”இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்கள் அனைவருக்கும் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்”, என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நடைபெற்ற வரவு செலவு திட்டம் மீதான உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ”இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும். அத்தோடு போரினால் உடல் உறுப்புக்களை இழந்தவர்களுக்கும் நட்ட ஈடு வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”ஜே.வி.பியினருக்கு பொது மன்னிப்பு வழங்கியதைப் போல தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் முக்கியமானவர்கள் விடுதலை செய்ய்ப்பட்டுள்ளனர் ஆனால், அவர்களுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணைகளின்றி பல வருடங்களாக சிறைகளில் வாடுகின்றனர். அவர்கள் அனைவருமே விடுதலை செய்யப்பட வேண்டும்” எனவும் சிவசக்தி ஆனந்தன் அவரது உரையில் குறிப்பட்டுள்ளார்.