”நான் எதிர்க்கட்சியில் இருந்தபோது நானும் இப்படி தெருத்தெருவாகப் போராட்டியவன். எனது போராட்டத்திற்கு நியாயம் இருந்தது. ஆனால் இங்கு நடைபெறும் போராட்டங்களுக்கு நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இன்று (டிசம்பர் 02) பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவிக்கையில் ”ஜனநாயகத்தின் தாய்நாடாக இருக்கும் பிரித்தானியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கின்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் யூனியனில் எனது கருத்தை தெரிவிக்கவிடாமல் தடுத்தது கருத்துச் சுதந்திரத்தை மறுத்ததே” எனத் தெரிவித்தார்.
”ஒன்றரை வருடங்களுக்கு முன் நான் உங்களைச் சந்தித்த போது நான் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று உறுதி அளித்திருந்தேன். அதனைச் செய்து முடித்திருக்கிறேன். இனிமேல் இலங்கையில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படும். சமாதானம் நிலைநாட்டப்படும். சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் இலங்கையர்களாக வாழ்வார்கள். அடுத்த தடவை மீண்டும் உங்களைச் சந்திக்கும் போது அவற்றைச் செய்து முடித்திருப்பேன்” என்று தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இன்று இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர்கள் ஜி எல் பீரிஸ் எஸ் பி திஸ்ஸநாயக்கா ஆகியோரும் கலந்து கொண்டனர். அங்கு வந்திருந்த தமிழ் முஸ்லீம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. வழமைக்கு மாறாக இன்றைய நிகழ்வு பெரும்பாலும் சிங்கள மொழியிலேயே இடம்பெற்றது. இச்சந்திப்பில் மூவின சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்று மொழிகளையும் பேசக்கூடியவராக இருந்த போதும் இலங்கைத் தூதரகம் இக்கூட்டம் பற்றிய ஏற்பாடுகளை சீராக ஒழுங்கமைத்து இருக்கவில்லை.
கூட்ட ஏற்பாடுகள் எவ்வித ஒழுங்கும் இன்றி சீரற்றதாகவே காணப்பட்டது. ஒரு நாட்டின் ஜனாதிபதி உடனான சந்திப்பு என்று எவ்வித ஒழுங்கமைப்பும் இன்றி இச்சந்திப்பு அமைந்தது. அரசியல் உரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கவில்லை.
ஒக்ஸ்போர் யூனியனில் இடம்பெற இருந்த ஜனாதிபதியின் உரை ரத்து செய்யப்பட்டமை இலங்கை அரசுக்கு ஏற்பட்ட வெளிப்படையான அவமானமே. இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் முடுக்கி விடப்படும் என்பதை இலங்கைத் தூதரகம் கணித்து தகுந்த ஆலோசணை வழங்கத் தவறிவிட்டதாக தற்போது இலங்கை இராஜாங்க வட்டாரங்களில் குற்றம்சாட்டப்படுகிறது.
ஜனாதிபதியின் உரை ஒக்ஸ்போர்ட் யூனியனில் ரத்து செய்யப்பட்டமை அரசியல் ரீதியில் பலவீனமாகிக் கொண்டிருந்த பிரிஎப் ரிவைஓ போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளுக்கு அமைப்புகளுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. ஒக்ஸ்போர்ட் நோக்கிய ஆர்ப்பாட்டம் அதன் பின்னர் ஜனாதிபதி தங்கியிருந்த ஹொட்டலை நோக்கியும் பின்னர் இலங்கைத் தூதரகத்தை நோக்கியும் நகர்ந்தது.
இலங்கைத் தூதரகத்தில் இன்று மாலை ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெற்ற வேளை தூதரகம் உள்ள வீதியின் இரு அந்தங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி இருந்தன. பெரும்பாலும் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி இவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்றது. ஆனால் புலிக்கொடிகளைத் தாங்கிய வண்ணம் இருந்த சிலர் ஜனாதிபதியின் சந்திப்பிற்கு வந்து சென்றவர்களை நோக்கி மோசமான தூசண வார்த்தைகளை தமிழிலும் சிங்களத்திலும் கோசமாக எழுப்பினர்.
இச்சந்திப்பையொட்டி ஏரானமான பொலிசார் அப்பகுதி எங்கும் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆயுதம் ஏந்திய பொலிசார் தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்கினர்.