04

04

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாக விழிப்புணர்வு வீதிநாடகங்கள்.

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வீதி நாடகங்கள் நடத்தப்படவுள்ளன. யாழ். சமூக மேம்பாட்டு மையம் இதனை மேற்கொண்டுள்ளது.

பெண்களுக்கெதிரான வன்முறை எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு 15 நாட்களுக்கு இச்செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கிராமங்கள் தோறும் நடைபெறவுள்ள இவ்வீதி நாடகங்களூடாக பெண்களுக்ககெதிரான வன்முறை, பாதுகாப்பு, மற்றும் மேம்பாடு குறித்த பல கருத்துக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை தென்மராட்சியில் பல இடங்களில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சாட்சியமளிக்கவுள்ளார்.

படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சாட்யமளிக்கவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இவர் எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பில் வைத்து சாட்சியமளிக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சாட்சியமளிக்கவுள்ளதாக ஆணக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பில் நடைபெற்றுவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், முன்னாள் அரச அதிகாரிகள், சமயப்பிரதிநிதிகள், சமூகப்பிரதிநிதிகள் எனப்பலர் சாட்சியமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் இம்மாதம் நடைபெறவிருந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் டி.எம்.ஜயரட்ணவினால் திறந்து வைக்கப்பட்ட இந்நகிழ்வில் பொலிஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய தேயிலைக் கூட்டுத்தபனத்தின் தலைவர் பண்டார. வடமாகாண செயலாளர் ஆ.சிவசுவாமி தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் உட்பட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

20 வருங்களின் பின்னர் இப்பொலிஸ் நிலையம் மீண்டும் கிளிநொச்சியில் அதே இடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. எண்பதுகளில் பல இயக்கங்களினால் இந்த பொலிஸ் நிலையம் பல தடைவைகள் தாக்குதல்களுக்குள்ளாயிருந்து. பின்னர் பொலிஸ் இராணுவ கூட்டு முகாமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் எண்பதுகளின் நடுப்பகுதியில் இப்பொலிஸ் நிலையத்துடன் அதற்கு முன்பாகவுள்ள மைதானம், பிரதேச செயலகம், நூலகம் உட்பட்ட பகுதிகள் இராணுவ முகாமாக விஸ்தரிக்கப்பட்டது.

இரண்டாயிரமாம் ஆண்டிற்குப் பின்னர் விடுதலைப்புலிகளின் காவல்துறை தலைமையகமாக இயங்கியது. தற்போது புலிகளால் கட்டப்பட்ட பொலிஸ் நிலையக் கட்டடம் முற்றாக தகர்க்கப்பட்டு புதிய வடிவில் இப்பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மழையால் பூநகரி நெல்வயல்கள் வெள்ளத்துள் மூழ்கின.

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக வன்னியில் பல நெல்வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக பூநகரியில் உள்ள நெற்செய்கை மேற்கொள்ளபட்ட வயல் நிலங்கள் முற்றாக வெள்ளத்துள் மூழ்கியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தொடாந்து நெற்பயிர்கள் வெள்ளத்துள் மூழ்கியிருந்தால் அவை அழிவடைந்து போகக்கூடிய ஆபத்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மழையினால் குளங்களில் உள்ள நீர் நிரம்பி மேவிப்பாய்ந்து வருவதாலேயே இந்நெல்வயல்களில் வெள்ளம் தேங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதன் வான் கதவுகள் நேற்று திறந்து விடப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 115 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்ற 115 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மின்சாரம் பெற்ற இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றமைக்காக இவர்களுக்கு 1.8 மில்லின் ரூபா அபாராதம் விதிக்கப்பட்டது.

கிளிநொச்சிப் பகுதிகளில் தற்போது மின்சார விநியோகம் விரிவாக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை மின்சார சபையினர் கடந்த ஒரு வாரகாலமாக மேற்கொண்ட நடவடிக்கையின் போதே சட்டவிரோத மின்பாவனையாளர்கள் பிடிப்பட்டனர்.

மீசாலையில் இராணுவத்தின் துப்பக்கிப் பிரயோகத்தில் இளைஞன் உயிரிழப்பு.

தென்மராட்சி மீசாலை புத்தூர் பகுதியில் இராணுவச்சிப்பாய் ஒருவரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானார். நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் நோக்கி வீதியில் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்றை இரும்புக்கம்பி ஒன்றினால் தாக்கினார் எனவும், பின்னர், அவ்வழியாகச் சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றையும் தாக்கினார் எனவும் இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கடமையிலிருந்த படைச்சிப்பாய் ஒருவர் அவரைத் தடுக்க முற்பட சிப்பாய் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மற்றுமொரு இராணுவச்சிப்பாய் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவ்விளைஞர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து படையினரே அவ்விளைஞனின் உடலைக் கொண்டு சென்று சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

உயிரிந்த இளைஞர் மீசாலையைச் சோந்த துரைரட்ணம் துஸ்யந்தன் (வயது 25) எனவும் இவர் ஒரு மனநோயாளி எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.