யாழ்.சிங்கள மகாவித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு யாழ்.நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெற்கிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தங்கள் பிள்ளைகளை அடுத்து வரும் புதிய ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவர வேண்டியுள்ளதாகவும், அதற்கு வசதி செய்யும் வகையில் யாழ்.சிங்கள மகாவித்தியாலயத்தை புதிய ஆண்டில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தைக் கோரியுள்ளதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் இதுவரை 186 சிங்களக் குடும்பங்கள் கடியேறியுள்ளன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக தாங்கள் குடியேறியுள்ள பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதாகவும், இது குறித்து தங்களுக்கு உதவிகள் வழங்குமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், தங்களுக்கு மேலிட உத்தரவு கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாவற்குழியில் குடியமர்ந்துள்ள சிங்கள மக்கள் தங்கள் குடியிருப்புக்களுக்கு முன்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அகியோரை வாழ்த்தும் பதாதைகளையும் தொங்கவிட்டுள்ளனர்.
நாவற்குழியில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியமர்ந்ததும் இப்பகுதிகளில் அதேபோல் குடியமர்ந்துள்ள தமிழ் குடும்பங்களில் சுமார் 330 குடும்பங்கள் வெள்ளப்பெருக்கு காரணமாக வெளியேறியுள்ளன. வெள்ளம் தணிந்த பின்னர் மீண்டும் அங்கு குடியமரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.