“ஈழத்திலும் ஈழத்தவர் புலம்பெயர்துறையும் நாடுகளிலும் உருவாகும் தமிழிலக்கிய ஆக்கங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலக்கிய நெங்சங்களுக்கு” காணிக்கையாக்கி வெளியிடப்பட்டுள்ள “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” என்ற நூல் அண்மையில் நான் இலங்கை சென்றிருந்த வேளையில் என் கைகளுக்கெட்டியிருந்தது.
1978ம் ஆண்டு இதே தலைப்பில் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் யாழ்ப்பாணம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் வழியாக ஒரு நூலை வெளியிட்டிருந்தார். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்நூல் குமரன் புத்தக இல்லத்தினால் இரண்டாவது பதிப்பாக வெளியிடப்படுகின்றது. இப்பதிப்பு 1978ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் செல்நெறிகளை இனம்காட்டும் பின்னிணைப்புகளுடன் வெளியிடப்படுவதாக தலைப்புப் பக்கத்திலேயே விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். முதல் 143 பக்கங்கள் மூல நூலாகவும் 144ம் பக்கம் முதல் 309ம் பக்கம் வரை (நூலின் பாதிப்பகுதி) பின்னிணைப்புகளாகவும் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூல நூல் எனக்கொள்ளப்படுவது, நூலாசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்கள் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் வழிகாட்டலில் 1970-1972 காலப்பகுதிகளில் தனது முதுகலைமாணிப் பட்டத்திற்காக மேற்கொண்ட ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பான ஆய்வின் அடிப்படையில் உருவானதாகும். ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றை ஐந்து முக்கிய கட்டங்களாக வகைப்படுத்தி இவ்வாய்வை இவர் மேற்கொண்டுள்ளார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஈழத்திலே தமிழ்நாவல்கள் எழுதப்படுவதற்கான சூழலை விளக்கி அதன் ஆரம்ப முயற்சிகளை மதிப்பிடுவதாக ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் என்ற முதலாம் இயல் அமைகின்றது. இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பதாண்டுக் காலப்பகுதியில் எழுதப்பட்ட நாவல்கள் பற்றி சமுதாய சீர்திருத்தக்காலம் என்ற இரண்டாம் இயல் ஆராய்கின்றது. அக்காலப்பகுதியை அடுத்து எறத்தாழ 25 ஆண்டுக்காலப்பகுதி எழுத்தார்வக் காலம் என்ற தலைப்பிலும், அடுத்துள்ள 15 ஆண்டுக்காலம் சமுதாய விமர்சனக் காலம் என்ற தலைப்பிலும் வகைப்படுத்தப்பட்டு அவ்வக்காலகட்டத்தில் வெளியான ஈழத்து நாவல்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. பின்னைய ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியானது பிரதேசங்களை நோக்கி என்ற இறுதி இயலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
காணிக்கைப் பதிவு தந்த நம்பிக்கையினாலும், தலைப்புப் பக்கம் தந்த உந்துதலினாலும் ஆர்வத்துடன் பின்னிணைப்பைத் தட்டிப்பார்த்தேன். நூலின் அரைப்பங்கை பின்னிணைப்புகள் ஆக்கிரமித்துள்ளன. அனைத்தும் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவுகள். முதலாவது பின்னிணைப்பு 1977க்குப் பிற்பட்ட வரலாற்றுச் செல்நெறிகள் என்ற தலைப்பில் அமைந்துள்ளது. 1978 முதல் 1988 வரையிலான காலகட்டத்து ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத்தின் வளர்ச்சி முதற்பிரிவில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இது தனிக்கட்டுரையாக ஏழு பகுதிகளில் மல்லிகை இதழில் ஏப்ரல் 1988 முதல் மார்ச் 1989 வரையிலான காலப்பகுதியல் வெளிவந்திருந்தது.
முதலாவது பின்னிணைப்பின் இரண்டாவது பிரிவு 1988க்குப் பின் தாயகத்திலும், புகலிடத்திலும் எழுந்த ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம் பற்றிய விரிவான ஆய்வாக அமைகின்றது.
இரண்டாவது பின்னிணைப்பு ஆசிரியரின் தனிக்கவனத்தைப் பெற்ற இருநாவல்கள் பற்றிய ஆய்வுரையாக அமைகின்றது. மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம், தேவகாந்தனின் கனவுச் சிறை ஆகிய இரண்டு நாவல்கள் பற்றிய இக்கட்டுரை 2005இல் வெளிவந்த ஆசிரியரின் கட்டுரைத் தொகுப்பான கலாநிதி நா.சுப்பிரமணியனின் ஆய்வுகள், பார்வைகள், பதிவுகள்: தொகுதி 2இல் ஏற்கெனவே பிரசுரமாகியுள்ளது.
மூன்றாவது பின்னிணைப்பில் ஈழத்துத் தமிழ்நாவல்களின் விரிவான பட்டியல் ஒன்று பிரசுரமாகியுள்ளது. ஆசிரியர் பெயர். நாவலின் தலைப்பு, (சில இடங்களில்) வெளியீட்டாளர் விபரம், வெளியிட்ட ஆண்டும் பக்கமும், தகவல் தெரியாதவிடத்து கேள்விக்குறிகள் (?) என்றவாறாக இப்பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.
முதலாவது பகுதியில் 1977 வரையிலான நாவல்களின் விபரங்களும், இரண்டாவது பகுதியில் 1977க்குப் பின்னைய நாவல்களின் விபரமும் இடம்பெற்றுள்ளன. இது 2007 வரை நீளுகின்றதையும் அவதானிக்க முடிகின்றது.
இவ்விடத்தில் மேலதிகமான தகவல் ஒன்றையும் குறிப்பிடப்படவேண்டும். நூலாசிரியர் நா.சுப்பிரமணியன் 1885-1977 காலப்பகுதியில் வெளியான 407 நாவல்கள் பற்றிய விபரங்களைத் தொகுத்து, சில பதிவுகளுக்கு (நூல்தேட்டத்தில் நான் குறிப்பிடுவதுபோன்று) குறிப்புரையுடன் ஒரு நூலை எழுதியிருந்தார். இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் யாழ்ப்பாண வளாக நூலக வெளியீட்டு இலக்கம் 2 என்ற தொடரில் தமிழ் நாவல் நூற்றாண்டு நினைவாக, கல்லச்சுப் பிரதியுருவில் (ஊலஉடழளவலடநன) ஈழத்துத் தமிழ் நாவல்கள்: நூல்விபரப்பட்டியல் 1885-1976 என்ற தலைப்பில் பெப்ரவரி 1977இல் வெளிவந்திருந்தது. ஆக்கியோன் பெயர் வரிசை ஒழுங்கில் தொகுக்கப்பெற்றிருந்த இந்நூற்பட்டியலில் முதற்பகுதியில், நூல் வடிவில் வெளியான 212 நூல்களில் இடம்பெற்ற 220 நாவல்களும், இரண்டாவது பகுதியில் ஊடகங்களில் வெளியானதும் நூலுருப்பெற்றமை பற்றிய தகவல் அறியமுடியாததுமான 94 நாவல்களும் இடம்பெற்றிருந்தன. ஈழத்துத் தமிழ் நாவல் பற்றி எழுதப்பட்டு ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள், மற்றும் நூல்களின் விபரங்களும் பின்னிணைப்பில் காணப்பட்டன. (பார்க்க: நூல்தேட்டம் தொகுதி 2, பதிவு இலக்கம் 1006).
நூலின் நான்காவது பின்னிணைப்பும் ஒரு தேர்ந்த பட்டியலாகும். இதில் ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான ஆய்வுகள் பற்றிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கும் 1977 வரை வெளியான விமர்சன நூல்கள், கட்டுரைகள் என்பன ஒரு பிரிவாகவும், 1977க்குப் பின்னர் வெளியான நூல்களும் ஆய்வேடுகளும், திறனாய்வுகள் மற்றும் “பட்டியல் முயற்சிகள்”, அணிந்துரைகள், அறிமுக உரைகள் மற்றும் மதிப்புரைகள் முதலியனவும் இடம்பெற்றுள்ளன. இங்கு திரு. நா.சுபபிரமணியம் அவர்களின் தீவிரமான தேடலில் அகப்படாத இரண்டு விடயங்கள் பற்றியும் நான் இங்கு குறிப்பிடவேண்டும்.
அவர் இன்று புலம்பெயர்ந்து வாழும் கனேடிய மண்ணில் 2005ம் ஆண்டில் தமிழர் தகவல் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட “தமிழர் தகவல்” ஆண்டுமலரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். தமிழர் தகவல்- எஸ்.திருச்செல்வம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கனடாவில் வெளிவரும் ஒரு மாத இதழ். (மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு: ஒரு வரலாற்றுப் பதிவு. தமிழர் தகவல் 14ஆவது ஆண்டு மலர்; (P.O.Box 3, Station F.Toronto, Ontario, M4Y 2LA, Canada)பெப்ரவரி 2005, ப.124-129.) அதில் ஈழத்தவர்கள் மலாயா மண்ணில் புலம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் மேற்கொண்ட படைப்பாக்க முயற்சிகள் பற்றி விரிவான தகவல்களை வழங்கியிருந்தேன். இந்த நூலில் அந்தக்கட்டுரை பற்றிய எவ்வித குறிப்பும் இல்லாததால், திரு. நா.சுப்பிரமணியனுக்கு தமிழர் தகவல் ஆண்டு மலர் கிடைக்கவில்லை போலுள்ளது. இதே கட்டுரை பின்னாளில் இலங்கையில் ஞாயிறு தினக்குரலில் 1.5.2005 முதல் 22.5.2005 வரை நான்கு இதழ்களில் தொடராகவும் வெளியிடப்பட்டது. கோலாலம்பூரில் வல்லினம் சஞ்சிகையும், மலேசிய நண்பன் பத்திரிகையும் இக்கட்டுரையை மீள்பதிப்புச் செய்திருந்தன.
புலம்பெயர்ந்த ஈழத்தவரின் நாவல்களில் பல மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறை நூலகத்தில் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது பற்றி எனது மலேசிய-சிங்கப்பூர் நூல்தேட்டம் தொகுப்பில் அவற்றை நேரில் பார்வையிட்டுத் தொகுக்கப்பட்ட விரிவான விபரங்கள் உள்ளன. ஆசிரியரின் விரிந்த தேடலில் நிச்சயம் மலேசிய நூல்தேட்டம் தொகுதி கிட்டும் என்று நம்புகின்றேன். மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தவருள் ஒருவரான புலோலியூர் க.சுப்பிரமணியம் எழுதிய நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு என்ற நூல் பற்றி, சுப்பிரமணியன் தனது பின்னிணைப்புப் பட்டியலில் பக்கம் 267இல் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் புலோலியூர் க.சுப்பிரமணியம் (எஸ்.கே.சுப்பிரமணியம்) மலேசிய மண்ணில் வாழ்ந்த காலத்தில் எழுதிய பிற நாவல்கள் பற்றிய வேறு பதிவுகள் எதுவும் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தில் குறிப்பிடப்படவில்லை. மலேசியாவில் முசயைn டுiஉநளெiபெ டீழயசன இல் அங்கத்தவராயிருந்த இந்நாவலாசிரியர் யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்தவர். பின்னாளில் புலம்பெயர்ந்து மலாயாவுக்குச் சென்றவர்.
நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு என்ற நாவல் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளது. (நூலகப் பதிவிலக்கம்: 35334) இந்நாவலின் முன்னுரையில் ஆசிரியர் தன்னுடைய முன்னைய நூலான பலசுந்தரம் அல்லது சன்மார்க்கஜெயம் என்ற நூலின் தொடர்ச்சியே இந்நூல் என்று குறிப்பிடுகின்றார். பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் இரண்டு பாகங்களில் வெளிவந்திருந்தது. மலேசியாவில் பினாங்கு, சி.அரிகிருஷ்ண நாயுடு பதிப்பகத்தினர் இந்நூலின் இரண்டாவது பாகத்தை 1918 இல் வெளியிட்டிருக்கிறார்கள். (அச்சகம்: எட்வார்ட் பிரஸ், இல. 80, ஊhரடயை ளுவசநநவ, பினாங்கு). முதல் 21 அத்தியாயங்கள் முதலாம் பாகத்திலும், 22ம் அத்தியாயத்திலிருந்து 36ம் அத்தியாயம் வரை இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகின்றன.
அந்நாவலில்; நீலாக்ஷி ஒரு பிரதான பாத்திரமாகச் சித்திரிக்கப்படுகின்றார். துர்அதிர்ஷ்டவசமாக பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் நாவலின் இரண்டாவது பாகத்தையே மலாயாப் பல்கலைக்கழகத்தில் என்னால் பார்வையிட முடிந்தது. இந்நூலின் முதலாம் பாகத்தை எங்கும் காணமுடியவில்லை. மலேசிய தமிழ் நாவல் இலக்கியம் தொடக்க காலத்திலேயே சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் பொதிந்தனவாக அமைய ஆரம்பித்துவிட்டன என்பதற்கு இந்நாவல் எடுத்துக்காட்டாகவுள்ளது. ஒழுக்கம் நேர்மை ஆகியவற்றால் வரும் உயர்வைப்பற்றி விளக்கும் இந்நாவலில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய மலாயா நாடு கதைக்களமாகின்றது. பிரித்தானியர் ஆட்சி, கோலாலம்பூர் நகர உருவாக்கம், கிறிஸ்தவ சமயப் பரம்பல், இலங்கை – இந்தியத் தமிழர்களுக்கு இடையிலான பிணக்குகள் முதலிய பல வரலாற்றுத் தகவல்கள் கதையில் விதைக்கப்பட்டுள்ளன. இந்நாவலின் தொடர்ச்சியே நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு என்ற நாவலாக அமைந்துள்ளது.
மலேசிய தமிழ் நாவல் இலக்கிய வரிசையில் இடம்பெறும் இந்நாவல் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் தமிழ் இலக்கியப் பாலமாக அமைந்துள்ளது. இந்நாவலின் முதற்பாகம் வெளிவந்திருக்கக்கூடிய ஆண்டு விபரம் பற்றிய தகவல்களை அறியமுடியவில்லை. அதனால் இன்றையளவில் மலேசிய நாவல் இலக்கிய வரலாற்றில் வெளிவந்த இரண்டாவது நாவல் என்ற நிலையையே இது எய்தியுள்ளது. இன்றளவில் மலேசியாவின் முதல் நாவல் 1917இல் வெளியான “கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி” என்ற நாவலாகும். இது ஒரு இந்தியரால் எழுதப்பட்டது.
ஈழத்துத் தமிழ் நாவல் வரலாறு பற்றி ஆராயப்புகும் நா.சுப்பிரமணியன் செங்கை ஆழியான் போன்றோருக்கு ஈழத்தமிழ் நாவல் வரலாறு இலங்கை என்ற பிரதேச வரம்புக்குள் மட்டும் அடங்கிவிடக்கூடியது அல்ல என்பதை இலக்கிய உலகம் வலியுறுத்தவேண்டியுள்ளது. ஈழத்தவரின் முதலாவது புலப்பெயர்வு 1870களில் மலாயாவை நோக்கி ஏற்பட்ட காலம்முதலாக ஈழத்தமிழர்கள் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் வைத்து நாவல்களை எழுதியிருக்கிறார்கள். இன்றைய புகலிடத்தில் வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்பக்களை ஈழத்து படைப்புக்களாகவும், அவர்களை இன்னமும் (புலம்பெயர்ந்த) ஈழத்துப் படைப்பாளிகளாகவும் குறிப்பிட்டுவரும் இலக்கிய ஆய்வாளர்கள் முன்னைய தலைமுறையினரான இவர்களின் படைப்புக்களையிட்டும் அக்கறை கொள்ளவேண்டும். இவர்களையும் நாம் ஈழத்துப் படைப்பாளிகளாகவே ஏற்று அவர்களுக்கும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு இடத்தை வழங்கவேண்டும்.
மலேசிய இலக்கியத்துக்கு உயிர்கொடுத்த எம்மவர்கள் பற்றிய எனது விரிவான ஆய்வில் பல படைப்பாளிகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன். இவர்களின் பெயர்களை இன்றளவில் வெளிவந்த கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராசன் போன்றவர்களின் பட்டியல்களில் தேடினால் எமக்கு ஏமாற்றமும் எரிச்சலுமே மிஞ்சும்.
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தின் ஆசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியம் அவர்களுக்கு மற்றுமொரு தகவலையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளேன். நூல்தேட்டம் என்ற பெயரில் 2002ம் ஆண்டுமுதல் ஒரு பாரிய தொகுப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றேன். தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ்நூல்களுக்கான குறிப்புரையுடன் வெளிவந்துள்ள நூல்விபரப்பட்டியல் இதுவாகும். ஏழாவது தொகுதிக்கான தொகுப்புப்பணிகள் முடிவடைந்துவிட்டன. ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்கள் என்றவாறாக இதுவரை (உங்கள் நூல்களும் உள்ளிட்ட) 7000 நூல்கள் வரை பதிவாக்கியிருக்கின்றேன். பதிவுகள் பிரதான பதிவு தூவிதசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டும், பாடவாரியாகப்; பதியப்பட்டுமுள்ளது. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றுடன் இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் படைப்புக்களும், முன்னைய தொகுதியின் பதிவுகளுக்கான மேலதிக தகவல்களும் தரப்பட்டுள்ளமை நூலின் சிறப்பம்சமாகும்.
நூல்தேட்டம் தொகுப்பின் 800ஆவது பிரிவு இலக்கியத்துக்கானதாகும். இதில் மற்றைய பாடத்துறைகள் போன்றே நாவல்களுக்கென்றும் தனியான பிரிவொன்றை ஒதுக்கி, குறிப்புரையுடன் நூல்பற்றிய நூலியல் விபரங்களை முழுமையாகத் தந்திருக்கின்றேன். இவை அனைத்தும் நான் நேரில்சென்று நூலகங்களிலும், தனியார் இருப்புகளிலும் பார்வையிட்ட நூல்கள். (எவ்விதமான கேள்விக்குறிகளும் பதிவகளில் இல்லை) எனது ஆதங்கம் என்னவென்றால், பலநூறு நூல்களைப் பார்வையிட்டு ஆய்வுசெய்துள்ள நீங்கள் – நூல்தேட்டம் பற்றி எதுவுமே அறியாதிருப்பது நம்பமுடியாததாக உள்ளது. இரண்டாம் பதிப்பாக புத்தாக்கங்களையும் உள்ளடக்கி நீங்கள் வெளியிட்டுள்ள “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” என்ற நூலில் ஓரிடத்தில்கூட இதுபற்றிப் பிரஸ்தாபிக்கவில்லை என்பது மனதை நெருடுகின்றது. நீங்கள் வெளியிட்டுள்ள நூலை என்னைப் போன்றவர்களுக்காகக் காணிக்கையாக்கியிருக்கும் உங்கள் உணர்வை மதிக்கிறேன். நீங்களும் 1977இல் ஒரு பட்டியலை நாவல்களுக்காகத் தொகுத்தவர். தொகுப்பின் உழைப்பும், வலியும் உங்களுக்குப் புரியாததல்ல. நாவல்களையும், மற்றும் சிறுகதை கவிதை இலக்கியவடிவங்களையும் மாத்திரமல்லாது ஈழத்தின் முழுமையான நூலியல் வரலாற்றைப் பதிவுசெய்யும் நோக்குடன் தனிமனித முயற்சியாகத் தமிழ் நூல்களையும் பரந்த புவியியல் பரப்பை உள்ளடக்கித் தொகுத்துவரும் என்போன்றவர்களுக்கு எமது பணிபற்றிய சிறிய குறிப்பும் பேருவகைதரும் மருந்தாகும். “இருட்டடிப்பு” என்ற சொல்லை அறவே வெறுப்பவன் நான். ஆவணப்படுத்தலில் அதனை கிட்டவும் நெருங்கவிடக்கூடாது. படைப்பாளியினதும் படைப்பினதும் நம்பகத்தன்மையை வரலாறு கேள்விக்குள்ளாக்க அது வழிசமைத்துவிடும். (உங்கள் தகவலுக்காக: நூல்தேட்டம் இலங்கையில் அச்சிடப்படுகின்றது. இலங்கையின் அனைத்து பிரதான நூலகங்களிலும் புத்தகசாலைகளிலும் கிடைக்கும். நீங்கள் வாழும் கனடாவில் ஸ்கார்பரோவில், உலகத்தமிழர் நூலகத்திலும் ஒரு தொகுதி பேணப்படுகின்றது).
நன்றி : தினக்குரல்