21

21

அமைச்சர்கள் வீரக்கோன், விமல் வீரவன்ச குழுவினர் கிளிநொச்சிக்கு வருகை தந்தனர்.

Chandrakumar_MP_Jaffna_EPDPநேற்று திங்கள் கிழமை கிளிநொச்சிக்கு வருகை தந்த மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன் மற்றும், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் ஆகியோர் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப்பொருட்களை வழங்கி வைத்தனர்

இதேவேளை, நேற்று கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச கிளிநொச்சி மாவட்டத்தின் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி, ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரி, கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்புப் படைஅதிகாரி சந்தன ராஜகுரு, மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்க வந்த மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன் தலைமையிலான குழுவினரும். தேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்தைத் திற்நது வைக்க வந்த விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினரும் தனித்தனிக் குழுவினராக இரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மூத்த அரசியல்வாதி க.பொ.இரத்தினம் காலமானார்.

மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.பொ.இரத்தினம் நேற்று திங்கள் கிழமை தனது 96 வது வயதில் காலமானார். நேற்று மாலை 5 மணியளவில் கொழும்பில் வைத்து இவர் காலமானார். இவரது உடல் தற்போது பொறளை மலர்ச்சாலையில் உறவினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

வேலணையைப் பிறப்பிடமாக் கொண்ட திரு. க.பொ. இரத்தினம் ஆரம்பத்தில் ஆசிரியராகவும், ஆசிரியர் கலாசாலை வரிவுரையாளராகவும் பணியாற்றினார். பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்தில் தனிநாயகம் அடிகளோடு இணைந்து பணிபுரிந்தார். 1960 முதல் தமிழரசுக் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். 1965 ஆம் ஆண்டு கிளிநொச்சித் தொகுதியிலும், 1970, 1977ஆம் ஆண்டுகளில் ஊர்காவற்றுறைத் தொகுதயிலும் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசியல்வாதியாகவும், ஒரு தமிழறிஞராகவும் இவர் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் பறவைகள் வருகையால் முல்லைத்தீவில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை.

Bird_Unusual_to_SLமுல்லைத் தீவுப் பகுதிகளில் வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் அப்பகுதி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும், இராணுவத்தினருக்கும் பறவைக்காய்ச்சல் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு இத்தடுப்பூசியை ஏற்றுவதற்கு போதுமான மருந்து கையிருப்பில் இல்லாத காரணத்தினால் முதலில் அரசாங்க ஊழியர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இவற்றை ஏற்றுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவில் பணியாற்றும் பொது சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மருந்துகள் வந்து சேர்ந்ததும் பொதுமக்களுக்கும் தடுப்பூசி ஏற்ப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் தற்போது வருகின்ற நிலையில் சிலர் அப்பறவைகளைப் பிடித்து இறைச்சிக்காக பயன்படுத்துவதாகவும் இதனால் இப்பகுதிகளில் இத்தடுப்பூசி ஏற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நல்லிணக்க ஆணைக்குழு 29ஆம் திகதி பூஸா முகாமிற்கு செல்கிறது.

Magazine_Prisonநல்லிணக்க ஆணைக்குழு எதிர்வரும் 29ஆம் திகதி காலியிலுள்ள பூஸா தடுப்பு முகாமிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளை பார்வையிடுவதோடு அவர்களை விடுதலை செய்வதற்கான வழிவகைகள், சாத்தியங்கள் குறித்தும் ஆராயுவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் வெளி மாவட்டங்களில் நடைபெறும்போது அனைத்து தடுப்பு முகாம்களுக்கும் விஜயம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு நல்லிணக்க ஆணைக்குழு விஜயம் செய்யவுள்ளது

புத்தளத்தில் வாழும் யாழ்ப்பாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டு வெளியெற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் சாட்சியங்களை நல்லிணக்க ஆணைக்குழு பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கபபட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து தயாராகும் ‘பனை மரக்காடு’ திரைப்படம்.

Seveal_K_JHCபாதிக்கப்பட்ட வடபகுதி மக்களின் வாழ்வை மையமாக வைத்து ‘பனை மரக்காடு’ என்ற திரைப்படம் இலங்கையில் படமாக்கப்பட உள்ளது. இதன் ஆரம்ப பூஜை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ் மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், தமிழரின் கலை, காலாசார பாரம்பரியங்கள் பாதிக்கப்படாத வகையிலும் இத்திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் கே. செவ்வேள் தெரிவித்துள்ளார்.

காதலித்து திருமணம் செய்து, ஐந்து வயதுக் குழந்தையுடன் வாழும் பெண்ணொருத்திக்கும் இளைஞன் ஒருவனுக்கும் ஏற்படும் காதல் இக்கதையின் கரு என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பனை மரக்காடு’ திரைப்படத்தை கேசவராஜா இயக்குகின்றார். இசையமைப்பை தென்னிந்திய இசையமைப்பாளர் சிற்பி மேற்கொள்கின்றார். இந்திய தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இலங்கையிலுள்ள தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களும் இத்திரைப்படத்தில் பங்களிப்பு செய்யவுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். படத்தின் பிரதான நடிகர்களை உள்நாட்டில் தெரிவு செய்வதற்காக காத்திருப்பதாகவும் அவ்வாறு யாரும் முன்வராவிடில் அவர்களை இந்தியாவிலிருந்து தெரிவு செய்ய வேண்டி வரும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில நீண்ட காலமாக வாழும் சட்ட ஆலோசகரான செவ்வேள் ஏற்கனவே ஓரிரு படங்களை தமிழகத்தில் தயாரித்தவர். யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் பிரிவுத் தலைவராக இருந்த இவர் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் மீண்டும் அடைமழை, வெள்ளம்.

Jaffna_Floodயாழ்ப் பாணம் வன்னி உட்பட வடக்கில் கடந்த மூன்று நாட்களாக தணிந்திருந்த மழை நேற்று திங்கள் இரவிலிருந்து மீண்டும் கடுமையாக பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் கிளிநொச்சி உட்பட பல பிரதேசங்களில் மீண்டும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகளில் பொது மக்கள் பயணம் செய்ய முடியாதபடி வெள்ளம் தேங்கி நிற்கும் காட்சிகளை காணமுடிகிறது.

கிளிநொச்சியின் பிரதான ஏ-9 பாதையிலும் பல குறுக்கு வீதிகளில் வடிகாலமைப்புகளில்லாத காரணத்தினால் வெள்ளம் வழிந்தோட வழியின்றி தேங்கிநிற்கும் நிலை காணப்படுகின்றது. தாழ்வான நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மீண்டும் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.