27

27

நீலன் திருச்செல்வம் நினைவு பேருரையாற்றுகிறார் ரோமிலா தாபர்

Neelan Thiruchselvam Drஇந்தியாவின் புராதன வரலாற்றுத் துறை சார்ந்த உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான ரோமிலா தாபர் நீலன் திருச்செல்வம் ஞாபகார்த்த விரிவுரையை நிகழ்த்தவுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி மாலை 6 மணிக்கு இலங்கை மன்றக்கல்லூரி மண்டபத்தில் வரலாறுகளும் அடையாளங்களும் எனும் தொனிப்பொருளில் 11 ஆவது நீலன் திருச்செல்வம் நினைவுப் பேருரையை ரோமிலா தாபர் நிகழ்த்தவுள்ளார்.

புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புராதன இந்திய வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் ரோமிலா தாபர், கோர்னெல் பல்கலைக்கழகம், பென்சிலவேனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

பண்டைக்கால இந்திய வரலாறு தொடர்பான பல நூல்கள், கட்டுரைகள், ஆக்கங்களை வெளியிட்டுள்ள தாபரின் அசோகாவும் மௌரியர்களின் வீழ்ச்சியும், அரசுக்கான பரம்பரை, வரலாறும் அதற்கப்பாலும், ஆரம்ப இந்திய வரலாற்றின் கடந்த கால கலாசார கட்டுரைகள், அஞ்ஞாதவாசமும் இராஜ்ஜியமும், இராமாயணம் பற்றிய சில சிந்தனைகள், ஆரம்பகால இந்தியா போன்ற பல நூல்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

ஐக்கியதேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக 60 வயது நபர் தனக்குத்தானே தீமுட்டிக் கொண்டார்!

unp-logo.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக நபரொருவர் தனக்குத்தானே தீமுட்டிக்கொண்ட சம்பவம் நேற்று மாலை (26-07-2010) நடைபெற்றுள்ளது.  கொழும்பில் அமைந்துள்ள ஐக்கியதேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிக்கோத்தாவின் முன்பாக வைத்து இந்த நபர் தன்னைத் தீயிட்டுக்கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடுமையான எரிகாயங்களுடன் இந்நபர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

வெலிகம என்ற இடத்தைச் சேர்ந்த றியான்சி அல்கம என்ற 60 வயதான நபரே இவ்வாறு தீயிட்டுக்கொண்டவர் என களுபோவில வைத்தியாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை, ஐக்கியதேசியக் கட்சிக்குள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் தீக்குளிப்பு நடவடிக்கையில் இறங்கினார் என மற்றுமொரு செய்தி தெரிவிக்கின்றது.

மேல் நீதிமன்றத்தில் “வெள்ளைக்கொடி’ வழக்கு

ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யும் முன்னாள் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவின் “வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (29) மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.வியாழக்கிழமை மேல்நீதிமன்றத்தில் ஜெனரல் சரத்பொன்சேகாவின் பிரசன்னத்தை உறுதிப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதிவானிடம் அரச சட்டத்தரணி நேற்று திங்கட்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பான வெள்ளைக்கொடி விவகார வழக்கு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அத்துடன் ஏனைய கொழும்பு நீதிமன்றங்களில் பொன்சேகாவுக்கு எதிரான இரு வழக்குகளும் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.

ஆளும் கட்சியுடன் இணையப் போவதாக வெளியான வதந்திகளை விஜயகலா மகேஸ்வரன் மறுத்துள்ளார்.

Vijayakala_Maheswaranஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆளும் கட்சிக்குத் தாவப்போவதாக வெளியான வதந்திகளை அவர் மறுத்துள்ளார். கடந்த சிலதினங்களுக்கு முன்பு ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் யாழ். கந்தர்மடத்திலுள்ள காலம்சென்ற அமைச்சர் மகேஸ்வரனின் இல்லத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இதற்கு முன்னதாகவே விஜயகலா மகேஸ்வரன் ஆளும் கட்சியுடன் இணையப்போகிறார் என்கின்ற வதந்திகள் பரவியிருந்தன. இந்நிலையில், இச்செய்திகளில் எந்த உண்மையுமில்லை என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

மகேஸ்வரன் உயிருடன் இருந்த காலத்திலேயே தற்போதைய ஆளும் கட்சியைச சேர்ந்தவர்கள் அவரது இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று ஏற்பாடு செய்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து கைவிடப்பட்டது.

மேல் மாகாண தனியார் பஸ்களிடம் இருந்து அறவிடப்படும் பதிவுக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்து இன்று நள்ளிரவு முதல் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டிருந்தது. மாதாந்தப் பதிவுக் கட்டணத்தை ஆயிரம் ரூபாவாகவும் வருடாந்த பதிவுக் கட்டணத்தை 5 ஆயிரம் ரூபாவாகவும் அதிகரிக்க மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்திருந்தது.

அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையையடுத்து மாதாந்த பதிவுக் கட்டணத்தை 100 ரூபாவினாலும் வருடாந்தப் பதிவுக் கட்டணத்தை 500 ரூபாவினாலும் உயர்த்த முடிவு காணப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.

வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளிலும் வெடிபொருட்களின் ஆபத்து காணப்படுகின்றது.

landmines.jpgவன்னியில் மிதிவெடிகள். கண்ணிவெடிகள் முதலான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதிகளில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வந்தாலும், சில பகுதிகளில் வெடிபொருட்களின் அபாயம் இன்னமும் காணப்படுவதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் ஊற்றுப்புலம், கோணாவில், பகுதிகளில் மீளக்குடியமர்ந்த மக்கள் தங்கள் காணிகளைத் துப்புரவாக்கி தீமூட்டும் போது, சில வெடிபொருட்கள் துப்பாக்கிச் சன்னங்கள் என்பன வெடித்துள்ளன. இதே வேளை, தென்னை, பனை போன்ற மரங்களில் கொழுவியபடி சில எறிகணைகள் வெடிக்காத நிலையில் காணப்பட்டதாகவும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான வெடிபொருட்கள் தொடர்பாக வளர்ந்தவர்கள் அவதானமாக இருந்தாலும் கூட சிறுவர்கள் இதில் அவதானமற்றும், விளையாட்டுத் தன்மையுடனும் நடந்து கொள்ளும் நிலை உள்ளதால் பொதுமக்கள் இவ்வெடி பொருட்கள் தொடர்பாக அச்சம் கொண்டவர்களாகவே உள்ளனர்.

பதினேழு தடவைகள் பிடியாணை; நான்கு நீதிமன்றங்களால் தேடப்பட்ட பெண் கைது!

பதினேழு முறை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரை கண்டி பொலிஸார் நேற்று (26ம் திகதி) மடக்கிப் பிடித்துள்ளனர்.

இப்பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நாட்டின் பல பகுதிகளிலும் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டவராவார். இவர் மீது கண்டி, பேலியாகொடை, ராகமை, புதுக்கடை ஆகிய நீதிமன்றங்களே பிடியாணை பிறப்பித்துள்ளன. இப்பெண் கைது செய்யப்பட்ட சமயம் அவரிடமிருந்து 22 போலி விசாக்கள், 15 போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரகங்களின் அனுமதிப் பத்திரப் புகைப்படப் பிரதிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

யாழ் – கொழும்பு தனியார் பஸ்கள் பயணிகளிடம் பல்வேறு கட்டணங்களை அறவிடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

bus.jpgயுத்தம் முடிவடைந்து ஏ-9 பாதை திறந்து விடப்பட்டதும் கொழும்பு – யாழப்பாண தனியார் போக்குவரத்து பஸ்களின் தொகை அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போக்குவரத்து பஸ்கள் பயணிகளிடம் பல்வேறு விதமான கட்டணங்களை அறவிட்டு வருகின்றன. சொகுசு பஸ்கள். அரை சொகுசு பஸ்கள் என போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் யாழ்ப்பாத்திலிருந்து கொழும்பிற்கு 600ரூபா தொடக்கம் 1500 ரூபா வரை கட்டணமாக அறவிடுகின்றன.  இது தொடர்பாக தற்போது பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Jaffna_to_Colombo_Bus_Servicesஇது பற்றி பஸ் உரிமையாளாகள் சிலர் கருத்துத் தெரிவிக்கையில்  பயணச்சீட்டை விநியோகம் செய்யும் முகவர்களே இவ்வாறு அதிக கட்டணங்களை அறவிடுவதாக கூறுகின்றனர். இதே வேளை, பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிடும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு எச்சரிக்கை செய்துள்ளது.

நாகர்கோவில் விநாயகர் ஆலய விக்கிரகங்கள் பாதுகாப்பு கருதி நீதிமன்றில் ஒப்படைப்பு.

வடமராட்சிக் கிழக்கிலுள்ள விநாயகர் ஆலயத்தின் பெறுமதி வாய்ந்த விக்கிரகங்கள் சில பருத்தித்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட விநாயகர் ஆலயம் ஒன்றிலிருந்தே பழமை வாய்ந்ததும். பெறுமதி வாய்ந்ததுமான இரு விநாயகர் விக்கிரகங்கள் மற்றும், வேல் போன்றவை அவற்றின் பாதுகாப்பு கருதி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வடமராட்சி கிழக்குப் பகுதிகள்  யுத்தத்தினால் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றன. அப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் வன்னியிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். வன்னியில் இடம்பெயர்ந்திருந்தவர்கள் தற்போது வவுனியா முகாம்களிலும் வேறு பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் மீள்குடியேற்றம் இன்னமும் நடைபெறவில்லை. எனவே, குறிப்பிட்ட ஆலயத்தின் விக்கிரகங்கள் பாதுகாப்பு கருதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் வைக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் குறித்த ஆலயத்திடம் ஒப்படைக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.