தை சரியாக முன்னெடுக்கத் தவறிய நாம் (அதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்) இன்று ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து அந்நியப்பட்டு, எமது குற்ற உணர்வின் காரணமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படுகிறோம் என்றே தோன்றுகிறது.
அன்று பக்கதில் இருக்கும்போதே மக்களைப் புரிந்துகொள்ளத் தவறிய நாம், இன்று ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் நின்று இணையத்தை வைத்துக் கொண்டு அவர்களுடைய உணர்வுகளைப் புரிவோம் என்ற, இணையக் காதலிலும் கீ போட் புரட்சியிலும் என்னால் நம்பிக்கை வைக்க முடியவில்லை. எமது நடவடிக்கைகளின் விளைவுகளை உணராமல் போராட்டத்தையும் புரட்சியையும் ஏற்றுமதி செய்ய எண்ணும் புதிய பிளாவில் பழைய கள்ளுண்ணும் முன்னாள்களின் சலசலப்புகள், இன்னுமொரு அரசியல் முள்ளிவாய்க்காலை நோக்கி எமது மக்கள் நகர்த்தப்படுகிறார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதனால் எமது கடந்தகால வரலாற்றை மிகத் துல்லியமாக ஆராய்ந்து வரலாற்றை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இக்கட்டுரையைப் பதிவு செய்கிறேன். எனது பதிவு ஒரு சிறு முயற்சியே என்பதால் ஏனையவர்களது ஒத்துழைப்பையும் நாடுகிறேன். இப்பதிவினை நான் தேசம்நெற் பின்னூட்ட களத்தில் பதிவிட்ட அதே பெயரிலேயே பதிவிடுகிறேன். தேசம்நெற் ஆசிரியர் குழு என்னை அறியும். தகுந்த நேரம் வரும்போது என்னை அடையாளப்படுத்திக் கொள்வேன்.
முன்னுரை:
தமிழ்பேசும் மக்களின் போராட்டம், அகிம்சைப் போராட்டமாகத் தொடங்கி, ஆயுதப் போராட்டமாக பரிணமித்து, இன்று முள்ளிவாய்க்கால் வரை வந்து மூழ்கடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆயுதப் போராட்டம் நடத்திய ஒவ்வொரு இயக்கமும் தங்களின் உருவாக்கங்களில் இருந்து அழிந்தது அல்லது அழிக்கப்படும் வரை, இன்று சுயவிமர்சனம் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் நான் சார்ந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (கழகம்) சார்பாக எனது வரலாற்றுக் கடமையை நிலைநிறுத்தி எம் உயிருடன் இருக்கும் சாட்சிகளைக் கொண்டும், தெரிந்த தகவல்களைக் கொண்டும் இப்பதிவினை மேற்கொள்கிறேன்.
எமது போராட்டத்தில் 1972 – 73ற்கு பின் வன்முறையோடு நடந்த ஆயுதக் கலாச்சாரமே இயக்கங்களாக சராசரி மக்களால் ஆரவாரிப்பாக (பெடியங்கள் தமிழீழம் பெற்றுத் தருவார்கள்) பேசப்பட்டது. இவ்வாறான இயக்கங்களில் ஒன்றான கழகம், ஆரம்பத்தில் அடித்தள மக்கள் மத்தியில் நின்று கட்டமைக்கப்பட்டது. காந்தீயம் என்ற அமைப்பின் வட கிழக்கிற்கான நிர்வாக கட்டமைப்பு வேலைத் திட்டங்களின் ஊடாக மக்களை மையப்படுத்திய இந்நகர்வு உள்மட்டத்தில் கழகத்தை உருவாக்கியது என்றால் மிகையில்லை. கழக உறுப்பினராக இருந்த சிலர் ஆரம்பத்தில் ஆயுதத்தை கையிலெடுத்தாலும் – ஆரம்பகால உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், மக்கள் மத்தியில் நின்று செயற்பட்டு உள்ளனர்.
பல சம்பவங்கள் – நகர்வுகள் – திட்டமிடல்கள் – செயற்பாடுகள் – தீர்வுகள் – முடிவுகள் என வரலாறு ஓடிகொண்டிருக்கும் போது, இதில் சேகரிக்கப்படும் அல்லது பதியப்படும் ஆதாரப்படுத்தப்படக் கூடிய உண்மைகளும் நிகழ்வுகளும் தொகுக்கப்பட்டு, சமூகத்தில் பொதுவில் வைக்கப்படும் போதுதான் ஒரு வரலாறு முழுமையடைகின்றது. வரும் சந்ததிக்கும் நாம் கையளிக்கும் ஆவணமாகின்றது.
சமுதாயமானது ஆக்கத்தாலும் – அழிவாலும் வரலாற்றில் நகர்த்தப்படுவது கண்கூடு. மனிதனின் உருவாக்கத்தில் வரலாறு முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றது. எனவே நாம் எமது அனுபவங்களை வரலாறாக்கி எமது அடுத்த சந்ததிக்கு கையளிப்பதுவே ஆரோக்கியமான அடுத்த கட்ட நகர்விற்கு இட்டுச்செல்லும். எனவே எமது இன்றைய வரலாற்றுப் பதிவுகள் நாளைய தமிழ் மனிதனின் உருவாக்கத்தில் மிக முக்கியமானது.
முளைவிட்ட எமது போராட்டம்:
தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டமானது 1948 ற்குப் பின்னால் குறுந்தேசியவாத தலைமைகளினால் அகிம்சை வழிகளால் வழிநடத்தப்பட்டமை நாம் அறிந்ததே. இத்தலைமைகள் பாராளுமன்ற ஆசனங்களை குறிக்கோளாக வைத்து வட கிழக்கில் வாக்கு வங்கிகளை நிரப்பி அமோகமான மக்கள் ஆதரவுடன் பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றின. இவர்கள் எதிர்க்கட்சி என்ற நிலைவரை தங்கள் பாராளுமன்ற அரசியலை முன்னெடுத்தனர். இந்த பாராளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்றுகின்ற விடயமே விடுதலைப் போராட்டம் என்ற வரையறைக்குள்ளேளே தமிழ் குறும்தேசியவாதக் கட்சிகள் தங்களை வளர்த்துக்கொண்டன.
இதனால் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அமைப்புகளில் சிலர்- பல மட்டத்திலும், பல மாவட்டத்திலும்- தன்னிச்சையாக செயற்படத் தொடங்கினர். இக்காலகட்டத்தில் இலங்கை பேரினவாத அரசு இனரீதியான தரப்படுத்தலை அறிமுகப்படுத்தியது. பின் அதனைப் பிரதேசரீதியான தரப்படுத்தலாக மாற்றியது. இதனால் யாழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே கட்டாய சிங்கள மொழிக் கொள்கையால் வேலைவாய்ப்பு தவிர்க்கப்படுதல், 1948லிருந்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் தமிழ் பிரதேச விகிதாசாரங்கள் மாற்றப்படல் போன்ற செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை அரசு மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சமூக பொருளாதார கல்வி நிலைமைகளில் சீர்குலைவுகள் ஏற்படுவது தொடர்ந்தது.
போராட்டம் ஆயுதவடிவம் எடுத்தது:
1970 – 1971 காலகட்டத்தில் இலங்கையில் சிங்கள மாணவ – இடதுசாரிகளின் சேகுவோரா போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது. நாட்டில் ஆயுத கிளர்ச்சியாக வெடித்தது. அன்றைய உலகச் சூழலும் ஆயுதக் கிளர்ச்சிகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. இது தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. இந்தக் காலகட்டத்தில் தமிழ் தலைமைகளை நம்பியிருந்த – தமிழரசுக் கட்சி இளைஞர் அமைப்புக்களில் தீவிரமாக செயற்பட்ட இளைஞர்கள் – தங்கள் தலைமைகளில் மெல்ல மெல்லமாக நம்பிக்கையிழந்தனர். அவர்கள் ஆயுதப் போராட்டங்களின் பக்கம் தங்கள் ஈடுபாடுகளை காட்டத் தொடங்கினர்.
இதில் தென்பகுதியின் ஆயுதப் போராட்டங்களின் சில தொடர்புகளின் – நிமித்தம் யாழ் உரும்பிராயைச் சேர்ந்த சத்தியசீலனும் (தற்போது லண்டனில் வசிக்கின்றார்.) அவரைத் தொடர்ந்து உரும்பிராய் பொன்னுத்துரை சிவகுமாரனும் (இவர்தான் முதல் தற்கொலைப் போராளி. யூன் 05 1974ல் எதிரிப் படைகளிடம் மாட்டிக்கொள்ளாமல் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டார்) உட்பட சில இளைஞர்கள் ஆயுதப் போராட்ட வழிமுறையைத் தேர்ந்தெடுத்தனர்.
அரசியல் தலைவர்களை நோக்கி ஆயுதங்கள் திரும்பின:
தமிழ் தலைமைகளில் இருந்து நம்பிக்கை இழந்த இளைஞர்கள் புரட்சிக் கருத்துக்களை – செயற்பாடுகளை தத்தமது குணாதிசயங்களுக்கேற்ப உருவகப்படுத்திக் கொண்டனர். ஆரம்பத்தில் வெவ்வேறு குழுக்களாக செயற்பட்டனர். இத்தீவிர இளைஞர்கள் ஆரம்பத்தில் அரசு சார்பான தமிழ் மந்திரிகள், எம்.பி க்களுக்கு குண்டெறிதல், சிறு ஆயுதங்கள் – காட்டுத் துவக்கு பாவித்து சுடுதல் எனச்செயற்பட்டனர்.
அடுத்து 1973ல் மந்திரி குமாரசூரியர் ஊர்காவற்துறையில் தபால் நிலையம் ஒன்றினைத் திறப்பதற்காகச் சென்று வரும் வழியில், பண்ணைப் பாலத்தைத் தகர்த்து கொலை செய்ய முயற்சித்தனர்.
யூலை 27, 1975ல் அப்போதைய யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலை செய்யப்பட்டார். இதுவே புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாக அமைந்தது.
இளைஞர்கள் கைது:
இவ்வாறான ஆயுத நடவடிக்கைகளின் எதிர்விளைவாக இலங்கை அரசு இளைஞர்களை இச்சம்பவங்களிலோ அன்றி சந்தேகங்களிலோ கைதுசெய்து சிறைக்கும் சித்திரைவதைக்கும் உட்படுத்தினர்.
குமாரசூரியர் கொலை முயற்சி தொடர்பாக ராஜன் (ஞானசேகரன்) மற்றும் கரையூரைச் சேர்ந்த ஆசீர்வாதம் தாசன் ஆகியோர் கைது செயப்பட்டனர். 1973ஆம் ஆண்டு தை 16ம் திகதி இச்சம்பவம் நிகழ்ந்தது.
இதில் குறிப்பிடத்தக்கதாக துரையப்பா கொலைக்கு பிரபாகரன் பண உதவியை கேட்க, சந்ததியார் (இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினுள் இடம்பெற்ற உட்படுகொலையில் படுகொலை செய்யப்பட்டார்.) தனது சகோதரியின் சங்கிலியை அடைவு வைத்து கொடுத்ததால் பிடிபட்டார். பற்குணராஜா, கலாபதி, கிருபாகரன் (தற்போது பிரான்ஸில் இருப்பவர்) பிடிபட்டு சிறையிருந்தனர். கொலையின் முக்கிய நபரான பிரபாகரன் தப்பிவிட்டார்.
இதுபோல் வெவ்வேறிடங்களிலும் சில சம்பவங்கள் – தீவிரவாதங்கள் – சந்தேகங்கள் என்று பரவலாக இளஞைர்கள் கைதாகியிருந்தனர்.
வட்டுக்கோட்டை தீர்மானத்தை (மே 14, 1976) கூட்டணியினர் அகிம்சை போராட்டமாக முன்னெடுத்த நிலையிலும், அதை முன்னின்று நடத்திய கூட்டணி இளைஞர்களும் பேரவையினரும் கைதாகினார்கள். இதில் உமா மகேஸ்வரனும் (1976) கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசின் எந்த கைதின் போதும் பிரபாகரன் ஒருபோதும் பிடிபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இளைஞர்களின் விடுதலை:
1976ல் இலங்கையில் நடைபெறவிருந்த அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாட்டை காரணம் காட்டி இதற்கு முன்பே சிறையிலிருக்கும் போராட்டம் சம்பந்தமான அனைத்து தமிழ் இளைஞர்களும் விடுதலை செய்யப்பட வேண்டுமென தமிழர் விடுதலை கூட்டணியால் இலங்கை அரசுக்கு கோரிக்கைவிடப்பட்டு பலவழிகளில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் நிமித்தம் 1976 ஆவணியில் சகல தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்பட்டனர்.
இதில் துரையப்பா கொலைவழக்கு மிக கடுமையாகப் பார்க்கப்பட்டு பலதடவை நீதிமன்றத்திற்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்ட வண்ணமே இருந்தது. அதுபோல் குமாரசூரியர் கொலைமுயற்சி 3 வருடம் 8 மாதம் விசாரணைக்கு எடுக்கப்படாமலேயே கிடப்பில் கிடந்தது. எனவே இந்த இளைஞர்களின் ஒட்டுமொத்த விடுதலை கூட ஒரு திருப்பு முனையாக இருந்திருக்கலாம்.
படித்த வாலிபர் திட்டம்:
சிறையிலிருந்து வெளியே வந்த சந்ததியார், ராஜன், சிறிசபாரத்தினம் உட்பட்ட சில இளைஞர்கள் விசுவமடு ‘படித்த வாலிபர் திட்டம்’ அமைக்கப்பட்ட இடத்தில் முகாம் அமைத்து அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதம் மற்றும் அரசியல் பயிற்சிகள் வழங்கினர். இதில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதன்போது 17 வயதில் படித்துக் கொண்டிருந்த யாழ் நகரப் பகுதியை சேர்ந்த மாணிக்கம்தாசன் இணைந்து கொண்டார். பின் தாயார் தேடிவந்து கட்டாயப்படுத்தி திருப்பி அழைத்துச் சென்றுவிட்டார். மேலும் இவ் வேலைத்திட்டத்தில் ஒபராய்தேவனும் (பின்நாளில் டெலா இயக்கத் தலைவர்) ஒரு மாதம்வரை பங்காற்றினார். இக்காலப்பகுதியில் இவர்கள் யாரும் ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பாகச் செயற்படவில்லை. ஒரு குழுவாகவே செயற்பட்டனர். அதற்கு பெயரோ தலைமைத்துவமோ இருக்கவில்லை.
படித்த வாலிபர் திட்டம், 1966 – 1970ல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில், டட்லி சேனநாயக்கா பிரதமராக இருக்கும் போது, அறிமுகப்படுத்திய திட்டம். இலங்கையில் எல்லா மாகாணங்களுக்குமான இளைஞரை மையப்படுத்தி “லாண்ட் ஆமி” தமிழில் “விவசாய படை” என்ற திட்டத்தின் அடிப்படையில் புதுகிராமங்கள் இளைஞர்களால் உருவாக்கப்பட்டது. அதில் உபஉணவுப் பயிர்களை உருவாக்குவதென்று, காணிவெட்டி களனி அமைக்கப்பட்டது. அதனை செய்வதற்கு ரக்ரர் முதல் கொண்டு எல்லா பொருளாதார வசதிகளும் இளைஞர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டது. மேலும் அந்த இளைஞர்களுக்கான சீருடையாக ராணுவ உடையின் வடிவமைப்பில் அமைக்கப்பட்ட உடையும் வழங்கப்பட்டது. இதன் மூலம் மண்வெட்டியுடன் ஒரு கிராமத்து ராணுவ கட்டமைப்பு ஒன்றை உருவாக்கினர்கள்.
இதன் அடிப்படையில் தமிழ் பிரதேசத்தில் விசுவமடு, முத்தையன்கட்டு, மிருசுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.
1970ல் சிறிலங்கா சுதந்திரகட்சி ஆட்சிக்கு வந்து சிறிமாவோ பிரதமராக வந்ததும் ஐக்கிய தேசிய கட்சியின் இந்த திட்டத்தை இலங்கை முழுதும் ரத்து செய்து, அதற்கு பதிலாக இந்த “படித்த வாலிபர் திட்டம்” என்ற ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு ஒவ்வொரு இளைஞருக்கும் 2 ஏக்கர் காணி கொடுக்கப்பட்டு மற்றைய சலுகைகள் சீருடைகள் எல்லாம் நிறுத்தப்பட்டது.
தமிழ் குடியேற்றத்திட்டங்களும் பண்ணைகளும்:
இதே காலகட்டத்தில் மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து 20 மைல் தொலைவிலுள்ள மதுரு ஓயா அருகிலுள்ள புனானை என்ற எல்லைக் கிராமமொன்றில் சிங்களக் குடியேற்றத்தை தடுக்க மரியசிங்கம் இஞ்சினியர் அவர்களால் தமிழ் குடியேற்ற வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. அது பாதியில் கைவிடப்பட்டதும், அதிலும் சந்ததியார், ராஜன், சிறி முதலானோர் இணைந்து கொண்டனர். இங்கு பல இளைஞர்களும் தொண்டராகினர். இதில் சந்திவெளியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவர் பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்டார். (மே 18ற்கு முற்பட்ட புலிகளின் கட்டமைப்பில் நீதியரசர் பதவியை வகித்தவர் ஃபாதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரைதான்.)
இந்தத் தமிழ் குடியேற்றத் திட்டத்தில் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த பலரும் இணைந்தனர். இதில் பின்னாளில் கழகத்தின் உறுப்பினரான வாசுதேவாவும் இணைந்து செயற்பட்டார். இக்குடியேற்றத்திற்கு பட்டிருப்பு கணேசலிங்கம் (பாராளுமன்ற உறுப்பினர்) செங்கலடி, சம்பந்தமூர்த்தி என்போரும் நிறையவே ஒத்துழைப்புக் கொடுத்தனர். மேலும் குடத்தனையை சேர்ந்த அம்பன் என்ற மோகனசுந்தரம் என்பவரும் தொண்டராக வந்து இயங்கியமை குறிப்பிடத்தக்கது.
இப்படியாக பரவலாக குடியேற்றங்களும் விவசாய பண்ணைகளுமாக இளைஞர்கள் இயங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் 1977 இனக்கலவரம் உருவாகியது. இதன்போது கணிசமான மலையகத்து மக்கள் இடம்பெயர்ந்தனர். இதனை மையப்படுத்தி வவுனியாவை நோக்கி குடியேற்றங்கள் பரவலாக நடந்தன.
1960ம் ஆண்டு நீதிராஜா என்பவரின் தலைமையில் சில படித்த இளைஞர்கள் சேர்ந்து ஒரு பெரும் வேலைத்திட்டத்தில் இறங்கினர். அதாவது திருகோணமலையில் ஒரு மருத்துவபீட பல்கழைக்கழகமும், வவுனியாவில் விவசாய பீட பல்கலைக்கழகமும் உருவாக்குவதென உற்சாகமாக செயற்பட்டனர். இதன் முதற்கட்டமாக நெடுங்கேணியில் இருந்து 12 மைல் தொலைவில் “வெடிவைத்த கல்” என்ற கிராமத்தில் காணி வாங்கிவிடப்பட்டது. பின் அரசியல் தடைகள் ஏற்பட்டு அந்த முயற்சிகள் தடைப்பட்டது.
எனவே வெற்றிடமான அந்தக் காணியை 1977ல் சந்ததியார், ராஜன், சிறிசபாரட்ணம் ஆகியோர் சேர்ந்து பொறுப்பெடுத்து இடம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கும் மலையக மக்களுக்கான விவசாய குடியேற்ற திட்டமாக செயற்படுத்தினர். இந்தப் பண்ணை தான் “நாவலர் பண்ணை” எனப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தில் வெளியே இருந்து வந்த இளைஞர்களுடன் வவுனியா இளைஞர்களும் இணைந்து தொண்டாற்றினர். இதில் வவுனியா கணேஸ் எனப்படும் குகன், உருத்திரபுரம் குஞ்சன், யாழ் ஆரியகுளத்தை சேர்ந்த இளைஞர் லோகநாதன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். நவ்வி, பாலமோட்டை, கல்மடு என பரவலான கிராமங்களில் சிறப்பாக இப்பணி தொடர்ந்தது. இவ்வாறு மக்களுடன் மக்களாக நின்று செயற்பட்ட இவர்கள் கூட்டுப் பண்ணைத் திட்டம், பாலர் பாடசாலைகள், பல கிராம அபிவிருத்திகள் என சிறப்பாக இயங்கினர்.
தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம்:
“தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம்” (ரி.ஆர்.ஆர்.ஓ) என்ற அமைப்பு உருவானது. இதற்கு தலைவராக (ரி.ஆர்.ஆர்.ஓ) கே.சி. நித்தியானந்தன் இருந்தார். இவர் ஒரு தொழிற்சங்கவாதி. சிங்கள இடதுசாரிகளின் மத்தியில் பிரபலமானவர் என்றபடியால் தனது பெயரை நித்தியானந்தா என பின்நாளில் மாற்றிக் கொண்டார். இவரின் தம்பியின் மகன் தான் டக்லஸ் தேவானந்தா என்ற தேவானந்தன். இவரும் அவ்வழியே தனது பெயரை மாற்றிக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரி.ஆர்.ஆர்.ஓ செயலாளர் கந்தசாமி. இவர் சிட்டிசென் கொமிட்டி மற்றும் இன்டனெஷனல் அம்னஸ்டி என்பவற்றின் உறுப்பினராக இருந்தவர். சர்வதேசத்தில் இருந்து அகதிகளுக்கான அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதிகளை பெறும் பெறுமதிமிக்க தொடர்பாளர். பின்நாளில் ஈரோஸ் இயக்கத்தால் 1988ற்கு பின் அநியாயமாக கொலை செய்யப்பட்டார்.
மற்றும் மேர்ஜ் எனப்படும் மேர்ஜ் கந்தசாமி 2007வரையில் கூட நாட்டில் சில அரசுசாரா நிறுவனங்கள் ஊடாக சேவையாற்றியவர். பின்னர் ரவீந்திரன், நவம் (இருவரும் தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்கள்.) என்பவருமாக இந்த நிறுவனத்தை நடத்தினர். இதில் முழுநேர பணியாளராக பேபி என்ற பரராஜசிங்கம் (கடந்த 30 வருடமாக பிரான்ஸில் இருப்பவர்) செயற்பட்டார். இவரால் நிர்வாகிக்கப்பட்டது தான் கென்ற்பாம், டொலர்பாம்.
1977 இனக்கலவரத்தின் பின்:
பண்ணை குடியேற்றத்திட்டங்களில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் 1977 இனக்கலவரத்தில் இடம்பெயர்ந்து வந்த கணிசமான மலையக மக்களையும் இரு கரம்நீட்டி வரவேற்றனர். இதன்மூலம் மலையக மக்களும் எம் தமிழ்பேசும் மக்களின் அலகுக்குள் உட்பட்டவர்கள்தான் என்பதுவும் நிரூபிக்கப்படுகின்றது. விடுதலைக்காக எல்லைக் கிராமங்களில் தமது இளமையை வாழ்க்கையை துறந்தும், இடம்பெயர்ந்திருந்து வந்தும் பங்காற்றிய இந்த இளைஞர்கள் தான் எமது விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பப் புள்ளிகள்.
இவர்களெல்லாம் தமிழ் தலைமைகளின் மேடைப் பேச்சுக்களில் மயங்கி புறப்பட்டு அன்றே சிறைக்கும் சித்திரவதைக்கும் தலைமறைவுக்கும் ஆளானவர்களே. ஆயினும் இந்தப் போராளிகளின் ஆரம்பங்கள் தியாகம் நிறைந்ததே. இப்படியாக இந்தப் பணியில் எட்டு மாதம் ஈடுபட்ட பின் சந்ததி, ராஜன் தமது வவுனியா வேலைத் திட்டங்களுக்கு திரும்பினர்.
1977 இனக்கலவரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்பு கிளை இளைஞர் பேரவையின் செயற்பாட்டாளார்கள் உமாமகேஸ்வரன், மண்டுர் மகேந்திரன், சிங்காரவேலன் உட்பட்ட இளைஞர்களும் மகளிர் பேரவையைச் சேர்ந்த ஊர்மிளா, மகேஸ்வரி வேலாயுதம் மற்றும் சில பெண்களுமாக கொழும்பிலிருந்து வந்து, தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தினருடன் இணைந்து தீவிரமாக செயற்பட்டனர். (மகேஸ்வரி வேலாயுதம் மூன்று வருடத்திற்கு முன் புலிகளால் கொலை செய்யப்பட்டவர். 1990 ற்குப் பின் ஈ.பி.டி.பின் முக்கியஸ்தராக இருந்தவர்.)
1977 இனக்கலவரத்திற்கு சில மாதங்களின் பின் உமாமகேஸ்வரன், ஊர்மிளா, மண்டுர் மகேந்திரன் போன்றோருக்கும் பிரபாகரனுக்கும் தொடர்புகள் ஏற்பட்டது. இவர்கள் ராணுவ விடயங்களில் தீவிரம் காட்டியதால் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.
இந்நிலையில் 1978 மட்டில் கே.சி நித்தியானந்தா அவர்களால் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் சந்ததியார், ராஜன் ஆகியோரிடம் அது ஒப்படைக்கப்பட்டது. இதில் கென்பாம் இல் இருந்த 25 குடும்பங்களுடன் டொலர்பாம் வேலைத் திட்டங்களும் இவர்களிடம் கைமாறியது. இங்கு பணியாற்றிய பேபி அவர்கள் அருகேயுள்ள கன்னியாஸ்திரிகள் பொறுப்பில் இருந்த ஒரு பண்ணைக்கு தொண்டராக செயற்படச் சென்றார்.
இந்நேரத்தில் கிளிநொச்சி உருத்திரபுரம் 7ம் வாய்க்கால் பகுதியில் அப்பு என்ற (குடுமிவைத்த வயதானவர்) காந்தீயக் கொள்கையை கடைப்பிடிக்கும் ஒருவர் “குருகுலம்” என்ற அமைப்பை உருவாக்கி பொதுப் பணியாற்றினார். இவர் ஆதரவற்ற பிள்ளைகள், பெண்களை மையப்படுத்தி ஒரு ஆச்சிரமத்தை உருவாக்கி நடாத்தி வந்தார். இவருடன் டொக்டர் ராஜசுந்தரம் உம், டேவிட் ஐயா வும் சில வெளிநாட்டு உதவிகளைப் பெறக்கூடியவிதமாகத் தொடர்புகளை வைத்திருந்தனர். இதேநேரம் வவுனியா கே சி நித்தியானந்தன் உடனும் சில தொடர்புகளுடன் ரி.ஆர்.ஆர்.ஓ இன் செயற்பாட்டாளராக இருந்தார்.
1978 சூறாவளி அனர்த்தமும் தமிழ் இளைஞர்களின் நிவாரணப் பணியும்:
1978 சூறாவளி அனர்த்தம் நிகழ்ந்த காலப்பகுதி. மட்டக்களப்புக்கு சூறாவளி நிவாரணப் பணிகளுக்கு பல தமிழ் இளைஞர்கள் வந்திருந்தனர். இந்த காலகட்டத்தில் ராம்ராஜ் சிறியவயதில் இணைந்து கொண்டு, பின்னாளில் ஒரு சம்பவத்தில் கைதானார். இவருடன் இன்னும் சிலரும் அரசியல் காரணத்தால் கைதாகியிருந்தனர். எனவே சூறாவளி மீட்புப் பணியில் இவர்கள் பங்குகொள்ள முடியவில்லை.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் உடனடி நிவாரண வேலைத் திட்டத்தினை மேற்கொள்வதற்கு சந்ததியார், ராஜன் முதற்கொண்ட இளைஞர்கள் முடிவெடுத்தனர். இதன்படி யாழ்ப்பாணம் கிளிநொச்சி பிரதேசங்களுக்கு இவ்விருவரும் சென்று தம்முடன் அழைத்துச் செல்ல இளைஞர்களை திரட்டினர். உடனடியாக 160 இளைஞர்கள் ராஜன் தலைமையில் உணவுப் பொருட்களுடனும் நிவாரணப் பொருட்களுடனும் புறப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை ஊடாக புறப்பட்டு பின் இங்கிருந்து 14 படகுகளில் கடல்வழியாக மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தை அடைந்தனர்.
வரும் வழியில் உடைக்கப்பட்டிருந்த பாலத்தை இவ்இளைஞர்கள் சாப்பாடு, தண்ணி, நித்திரை இல்லாமல் நின்று சரிசெய்து வாகனங்களில் நிவாரணப் பணிக்கான இடத்தை நோக்கிச் சென்றனர். அங்கு உடனடியாக இவ் இளைஞர்கள் தங்குவதற்காக, வனசிங்கா மாஸ்டர் தலைமை ஆசிரியராக இருந்த அரசடி மகாவித்தியாலத்தில் இவ் ஆசிரியரால் இந்த 160 பேருக்கும் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. பின் வாழைச்சேனைக்கு சென்றனர்.
இங்கிருந்த நிலையில் இவர்களால் நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தொடர்ந்து சந்ததியார் அவர்களுடன் மேலும் வடக்கில் இருந்து இளைஞர்கள் அழைத்து வரப்பட்டனர். மொத்தமாக இப்பணிகளில் 600 வடமாகாண இளைஞர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதில் பிரான்ஸிலுள்ள கோவைந்தன் என்பவர் தானும் கலந்துகொண்டதாக சந்திப்பொன்றில் தெரிவித்தார். இவர் தற்போது யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற ஈபிடிபி இன் பத்திரிகையான தினமுரசு நாளிதளின் ஆசிரியராக இருக்கின்றார்.
இந்த நிவாரணப் பணிக்காக வந்த இளைஞர்கள் அனைவரும் பின் செல்வநாயகத்தின் மகன் ராஜன் (இவர் இலங்கை சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்) அவர்களின் ஏற்பாட்டில் இவரின் தந்தைக்காக கட்டப்பட்ட “செல்வநாயகம் நினைவு மண்டபத்தில்” தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை அரசால் கொழும்பிலிருந்து 20 லொறிகளில் அமெரிக்கன் மா மட்டக்களப்பு மக்களுக்காக வந்தது. ஆனால் அதனை இறக்கி வைப்பதற்கு மட்டக்களப்புப் பகுதியில் கட்டடம் எதுவும் கூரையுடன் இருக்கவில்லை. அனைத்தும் சூறாவளியில் பறந்து விட்டது. அம்பாறைக்கும் வாகனங்கள் போகமுடியாத நிலை. அரசு உத்தரவுடன் மாவினைத் திருப்பி அனுப்ப இருந்தனர். ஆனால் உடனே இந்த இளைஞர்கள் 4 மணி நேரத்தில் செயின்ற் மைக்கல் கல்லூரியின் கூரை ஓடுகள் வேயப்பட்டு சரிசெய்யப்பட்ட நிலையில் இந்த பொருட்கள் இறக்கப்பட்டன. அதாவது ஜி. ஏ. யின் ஏற்பாட்டில் புனித மைக்கல் பாடசாலையில் பாதுகாக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையிலும் ராஜதுரை எம்பி தலையிட்டு படுவான்கரை (தனது தேர்தல் பிரதேசம் ஆகையால்) பிரதேசத்திற்கு எல்லா லொறிகளையும் அனுப்பும்படி கேட்டார். ஆயினும் மட்டக்களப்பு இளைஞர்களும் தொண்டர்களாக பணியாற்றியவர்களும் தலையிட்டு படுவான்கரைக்கு 2 லொறிகளும் ஏனையவற்றை பரவலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க உதவிசெய்தனர்.
மேலும் இந்த சூறாவளி அனர்த்தத்தில் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை சீரழிந்த நிலையில் பாதிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள வைத்தியர்களோ தாதிகளோ இல்லாத நிலையில் இவ் வைத்தியசாலை இளைஞர்களின் கவனத்திற்கு வந்து 15 நாட்களாக பல இளைஞர்கள் நோயாளிகளை பராமரித்து பல உதவிகளும் செய்தனர்.
இந்த மறுசீரமைப்பு பணி ராஜன் உட்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களால் எட்டு மாதங்களாக செயற்படுத்தப்பட்ட விடயம் சாதாரணமானதல்ல. வடக்கு மாகாண இளைஞர்கள் அன்றே கிழக்கின் மக்களுக்காக தமது படிப்பு, வாழ்க்கை, வேலை, குடும்பம், ஏனைய பணிகள் என்பவற்றை விட்டுவிட்டு முழுநேரத் தொண்டர்களாக செயற்பட்டதை அந்த கிழக்கு மக்கள் மறக்கமாட்டார்கள்.
வடகிழக்கு முரண்பாடுகளுக்கு குறுந்தேசியவாத ஒரு சில தமிழ்த் தலைமைகள் (முழு வடக்குத் தலைமைகளும் அல்ல) காரணமாக இருக்கலாம். ஆனால் வட கிழக்கு இளைஞர்களோ, பெரும்பாலான வடகிழக்கு மக்களோ காரணம் என்றுகூறி தமது நலன்களுக்காக வடகிழக்கு பிரிவினைக்கு தூபம் போடுபவர்கள் வரலாறையும் புரட்டிப் பார்க்க வேண்டும்.
பிரபாகரனின் செயற்பாடுகள்:
இந்த மட்டக்களப்பு சூறாவளி நிவாரணத்தின் போது புலிகளோ, புதிய தமிழ் புலிகளோ பங்குபெறவில்லை. 1976ல் பிரபாகரனால் புலி உறுப்பினர் மட்டக்களப்பு மைக்கல் என்பவர் கொலை செய்யப்பட்டமை மட்டக்களப்பு மக்களிடையே பெரும் பதட்டத்தை உண்டுபண்ணி இருந்தது. அதனால் பிரபாகரன் ராஜனிடம் தங்கள் இயக்கத்திற்கு சில இளைஞர்களைக் கேட்டு இருந்தார். அதற்கிணங்க சில இளைஞர்கள் பிரபாகரனுடன் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
1)லோகநாதன் (தற்போது செக்-குடியரசில் இருப்பவர். அந்நாட்டு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.)
2)தாமரைக்கேணியைச் சேர்ந்த பாரூக் என்ற புனைபெயரைக்கொண்ட தமிழ் இளைஞர்.
3)மாணிக்கவாசகரின் மகன் (தற்போதும் கனடாவில் புலிகளின் முக்கிய உறுப்பினர்) உட்பட 5 பேர் ராஜனால் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
பின் பிரபாகரனால் பயிற்சிக்கான இடம் ஒன்று கேட்கப்பட்டது. ராஜனால் வவுனியா- இறம்பைக்குளம் அருகே ‘பண்டிக்கெய்த குளம்’ என்ற இடத்தில் இடமும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.
அதேபோல் குட்டிமணி உட்பட 35 இளைஞர்கள் சிறிசபாரத்தினம் மூலம் ராஜன் அவர்களிடம் இடஉதவி கேட்டதற்கிணங்க அவர்களுக்கான பகுதி ஒன்று நாவலர் பண்ணையில் ஒதுக்கப்பட்டது. 1978 பிற்பகுதியில் சிறி, குட்டிமணி உடன் தனியாக இயங்கத் தொடங்கியிருந்தார். அப்படி அன்றே ராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் அக்கம் பக்கம் இயங்கிய போதும் ஒருவரோடு ஒருவர் புரிந்துணர்வுடன்தான் இருந்தனர்.
காந்தீயம்:
இந்நிலையில் சந்ததியார், ராஜன் ஆகியோரின் வேலைத்திட்டங்களின் பொறுப்புணர்வை அறிந்த டாக்டர் இராஜசுந்தரம், அவர்களை தனது வீடான கொக்குவில் பொற்பதியில் வைத்து சந்தித்து ‘காந்தீயம்’ என்ற ஒரு அமைப்பு வேலைத்திட்டத்தில் ஒன்றிணைத்தார். இதன்படி பரவலாக சமூக, பொருளாதார குடியேற்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. காந்தீயக் கொள்கையில் கிராம மட்டத்தினாலான வேலைத் திட்டங்களின் தோற்றப்பாட்டுடன் வேலைகள் நடந்தது.
ஆனால் உள்ளே டாக்டர் ராஜசுந்தரம், சந்ததியார், ராஜன், சிறி போன்ற இளைஞர்களை மையப்படுத்தி ஒரு அரசியல் செயற்பாடும் நகர்ந்தது. ஆனால் இவ்அரசியல் செயற்பாடுகளில் காந்தீயவாதியான டேவிட் ஐயாவிற்கு பெரிதாக உடன்பாடும் இல்லை. பலவிடயங்கள் தெரியப்படுத்தப்படவுமில்லை. எனினும் இந்நகர்வு பல இளைஞர்களை உள்வாங்கிக் கொண்டிருந்தது.
இப்படியாக ஒருபக்கம் காந்தீய வேலைத் திட்டங்களோடு கிராம முன்னேற்றங்களும், பண்ணைகளும் விஸ்தரிக்கப்பட்டது. வெளிவேலைத் திட்டமாகவும் ஒரு வரையறுக்கப்பட்ட அரசியல் வளர்ச்சியும் உள்ளே நகர்ந்து கொண்டிருந்தது.
மறுபக்கம் உமா மகேஸ்வரன், பிரபாகரன், ஊர்மிளா, நாகராஜா, நிர்மலன் ரவி, சித்தப்பா, யோன், ராகவன் ஆகியோரைக் கொண்ட புலிகள் அமைப்பு சில தீவிரவாத செயற்பாடுகளுடன் இயங்கியது.
மட்டக்களப்பில் இளைஞர் பேரவை:
1979ல் சந்ததியார் – ராஜன் முயற்சியில் மட்டக்களப்பு அரசடி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இளைஞர் பேரவை என்ற பெயரில் அலுவலகம் திறக்கப்பட்டு முதன்முதல் கொடி ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதுதான் பின்நாளில் கழகக் கொடியாக அங்கீகரிக்கப்பட்டது. 1979ல் இக் கொடியுடன் இங்கு பெரும் மேதின ஊர்வலம் நடைபெற்றது வரலாற்று முக்கியத்துவமானது.
1978 சூறாவளியின் மீள்நிர்மாணப் பணிகளில் இந்த வட மாகாண இளைஞர்களின் ஈடுபாட்டால் கிழக்கு மாகாண இளைஞர் மட்டத்திலும் ஒரு வட கிழக்கிற்கான நல்லுறவை உருவாக்கியது. தமிழ்தேசிய தலைமைகளின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த பெரும்பான்மையோர் காசி – வண்ணை – சேனாதி போன்றவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் வட்டத்தை விட்டு பரவலாக வெளியே செயற்படத் தொடங்கினர். இதன் எதிரொலிப்பு இந்த மட்டக்களப்பு ஊர்வலத்தினதும் பொது கூட்டத்தினதும் பெரும் வெற்றியாக அமைந்தது.
பஸ்தியாம்பிள்ளை கொலை:
பஸ்தியாம்பிள்ளை கொலை உட்பட பல செயற்பாடுகளால் இலங்கை அரசினதும் ராணுவத்தினதும் பார்வை தமிழ் இளைஞர்கள் மீது திரும்பியது. பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட 4 பொலிஸாரின் உடல்கள் கிணற்றில் கிடந்து அழுகி சில நாட்களுக்குப் பின் ராணுவம் கைப்பற்றியது. பிரபாகரனும், அன்ரனியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியாமல் அங்கு சென்றனர். அந்த உடல்களை மூன்றாவது நாள் கிணற்றில் எட்டிப் பார்த்ததில் இந்த உடல்களின் அகோரநிலையால் பிரபாகரன் மிகக் கிலேசமடைந்ததாகவும் இதைத் தொடர்ந்து காய்ச்சல் வந்ததில் மூன்று நாட்கள் பரந்தனில் 5ம் வாய்க்காலிலுள்ள வீடொன்றில் தங்கி இருந்ததாகவும் அந்த வீட்டினர் சொன்ன தகவலும் ஒன்று உண்டு.
இதன் முக்கிய கட்டமாக வவுனியாவில் இன்பம், பாலேந்திரன் உட்பட 4 தமிழ் இளைஞர்கள் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர். மேலும் 1979ம் ஆண்டு அமுலுக்கு வந்த பயங்கரவாத தடைச்சட்ட அமுலும் பல தமிழ் இளைஞர்களை முக்கியமாக பண்ணைகளில் செயற்பட்டவர்களை தலைமறைவாக்கியது.
இந்நிலையில் புலிகள் அமைப்பினரும் சிதறி இந்தியா வரையில் சென்று தப்பினர். இந்நிலையில்தான் இந்தியாவில் வைத்து புலிகளின் உடைவு இடம்பெற்றது. ‘உணர்வு’ குழுவாக ஒன்றும் ‘புதியபாதை’ குழுவாக ஒன்றுமாக பிரிந்தனர்.
காந்தீயப் பண்ணைகளில் இருந்தவர்கள் மிக கவனமாக குடியேற்றங்களிலும் வேலைத் திட்டங்களிலும் ஈடுபட்டதாலும் காந்தீயம் என்ற பெயர் ஒரு பாதுகாப்பை அளித்ததாலும் இவர்களுக்கு பெரிதாக அச்சுறுத்தல்கள் இருக்கவில்லை.
ஊர்மிளாவின் மரணம்:
முன் குறிப்பிட்டதுபோல் புலிகள் உடைந்து போனதில் இந்தியாவிலும் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையில்லாத நிலையில் அவர்களுக்கு உள்ளும் தலைமறைவுகள் தவிர்க்க முடியாததொன்றாகியது. இந்நிலையில் மஞ்சட் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த ஊர்மிளா வவுனியாவிற்கு திரும்பி காந்தீய செயலாளர் டாக்டர் ராஜசுந்தரம் அவர்களின் மனைவியான சாந்தியின் “சாந்தி கிளினிக்”கில் வைத்தியம் பார்த்தார். ஊர்மிளா வருத்தம் மிக முற்றிய நிலையில் இங்கு வந்ததால் இவரை சுகப்படுத்த முடியாத நிலையில் மரணமானார். இவ் மரணத்தின்போது மண்டூர் மகேந்திரனும், டாக்டர் சாந்தியும் அருகில் இருந்தனர். இவரது மரணம் 1980 மே 17ம் திகதி என்பதுவும் இதையடுத்து மரண அடக்கம் வவுனியா மண்ணில் மே 19ல் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இதன்பின் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
தமிழீழ விடுதலைக் கழகம் தோற்றம்:
புலிகளின் உடைவில் உமாமகேஸ்வரன் புலிகளின் மரண தண்டனைக்கு தப்பி இந்தியாவில் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் சந்ததியும் ராஜனும் வவுனியாவில் பேசிமுடிவெடுத்து ராஜன் இந்தியாவிற்கு சென்று உமாவை சந்தித்து இங்கு அழைத்து வருவதாக இருந்தது. இந்த முடிவின்படி ராஜன் தலைமன்னாரினூடாக (ராஜன் தலைமன்னாரில் படகிற்காக காத்து நிற்கும் போது தான் ஊர்மிளா இறந்த செய்தி கிடைத்தது.) இந்தியா சென்று மற்றாஸ் மண்ணடி என்னும் இடத்தில் உமாவை சந்தித்து பல விடயங்கள் பேசி ஒரு புதுக்கட்டமைப்பில் செயற்படுவதற்கு உமாவும் உடன்பட்டார்.
இதன்பின் ராஜன் புறப்பட்டதும் உமா நாட்டிற்கு திரும்பிவரவும் ஒழுங்குகள் செய்யப்பட்டு உமாவும் வந்து சேர்ந்தார். இதை அடுத்து 1980 ஆண்டு ஆகஸ்ட் மாதம் சங்கானை தொண்டர் கந்தசாமி என்பவரின் வீட்டில் “தமிழீழ விடுதலைக் கழகம்” என்ற பெயருடன் ஏற்கனவே 1979ல் தெரிவு செய்யப்பட்ட கொடி – நிறங்களுடன் முதலாவது கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் வசந்தன் என்ற சந்ததியார், ராஜன் என்ற ஞானசேகரன், முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன், சுந்தரம் என்ற சிவசண்முகமூர்த்தி, மாணிக்கம்தாசன், அவ்வீட்டு கந்தசாமியின் மகன் கண்ணன் (தற்போது ஜேர்மனில் இருப்பவர்) ஆகியோர் உறுப்பினர்களாயினர்.
இதற்குப் பின் சில வாரங்களில் இவ் உறுப்பினர்கள் சந்தித்து முதலாவது மத்திய குழு தெரிவு செய்யப்பட்டது. இதில் சந்ததியார், ராஜன், உமாமகேஸ்வரன், சுந்தரம், பாபுஜி தெரிவு செய்யப்பட்டனர்.
சுந்தரத்தால் மானிப்பாயைச் சேர்ந்த காத்தான் என்ற கிருஷ்ணகுமார் 1979ல் கழகத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.
கழகத்தின் இராணுவ நடவடிக்கைகள்:
இதன்பின் கழகத்தின் முதலாவது ராணுவ நடவடிக்கையாக 1980 செப்டம்பரில் ஒரு செயற்பாடு கழகத்தில் முடிவெடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது. அந்த முடிவிற்கமையவே ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரான பாலசுப்பிரமணியம் என்பவர் கொலை செய்யப்பட்டார். வவுனியா, கிளிநொச்சி, பரந்தன் ஆகிய பகுதிகளில் ஐ.தே.கட்சி அலுவலகம் திறக்க ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்கு முதற்கட்டமாக காமினி திசநாயக்கா இங்கு வந்தவேளையில் இக்கொலை நடைபெற்றது.
அடுத்ததாக கிளிநொச்சி வங்கிக்கொள்ளை 1981ல் ஒக்டோபர் 20ம் திகதி நடைபெற்றது. இவ் வங்கிக் கொள்ளையில் 116 கிலோ தங்கம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது. பணம் இருக்கவில்லை. இதில் ராஜன், சுந்தரம், நிரஞ்சன், உமா, பாருக் (பின் புலிகளால் கடத்தி இதுவரை இல்லாமல் போனவர்) அன்பழகன், (இவர் திருகோணமலை திரியாயை சேர்ந்தவர். வெலிகடைச் சிறையில் கொல்லப்பட்டவர்.) றொபேட் (தெல்லிப்பளையைச் சேர்ந்த இவரும் வெலிகடைச் சிறையில் கொல்லப்பட்டார்), பாபுஜி, சிவசுப்பிரமணியம் (பரந்தன்) உட்பட 12 பேர் பங்காற்றினர்.
சரியாக ஒருமாதத்தில் நவம்பர் 20ம் திகதி ராஜன் மடுப்பகுதி வீட்டில் தங்கியிருக்கும் போது எதிர்பாராத நேரத்தில் வீட்டில் ராணுவம் சுற்றிவளைத்ததில், மதில் சுவரால் குதித்து ஓட முற்பட்ட நிலையில் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்ததால், இறந்ததாக நினைத்து கொண்டு இராணுவம் சென்றுவிட்டது. ஆனால் ராணுவ வைத்தியசாலையில் சில நாட்களுக்குப்பின் கண்விளித்தார். தொடர்ந்து மாணிக்கம்தாசன், பாபுஜி, பாருக், றொபேட், அன்பழகன் ஆகியோர் ஓரு மாதத்தின் பின் அடுத்தடுத்து தமது கவனக் குறைவால் பிடிபட்டனர்.
இயக்க மோதல்கள்:
1982ல் புலிகளால் தேடப்பட்ட சுந்தரம் தை 2ம் திகதி யாழ் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்த சுந்தரத்தின் கொலைக்கு இறைகுமாரனே (இவரின் பொறுப்பில் தான் புலிகளின் உணர்வு பத்திரிகை இருந்தது) காரணம் என்று சந்ததியாரால் முடிவெடுக்கப்பட்டு இறைகுமாரன், உமைகுமாரன் ஆகிய இருவரும் பின்னால் கழகத்தில் இணைந்த வடலியடைப்பு கண்ணன் என்ற ஜோதீஸ்வரன் என்பவரால் கொலை செய்யப்பட்டனர். (இவர் 1984ல் கழக படைத்துறைச்செயலராக நியமிக்கப்பட்டார்.)
கழகத்தில் கந்தசாமி அல்லது சங்கிலி என்பவர் 1981ல் பண்ணை வேலைத் திட்டத்திற்காக சந்ததியாரால் (வவுனியாவில் ஒரு கடையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில்) கொண்டு வரப்பட்டவர். சங்கிலி 1984ல் புலனாய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர். புளொட் அமைப்பில் இடம்பெற்ற உட்படுகொலைகளில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. 1988ல் வவுனியா முள்ளிக்குளம் புளொட் முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இலங்கை இராணுவத்தினாலும் இணைந்து தாக்கப்பட்ட போது கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் இருதரப்பிலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
உமா மகேஸ்வரன் செயலதிபரானார்:
கழகத்தை உருவாக்கிய அடிமட்டத் தோழர்களும், மத்திய குழு உறுப்பினர்கள் அதிகமானோரும் கைது செய்யப்பட சந்ததியாருடன் உமா முன்னணி அங்கமானார். இதில் உமாவின் கடந்தகால புலிகளின் தீவிர அரசியலும், உமா – பிரபா இணைவு – பிரிவு என்பது மட்டும்தான் சராசரி மக்களுக்கோ இலங்கை அரசுக்கோ பரவலாக தெரிந்து இருந்தது. உமாவின் தலைமைத்துவ ஆளுமைப் பண்புகளும், 1982ல் பாண்டி பஜார் உமா – பிரபா சூடுபாடும் அதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதும் உமாமகேஸ்வரனுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்தது. உமாமகேஸ்வரனை கழகத்தின் செயலதிபர் அந்தஸ்திற்கு உயர்த்தியது. கழகத்தை உருப்படுத்திய ராஜன் உள்ளேயும் சந்ததியாரின் அட்டகாசமில்லாத, அமைதியான, ஆழமான சுபாவமும் உமா மகேஸ்வரனை கழகத்தின் முதன்மையாக்கியதில் ஆச்சரியம் இல்லை.
ஆரம்பத்தில் இருந்து காந்தீயத்தினூடாக திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் எனக் காலற நடந்து தேடிக்கண்டு பிடித்த எத்தனையோ செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து ராஜசுந்தரம், டேவிற் ஜயா அவர்களின் பெரிய பொருளாதார வெளிநாட்டு நிதிகளுடன் கூடிய சமூகஸ்தாபன நகர்வுகளும் கழகத்தின் மத்திய குழுவிலிருந்து அடிமட்டம் வரை பெரியளவில் எமது போராட்டப் பாதைக்கு உரமிட்டது.
சந்ததியாரால் 1980, 1981, 1982 என்று ஒவ்வொரு கட்டமாக காந்தீய வேலைத்திட்டம் பண்ணைகளூடாக பிரதேச ரீதியாக பரவலாக உள்வாங்கப்பட்ட திருமலையில் ஜெயச்சந்திரன், ஜான், சலீம், கேசவன், மட்டக்களப்பு வாசுதேவா, ஈஸ்வரன், யோகன் கண்ணமுத்து, வவுனியா முரளி, ஆதவன், பொன்னுத்துரை, கந்தசாமி, சறோஜினி, பெரிய செந்தில் ஆகியோருமாக பின் மத்திய குழுவரை இவர்களின் பாத்திரம் நகர்ந்தது.
கழக மத்திய குழு உறுப்பினர்கள்:
1. முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன் – செயலதிபர். யாழ்ப்பாணம், புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்தவர். இயக்க உட்படுகொலையில் கொல்லப்பட்டவர்.
2. வசந்தன் என்ற சந்ததியார் – அரசியல் துறைச் செயலாளர். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர். உட்படுகொலையில் கொல்லப்பட்டார்.
3. ராஜன் என்ற ஞானசேகரன் – பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றவர். புளொட் உள்முரண்பாட்டில் அதிலிருந்து விலகி ஈஎன்டிஎல்எப் அமைப்பை உருவாக்கியவர். கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்தவர்.
4. வாசுதேவா – மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். அம்மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு இவரும் இவருடன் சென்றவர்களும் தந்திரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
5. கண்ணன் என்ற ஜோதீஸ்வரன் – படைத்துறைச் செயலராக இருந்தவர். யாழ்ப்பாணம் வடலி அடைப்பைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.
6. சுந்தரம் என்ற சிவசண்முகமூர்த்தி – புதியபாதை பத்திரிகையை ஆரம்பித்து நடத்தியவர். தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன் முதலாகக் கொல்லப்பட்ட மாற்று இயக்கப் போராளி இவர். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்.
7. காத்தான் என்ற கிருஸ்ணகுமார் – யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்தவர்.
8. ஜக்கடையா என்ற ஆதவன் – வவுனியாவைச் சேர்ந்தவர். உட்படுகொலையில் கொல்லப்பட்டவர்.
9. பெரியமுரளி – வவுனியாவைச் சேர்ந்தவர். தற்போது மத்திய கிழக்கில் வாழ்கிறார்.
10. ஈஸ்வரன் – மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ஹொலண்ட்க்கு புலம்பெயர்ந்து வாழ்ந்தவர். பின்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.
11. அசோக் என்ற யோகன் கண்ணமுத்து – அம்பாறைப் பொறுப்பாளராக இருந்தவர். புளொட் உள்முரண்பாட்டில் ஈஎன்டிஎல்எப் அமைப்புடன் இணைந்து பின்னர் அதிலிருந்தும் வெளியேறியவர். பிரான்ஸ்க்கு புலம்பெயர்ந்த இவர் தொடர்ந்தும் அரசியல், கலை இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர். மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.
12. பார்த்தன் என்ற ஜெயச்சந்திரன் – தள இராணுவப் பொறுப்பாளர். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் கூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டார். திருகோணமலையைச் சேர்ந்தவர்.
13. காந்தன் என்ற ஜான் – பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றவர். உள்முரண்பாட்டில் புளொட்டை விட்டு வெளியேறி தீப்பொறி குழு ஆகச் செயற்பட்டவர்களில் முக்கியமானவர். தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர். மே 18 இயக்கம் உருவாக்கப்பட்டதில் முக்கியமானவர். திருகோணமலையைச் சேர்ந்தவர்.
14. பாலன் என்ற சலீம் – தள நிர்வாகப் பொறுப்பாளர். திருகோணமலையைச் சேர்ந்தவர். தீப்பொறிக் குழு உடன் வெளியேறியவர்.
15. கேசவன் – தீப்பொறிக் குழுவைச் சேர்ந்தவர். புதியதோர் உலகம் நாவலின் ஆசிரியராக இவரது பெயரே குறிப்பிடப்பட்டு உள்ளது. திருகோணமலையைச் சேர்ந்தவர்.
16. பாபுஜி – அனைத்து முகாம் பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் ஈஎன்டிஎல்எப் இல் இணைந்து கொண்டவர். யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்தவர். தற்போது கனடாவில் வாழ்கின்றார்.
17. செந்தில் – அனைத்து முகாம் பின்தள பொறுப்பாளராக இருந்தவர். வவுனியாவைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலை இயக்கத்தினால் கொல்லப்பட்டார்.
18. மாணிக்கம் தாசன் – இராணுவப் பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்தவர். உமா மகேஸ்வரன் கொலை செய்யப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது போது இவர் அதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தார். ஆனால் பின்னர் உமா மகேஸ்வரனின் கொலையை நிறைவேற்றிய ராபினையும் அவரது மனைவியையும் ஹொலண்டில் வைத்துப் படுகொலை செய்ததில் மாணிக்கம்தாசன் சம்பந்தப்பட்டு இருந்தார். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இறுதியில் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்.
19. குமரன் என்ற பொன்னுத்துரை – தளப் பொறுப்பாளராக இருந்தவர். யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்தவர். தற்போது பிரான்ஸில் வாழ்கிறார்.
20. சங்கிலி என்ற கந்தசாமி – புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். இயக்கத்தினுள்ளும் வெளியேயும் நடந்த பல படுகொலைகளுக்கு இவரே பொறுப்பாக இருந்துள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்.
21. சறோஜினி – இவர் வவுனியாவைச் சேர்ந்தவர். தற்போது கனடாவில் வாழ்கின்றார். மத்திய குழுவில் இருந்த ஒரே பெண் உறுப்பினர் இவர்தான்.
22. நிரஞ்சன் அல்லது காக்கா என்ற சிவனேஸ்வரன் – யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்தவர். உட்படுகொலை செய்யப்பட்டவர்.
23. சீசர் – இவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர். தொழிலாளர் பாதை அமைப்பைச் சேர்ந்தவர்.
24. சேகர் – இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இந்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரி. இவர் மத்திய குழு உறுப்பினரல்ல எனத் தெரிவிக்கப்பட்ட போதும் அனைத்து மத்திய குழு கூட்டங்களிலும் இவர் கலந்துகொண்டுள்ளார். அதனால் அவரது பெயரும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது.
தமிழீழ விடுதலைக் கழகம் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆனது:
1983ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் வவுனியாவிலுள்ள காந்தீய தலைமை அலுவலகம் இலங்கை ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. டாக்டர் ராஜந்தரமும் டேவிட் ஐயாவும் கைது செய்யப்பட்டு பதட்டமான சூழல் இருந்தது. இந்நிலையிலும் 1983ம் ஆண்டு மேதினம் திருகோணமலையில் சின்ன முற்றவெளியில் ஜெயச்சந்திரன் (பார்த்தன்) தலைமையில் தமிழீழ விடுதலை கழகம் என்ற பெயரிலேயே நடைபெற்றது. இதன்போது 3 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட கழகக் கொடியின் கீழ் இம் மேதினம் நடைபெற்றது.
இதற்கு எல்லா மாவட்டங்களில் இருந்தும் கழக உறுப்பினர்கள் வந்திருந்தனர். இதில் மட்டக்களப்பு பொறுப்பாளர் வாசுதேவா தலைமையிலும் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் யோகன் கண்ணமுத்து தலைமையிலுமாக கிழக்கிலிருந்து உறுப்பினர்கள் கொண்டுவரப்பட்டனர். யாழ் மாவட்ட பொறுப்பாளர் பொன்னுத்துரை தலைமையில் ஒரு பேரூந்து நிறையவே உறுப்பினர்களும் முல்லைத்தீவு பொறுப்பாளர் சுந்தரம் என்ற நவம் தலைமையில் ஒரு குழுவும் கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளர் கண்ணன் ஒரு குழுவுமாக கழக உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்களுமாக பலர் கலந்து கொண்டனர்.
இதில் விசேட பேச்சாளராக வாசுதேவா, யோகன் கண்ணமுத்து இன்னும் சிலரும் உரையாற்றியிருந்தனர். ஜான் மாஸ்ரர் மருத்துவபீட பல்கலைக்கழக நுழைவு கிடைத்த புதிதென்பதால் இதில் கலந்துகொள்ள முடியவில்லை. மற்றும் திருமலை முன்னணி இளைஞர்களான ஜெயகாந்தன், ராதாகிருஸ்ணன் (இவர்கள் தற்சமயம் லண்டனில் வசிப்பவர்கள்.) ஆகியோரும் மத்திய குழு உறுப்பினர் சலீம் உட்பட பல கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
தமிழீழ விடுதலைக் கழகம் என்ற பெயரும் 3 நட்சத்திரங்கள் அமைந்த கழக கொடியுடன் நடந்த கடைசி நிகழ்வும் ஆகும். இந்த மே தினக் கூட்டம் இலங்கை அரசின் உன்னிப்பான கண்காணிப்புக்கு உட்பட்டு புகைப்படங்களும் அவர்களால் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எல்லா மாவட்ட காந்தியமும் அரசின் விசாரணைக்குட்பட்டு மூடப்பட்டு கழக – காந்தீய உறுப்பினர்கள் ராணுவ கெடுபிடிகளுக்கு உட்பட்டனர். இதனையடுத்துக் கூடிய மத்திய குழு தங்கள் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் அறியப்பட்டதனால் தங்கள் அமைப்புக்கு பெயரையும் கொடியையும் மாற்ற முடிவெடுத்தனர். தமிழீழ விடுதலைக் கழகம், ‘மக்கள்’ ஜ உள்வாங்கி தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ஆனது. கழகக் கொடியில் இருந்த மூன்று நட்சத்திரங்களில் இருண்டு நட்சத்திரங்கள் நீக்கப்பட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் புதிய கொடியைப் பெற்றது.
1983 இனக்கலவரமும் அதன் பின்னரும்:
1983 யூலை வெலிக்கடைப் படுகொலையில் எமது மக்கள் விடுதலைப் பாதையின் அச்சாக சுழன்று திரிந்த டாக்டரின் இழப்பு பேரிழப்பாகியது. அதனைத் தொடர்ந்த 1983 இனக்கலவரம். இழப்புக்களுடனும் ஒரு வெறித்தனமான உத்வேகத்துடனும் எமது விடுதலைப் போராட்டத்தை அசாதாரண வளர்ச்சிக்கு இட்டுச்சென்றது. இதில் கழகத்தின் வளர்ச்சியானது வீங்கி முட்டி ஊதிப்பெருத்த நிலையில் 1983 பிற்பகுதியில் உள்முரண்பாடுகளுக்கு உட்பட்டது.
இதில் சில தனி நபர்களின் பலம் – பலவீனம் தான் வரலாற்றுடன் நகர்ந்தது. உமா மகேஸ்வரன் தனது பாதுகாப்பிற்கென தனதருகில் வைத்திருக்கக் கூடியவர்கள் தன்னைச் சுற்றிய விசுவாசிகளாகவும் தனது சொல்பேச்சுக் கேட்பவர்களாக மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணத்திலேயே இருந்துள்ளார். இந்தத் தகுதியின் அடிப்படையில் பதவிகள் நிர்வாகங்கள் தெரிவு செய்யப்பட்டமையும் மூத்த உறுப்பினர்களை ஓரம்கட்டி அதுவும் சந்ததியார், ராஜன் ஆகியோரின் பாத்திரங்களையும் பதவிகளையும் முடக்கி அரசியலின் அரிச்சுவடு தெரியாத வாசுதேவாவை அரசியற் துறைச்செயலராகவும், எதற்கும் தலையாட்டும், ராணுவம் என்பது என்னவென தெரியாத கண்ணனை படைத்துறை செயலாளராகவும், புலனாய்வுத்துறையின் செயற்பாடுகளை உமா தன் கைவசப்படுத்தியும் வைத்திருந்தார். அதற்காக தனிநபர் விசுவாசத்தை மட்டுமே தகுதியாக கொண்டோரை கொண்ட ஒரு புலனாய்விற்கே சம்பந்தம் இல்லாதோரை தனது கைக்குள் வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை காலமும் வரையறுக்கப்பட்ட அரசியலை ஒழுங்குபடுத்தி செய்து வந்த நிலையில் சந்ததியாரின் 1983ற்கு பின்பான நிகழ்வுகள் அவரை நெருக்கடிக்குள் தள்ளியது. கழகத்தின் இந்த அபரீத வளர்ச்சி கட்டுக்கடங்காமல் போனதும் நாட்டை விட்டு அந்நிய தேசத்தில் போராட்டம் திசை திரும்பிய நிலையுமாக பல எதிர்கால கேள்விகளையும் குழப்பத்தையும் இவருக்கும் இவரை சுற்றியிருந்த அல்லது இவரை மையப்படுத்தியவர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியது. முடிவு தெரியாத – முடிவெடுக்க முடியாத சூழல் இவர்களை இறுகியது. இவரின் சூட்சுமமான பேச்சு, நிதானமான போக்கு இவரை இந்த வேகமான வளர்ச்சிக் கட்டத்தில் காலத்தின் கைதியாக்கியது.
மேலும் இதற்கு பின்வந்த வரலாறு பின்னால் எல்லோருக்கும் தெரியப்பட்டதே. காந்தீயத்தினூடு கழகம் கட்டமைக்கப்பட்ட சம்பவங்களிற்கு முன்னால் காந்தீயத்திற்கான ஒவ்வொரு மாவட்டத்திற்கான செயற்பாடுகளும் அதில் டாக்டர் ராஜசுந்தரம், டேவிட் ஐயாவின் நகர்த்தல்களும் தனி ஒருபதிவிற்கானது.
கழகத்தின் உட்படுகொலைகளில் உயிரிழந்த போராளிகளுக்கு இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.
நிலா(முன்னாள் கழகப் போராளி)
இக்கருத்துக்களம் பகுதியில் தமிழீழ விடுதலைக் கழகம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் ஆகிய இயக்கங்களில் இருந்து உட்படுகொலையிலும் இயக்க மோதலிலும் மற்றும் மோதல்களிலும் கொல்லப்பட்ட போராளிகளின் பெயர்களைப் பதிவு செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தேசம்நெற்