05

05

கொழும்பு நகரில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 20 தொடர்மாடிக் கட்டடங்கள்! – இலங்கைப் புலனாய்வுப் பிரிவு

கொழும்பு நகரில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 20 தொடர் மாடிக் கட்டடங்கள் உள்ளதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ‘லக்பிம நியூஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த 20 தொடர்மாடிக் கட்டடங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும், அவர் கனடாவில் வசித்து வருவதாகவும் புலனாய்வப்பிரிவு தெரிவித்துள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இக்கட்டடங்களின் உரிமையாளர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவ்விடயம் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய வர்த்தகருக்கே இக்கட்டடம் சொந்தமானது எனவும். நகர அபிவிருத்தி அதிகார சபை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதன் பின்னரே இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ‘லக்பிம’ தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தொடர் மாடிக்கட்டங்கள் கனடா வர்த்தகருடையது என்பதும், அவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்பதும் விசாரணைகளில் நிருபிக்கப்பட்டால் இக்கட்டடங்கள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இதே போன்று நாற்பதிற்கும் அதிகமான கட்டடங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அங்கீகாரமின்றி கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிவாரணம் நிறுத்தப்பட்ட மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்க ஏற்பாடு!

யாழ். மாவட்டத்தில் மீளகுடியமர்த்தப்பட்ட வன்னி மக்களுக்கு தொடர்ந்தும் மூன்று மாதங்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா முகாம்களிலிருந்து யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான நிவாரண உணவுப் பொருட்கள் ஆறு மாதங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டதால் குறித்த மக்கள் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.

இவ்வாறு நிறுத்தப்பட்ட நிவாரண உதவிகள் சம்பந்தப்பட்ட மக்களுக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு  வழங்க யாழ்.மாவட்டச் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விரைவில் குறித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என யாழ்.செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த 320 குடும்பங்கள் நாளை மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 320 குடும்பங்கள் நாளை செவ்வாய் கிழமை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். வவுனியா நலன்புரி முகாமிலிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ளனர். நலன்புரி நிலையத்திலிருந்து இன்று அழைத்து வரப்பட்ட இம்மக்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கான பதிவுகள், சில நடைமுறைகள் முடிவடைந்ததும் நாளை அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். பாரதிபரம் பாடசாலை சில மாதங்களாக இயங்கி வருகின்ற போதும் அக்கிராமத்து மக்கள் தற்போதே மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெளிமாவட்டங்களில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் வசிக்கும் வன்னி மக்களின் மீள்குடியேற்றப் பதிவுகள் இம்மாதத்தில் நடைபெற மாட்டாது என கிளிநொச்சி மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்ஸ்ரேலா? ஈழஸ்தீனா? : எஸ் ஆர் எம் நிஸ்தார்

Map_of_Israel_and_PalestineTamil Eelamமேலே உள்ளது ஒரு றீ-மிக்ஸ்(re-mix). அதில் என்ன சூட்சுமம் உள்ளது என்பதைத்தான் இனி பார்க்கப்போகிறோம். பொதுவாக மற்றவன் செய்வதை நாமும் செய்துவிட வேண்டும் என்று நம்மவர்களுக்கு எற்படும் ஆசையை நாம் பார்த்திருக்கிறோம். சாதாரணமாக பரத நாட்டியம் பழகுவது, கடை வைப்பது, கார் வாங்குவது, வெளி நாட்டில் வீடு கட்டுவது என்றால் சரி போகட்டும் இவையெல்லாம் சாதாரண மனித ஆசைகள் தானே எனலாம். ஆனால் அதையும் கடந்து இந்திய துணை கண்டத்தில் “பங்களாதேஷ் “(Bangladesh) என்றால் சம்பந்தம் இல்லாமல் “யாழ் தேஷ்” என்று யாழ்ப்பாணத்தில் கோசம் போடுவது, ஐரோப்பாவில் “கொசொவோ”(Kosovo) என்றால் இலங்கையின் “கொசொவோ”வை எப்போது பெற்றுத்தர போகிறாய் என சர்வதேச சமூகத்தை அதட்டலாக கேட்பதெல்லாம் சாதாரண ஆசையாக இருக்க முடியாது என்பது எமது நிலைப்பாடு.

அப்படியான ஆசையை நாம் கொச்சைபடுத்துவதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. சரி இந்த ஆசையை “உரிமை” என்று சற்று நாகரீகமாக சொன்னாலும் அந்த உரிமை என்பது ஒரு தனியான விடயம், அந்த உரிமை நியாயமானதாக இருக்க வேண்டியது அதன் முக்கிய தன்மைகளில் ஒன்று, அந்த நியாயமான உரிமையையும் நியாயமான முறையில் அடைய முயற்சிப்பது என்பது வேறோர் விடயமென்பதையும் நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒடுக்கப்படும் மக்கள் கூட்டம், கலாச்சாரக் குழு, சமயப் பிரிவு, குலம், கோத்திரம், தேசியம், நாடு என்று மனித நாகரீகத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வரலாற்றின் ஊடாக நாம் பலதையும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இந்த அடிப்படையில் ஒன்றாய் இருந்த நாடுகள் பிரிந்தும், பிரிந்தவை சேர்ந்தும், புதிதாக பிறந்தும், பிறந்து வளர்ந்தவை முக்கல் முனங்கள் இன்றி நிரந்தரமாக அழிந்துள்ளதையும் கூட நாம் காணக்கூடியதாக உள்ளது. இந்த பின்னணியிலேயே தமிழர்களின் “தனி நாட்டு”க்கான கோரிக்கை (வெற்று கோசம்) என்பதை பார்ப்பது தவிர்க்க முடியாதுள்ளது.

தனிநாடு காண புறப்பட்டவர்கள், அதே நோக்கத்தை கனவிலும், நினைவிலும் இன்றும் காவித்திரிபவர்கள் தமக்கு “இஸ்ரவேல்” ஒரு பாடமாக அமையவேண்டும் என்று சொல்வதையும், சில நேரங்களில் தமது நிலைமை “பாலஸ்தீனர்கள்” ளின் நிலைமையை ஒத்ததென்று ஒன்றுக்கொன்று பொருந்தாத முறையில் பகிரங்கமாக எழுதுவதும், பேசுவதும் வியப்பை அளிப்பதாக உள்ளது. ஆகவே இந்த கோசம் எழுப்புவோருடன் நியாய சிந்தையுள்ளவர்கள் கோட்பாட்டு ரீதியாக சற்று ஒதுங்கி இடைவெளிவிட்டு நிற்கின்றதை நாம் மறத்தல் ஆகாது.

சுதந்திரம் என்ற(வார்த்தையை)தை தவிர நம் நாட்டு (இனப்) பிரச்சினை வேறு எந்த நாட்டு பிரச்சினைகளுடன் நேரடி ஒப்பீட்டுக்கு ஒத்ததாக தென்படவில்லை. அதைவிட முக்கியமாக இன்னொரு நாட்டின் தலையீட்டினால் இந்த பிரச்சினை ஏற்படவில்லை என்பதனால், இது உள்நாட்டு பிரச்சினை என்று மற்றவர்களை உள் நுளைய விடாமல் தடுப்பதற்கு உதவியாகவும் இது அமைந்து விடுகின்றது.

ஆகவே பங்களாதேஷ், கிழக்கு தீமோர், கொசொவோ, எரித்திரியா, கஸ்மீர், பலஸ்தீனம் என்பதை எல்லாம் நம் பிரச்சினையுடன் போட்டு குழப்பி அந்த குழப்பத்தில் இருந்து நாம் வெளிவர முடியாதவர்களாக இருந்து கொண்டு நம் பிரச்சினைகளுக்கு அடுத்தவர் பாணியில் பரிகாரம் தேட முயல்வது நம்மை எப்போதும் குழப்பத்திலேயே வைத்திருக்கும். ஆகவே இலங்கை பிரச்சினையை இஸ்ரவேலுடன் அல்லது பலஸ்தீனத்துடன் ஒப்பிடுவோர் பின்வரும் விடயங்களை சற்று நோக்க வேண்டும்.

இன்றைய வரலாற்று காலத்துக்கு முற்பட்டகாலத்தில் இஸ்ரவேல் என்ற ஒரு நாட்டை உலகப் படத்தில் காணமுடியாது. பாலஸ்தீனம் என்ற ஒரு பிரதேசத்தின் பெயர் இஸ்ரவேலர் அப்பிரதேசத்தில் குடியேறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட ஒன்று. இது யூதர்களின் ஹிப்ரு (Hebrew)மொழியில் “ப்லெஸ்த்”(Plesht), அதாவது பிலிஸ்தீனர்களின் நிலம்( land of Philistines) என்று அறியப்பட்டது. இந்த பெயரும் ஜோர்தான் பள்ளத்தாகில் (Jordan Valley) கி.மு.5000-4000 (Early Bronze Age) ஆண்டுகளில் வாழ்ந்ததாக சொல்லப்படும் க்ஹசலியர்களி( Ghassulians) ன் இப்பிரதேசத்துக்கான குடியேற்றத்துடன் வந்தாக வரலாறுகள் கூறுகின்றன. பிற்பாடு “பிலஸ்டியா” (Philastia) என்ற பெயருடன் இன்றைய காஸா(Gaza) பிரதேசத்தில் சற்று கூடிய நிலப்பரபுடன் ஒரு பிரதேசம் காணப்பட்டதையும் வரலாறு எமக்கு காண்பிக்கின்றது. பைபிளின் கூற்றுப்படி இந்த பிரதேசத்துக்கு இஸ்ரேலியர் என்ற கோத்திரத்தினர் (tribe) குடியேறியது கி.மு. 2000- 1550 (Middle Bronze Age) காலத்திலாகும். பிற்காலத்திலும் ரோமர்கள் இப்பிரதேசத்தை சிரியா பலஸ்தீனா (Syria Palaiestina) என்றே அழைத்தனர். இந்த பிரதேச மக்கள் தமது சனத்தொகை விரிவிற்கேற்ப வாழ்விட நிலப்பரப்பை அதிகரித்து சென்றனர்.

அதேபோல் ஆப்பிரஹாமின்(Abraham) அடியை ஒட்டிய ஏகத்துவ இறை(monotheistic)கொள்கையை மூலமாக கொண்ட மூன்று சமயங்கள், அதாவது யூதம் (Judaism), கிறிஸ்தவம்(Christianity), இஸ்லாம்(Islam) என்பவற்றுள் மூத்த சமயமான யூதத்தை பின்பற்றியவர்களே யூதர்கள்( இன்று யூத இனதில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயத்தை பின்பற்றுவோரும் உள்ளனர்). இந்த இனத்தின் தந்தையாகிய யாக்கோபு (Jacob) முதலில் “இஸ்ரவேல்” என்று அழைக்கப்பட்டார். அடிப்படையில் ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்ட பெயர் இது. இவரின் சந்ததியினர் “இஸ்ரவேலர்” என்று பின்னர் அழைக்கப்பட்டனர். இவர்களும் அந்த பிரதேசத்திலே மற்றவருடன் கூடி வாழ்ந்தார்கள். ஆகவே இந்த பிரதேசத்திற்கான யூதர்/இஸ்ரவேலர்களின் வரவு பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. எனவே பாலஸ்தீனத்துக்கு யூதர்/இஸ்ரவேலர்கள் குடியேறியவர்களே அல்லாமல் அதன் அடிப்படை உரித்தாளர்களில்லை.

இந்த இடத்தில் சற்று இலங்கையை நோக்குவோமானால் இயக்கர், நாகர் (நாகர்களே பிற்காலத்தில் “சோனகர்” என்று அறியப்பட்டார்கள் என்ற (உறுதி படுத்தப்படாத) கருத்தும் நிலவுகின்றது) என்ற மக்கள் கூட்டம் வாழ்ந்த இலங்கையில் பிற்காலத்தில் புத்தளத்தின் “தம்பண்ண” என்ற பகுதியில் தோழர்களுடன் வந்திறங்கிய விஜயனின் வழித்தோன்றல் சிங்கள மக்களாகவும், கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்த, முக்குவர் உட்பட, யாழ் பகுதியில் குடியேறியோர் தமிழ் மக்களாகவும் இலங்கையில் வாழ்வதை நினைவூட்டுவதாக உள்ளது. ஆகவே இலங்கையில் சிங்களவரும், தமிழரும் பிற்காலத்தில் குடியேறியோரே அல்லாமல் இலங்கையின் அடிப்படை உரித்தாளர்கள் இல்லை.

காலத்துக்கு காலம் எகிப்தியர் (Egyptians), அஸரியர்(Assyrians), பபிலோனியர்(Babylonians), பாரசீகர் (Persian), கிரேக்கர்கள்(Greeks- பேரசர் அலக்ஸாந்தர் (Alexander the Great),ரோமர்(Romans), பைசாந்தியர்(Byzantines), உமையாக்கள்(Umayyads), அப்பாசிகள்(Abbasids), பாத்திமர்கள்(Fatimids), சிலுவை யுத்தகாரர்கள்(Crusaders), ஐயூபிகள்(Ayyubida), மம்லுக்கர்(Mamluks) துருக்கியர் (Ottoman Turks)களால் ஏற்பட்ட படை எடுப்புகள் காரணமாக பலஸ்தீனிலும், கானான் பிரதேசத்திலும் இருந்த யூதர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர், இன்னும் ஒரு பகுதியினர் ஆக்கிரமிப்பாளர்களின் நாட்டு பிரஜா உரிமையை பெற்றனர், மிகுதியானோர் உலகம் பூராவும் குடியேற்றத்தில் ஈடுபட்டனர்,

அதேபோல் இந்த இடத்தில் இலங்கையை ஒப்பிடும்போது இந்நாடு மீதான இந்திய படையெடுப்புகள், ஐரோப்பியரின் காலனித்துவம் என்பன இலங்கையை நோக்கியதான குடிவரவை ஏற்படுத்தியதே அல்லாமல் குடி அகள்வை ஏற்படுத்தவில்லை. எனினும் 1983ல் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவினால் அரங்கேற்றப்பட்ட தமிழருக்கெதிரான இனக்கலவரத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் பெருவாரியாக இலங்கையை விட்டு வெளியேறியதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இன்று சுமார் 1.5 மில்லியன் தமிழர் (வெளியேறியோரும் அவர்களின் வழித்தோன்றல்களும்) உலகம் பூராகவும் பரந்து காணப்படுகின்றனர்.

இறுதியாக முதலாம் உலக போர் முடிவில் பாலஸ்தீனத்தின் ஆட்சி அதிகாரம் (administrative mandate) உலக சபையினால் (World Organization) பிரித்தனியாவின்(British) கையில் ஒப்படைக்கப்படுகின்றது. இக்காலத்தில் எல்லாம் இப்பிரதேசம் “பலஸ்தீன்” என்றே அறியப்பட்டது, அழைக்கப்பட்டது. பெரும்பான்மை மக்கள் நினைப்பது போல் “இஸ்ரவேல் அல்லது இஸ்ரேல்” என்ற பிரதேசம் பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதல்ல.

“பலஸ்தீன்” என்ற இப்பிரதேசம் பிற்காலத்தில் “இஸ்ரவேல்”லாக மாறியது பின்வரும் முறையிலேயே. கி.பி1882ம் ஆண்டில் லியோன் பின்ஸ்கர் (Leon Pinsker)என்பவர் யூதர்களுக்கான ஒரு தனிநாட்டை அமைப்பதற்கான ஒரு கொள்கையை, அதாவது யூதர்களுக்கு மாத்திரம் என்று பொருள் கொள்ளக்கூடிய “சியோனிஸம்” (Zionism) என்ற கொள்கையை உருவாக்கினார். இந்த காலப்பகுதியில்தான் ஐரோப்பா எங்கிலும் யூதர்கள் இனப்படுகொலைக்கு(Genoside)முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இத்தருணத்தில் யூதர்களின் மீட்சி என்பது அவர்களின் விடுதலையிலும், தமக்கான தனி நாடொன்றை அமைப்பதிலுமே தங்கியுள்ளது என பின்ஸ்கர் மிக திடமாக நம்பினார். மேலும் யூதர்களின் ஒட்டு மொத்த சன வெளியேற்றம்(mass exodus) ஆர்ஜண்டீனா(Argentina)வை நோக்கியதாக இருக்கவேண்டும் என்றும் பின்ஸ்கர் அடையாளம் கண்டார். இந்த கருத்தானது ஸியோனிசத்தின் தந்தை என்றழைக்கப்படும் தியோடொர் ஹேர்ஷல் (Theodor Herzel)என்பவரினால் கட்டிக் காக்கப்பட்டது. ஆனாலும் ஹேர்ஷல் யூத குடியேற்றத்துக்கு ஆபிரிக்காவின் உகண்டா(Uganda) வே உகந்தாக கருதினார். இருப்பினும் பிற்காலத்தில் அவரின் பார்வை பலஸ்தீனை நோக்கி காணப்பட்டதால் ஐரோப்பா எங்கும் பரவிக்கிடந்த யூதர் “பலஸ்தீன்” என்ற நிலப்பரப்பையே தமக்கான தீர்வாகக் கருதினர். எனவே இஸ்ரவேல் என்பது வசதிகருதி பலஸ்தீனில் உருவாக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பு என்பதற்கப்பால் அப்போது அதற்கு ஒரு சட்டரீதியான (உரிமை) (அல்லது) அங்கீகாரம் இருந்ததில்லை. பிற்பாடு 1897ல் சுவிற்சர்லாந்து(Switzerland) பாசலில் (Basle) நடைபெற்ற முதலாவது ஸியோனிச மாநாட்டில்(Zionism conference) பலஸ்தீனில் இஸ்ரவேலை உருவாக்குவதற்கான கருத்து முடிவாகியது. இதன்படி யூதர்களுக்கான நாடாக பலஸ்தீன பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டு யூதர்களை அப்பிரதேசம் நோக்கி குடிப்பெயர்வு செய்வதற்கான நிதி சேகரிப்பும் தொடங்கி வைக்கப்பட்டது.

இதை சற்று இலங்கை நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 1815ல் கண்டி ராச்சியம் ஆங்கிலேயர் கையில் வீழ்ச்சி அடைய 1833 அளவில் முழு இலங்கையும் ஒற்றை நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டே தமிழருக்கு அரசியலை ஒட்டியதான பிரச்சினை இருந்த(தாக சொல்லப்பட்ட) போதிலும், 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலமே அப்பிச்சினைக்கான தீர்வு “தமிழ் ஈழம்” என்ற தனிநாடு என்றாகியது. அதிலும் இந்த தமிழ் ஈழம் இலங்கையின் மேற்கு கரையில், அதாவது நீர்கொழும்புக்கு வடக்கேயுள்ள “கொச்சிச் கடை” பாலத்தின் மேலிருந்து வென்னப்பு, நாத்தாண்டி, மாதம்பை, சிலாபம், புத்தளம், வில்பத்து, மன்னார், முழு யாழ்குடா நாடு, முல்லைத் தீவு, திருக்கோணமலை, ஏராவூர், வாழைச்சேனை, மட்டக்களப்பு, கல்முனை, சம்பாந்துறை, அக்கரைபற்று, அம்பாறைக்கும் அப்பால் இலங்கையின் தென்கிழக்கு மூலைவரை சென்றதோடு மத்திய இலங்கையில் ஒரு பெரிய நிலப்பரப்பையும் தன்னகத்தே கொண்ட “தமிழ் ஈழம்” என்ற நிலப்பரப்பு தமிழருடையது என்று அதற்கு நிலஉரிமை கோரப்பட்டது.

ஹேர்ஷல் இஸ்ரவேலின் உருவாக்கத்துக்கான சர்வதேச ஆதரவு என்பது ஏதாவது ஒரு வல்லரசின் ஒத்துழைப்புடனேயே சாத்தியப்படும் என்ற உண்மையை கண்டறிந்தார். இந்த சந்தர்ப்பத்தில் பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி இஸ்லாம் என்ற சமயத்தை அடிப்படையாகக் கொண்ட உதுமாணிய மக்களதிபர்(கலிபா) (Ottoman Khilafah) ஆட்சின் வீழ்ச்சியை எதிர்பார்த்திருந்த பிரித்தானியா 1917ல் பல்போர் தீர்மானத்தை(Balfour Declaration) வெளியிட்டு பலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தாய் நாடு அமைவதற்கான தமது விருப்பத்தை தெரிவித்துக்கொண்டது.

Map_of_Israel_and_Palestineஏற்கனவே ஹிட்லரின் இன சுத்திகரிப்பு( ethnic cleansing), “ஹொலொகோஸ்ட்” (Holocaust) என்று சொல்லப்படும் திட்டமிட்ட பாரிய இன அழிப்புக்கு முகம் கொடுத்த யூத மக்கள் தமது இனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத்தால் நிலைகுலைந்திருந்தாலும், முதலாம் மகா யுத்தத்தை தொடர்ந்த பிரித்தானியாவின் பொருளாதார நெருக்கடியும், யூதர்களின் குடியேற்றத்துக்கு ஸியோனிஸ்டுகள் வழங்கிய அபரிமிதமான பொருளாதார உதவிகளும், நீண்டகால நில உரித்து கொண்ட(indigenous) பலஸ்தீனியரை அவர்களின் நிலப்பரப்பிலேயே வறுமையில் வீழ்த்தியதால் பொருளாதார மீட்சிக்காக பலஸ்தீனியரின் நிலங்கள் யூதர்களால் வாங்கப்பட்டன. அதேநேரம் யூத தொழிலார்களுக்கே அப்பிரதேசத்தில் முன்னுரிமையும் கொடுக்கப்பட்டது. இந்த நிலைமைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திய யூதர்கள் தமது சமூக அபிவிருத்தி, பாதுகப்பு நிலமைகளை கருத்தில் கொண்டு மத்திய, பிராந்திய நிர்வாக அமைப்புக்களை ஏற்படுத்தினர். பாடசாலை, தபால் நிலையங்கள், சுகாதார நிலையங்கள் என்பவற்றுடன் இர்குன்(Irgun), ஹகனா(Haganah) என்ற இரண்டு மூர்க்கமான ஆயுத குழுக்களையும் நிறுவினர். இது பலஸ்தீனியரை இரண்டாம்தர பிரசைகளாக்கியது. இது பற்றிய பலஸ்தீனியரின் அதிருப்தியும், முறைப்பாடுகளும் பிரித்தானியரிடம் எடுபடவில்லை. பலஸ்தீனரிடையே அதிருப்தியாளர் அதிகரிக்கத் தொடங்கவே 1937ல் பிரித்தானியர் பலஸ்தீனிய அரபு மக்களுக்கு எதிரான அடக்கு முறைக்கு இஸ்ரேலிய ஹகனா குழுவின் ஆதரவை நாடினர். இதன் அடிப்படையில் 1938ல் ஹைபா(Haifa) பழச்சந்தை குண்டு தாக்குதலில் 74 மக்கள் பலியாகினர். இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் அயன் பபே(Ian Pappe)யின் கூற்றுப்படி இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண நிலையில் ஹகனா குழு அங்கே இன சுத்திகரிப்பு நடவடிக்கையை ஒன்றை மேற்கொண்டது. நிலைமை கட்டுக்கடங்காது போனதினால் பிராந்திய அரபு நாடுகளிடம் இருந்து வரும் எதிர்ப்பை சமாளிக்க பிரித்தானியா தாங்கள் யூதர்களின் தனிநாடு அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அரபு உலகத்தை சமாதானப்படுத்தியது. இருந்த போதிலும் நிலத்தையும், அது தொடர்பான அதிகாரத்தையும் கைப்பற்றுவதற்கான ஸியோனிஸ்டுகளின் வேட்கையை இது குறைத்து விடவில்லை.

இந்த சந்தர்ப்பத்திலேயே பின்னை நாள் இஸ்ரேலிய பிரதமரான பென் கூறியன்(Ben Gurion) பிரித்தானியாவுக்கு எதிரான ஆயுத கிளர்ச்சியை இர்குன் குழுவினர் மூலமாக மேடை ஏற்றினார். இந்த ஆயுத கிளர்ச்சியில் ஜெருசலம் புகையிரத நிலையம், பிரித்தானிய ஆட்சி அதிகார சபை, அரசர் டேவிட் விடுதி(King David hotel) என்பன முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டன. எனவே நிலைமை மோசமடைவதை கண்ட பிரித்தானியா உலக சபையினால் (பிற்பாடு ஐ.நா சபையினால்) தனக்கு தரப்பட்டிருந்த பலஸ்தீன் மீதான நிர்வாக அதிகாரத்தை மீளகையளிக்கும் எண்ணத்தை 1947ல் வெளிப்படுத்தியது.

இந்த அசாதாரண நிலையில் ஐ.நா சபையின் “UNSCOP” என்ற காரிய குழு(Working Group) “இரு நாட்டு தீர்மானம்” (two states solution)ஒன்றையும் அதே நேரத்தில் ஜெருசலம் சர்வதேச கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதற்கான திட்டமொன்றையும் முன் மொழிந்தது. அந்த ஏற்பாட்டிற்கான ஆதரவு அமெரிக்க பக்கமிருந்து மிக அழுத்தமாக இருந்ததால் 33க்கு 13 என்ற வாக்கு வித்தியாசத்தில் இத் தீர்மானம் வெற்றி பெற்றது. இருந்தும் இந்த ஏற்பாட்டை பலஸ்தீனியர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இஸ்ரேலர்களோ மிகவும் ஆர்வத்தோடும், விருப்புடனும் இந்த இரு நாட்டு தீர்வை ஏற்றுக்கொண்டனர். இதை இர்குன் குழுவின் தலைவர் மெனச்சம் பெகின் (Menachem Begin) னின் பின்வரும் கூற்று உறுதிபடுத்துகிறது, அதாவது “அந்த நாட்களில் தனக்கு இருந்த கவலை எல்லாம் எங்கே இந்த அரபுக்கள் இரு நாட்டு யோசனையை ஏற்றுக் கொண்டு ஐ.நா. வினால் வரையப்பட்ட எல்லை கோட்டுக்குள் இஸ்ரேல் என்ற நாட்டை சுருக்கி விடுவார்களோ என்பதுதான்”.

இந்த அசாதாரண நிலையை இலங்கையுடன் ஒப்பிடும் போது நாம் காணக்கூடியதாக இருந்தது பின்வரும் விடயமே, அதாவது தமிழ் ஈழம் என்ற பாரிய நிலப்பரப்பு சம்பந்தமாக எந்த ஒரு ஏற்பாடுமின்றி, வடக்கையும், கிழக்கையும் மாத்திரம் ஒன்றிணைத்த ஒரு பிரதேசம் இந்திய, இலங்கை (ராஜீவ், ஜெயவர்தன) உடண்பாட்டால் தமிழருக்கான ஆட்சி பிரதேசமாக ஏற்றுக்கொள்ளபட்ட போதும் அது மூர்க்கமாக தமிழ் புலிகளினால் நிராகரிக்கப்பட்டது. அன்று அந்த பிரதேசம் புலிகளினால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்திருந்தால் இன்று தமிழர் (ஓரளவேனும்) நிம்மதியாக இருந்திருக்கலாம். அதே நேரத்தில் இன்றைய உள்நாட்டு தமிழ் அரசியல்வாதிகள் மலைநாட்டையும், வட மேற்கையும் கைவிட்டுவிட்டு வடக்கையும், கிழக்கையும் இணைத்த ஒருபிதேசத்தை தமிழர்களின் பூர்வீக நிலமாக இலங்கை அரசு ஏற்று கொண்டால் தாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ விரும்புவதாக கூற, அதாவது இந்திய, இலங்கை ஒப்பந்த அடிப்படையில் ஒரு தீர்வுக்கு வர எத்தனிக்கும் போது, வெளிநாட்டு (புலி) தமிழ் அரசியல்வாதிகளோ, மலை நாடு தவிர்ந்த ஆனால் வடமேற்கு, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட “தமிழ் ஈழம்” என்ற நிலப்பரப்புக்காக “நாடு கடந்த (உத்தேச) தமிழீழ அரசு” ஒன்றை உருவாக்க முனைகின்றனர். ஆனால் தமிழர்களின் தாயகம் என்ற பிரதேசம் தொடர்பான சரியான வரையறை இன்றி, தேவைக்கு ஏற்ற விதத்தில் எல்லைகளை மாற்றி “தமிழ் ஈழம்” என்று கூறிக்கொள்ளும் இந் நிலைப்பாடானது இஸ்ரேலின் பலஸ்தீன் மீதான வசதிகருதி செய்யப்பட்ட நில உரிமை கோரல் போன்றதாகும்.

அன்று ஏன் இரு நாட்டு தீர்வை பலஸ்தீனியர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு இன்று “ஹமாஸ்”(Hamas) இயக்கத்திடம் (சரியோ, பிழையோ) நிறைய காரண காரியங்கள் உள்ளன. ஆனால் பலஸ்தீனியர் அன்று அந்த தீர்வை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று ஒப்பிட்டு ரீதியில் இப் பிரதேசத்தில் அமைதி நிலவ வாய்ப்பு இருந்திருக்கும். இருப்பினும் 13 செப்டம்பர் 1993ன் ஒஸ்லோ தீர்மானம் (Oslo Accord) மூலம் இரு நாட்டு தீர்வை பத்தா(Fatha)அமைப்பின் தலைமையிலான பலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) ன் தலைவர் யாசிர் அரபாத் ஏற்றுக்கொண்டதால், மேற்கு கரை(West Bank)யிலும், காஸா(Gaza) பகுதியிலும் ஓரளவு சுயாட்சி அதிகாரம் கொண்ட “பலஸ்தீன அதிகார சபை” உருவாக்கப்பட்டது. ஆனால் ப.வி.இ(P.L.O) க்கும் ஹமாஸகும் இடையே ஏற்பட்ட கொள்கை ரீதியான இணக்கமின்மையால், இருநாட்டு தீர்வு முன்னேறிச் செல்ல முடியாதுள்ளது.

அத்துடன் இஸ்ரேல் ஐ.நா சபையினால் வரையப்பட்டு தங்களால் முன்னர் ஏற்றுக்கொள்ளபட்ட நிலப்பரப்பை விட 50% மேலதிக நிலத்தை 1967 யுத்தத்தின் மூலம் அபகரித்துக்கொண்டது. மேலும் தொடர்ந்த இஸ்ரேலின் அத்துமீறிய மேற்கு கரை யூத குடியேற்றமும், மதில்கட்டி காஸா பிரதேசத்தை தனிமை படுத்தி மேற்கு கரை மாத்திரமே பலஸ்தீனியரின் நிலப்பரப்பாக்க வெளிப்படையாக எடுக்கும் (மறைமுக) நடவடிக்கைகளும், ஹமாஸின் அனைவருக்கும் பொதுவான பலஸ்தீனம் என்ற விடாபிடியும், அதற்கு ஊக்கம் கொடுக்கும் “இஸ்ரவேலை உலக படத்தில் இருந்து நீக்குதல்” என்ற (இன்றைய) ஈரானின் நிலைப்பாடும் இப்பிரதேசத்தை ஒரு “நிரந்தர கொந்தளிப்பு” பிரதேசமாகவே (hot region) வைத்துள்ளது.

இஸ்ரேல் அமைப்பதற்கான மேற்படி நவம்பர் 1947 வாக்கெடுப்புக்கு பின்னால் டிசம்பர் மாதம் 1947ம் ஆண்டு அரபு பொதுமக்கள் நிலைகள் மீது தொடுக்கப்பட பல குண்டு தாக்குதல்கள் பலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலியருக்கும் இடையில் சிவில் யுத்தம் ஒன்று மூள்வது தவிர்க்கமுடியாத விடயமாகியது. இத்தகைய குட்டி சிவில் யுத்தமானது பொருளாதாரத்தில் அபிவிருத்தியோ, போர் முறையில் அனுபவமோ, திட்டமிடலோ இல்லாத பலஸ்தீனியருக்கு ஆயுத ரீதியாக பயிற்றப்பட்ட இஸ்ரேலியருக்கு முன்னால் அழிவையும், உயிர் நீத்தலையுமே பரிசாக கிடைக்கச் செய்தது.

இத்தகைய நடவடிக்கையின் இறுதி கட்டம்தான் மார்ச் 1948ல் இடம் பெற்றது. இந்த பிரச்சினைக்குரிய பிராந்தியத்தில் அரபு வானொலி மூலம் ஸியோனிஸ்டுகள் அரபுக்களுக்கு பகிரங்க அச்சுறுத்தலை வெளியிட்டனர். அந்த பயமுறுத்தல் வெறும் வாய்ப்பந்தல் இல்லை என்று நிருபிக்கும் முகமாக டெயிர் யசின்(Deir Yassin) என்ற இடத்தில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 250 பலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இச் சம்பவமானது 750,000( ஏழு லட்சத்து ஐம்பதாயிரம்) பலஸ்தீனியர் தமது சொந்த வீடு வாசல்கள், வியாபார நிலையங்கள் என்பவற்றை விட்டு அகதிகளாக வெளியேறச் செய்தது. இத்தகைய நிலைப்பாடானது யூதர்கள் ஐரோப்பாவில் தாம் அனுபவித்த சொல்லொனா துன்பத்தையும், அட்டூழியங்களையும் சற்றும் நினைத்து பார்க்காமல் அப்பாவி பாலஸ்தீனர் மேல் கட்டவிழ்த்த பயங்கரவாதம் வெட்கித் தலைகுனிய வைக்கும் செயலாகும். இந்த பயங்கரவாதத்தை விடுதலை போராட்டம் என்று குறிப்பிடுவது நகைப்புக்கிடமானதே.

இத்தகைய ஒரு முரண்பட்ட நிலமையை இலங்கையிலும் அவதானிக்கலாம். அதாவது 1983 ஜூலை கலவரத்தில் அப்பாவி தமிழர் உயிருடன் தீயிட்டு கொழுத்தப்பட்ட, அடித்து கொல்லபட்ட, பல்லாண்டுகளாக வாழ்ந்த இடத்தை விட்டு அனாகரீகமான முறையில் வெளியேற்றப்பட்ட சம்பவங்களை மிக எளிதில் மறந்துவிட்டு இரத்தம் உறைந்த நிலையில் மன்னார், யாழ் குடா நாடு, முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து சோனகர்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட நிகழ்வானது யூதர்களின் பலஸ்தீன் மக்கள் மீதான பயங்கரவாதத்தை நினைவூட்டுகிறது. 1983ன் கலவரத்தை தொடர்ந்த இரண்டொரு மாதங்களில் விரட்டியடிக்கப்பட்ட தமிழர் மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பினர். ஆனால் விரட்டியடிக்கப்பட்ட சோனகர்களோ சுமார் 20 வருடங்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. ஆகவே தமிழர்களின் “தமிழ் பேசுவோருக்கான” போராட்டமாக (புலிகளால்) கூறப்பட்ட இந்த போராட்டம் ஒரு வசதி கருதிய(பயங்கரவாத) விடயமே.

இந்த பின்னணியில் 14 மே 1947 பிரித்தானியர் தமது நிர்வாக ஆட்சியாணையை (Administrative Mandate) கலைத்த அடுத்த நிமிடம் டேவிட் பென் கூறியன்(David Ben Gurion) இஸ்ரேல் என்ற தனிநாட்டை பிரகடனம் செய்து இஸ்ரேலின் முதல் பிரதமரானார். அமெரிக்க அதிபர் ட்ரூமன்( President Truman) இதை அங்கீகரித்து தமது அறிக்கையை விட தொடர்ந்து ரஸ்யா இஸ்ரேலுக்கான தமது அங்கிகாரத்தை வழங்கியது.

இந்த வெற்றிக்கான மிகவும் ஆழமான திட்டமிடல் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டதற்கு காரணமாக அமைந்தது இஸ்ரேல் ஒரு பலமிக்க நண்பனாக தன்னுடன் பிற்காலத்தில் செயல்படும் என்ற நோக்கிலாகும். அதாவது இந்த பிராந்தியத்தில் அமெரிக்க நலனை பாதுகாக்கும் நாடாக இஸ்ரேல் என்றும் செயல்ப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும். இதன் நீண்டகால நோக்கு மேற்குக்கும் இஸ்லாம் (West and Islam) என்ற சமயத்துக்கும் இடையிலான கருத்தியல்(Ideological) பனிப்போரையும்(cold war), கலாச்சார பொருதுதலை(cultural conflict)யும் அதை ஒட்டிய நடவடிக்கைகளையும் நசுக்கும் திட்டமாகும்.

ஆனால் இத்தகைய ஒரு நிலை இலங்கை தமிழரை பொறுத்தவரை இருக்கவில்லை. 1983ம் ஆண்டின் தமிழருக்கு எதிரான மிக மோசமான இனக்கலவரமானது சர்வதேச அளவில் தமிழர்பால் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியதே அல்லாமல் தமிழரின் இறுதி இலக்கை அடைய அது உதவமாட்டாது என்பதை தமிழர் அறிய தவறியதுமல்லாமல் அதை தங்களுக்கான நிபந்தனையற்ற பூரண ஆதரவாக பொருள் படுத்தி விடயங்களை நகர்த்திச் சென்றனர். இதை இனங்கண்டு எச்சரித்த(தமிழர்)வர்(கள்) இளக்காரமாக பார்க்கப்பட்டனர். இதன் வெளிப்பாடே புலிகளின் தனி தேசிய தலைமை என்ற நிலைப்பாடும் அதை தொடர்ந்த அவர்களின் அடாவடித்தனங்களுமாகும். சர்வதேச ஆதரவு தமக்கு உண்டு என்ற இந்த நிலைப்பாட்டின் ஒரு அம்ச(வடிகட்டிய முட்டாள்தன)மே 13மே 2009 இந்திய பொது தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி மத்தியிலும், அவர்களின் சார்பு கட்சியான ஜெயலலிதாவின் அ.தி.மு.க தமிழ் நாட்டிலும் ஆட்சியை கைபற்றும், எனவே அக்கட்சியுடன் கூட்டு வைத்துள்ள ம.தி.மு.கவின் வை.கோவும் ஜெயலலிதாவும் சேர்ந்து தமிழீழம் பெற்றுத்தருவர் அல்லது ஆகக்குறைந்தது புலித்தலைவர் வே. பிரபாகரனை மீட்டுத்தருவர் என்பதாகும். இதை விடவும் மோசமான(நகைச்சுவையான) கற்பனை கடைசி யுத்தகாலத்தில் அமெரிக்காவின் (உறுதி படுத்தப்படாத) உதவியை நாடியமையாகும். இதை விடவும் “வணங்கா மண்” கப்பல் முல்லை கடலுக்கு செல்ல எத்தனித்தது இறுதி கட்டத்தில் (எதுவுமே கை கூடாவிட்டால்) தலைவரையும் அவருக்கு வேண்டிய முக்கியஸ்தர்களையும் ஏற்றிக் கொண்டு ஐரோப்பா (நோர்வே) கொண்டு செல்ல எத்தனித்த (உறுதி படுத்தபடாத) விடயமுமாகும்.

அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான வலிந்த உதவி அமெரிக்க நலங்கொண்டது. அத்தகைய வலிந்த உதவியை (புலி) தமிழரின் தனி நாட்டுக்கு செய்யவேண்டிய தேவை இப்பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள எந்த ஒரு நாட்டுக்கும் இல்லை. மாறாக இலங்கையுடன் நற்பை பேணி தமது நலனையும் அடையவே சர்வதேச நாடுகள் முயலும், முயன்று வெற்றியும் அடைந்துள்ளன.

மேலும் இன்று பலஸ்தீனுக்கு வெளியே உள்ள 3.5 (இன்றைய இஸ்ரேல் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டோர்) மில்லியன் பலஸ்தீன் அகதிகளின் கோரிக்கை தம்மை மீண்டும் தமது பிராந்தியத்தில் குடியேற அனுமதிக்க வேண்டும் என்பதாகும். இன்றும் 80% மேலானோர் தமது நிலத்துக்கான உறுதி(Deed), வீடுகளுக்கான திறப்பு(Keys)களுடன் தமது தாய் நாட்டில் கால்வைக்கும் காலத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைதான் ஹமாஸின் அரசியல் காய் நகர்த்தலை இலகுவாக்குகின்றது, அதாவது என்றோ ஒரு நாள் இந்த அகதிகள் தமது சொந்த இடங்களுக்கு (இன்றைய இஸ்ரேலுக்குள்) அனுமதிக்கப்படும் போது அது இஸ்ரேலின் சனத்தொகையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அப்படி ஏற்படுத்தும் போது இஸ்ரேல் என்ற நாடு தானாகவே உலக படத்தில் இருந்து நீங்கும் அல்லது நீக்கப்படும் என்பதாகும். எனவே அதுவரை இரு நாட்டு தீர்வு இழுத்தடிக்கப்படும்.

2009 டிசம்பரில் இஸ்ரேலின் மொத்த சனத்தொகை 7,515,400(7.5 மில்லியன்). இதில் 1,213,000(1.2 மில்லியன்) அரபு மக்கள். இது விகிதாசாரத்தில் சுமார் 17% (15% முஸ்லீம்கள், 2% கிறிஸ்தவர்கள்). பலஸ்தீனியர்களின் மொத்த சனத்தொகை சுமார் 12 மில்லியன் இதில் 3,761,000 (சுமார் 3.7மில்லியன்) மாத்திரமே மேற்குகரையிலும், காஸா பகுதியிலும் வாழ்கின்றனர். ஆகவே மொத்த அரபுக்களில் 1/2 வாசி சனத் தொகையிலும் குறைந்தோரே இஸ்ரேலை உள்ளடக்கிய பலஸ்தீனில் வாழ்கின்றனர். ஏனையோர் (அதாவது இன்றைய இஸ்ரேல் பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டோரும், மேற்குக்கரை, காஸா பகுதியில் இருந்து வெளியேறியோரும்) உலகம் பூராகவும் பரவிக் காணப்படுகின்றனர். இஸ்ரேலில் இருந்து துரத்தப்பட்டோர் மீள குடியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உலக நாடுகளின் வலியுறுத்தலே இன்றைய இஸ்ரேல்- பலஸ்தீன பிரச்சினையின் முக்கிய அம்சமாகும்.

இத்தகைய ஒரு நிலையும் இலங்கையில் இல்லை. குடி அகளந்துள்ள சுமார் 1.5 மில்லியன் இலங்கைய தமிழர் மீண்டும் தம் நாட்டுக்கு குடியேறுதல் என்பது நடக்க முடியாத காரியம். ஏனெனில் வெளிநாட்டு தமிழரின் தனிநாட்டு கோசமானது இலங்கையில் இப்போது வாழும் தமிழர்களின் (விருப்பம் அறியப்படாமல் அவர்கள்) மேல் செய்யும் திணிப்பேயாகும். அதைவிட இன்று சட்டத்தால் வலுவிழந்துள்ள வடக்கு, கிழக்கு இணைப்பானது மீண்டும் நிலைபெற இந்த வெளிநாட்டு (புலி) தமிழர் கோருவது வடகிற்கும், கிழக்கிற்குமான சர்வசன வாக்கெடுப்(referendum) பாகும். இத்தகையதொரு சர்வசன வாக்கெடுப்பு வெற்றி பெறுவதற்கான சாத்தியம் இல்லை என்பதைக் கூட மறுக்கும் அளவுக்கு வெளிநாட்டு (புலி) தமிழர் அரசியல் தெளிவின்றி இருப்பது கவலைக்குரியது. அப்படி வடக்கும், கிழக்கும் இணைவதற்கு அப்பிரதேசத்தில் வாழும் தமிழர் அல்லாத சோனகரும், சிங்களவரும் விருப்பம் தொ¢ரிவித்தாலும் வடமேற்கின் நிலை(நாடு கடந்த தமிழீழ அரசுக்கான விளக்கக் கோவையின் வரை படத்தின்படி)என்ன என்பதற்கு திரு. உருத்திரகுமரனுக்கேனும் பதில் தெரியும் என்பது சந்தேகமே.

மேலும் லண்டனை தளமாக கொண்ட புலி ஆதரவு பத்திரிகையான “ஒரு பேப்பர்”(Oru paper)ரின் ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. ரவி அருணாச்சலம் 2009 ஆரம்பத்தில் வெளிப்படுத்திய அவரின் பேராசையை, அதாவது இன்று உலகத் தமிழருக்கு தேவைப்படுவது இரண்டு நாடுகள், ஒன்று “தமிழ்நாடு” என்ற ஒரு தனி நாடு இந்தியாவிலும், “தமிழ் ஈழம்” என்ற தனிநாடு இலங்கையிலும் அமையப் பெறுவதற்கான சாத்தியமற்ற ஆசை, கைவிட்டு இலங்கையில் இரண்டு பிரதேச/மாகாண ஆட்சி அலகுகளை தம்வசம் வைத்திருக்க வடக்கையும். கிழக்கையும் ஒன்றாக இணைக்காமலும் அத்தகைய ஒரு யோசனைக்கு ஆதரவு அளிக்காமலும் இருப்பது தமிழர்களுக்கு எந்த வகையிலும் தீமையாக அமையாது. அத்துடன் இது கிழக்கில் இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதோடு வடக்குக்கும், கிழக்குக்கும் இடையேயும் விரிசலையும் ஏற்படுத்தாது. மாறாக இரண்டு பிரதேச/மாகான ஆட்சிகளைக் கொண்டிருப்பதால் தமிழருக்கு ஏற்பட்ட அல்லது ஏற்படப்போகும் ஆபத்தையும், வடக்கும், கிழக்கும் இணைவதால் ஏற்படப்போகும் நன்மையையும் தெளிவாக எடுத்துக்காட்ட ஆகக் குறைந்தது திரு. ரவி அருணாசலமாவது முன்வருவாரேயானால் இந்த இணைவின் அவசியத்தின் நியாய தன்மையை எல்லாரும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். நிற்க.

ஐ.நா பொதுச் சபையினாலும், பாதுகாப்பு சபையினாலும், இஸ்ரேலும் அதன் அண்டை நாடுகள் தொடர்பாகவும், இஸ்ரேலு- பலஸ்தீன் தொடர்பாகவும், மேற்கொள்ளப்பட்ட சுமார் 100 க்கும் அதிகமான தீர்மானங்கள்(resolutions) இஸ்ரேலினால் தூக்கி வீசப்பட்டுள்ள நிலையில் இலங்கை தமிழர் இஸ்ரேலியரை போல் இருக்கவேண்டும் அல்லது செயல்பட வேண்டும் என்பது தர்க்க ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் (logically and ethically) பிழையானது என்பதோடு அது உலக அரசியலில் இருந்து அவர்களை ஓரங்கட்டும். இத்தகைய ஒரு செயலுக்கு தமிழர் என்றும் பிராயச்சித்தம் செய்ய வேண்டியவராவர். அதேநேரம் தமிழர் தங்களை பலஸ்தீனியரின் நிலையில் வைத்து பார்ப்பது உலக அரங்கில் அவர்களை என்றும் நகைப்புக்குரியவர்களாகவே காட்டி நிற்கும். ஏனெனில் ஒப்பிட்டு ரீதியில் அனைத்துலக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளபட்ட பலஸ்தீன போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உலக சரித்திரத்தில் எங்குமே முன்னுதாரணம் இல்லாத செயலான, அதாவது நம் வார்த்தயில் சொல்வதானால் வேலியே பயிரை மேயுமாப் போல், கடைசிகட்ட யுத்தத்தில் தம் சொந்த மக்களையே வகைதொகை தெரியாமல் அங்கவீனராக்கியும், சுட்டுக் கொன்றும் இனஅழிப்பு செய்த புலிகளின் பயங்கரவாதத்துடன் (பிரபாகரனியம்/பிரபாகரனிஸம்) ஒப்பிடுவதும், அதை எந்தவித கேள்வியும் இல்லாமல் ஆதரித்த புலம்பெயர் புலி(புத்திஜீவிகளும்) ஆதரவாளர்களும், அவர்களால் வஞ்சகமான முறையில் வழி நடத்தப்பட்ட அப்பாவி தமிழரும் கூட தாங்கள் ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுப்போராக உரிமை கோர முடியாதவர்களாகிய நிலையை ஏற்படுத்திய செயலாகும்.

எனவே எவ்வகையில் பார்த்தாலும் தமிழர் நிலையானது முற்றும் முழுதாக இஸ்ரேலின் நிலையையோ அல்லது பலஸ்தீனியரின் நிலையையோ பிரதிபலிக்கவில்லை, பிரதிபலிக்க வேண்டியதுமில்லை. ஒரு சில ஒருமைப்பாடுகள் அங்கொன்று இங்கொன்றாக காணப்பட்டாலும், இலங்கை தமிழரின் பிரச்சினை தனித்துவமானது, ஆகவே அதற்கு தனித்துவமான தீர்வே வேண்டும், தமிழரின் வாழ்விட சூழலுக்கு ஒவ்வாத “மாதிரி தீர்வுகள்”(Model solutions) உள்ள பிரச்சினைக்கு தீர்வாக அமைவதை விட புது பிரச்சினைகளை நிச்சயம் தோற்றுவிக்கும் என்பது எமது நிலைப்பாடு. ஆகவே தமிழர் தமிழராக மட்டும் நின்று தமது உரிமையை பெறமுயல்வது நன்று.

இன, மத நட்புறவை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் – ஜனாதிபதி அதிர்ச்சி; கவலை

p.jpgஇன, மதங்களுக்கிடையில் நட்புறவை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நியாஸ் மெளலவி மனித நேயமிக்க ஒரு மதத் தலைவராவாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது:

இஸ்லாமிய மதத் தலைவர் நியாஸ் மெளலவியின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டதும் நான் பெரும் அதிர்ச்சியும் கவலையுமடைந்தேன். அவர் ஜனாதிபதி ஆலோசகராக மட்டுமன்றி நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.  அவருக்கு எனது கெளரவ அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபக பணிப்பாளராக நீண்டகாலமாக பதவி வகித்து இஸ்லாமிய இளஞ் சந்ததியினருக்கு அவர்செய்த சேவையை நான் கெளரவத்துடன் நினைவுகூருகிறேன்.

இஸ்லாமிய மதம் தொடர்பான அவரது அறிவு, அனுபவங்கள், திறமைகளை அவர் எப்போதும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக உபயோகித்தார். மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் மதங்களுக்கிடையில் சகோதரத்துவத்தை வளர் ப்பதற்கு அவரது அர்ப்பணிப்பு மகத்தானது.

இஸ்லாமிய மதத்தின் புனித நூலான திருக்குர்ஆன் பற்றிய சிறந்த அறிவைக் கொண்டிருந்த அவர் இந்நாட்டிலுள்ள ஏனைய மதங்கள் பற்றிய தெளிவையும் கொண்டு விளங்கினார். இன, மத, குலங்களுக்கப்பால் மனிதத் தன்மையை மதிக்கும் அவர், சகல மதத்தவரதும் அன்பிற்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர். மனித நேயத்தைக் கொண்டவர்களுக்கே இத்தகைய கெளரவம் கிடைக்கின்றது.

இந்நாட்டில் இன, மத, குலபேதமின்றி அனைவரும் நட்புறவுடன் வாழவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது. இந்த வகையில் நியாஸ் மெளலவியின் மரணத்தை ஒரு அன்புமிக்க நண்பனின் பிரிவாகக் கருதுவதோடு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள் கிறேன் எனவும் ஜனாதிபதி தமது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமியத் தமிழ்க் கல்விமான்களை ஓரங்கட்டிய செம்மொழி மாநாடு

semmoli.jpgதமிழுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த இஸ்லாமியத் தமிழ்க் கல்விமான்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாநாட்டின் ஆய்வரங்க அமர்வுகளின்போது புலவர்கள் மற்றும் பாவலர்கள் ஆற்றிய சேவைகள் குறித்து குறிப்பிடப்படவில்லையென தமிழ் ஆர்வலரான ஸ்ரீநிவாசன் பழனிச்சாமி என்பவர் கூறியுள்ளார். பல்வேறு விடயங்களில் தமிழை மேம்படுத்துவதற்கு அவர்கள் தமது உயிர் மூச்சை இறுதிவரை கொடுத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். காய்த் இ மில்லத் என்றுபரிவுடன் அழைக்கப்படும் முஹமத் இஸ்மாயில் சாகிப்,1949 செப்டம்பர் 14 இல் அரசியல் நிர்ணய சபையில் தமிழை உத்தியோகபூர்வ மொழியாக்குமாறு பேசியிருந்ததை ஓய்வுவெற்ற வங்கியதிகாரி எம்.கோபாலகிருஷ்ணன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரலாறு மறந்துவிட்டது. காய்த் இ மில்லத் மறைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். தமிழ், இஸ்லாமிய இலக்கியத்தில் உமறுப்புலவரின் சீறாப்புராணம் பாரிய வெற்றியாக 17 ஆம் நூற்றாண்டில் கணிக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அது புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது என்று ஓய்வுபெற்ற தமிழ்ப் பண்டிதர் ஜோசப் சந்திரகுமார் கூறியுள்ளார்.

தோனிக்கு திருமணம்

doni.jpgஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி. இவருக்கும், இவரது பாடசாலைத் தோழி சாக்ஷிராவத்துக்கும் இடையே டேராடூனில் உள்ள ஹோட்டல் பாகீரதியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இவ்விழாவில் டோனியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய கிரிக்கெட் நண்பர்கள் கலந்து கொண்டனர். சாக்ஷிராவத், ராஞ்சி ஷாமிலியில் உள்ள டி. ஏ. வி. பாடசாலையில் படித்தவர். தோனியும் இதே பள்ளியில் படித்தவர் தான். பாடசாலை காலத்தில் இருந்தே இருவரும் நண்பர்கள். தோனி மற்றும் சாக்ஷி ஆகியோரின் தந்தைகள் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். சாக்ஷியின் தந்தை ஓய்வுபெற்றபின் அவர்களது குடும்பம் டேராடூனுக்கு இடம்பெயர்ந்து விட்டது.

இருவருக்கும் இடையே திருமண திகதி நிச்சயிக்கப்பட்டு விட்டதா என தோனியின் நண்பரிடம் விசாரித்த போது, அது முடிவாகவில்லை என்றும் அநேகமாக ஆஸி., தொடருக்குப் பின் இருக்கலாம் என அவர் தெரிவித்தார். இந்நிலையில் இன்னும் 2 நாளில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதலில் தொவிக்கப்பட்டது. பின்பு திடீரென நேற்றிரவு திருமணம் நடக்குமென அறிவிக்கப்பட்டது.

தோனியின் நிச்சயதார்த்தம் குறித்த செய்தியறிந்து அவரது ரசிகர்கள் பட்டாசு கொளுத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கால்பந்து ரசிகரான தோனியின் நிச்சயதார்த்தம், உலக கோப்பை கால்பந்து நடந்துவரும் வேளையில் நடந்திருப்பது மென்மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்

parliament.gifவரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.

இன்று 5ம் திகதி முதல் எதிர்வரும் 9 ம்திகதி வெள்ளிக்கிழமை வரை குழுநிலை விவாதம் இடம்பெறுவதுடன் வெள்ளிக் கிழமை மாலை 6. 00 மணிக்கு விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 9.00 மணிவரை விவாதம் இடம்பெறுவதுடன் அமைச்சர்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

11,590 உயர் கல்வி மாணவருக்கு புலமைப்பரிசில்

மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 11,590 உயர் கல்வி மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் 29வது வருட நிகழ்வு நேற்று முன்தினம் பிரதமர் டி. எம். ஜயரட்னவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் எஸ். பி. திசாநாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் முதற்கட்டமாக நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற 24 மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

மஹாபொல புலமைப்பரிசிலாக மாதாந்தம் 2,500 ரூபா வழங்கப்பட்டு வருகிறது. 422 பேருக்குப் புலமைப்பரிசிலை வழங்கி 1981ம் ஆண்டு அன்றைய உயர் கல்வி அமைச்சர் அதுலத்முதலி இத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார். அதனையடுத்து இவ்வருடம் வரை 1,60,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச இந்து மத பீடம் அனுதாபம்

niyaz.jpgமெளலவி நியாஸின் மரணம் குறித்து சர்வதேச இந்து மதபீடம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்துமத பீடத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் இந்து சமய விவகார ஆலோசகருமான இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

போர்ச் சூழல் காலங்களில் மிகவும் துணிகரமாக சமாதானத்துக்காக குரல் கொடுத்த நியாஸ் மெளலவி, இஸ்லாமிய தர்மத்தின்படி ஒழுங்கி, சகல மக்களுடனும் மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்தவர்.

நாடு சமாதானம் பெற்ற சூழலில் அவர் எம்மை விட்டுப் பிரிந்திருப்பது எமக்கு ஆறாத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.