இன்று 20-12-2010 அன்று சென்னையில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளரின் சந்திப்பில் கொடுக்கப்பட்ட அறிக்கை!
தமிழர்களைப் புறக்கணித்து, பிரித்தானியரை ஏமாற்றி இலங்கை அரசாங்கத்தைக் கைப்பற்றிய சிங்கள ஆட்சியாளர் 1948ம் ஆண்டு முதல் தமிழ் இனத்தை அழித்து வருகின்றனர்.
ஈழத் தமிழர்களின் விவசாய நிலங்களைக் கைப்பற்றி சிங்களக் குடியேற்றங்களை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் புகுத்தி வந்த சிங்கள அரசு இப்போது தமிழர்களின் வாழ்விடங்களையும் ஆக்கிரமித்துச் சிங்களக் குடியேற்றங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து வருகிறது.
இலங்கையின் மொத்தக் கடல் பரப்பில் 85 சதவீதமான கடல்பகுதிகள் தமிழர்களுக்குச் சொந்தமானவை. இன்று அனைத்துக் கடல் பகுதிகளையும் கைப்பற்றி, தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தையும் தாண்டி சிங்கள மீனவர்கள் எங்களது கடல் செல்வங்களை அள்ளிச் செல்கின்றனர். அரசாங்கம் அவர்களுக்கு (சிங்களவர்களுக்கு) நவீன படகுகளை வழங்கி கடல் வளத்தை அள்ளி தென் பகுதிக்குக் கொண்டு செல்கின்றனர். தமிழ் மீனவர்கள் தங்களது சொந்தப் பகுதியில் குறிப்பிட்ட தூரத்தைக் கடக்கக் கூடாது என்று வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் பூர்விகப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பது சிங்கள அரசின் கடமையாக கடந்த 62 ஆண்டுகளாக செய்து வருகிறது. 1987ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்த காலத்தில் மட்டும்தான் சிங்களக் குடியேற்றங்களை நடத்த முடியாமல் நிறுத்தி வைத்திருந்தது சிங்கள அரசாங்கம். ஏனைய அத்தனை ஆண்டுகளும் ஏன் இன்றும் கூட சிங்களக் குடியேற்றங்களை அரசின் சொந்தச் செலவில் தமிழர் பகுதிகளில் திட்டமிட்டுப் புகுத்தி வருகிறது.
இது தமிழ் இனத்தின் அடையாளங்களை முற்றாக அழிக்கும் நடவடிக்கைதான். தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் பிரச்சினையே இந்தச் சிங்களக் குடியேற்றங்கள்தான். இதனைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு தமிழர்கள் பலம் குறைக்கப்பட்டுள்ளது.
1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழ் இனத்தை அடித்து விரட்டிய பின்பு ஏற்படுத்தப்பட்டதுதான் வெலிஓயா (மணல் ஆறு) என்று பெயர் மாற்றப்பட்ட சிங்களக் குடியேற்றமாகும். இக்குடியேற்றம் திருகோணமலையையும் முல்லைத்தீவையும் பிரிக்கும் சிங்களக் குடியேற்றமாகும். இப் பகுதி தமிழ் இனத்தின் பூர்விகப் பகுதியாகும்.
இது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களக் குடியேற்றங்களை தமிழர் பகுதிகளில் திணித்து தமிழர் நிலங்களைக் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மாவட்டங்களில் பல லட்சக்கணக்கானவர்களைக் குடியமர்த்திய சிங்கள அரசு இப்போது முல்லைத் தீவு, மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களில் முழுவீச்சில் சிங்களவர்களைக் குடியமர்த்தி வருகிறது.
தமிழினம் கல்வி, மொழி, தொழில், வாழ்வு, உயிர் என்று அனைத்தையும் இழந்து இன்று அவர்களது பூர்விகப் பிரதேசங்களையும் சிங்களவரால் இழந்து வருகின்றனர். ஈழத்தில் வாழும் தமிழர்களால் இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்தும் பலம் சிறிதளவும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தும் உரிமையும், தகுதியும் இந்தியாவுக்கு மட்டுமே உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.
ஈழப் போராளிகள் பல குழுக்களாக ஒற்றுமையில்லாதிருந்தபடியால், இந்தியா ஈழத் தமிழர் சார்பாக இலங்கையுடன் 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் வலிமை தெரியாமல் பலரும் தங்களது அரசியல் லாபங்களுக்காக எதிர்த்தனர். சிங்கள அரசும் சிங்கள இனத்தவரும் இந்தியாவை எதிர்த்தனர். தமிழ் இனத்தின் சார்பாகவும், தமிழ் இனத்தைப் பாதுகாக்கவும்தான் இந்தியா இலங்கைக்கு வந்ததாகக் கருதினர் சிங்களவர்.
இதனால் இந்திய அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என்று தீர்மானித்தனர் சிங்கள அரசும், சிங்கள இனத்தவரும். சில உண்மைகளைச் சொன்னால் பலருக்கும் கோபம் வரும். விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு எதிராகத் துப்பாக்கியைத் திருப்பாது விட்டிருந்தால் நாங்கள் இப்போது ஒரு லட்சம் தமிழர்களை இழந்திருக்க வேண்டியதில்லை, தமிழர் பிரதேசங்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். குறைந்தபட்சம் எங்கள் அனைத்து உரிமைகளாவது மீட்;டிருப்போம்.
விடுதலைப் புலிகள் செய்துவிட்ட தவறு எங்கள் இனத்தை மொத்தமாகவே பாதித்துவிட்டது. இப்போது எஞ்சியிருக்கும் மக்களையும், தமிழரின் பூர்விகப் பகுதிகளையும் நாம் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா ஈழத் தமிழர் விடயத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும். 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கள அரசியல்வாதிகளும், பௌத்த பிக்குகளும் தமிழ் இனத்துக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும் வகையில் பேசியும் செயற்பட்டும் வருகின்றனர்.
தமிழ் இனத்தை விரட்டுவதற்கும் அழிப்பதற்கும் தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரசாரம் செய்கின்றனர். ஈழத் தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை அழிக்கும் செயல்களை புத்தப் பிக்குகளும் இராணுவமும் இணைந்து செயற்படுத்தி வருகின்றனர். 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூல் நிலையம் இவர்களால் எரிக்கப்பட்டது. இதுவும் தமிழினத்தின் வரலாற்றை அழிக்கும் அவர்களது பாரிய திட்டமிட்ட சதிச் செயலாகும். ஒரு இனத்தின் வரலாற்றுப் பதிவுகள் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் நூல் நிலையத்தை அரசாங்கமே தீயிட்டு அழித்த நடவடிக்கை மன்னிக்க முடியாத குற்றச் செயலாகும். அந்த இனத்தவர் இச்செயலுக்காக வருத்தப்பட்டதோ, வெட்கப்பட்டதோ கிடையாது.
இப்போது தமிழர்களது எஞ்சியிருக்கும் விவசாய நிலங்களைக் கைப்பற்ற முன்னர் S.W.R.D. பண்டாரநாயக்க “நெற்காணி மசோதா” என்று ஒரு சட்டத்தினை 1958ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து தமிழர் நிலங்களைப் பறித்தது போன்று ராஜபக்சேயும் சட்டம் கொண்டு வந்து மீதி நிலங்களையும் பறிப்பதற்கு நாடாளுமன்றத்தில் முன்மொழியவுள்ளார்.
தமிழர்களது உரிமைகளையும், பூர்விக நிலங்களையும் பாதுகாக்க வேண்டுமானால் எங்களுக்கு இந்தியாவின் துணை அவசியமாகிறது.
1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யினராகிய நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஏன் ஏற்றுக்கொண்டோமென்றால்,
இந்த “ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், வடக்கு மற்றும் கிழக்கில் இருக்கும் இலங்கை இராணுவம் தங்களுடைய முகாம்களுக்குள் திரும்பிவிட வேண்டும்! ஒரு இராணுவம் கூட வெளியில் கடமையாற்றுவதற்கு முகாம்களைவிட்டு வெளியில் வரக்கூடாது! இலங்கை இராணுவம் எந்தத் தமிழரையும் கைது செய்யக்கூடாது இலங்கை இராணுவத்துக்கு அதற்கு உரிமை இல்லை! என்ன குற்றம் செய்திருந்தாலும் சரி, சிறையில் இருக்கும் அத்தனை தமிழரும் விடுதலை செய்யப்பட வேண்டும்”
வடக்குக் கிழக்கு இணைந்த ஒரு மாநிலமும் அதற்கான நிர்வாகமும் அமைக்கப்படும், அந்த மாநிலத்துக்கான அதிகாரங்கள், குறிப்பாக நிலம், தொழில், கல்வி, இது சம்பந்தமாக தீர்மானம் எடுக்கிற உரிமை, அந்த மாகாண அரசையும் தமிழ் மக்களையும் பாதுகாக்கவென பொலிஸ் மற்றும் ஆயுதம் தாங்கிய தமிழ்த் தேசிய இராணுவம் போன்ற உரிமைகள் அந்த ஒப்பந்தத்தில் இருந்தபடியால் நாங்கள் அந்த ஒப்பந்தத்தை ஒரு ஆரம்பகட்ட தீர்வாக ஏற்றுக்கொண்டோம்.
மேற்கூறிய இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள அத்தனை சரத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியாவால் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தான் விடுதலைப்புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் இணைந்து முறியடித்தார்கள். ஆயினும், “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் எங்கள் முழு ஆதரவையும் வழங்கினோம். இதனால் எங்கள் இயக்கத் தோழர்கள் ஆயிரக்கணக்கானவர்களை இழந்துள்ளோம்.
சிறிலங்கா அரசும், புலிகள் இயக்கமும் இணைந்து தமிழர்களுக்கு ஓரளவுக்கு உரிமையுள்ள மாகாண அரசைக் கலைக்க வேண்டும், அமைதிப்படை நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று ஒன்றாகக் கோரிக்கை வைத்தனர். இந்தியாவுக்கு அவர்கள் பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து மாநில அரசில் அங்கம் வகித்த நாமும் நாட்டை விட்டு வெளியேறினோம்.
அப்படி வெளியேறிய நாம் இன்றுவரை இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம். தமிழ் மக்களது ஏகப் பிரதிநிதிகள் நாங்கள் மட்டும்தான் என்று புலிகள் உரிமை கோரினர். அது தவறு என்பதைக் காலம் கடந்தும் உணர்வதாகத் தெரியவில்லை.
இந்தியா ஏற்படுத்திய ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் என்ற அடிப்படையிலும், மிகவும் பாதிக்கப்பட்டுள்ள எம் மக்களிடையே மீண்டும் ஒரு யுத்தத்தைப் புகுத்தி இழப்புகளை ஏற்படுத்தாமல், எமது மக்களையும், எமது பிரதேசங்களையும் எமது உரிமைகளையும் கைப்பற்ற ஒரே வழி “இந்திய-இலங்கை” ஒப்பந்தம்தான் என்பதை நாம் உணர்ந்து, இந்தக் காலகட்டத்தில் மீண்டும் இந்தியாவைக் கோருகிறோம்.
“இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நடை முறைப்படுத்த வேண்டும். ராஜபக்சே “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தில் உள்ள தனக்கு வேண்டிய பகுதிகளை மட்டும் நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான பிரிவுகளை நிராகரித்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறார்.
எனவே நாங்கள் இரண்டு கோரிக்கையினை மட்டும் முன்வைத்து சென்னை சிறிபெரும்புதூரிலிருக்கும் ராஜீவ்காந்தி நினைவு மண்டபத்திலிருந்து புது டெல்கியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடம் வரையில் 2500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறோம். ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட ஈழத் தமிழர்களே நடத்தும் இந்தக் கோரிக்கை நடை பயணத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஈழத் தமிழரது கீழ்க்காணும் கோரிக்கையினை மாண்புமிகு ஜனாதிபதி ஸ்ரீமதி. பிரதீபா பாட்டில் அவர்களிடமும், மாண்புமிகுப் பாரதப் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் அவர்களிடமும், எதிர்கட்சித் தலைவர் திருமதி. சுஸ்மா சிவராஜ் அவர்களிடமும் காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியாகாந்தி அவர்களிடமும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் உயர்திரு. பிரகாஸ் கரத் அவர்களிடமும், யு.டீ. பரதன் அவர்களிடமும் மற்றும் அனைத்து எதிர்கட்சிகளின் தலைவர்களிடமும் கையளிக்கவுள்ளோம்.
(01) “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
(02) 1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் (இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர்) தமிழரது பூர்விகப் பகுதிகளில் சிங்கள அரசினால் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை முற்றாக வெளியேற்ற வேண்டும்.
என்ற இந்த இரு கோரிக்கைகளையும் முன்வைத்து நாங்கள் இந்த நடைபயணத்தை மேற்கொள்ளவிருக்கிறோம்.
இந்த நடை பயணத்தை காங்கிரஸ் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், காங்கிரசின் தமிழ் நாட்டு மூத்த தலைவருமான திரு. இரா. அன்பரசு அவர்கள் ஆரம்பித்து வைக்கிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தோழர். தா. பாண்டியன் அவர்கள் இந்த நடைபயணத்தை வழியனுப்பி வைப்பார்கள்.
மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு. G.இராமகிருஸ்ணன் அவர்களையும் கலந்துகொள்ளும்படி நாங்கள் கோரியுள்ளோம். மேலும் தமிழகத்தின் ஏனைய அனைத்துக் கட்சிகளையும் சந்தித்து ஆதரவு கோரவுள்ளோம், அவர்களுக்கு இது தொடர்பாக கடிதங்கள் அனுப்பியுள்ளோம், ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.
பத்திரிகைத் துறையும் எங்களது இந்த நடைபயணத்துக்கு மட்டுமல்லாமல், ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் எம்மினத்துக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நாள்: 16-01-2011 ஞாயிறு
நேரம்: காலை 10:00 மணி.
இடம் : இராஜீவ்காந்தி நினைவு மண்டபம், சிறிபெரும்புதூர்.
இவ்வண்ணம்,
ஞா.ஞானசேகரன்
தலைவர்,
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)