வவுனியா நகரசபை உறுப்பினர்கள் அதன் தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என மறுத்து அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளனர். அவ்வறிக்கையில் வவுனியா நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் பிரதித் தலைவர் மு முகுந்தன் ஆகியோரது நடவடிக்கைகள் பற்றி மிகக் கடுமையான அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளனர். 29 விடயங்களைப் பட்டியலிட்டு வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில் தலைவர் பிரதித்தலைவர் மற்றும் ஏ.எல்.எம் முனவ்பர் ஆகியோர் தவிர்ந்த 8 நகரசபை உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். நகரசபைத் தலைவரின் ஊழல் நிதிமோசடி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் பற்றிய பல விடயங்களை இவ்வறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தள்ளது.
வவுனியா நகர சபைக்கான தேர்தல் சென்ற வருடம் ஓகஸ்டில் நடைபெற்றது. 11 உறுப்பினர்களைக் கொண்ட இந்நகரசபையை அதிக உறுப்பினர்களைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி கூட்டு கைப்பற்றியது.
நகரசபை உறுப்பினர்கள் விபரம்:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) : எஸ். என். ஜி. நாதன் (நகரசபைத் தலைவர்), மு. முகுந்தரதன் (உப தலைவர்), இ. சிவகுமாரன் செ. சுரேந்திரன், ஐ. கனகசபை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (எஸ்எல்எம்சி) : அப்துல் லத்தீப் முனவ்பர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) : ஜி.ரி.லிங்கநாதன், சு.குமாரசாமி, க.பார்த்தீபன்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (யுபிஎப்ஏ) : எம் எஸ் அப்துல்பாரி, ஜெ.ஏ.டி லலித்ஜெயசேகர
வவுனியா நகரசபைக்கு எஸ்என்ஜி நாதன் தலைவராக நியமிக்கப்பட்டார். கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்ற மு முகுந்தன் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர்களிடையே தலைமைக்கான இழுபறியும் நீண்டகாலமாக இருந்து வந்தது. இப்போதைய நகரசபை பதவியேற்று 10 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை வவுனியா நகரத்திற்கு எவ்விதமான சேவையையும் வழங்கவில்லை என்றும் நகரசபையின் நிர்வாகம் செயற்திறனற்று இருப்பதற்கு நகரசபைத் தலைவரே முக்கிய காரணம் என்றும் நகரசபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் அதன் செயலாளர் மாவை சேனாதிராஜா போன்றவர்கள் வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நேரடியாக வந்து கலந்துகொண்டதுடன் பதவியேற்பு நிகழ்விலும் கலந்துகொண்டனர். நகரசபை உறுப்பினர்கள் ஆர் சம்பந்தன் முன்னிலையில் சத்தியப் பிரமாணமும் எடுத்துள்ளனர். ஆனால் கடந்த பத்து மாதங்களாக வவுனியா நகரசபை நிர்வாகம் எவ்வித செயற்பாடுகளையும் செய்யாமல் நகரசபைக்கு வழங்கப்பட்ட நிதியை தவறான முறையில் கையாண்டும் உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள் மூவரும் கூட தங்கள் கட்சியின் நகரசபைத் தலைமைக்கு எதிராக கையெழுத்திட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நகரசபையையே தமிழ் தேசியக் கூட்டமைப்பால் நிர்வகிக்க முடியாத நிலையை இவ்வறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. வன்னி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் மக்களுக்கான வாழ்விடமாகியுள்ள வவுனியாவின் நகரசபை கடந்த 10 மாதங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் நகரசபையின் தலைவர் எஸ்என்ஜி நாதனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கும் உள்ள நெருக்கமே எஸ்என்ஜி நாதன் இவ்வாறு செயற்படுவதற்குக் காரணம் என அபிவிருத்திக்கான இளைஞர் ஒன்றியம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் குற்றம்சாட்டி உள்ளது.
வவுனியா நகரசபைத் தலைமையின் ஊழல் மோசடியும் நிர்வாகச் சீரழிவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலன்களில் இருந்து அந்நியப்பட்டு நிற்பதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனின் சொந்தத் தொகுதியான திருகோணமலை பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் சென்ற ஆண்டு ஆளும்கட்சிக்கு தாவியிருந்தமை தெரிந்ததே. வெறும் பத்திரிகைக்கு அறிக்கைகள் தயாரித்து வழங்குவதன் மூலம் மட்டுமே தங்கள் வெள்ளை வேட்டி அப்புக்காத்து அரசியலைத் தொடர முடியாது என்பதனை வவுனியா நகரசபை வெளிப்படுத்தி உள்ளது.
._._._._._.
வவுனியா நகரசபை உறுப்பினர்களின் கையெழுத்துடன் வெளியாகி உள்ள அறிக்கை:
வவுனியா நகரசபை நிர்வாகச் செயற்பாடுகள்
கனம் கௌரவ தலைவர் கனம் கௌரவ உப தலைவர் செயலாளர் அவர்கட்கு
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற வவுனியா நகரசபைத்தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் பிரிதிநிதிகள் இடம்பெறாது நகரசபை இயங்கியது அத்தோடு இலங்கையில் யுத்தம் முடிவுற்று ஒரு ஜனநாயக சூழலில் காணப்பட்டதுடன் மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த சந்தர்ப்பத்தில் இத்தேர்தல் இடம் பெற்றது.
மக்கள் பிரதிநிதிகளினால் நகரசபையினை கைப்பற்றிய பின்னர் முதலாவது கூட்டத்திலிருந்தே சகல உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் நாம் ஆதரவினை இச்சபைக்கு இதுவரை வழங்கியிருந்தோம். ஆனால் இன்று நடைபெறும் 10வது கூட்டத்தில் நாம் பிரசன்னமாகி இருக்கின்றோம். ஆனால் இதுவரை இச்சபை உருப்படியான எந்த ஒரு வேலைத்திட்டத்தினையும் இச்சபைக்கு பொறுப்பாக இருந்து செயற்படுகின்ற கௌரவ தலைவர் கௌரவ உப தலைவர் செயலாளர் ஆகிய மூவரும் திறம்பட செயற்படவில்லை என்பதை மிகவும் மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்
தங்கள் மூவரினதும் செயற்பாடுகள் சம்பந்தமாக வவுனியா நகரில் இருக்கின்ற கல்விமான்கள், உத்தியோக சமூகத்தினர், வரியிறுப்பாளர்கள், வாக்காளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய நலன் விரும்பிகள் பல்வேறுபட்ட விமர்சனங்களை சுமத்தியுள்ளனர்
அந்த வகையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் மக்கள் நலன் கருதி தொடர்ந்தும் உங்களுடைய சீர்கேடான நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்பதை மீண்டும் மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
01.மக்கள் பிரதிநிதிகள் வவுனியா நகரசபையை பொறுப்பேற்றபிற்ப்பாடு சபையில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நகரபிதாவே பொறுப்புக்கூற வேண்டியவர் ஆவார். அப்படி இருக்கையில் சபையின் நடவடிக்கைகளை இலகுப்படுத்தவும் விரிவாக்கம் செய்வதற்கும் கௌரவ உப தலைவர் கௌரவ உறுப்பினர்கள் செயலாளர் மற்றும் உத்தியோகஸ்த்தர்களுக்கான அதிகாரங்களை எழுத்து மூலம் கையொப்பமிட்டு அதை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை.
02. சபையின் முதலாவது கூட்டத்திலேயே சபையின் கொடுப்பனவுகளை செய்வதற்கு கையொப்பமிடும் அதிகாரங்களினை குறிப்பிட்ட சபையின் உறுப்பினர்கள் மத்தியில் தீர்மானம் எடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு செய்ப்படவில்லை.
உதாரணம்:- வங்கிக்காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம்.
03. வட்டாரரீதியாக கிரமமாக குப்பை அகற்றும் நடவடிக்கை இன்றுவரை சரிவர முன்னெடுக்கப்படவில்லை. மற்றும் வீதிப்பாரமரிப்பு மிகமோசமான நிலையில் உள்ளது. மற்றும் அகற்றப்பட்ட குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு மீள்பாவனைக்கு எடுக்கப்படவில்லை. மற்றும் PHI கிரமமாக குப்பை அள்ளும் பணிகளை ஒவ்வொரு வட்டார ரீதியில் செய்யவில்லை. இது பற்றி விளக்கம் தரவும்.
04. 2009.10.28 ல் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உப குழு தெரிவு செய்தல் தொடர்பான நடவடிக்கை இதுவரையும் எடுக்கப்படவில்லை.
05. 2009.10.28 நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் கலாச்சார மண்டபத்திற்கு அருகில் உணவு விடுதி அமைத்தல் புத்தக நூல்களினை கணணிப்படுத்தல் நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள சிறுவர் பூங்காக்களை திருத்துதல். ஆளணி அட்டவணையினை சமர்ப்பித்தல் வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை செய்யப்படவில்லை.
06. கோவில்குளத்தில் அமைந்துள்ள பாலர் பாடசாலைக்கு ரூபா177180.66 ஒப்பந்தக்காரர் F J V அகிலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பாடசாலை நகரசபைக்கு சொந்தமானதா?
07. 20.01.2010 அன்று நடைபெற்ற நான்காவது கூட்டத்தில் தீர்மானம் இல.04இல் வீதிகளுக்குப் பொருத்துவதற்கு 25 நீர்க்குழாய்கள்(போக்) கொள்வனவு செய்வதற்கு சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது இருந்த போதிலும் இதுவரை நீர்க்குழாய்கள் பல இடங்களில் போடப்படவில்லை. போடப்பட்டபின் அதன் பழைய நீர்க்குழாய்(கல்வெட்டு) திருப்பி நகரசபைக்கு ஒப்படைக்கப்பட்டதா?
08. 24.02.2010 அன்று நடைபெற்ற 5வது கூட்டத்தில் 31.01.2010 வங்கிக் கூற்றின்படி ரூபா 22727963.12 பணம் இருந்தது. ஆனால் ஏனைய உறுப்பினர்கள் உடனடி புதிய வேலைகளினை கேட்கும் போது மற்றும் ஒப்பந்தம் வழங்கிய பின்னர் வேலை முடிவடைந்த நிலையில் சபையிலே பணம் இல்லையென பலதடவைகள் கூறியுள்ளனர். இதற்கு உதாரணம்:- வெளிக்குளத்தில் அமைந்துள்ள ஒளவையார் வீதி, சின்னபுதுக்குளம் துர்க்கா சனசமூக நிலையத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்த வீதி அதே போன்று ஏனைய சிறு வீதிகள்.
09. 21.04.2010 அன்று நடைபெற்ற 7வது கூட்டத்தில் தீர்மான இல.4ல் பூந்தோட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள பொலீஸ் பாதுகாப்பு நிலையம், பூந்தோட்ட சந்தியில் குளக்கட்டு வீதியை மறித்துள்ள பொலீஸ்காவல் அரணை அகற்றி மக்கள் போக்குவரத்துக்கு அவ்வீதியினை விடுவிப்பதாக சபை ஏகமனதாக தீர்மானித்தது. இதுவரைஅது மேற்கொள்ளப்படவில்லை.
10. கந்தசாமி கோவில் வீதியில் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் கடைத்தொகுதிக்கு புதிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை அறியக்கூடியதாக உள்ளது. அப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பின் நகர அபிவிருத்தி அதிகார சபைச்சட்டத்திற்கு அமைய வாகன தரிப்பிடம் வழங்கப்படவில்லை என்பதை தெரியப்படுத்துகின்றோம்.
11. நகரசபைக்கு சொந்தமான பழைய பதிய வாகனங்கள் நகரசபை நிர்வாக நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய, மற்றைய தனிப்பட்ட முறையில் தலைவர், உப தலைவர், செயலாளர் பயன்படுத்துவதாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்றது. இது பற்றி சபைக்கு தெரியப்படுத்துங்கள். மற்றும் 19.06.2010 சனிக்கிழமை, 20.06.2010 ஞாயிற்றுக்கிழமை கௌரவ உப தலைவர் மு முகுந்தரதன் அவர்களால் அவரது தனியார் கல்வி நிறுவன வகுப்பிற்காக ஏனைய தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களை ஏற்றிக்கொண்டு மாங்குளம் மல்லாவிக்கு வாகனம் பாவிக்கப்பட்டுள்ளது. அதன் உண்மை நிலை என்ன?
12. கடந்தகாலங்களில் வவுனியா நகரசபையினால் மாதாந்தம் நடாத்தப்பட்டு வந்த பௌர்ணமி கலைவிழா நிகழ்ச்சியை மீண்டும் நடாத்தும்படி பல தடவைகள் கேட்கப்பட்டபோதிலும் இதுவரை தலைவர் முடிவு எடுக்கவில்லை. இதனால் இளம் கலைஞர்க்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
13. டெங்கு ஒழிப்புத்திட்டத்திற்கு கௌரவ ஆளுனரால் ரூபா4800000 (ரூபா48 லட்சம்) பணம் வவுனியா நகரசபைக்கு வழங்கப்பட்டது. இப்பணம் தலைவர் உப தலைவர் செயலாளர் Dr சத்தியமூர்த்தி என்பவர்களினாலே கையாளப்பட்டது. இதுவரை அதற்கான கணக்கறிக்கை சபையிலே சமர்ப்பிக்கப்படவில்லை.
14. தர்மலிங்கம் வீதி முடிவடையும் ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள நகரசபை அங்கீகாரம் வழங்காத மூன்று கடைகளினை அகற்றுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அத்தீர்மானம் சபையிலே பத்து உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் சமூகமளிக்காத சந்தர்ப்பத்தில், பின்னர் அக்கடையினை அகற்றுவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக சபையிலே தீர்மானம் எடுக்கப்பட்டது. இது தலைவரின் கபடப்போக்கை காட்டுகின்றது.
15. ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வாளிக்கிணற்றிக்கு உட்செல்லும் கதவின் ஒரு பகுதியினை மூடி நகரசபையின் சபை அங்கீகாரமில்லாமல் 16 அடி நீளமான கடையொன்று கட்டப்பட்டு அதற்கு வாடகை அறவிடப்படுகின்றது. அப்பணம் சபைக்கு கிடைக்கின்றதா? என்பதை எமக்கு தெரியப்படுத்த வேண்டும். அத்தடன் கற்கழி வீதியில் உள்ள ஓர் ஒழுங்கையை இடைமறித்து கடை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது பற்றி நகரசபைத் தலைவர் அறிந்திருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏன்?
16. பூந்தோட்டச்சந்தியில் அமைந்துள்ள வடிகாலைத் திருத்தி கழிவுநீரினை சீராக ஓடும் நிலைக்கு அதில் அமைந்துள்ள கல்வெட்டினை அகற்றி புதியதொரு கல்வெட்டினைப் போட்டுத் தருமாறு பல தடவை Dr பஞ்சலிங்கம் அவர்களால் எழுத்துமூல கடிதம் வழங்கியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஏன்?
17. சபைக் கூட்டங்களின் போது கௌரவ உறுப்பினர்களால் தெரிவிக்கப்படும் மக்கள் நலன் சார்ந்த தேவைகள், கருத்துக்கள், பிரச்சினைகளை எடுத்துரைக்கும்போது வேண்டுமென்றே செயலாளர் அவர்கள் கூட்ட அறிக்கையில் அவற்றை சேர்த்துக் கொள்ளப்படாதது ஏன் என்பற்கு சரியான விளக்கம் கூறப்பட வேண்டும்
18. கௌரவ தலைவர் அவர்கட்கு ரூபா6800000 (ரூபா68 லட்சம்) பெறுமதியான வாகனத்தினை கொள்வனவு செய்யும்போது சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது என்பதற்கு அப்பால் கூறுவிலை கூறப்பட்டதா? இயந்திரப் பொறியியலாளர் ஒருவரின் தராதர அறிக்கை பெறப்பட்டதா? என்பதை கௌரவ உறுப்பினர்களுக்கு அறியத்தர வேண்டும். ஏன் இதைக் கேட்கிறோம் என்றால் அண்மையில் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட வாகனம் தவறான பாவனையின் காரணமாக வவுனியா நகரசபை எல்லைக்குள் விபத்துக்கு உள்ளாகியிருந்தும் அவ்வாகனம் கொழும்புவரை சென்று திரும்பி வந்தமையினால் அவ்வாகனத்தில் மிகப்பெரிய பிழை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட இடத்தில் நடைபெற்ற விபத்தை அங்கு நடைபெற்றதாகக் காட்டாமல் அது வேறு இடத்தில் நடந்ததாகக் காட்டி காப்புறுதி பெறப்பட்டுள்ளது. அதன் உண்மை நிலை இதுவரை சபைக்குத் தெரியப்படுத்தவில்லை. இதன் உண்மை நிலை என்ன?
19. நகரசபை உத்தியோகத்தரை ஊழியர்களை இடம்மாற்றம் செய்யும்போதோ அல்லது இடைநிறுத்தும்போதோ அல்லது பதவி உயர்வு வழங்கப்படும்போதோ சபையின் நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
உதாரணமாக:- T O சிவராமன், வேலைப்பகுதியை சேர்ந்த சிற்றூழியர் பாஸ்கரன்.
20. கச்சேரியினால் நகரசபைக்கு வழங்கப்பட்ட வேலைப்பகுதி ஒன்று சூசைப்பிள்ளையார் குளம் சனசமூகநிலையத்தின் ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் சபையின் எந்தவித அங்கீகாரம் இல்லாமல் ரூபா500000 (ரூபா 5 லட்சம்) முற்பணமாக வழங்கப்பட்டதாக கேள்விப்பட்டுள்ளோம். சபையின் அங்கீகார முறை சரியான முறையில் பின்பற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். இதன் உண்மைநிலை என்ன?
21.சின்னப்புதுக்குளம் துர்க்கா சனசமூக நிலையத்திற்கு கௌரவ நகரசபைத்தலைவரின் அங்கீகாரத்துடன் குறிப்பிட்ட வீதியொன்று ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்டு வேலை முடிவுற்ற நிலையில் கௌரவ நகரசபைத்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டும் ஒப்பந்தக்காரருக்கு இவ்வேலை திருப்திகரமாக முடிவுற்றுள்ளது என்பதை கூறியுள்ளார். தற்போது செயலாளர் முடிவுற்ற வேலைக்கான கொடுப்பனவினை வழங்கமுடியாது என்று நிராகரித்துவிட்டார். எனவே இவ்வேலையை முடித்துக்கொடுத்த ஒப்பபந்தக்காரர்கள் சனசமூகநிலைய நிர்வாகம் மிகமோசமான நிதி நெருக்கடியில் இருப்பதாக அறிகின்றோம். இதன் உண்மை நிலை என்ன?
22. 25.06.2010ல் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றதாக விசேட கூட்ட அறிக்கை கௌரவ உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தக் கூட்டம் பற்றி அறியத்தருவது யாதெனில்
1. இக்கூட்டத்தில் செயலாளர் பங்கு பற்றவில்லை.
2. கூட்டம் சபா மண்டபத்தில் நடைபெறவில்லை.
3. கௌரவ உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட விசேட கூட்ட அறிக்கையில் தலைவர் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளார் செயலாளரின் கையொப்பம் காணப்படவில்லை.
4. கூட்டத்திற்கு கௌரவ இ. சிவகுமார், கௌரவ சு குமாராசாமி சென்றிருந்தனர் கௌரவ தலைவர் அறையிலேயே இவ்விரு உறுப்பினர்களுடனும் தலைவர் அவர்கள் கதைத்து குளிர்பானமும் வழங்கி ஏனைய உறுப்பினர்கள் வராததினால் கூட்டத்தினை வேறொரு நாள் கூடுவதாக தலைவர் கூறியிருந்தார்.
5. அன்று நடைபெற்ற கூட்டத்தில் கௌரவ JADL ஜெயசேகரா வரவல்லை அவர் வந்ததாக கூட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
மேற்கூறப்பட்ட காரணங்களினால் இக் கூட்டம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது
23. வாகனத்திற்கு தேவையான எரிபொருட்கள், பயன்படுத்தப்படும் ரயர்கள் மற்றும் சபைக்கு தேவையான பொருட்கள் மக்கள் பிரிதிநிதிகள் சபையினை பொறுப்பேற்ற பிற்பாடு கூறுவிலை கோரி பெறப்பட்டதா என்பதை இச்சபைக்கு இதுவரை அறியத்தரப்படவில்லை. இதற்கான முழுவிளக்கத்தையும் தரவும்.
24. மக்கள்பிரதிநிதிகள் சபையை பொறுப்பேற்றபின்னர் இன்று வரைநடைபெற்ற சகல நடவடிக்கைகளுக்கமான கணக்காய்வு செய்யப்பட வேண்டும் என்பதனை சபைக்கு அறியத்தருகிறோம்.
25. வீதி விளக்கு போடுவதற்கு நகர சபைக்கு பணம் ஒதுக்கப்பட்டது இன்றுவரை பல வீதிகளுக்கு மின்விளக்கு போடப்படவில்லை. இதன் உண்மைநிலை என்ன?
26. அண்மையில் இசைநிகழ்ச்சி ஒன்று நகரசபை மைதானத்தில நடைபெற்றது. இதன் வரி விபரத்தினை அறியத்தரவும். அத்தோடு நகரசபை நடாத்துவதாக பத்திரிகையில் விளம்பரம் போடப்பட்டது. இதற்கான சபை அனுமதி பெறப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.
27. அண்மையில் பல வேலைகளுக்கான ஒப்பந்தங்கள் தன்னிச்சையாக வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைநிலை என்ன?
28.வவுனியாகுளத்தில் உள்ள தனியார் காணி ஒன்று எடுக்கப்பட்டு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு இடைநடுவிலே கைவிடப்பட்டுள்ளது. இதுவரை சபைக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இதன் உண்மைநிலை என்ன?
29.சிங்கள மொழிபெயர்ப்பாளர் தேவையென பலதடவை கௌரவ உறுப்பினர் JAD லலித்ஜெயசேகர என்பவரால் சபையிலே கூறியபோதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை
மேற்கூறப்பட்ட விடயங்களுக்கு சபை சரியான பதிலை தரும் பட்சத்தில் தொடர்ந்தும் சபைக்கு ஆதரவு வழங்குவோம் சரியான பதில் கிடைக்காவிடில் இதுவரை நாம் வழங்கி வந்த ஆதரவினை விலக்கிக்கொள்வதை தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்
கடந்த 10 மாதமாக கௌரவ தலைவர், கௌரவ உப தலைவர் என்பவருக்கான வாகனம், குளிரூட்டி(AC) தளபாடங்கள் என்பவற்றிக்கு பல லட்சம் ரூபா சபைப்பணத்தினை விரயமாக்கியிருந்தும் எந்தவொரு உருப்படியான வேலையும் இதுவரை செய்யப்படவில்லை என்பதனையிட்டு பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் நாம் எமது ஆட்சேபனையை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
வணக்கம்.
1. .கௌரவ செ சுரேந்திரன் (TNA)
2. .கௌரவ ஜி ரி லிங்கநாதன் (DPLF)
3. .கௌரவ தேசமானய சு குமாரசாமி (DPLF)
4. .கௌரவ க பார்த்தீபன் (DPLF)
5. .கௌரவ இ. சிவகுமாரன் (TNA)
6. .கௌரவ ஜ.கனகையா (TNA)
7. .கௌரவ M S அப்துல்பாரி (PA)
8. .கௌரவ J A D லலித்ஜெயசேகர (PA)