இந்தியாவின் புராதன வரலாற்றுத் துறை சார்ந்த உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான ரோமிலா தாபர் நீலன் திருச்செல்வம் ஞாபகார்த்த விரிவுரையை நிகழ்த்தவுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி மாலை 6 மணிக்கு இலங்கை மன்றக்கல்லூரி மண்டபத்தில் வரலாறுகளும் அடையாளங்களும் எனும் தொனிப்பொருளில் 11 ஆவது நீலன் திருச்செல்வம் நினைவுப் பேருரையை ரோமிலா தாபர் நிகழ்த்தவுள்ளார்.
புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புராதன இந்திய வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் ரோமிலா தாபர், கோர்னெல் பல்கலைக்கழகம், பென்சிலவேனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
பண்டைக்கால இந்திய வரலாறு தொடர்பான பல நூல்கள், கட்டுரைகள், ஆக்கங்களை வெளியிட்டுள்ள தாபரின் அசோகாவும் மௌரியர்களின் வீழ்ச்சியும், அரசுக்கான பரம்பரை, வரலாறும் அதற்கப்பாலும், ஆரம்ப இந்திய வரலாற்றின் கடந்த கால கலாசார கட்டுரைகள், அஞ்ஞாதவாசமும் இராஜ்ஜியமும், இராமாயணம் பற்றிய சில சிந்தனைகள், ஆரம்பகால இந்தியா போன்ற பல நூல்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.