வடமராட்சியையும், வடமராட்சிக் கிழக்கையும் இணைக்கும் மருதங்கேணிப் பாலத்திற்கு மேலாக வெள்ளம் பாய்வதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இதனூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வடமராட்சிக் கிழக்குப் பிரதேச மக்களுக்கு படகு மூலமே அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அத்துடன் அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள வடமராட்சிக்கிழக்கு மக்கள் மழையினால் எற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்துள்ளனர்.
ஆழியவளை, உடுத்துறை. வத்திராயன், மருதங்கேணி, தாளையடி, செம்பியன்பற்று, ஆகிய பகுதிகளில் குடியமர்ந்துள்ள பொதுமக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் தங்கள் குடியிருப்புக்களிலிருந்து வெளியேறி அண்மையிலுள்ள ஆலையங்களிலும், மேட்டுப்பகுதிகளிலுள்ள நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர். வடமாராட்சிக் கிழக்குப் பகுதிகளுக்கான போக்குவரத்துக்களும் வெள்ளப்பெருக்கினால் தடைப்பட்டுள்ளதோடு அப்பிரதேசத்தின் பல வீதிகளும் சேதமடைந்துள்ளன.