சிறிலங்கா ஜனாதிபதியின் பாரியார் உள்ளிட்ட அரசஅதிகாரகள் குழுவினர் தென்னிந்திய திரைப்பட நடிகை அசினுடன் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தனர். அங்கு கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற கண் சத்திரசிகிச்சை முகாமின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் அங்கு வருகை புரிந்தனர்.
தென்னிந்திய நடிகை அசின் மற்றும் இந்தி நடிகர் சல்மான்கான் ஆகியோரின் நிதியுதவியில் புனரமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ள யாழ்.போதனா வைத்தியசாலையின் கண்சிகிச்சை நிலையத்தில் இந்திய கண்சிகிச்சை நிபுணர்களால் விழி வெண்படல சத்திரசிகிச்சை முகாம் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இக்குழுவினர் நேற்றுக் காலை வவுனியா வைத்தியசாலைக்கும் விஜயம் செய்தனர். நடிகை அசின் வருகை தந்த செய்தி கசிந்ததும் வைத்தியசாலையை நோக்கி பல இரசிகர்கள் படையெடுக்கத் தொடங்கினர் இருந்தபோதும், இவர்களின் வருகையை முன்னிட்டு வவுனியா, யாழ்.வைத்தியசாலைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு திரைப்பட அமைப்பினரின் பணிப்பை மீறி இலங்கையில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்கு சென்ற காரணத்தினால் தமிழ் படங்களில் நடிப்பதற்கு நடிகை அசினுக்கு தடைவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.