20

20

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்

d-m-jayaratne.jpgவடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனைத்து நாடுகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன ஆகிய வலய வறுமை ஒழிப்பு மாநாட்டில் தெரிவித் துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் டி. எம். ஜயரத்ன சீன குமீமின் நகரில் நடைபெறும் ஆசிய வலய வறுமை ஒழிப்புக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த பிரதமர், இலங்கையில் வறுமை ஒழிப்புக்கான வலுவான வேலைத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்துடன் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து அரசாங்கம் வடக்கிலும் கிழக்கிலும் துரித அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஆசியவலய வறுமை ஒழிப்பு மாநாட்டிற்கு ஆசிய வலய நாடுகளின் அனைத்து தலைவர்கள் மற்றும் உயர் மட்டப் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர். சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் டி. எம். ஜயரத்னவை ரூமிமின் விமான நிலையத்தில் சீனாவின் துணைப் பிரதமர் ஹைலியான்கியூ வரவேற்றுள்ளார்.

சுசந்திகாவுக்கு ஒலிம்பிக் வௌ்ளிப்பதக்கம்

su.jpgஇலங்கையின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 2000ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டருக்கான ஓட்டப்போட்டியில் அவர் பெற்ற வௌ்ளிப்பதக்கத்தை அணிவித்தார்.

சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டருக்கான ஓட்டப்போட்டியில் மேரியன் ஜோன்ஸ் முதலாமிடம் பெற்றிருந்த நிலையில் அவர் தடைசெய்யப்பட்ட மருந்துவகைகளை உட்கொண்டமை தெரியவந்ததால் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் மேம்பாட்டுக்காக அதிகாரசபை அமைக்கத் திட்டம்

min-meedia.jpgஊடக அபிவிருத்தி அதிகார சபை ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார். கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக் கான கருத்தரங்கொன்றை கண்டி சுவிஸ் ஹோட்டலில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்து கூறுகையில் :ஊடகவியலாளர்களின் தொழில்சார் தன்மை மற்றும் அது சார்ந்த துறையில் மேம்பாட்டையும் ஏனைய தொழில் துறையினருக்குக் கிடைக்கின்ற தொழில் அங்கீகாரத்தை ஊடகவியலாளர்களுக்கும் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்த அதிகார சபை ஊடாக ஊடகங்களை கட்டுப்படுத்தாது அதற்குப் பதிலாக ஊடகவியலாளர்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் முகமூடி அணிந்தோர் இளம் பெண்கள் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் விஸ்வமடு மற்றும் தர்மபுரம் பகுதிகளில் இனந்தெரியாத குழுவால் இளம் பெண்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக முறையிடப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரத்தில் இப்பகுதிகளில் இரு சம்பவங்களில் குடும்பப் பெண்ணொருவர் உட்பட இருவர் தாக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரம் கிழக்கு கிராம சேவையாளரின் உதவியாளராகவுள்ள விஸ்வமடுவைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண்ணொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார். முகமூடிகள் அணிந்து முச்சக்கரவண்டியொன்றில் விஸ்வமடுவிலுள்ள இவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத இளைஞர் குழுவொன்றே இந்தப் பெண்ணைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது.

உறவினர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து இக்குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இவர்களின் தாக்குதலில் இந்தப் பெண் தலையில் படுகாயமடைந்துள்ளார்.நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மற்றைய சம்பவத்தில் கட்டைக்காடு அ.த.க. பாடசாலையில் தொண்டராசிரியராகப் பணியாற்றும் 26 வயதுடைய குடும்பப் பெண்ணொருவர் தாக்கப்பட்டிருக்கின்றார்.

முன்னைய பெண் தாக்கப்பட்ட அதே பாணியிலேயே இந்தப் பெண்ணும் தாக்கப்பட்டிருக்கின்றார். முகமூடி அணிந்த நிலையில் முச்சக்கரவண்டியில் வந்த நான்கு இளைஞர்கள் முச்சக்கரவண்டியை விட்டு இறங்கியதுடன், இந்தப் பெண்ணைத் தாக்கியதாகவும் அவ்வேளை இவரது வீட்டில் நின்ற கணவனும் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்தப் பெண்கள் தாக்கப்பட்ட போதிலும் இவர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்களோ, உடமைகளோ அபகரிக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க அதிகாரி வருகை

neel.jpgஇலங் கைக்கு ஐ.நா ஒருங்கிணைப்பாளர் நீல் புனே இன்று அதிகாலை விஜயம் செய்துள்ளதாக விமானநிலைய வட்டாரம் தகவல் தெரியப்படுத்தியுள்ளது.

மோசடிகளுக்கு உதவும் சமாதான நீதவான்கள் கைதாவர்

போலி ஆவணங்கள் தயாரிக்கும் சட்ட விரோத செயற்பாடுகளில் தொடர்புபட்டுள்ள சமாதான நீதவான்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக நீதி அமைச்சு கூறியது. இதற்காக விசேட குழுவொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார். போலியான ஆவணங்களை தயாரிக்க சில சமாதான நீதவான்கள் உதவி வருவதாகவும் இத்தகையோரை கைது செய்யவும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சமாதான நீதவான் முத்திரையை பயன்படுத்தி மோசடிகளுக்கு உதவுவதாகவும் அதனைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப் பதாகவும் பொது மக்கள் முறையிட்டுள்ளனர். இத்தகைய சமாதான நீதவான்களின் பதவி இரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

ஹுருளு வனாந்தரத்தில் பாரிய தீ; 2500 ஏக்கர் நாசம்

fi.jpgஹபரண ஹுருளு வனாந்தரப் பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் தீயினால் சுமார் 2,500 ஏக்கர் காடு சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது திட்டமிட்ட காடு எரிப்பாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக சீகிரியாவிலுள்ள விமானப்படையினரின் உதவி பெறப்பட்டது. இதனையடுத்து விமானப்படையின் இரண்டு ஹெலிகொப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

என்றாலும், நேற்று இரவு வரை தீ முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரவில்லையென வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். விமானப்படையினருக்கு உதவியாக பொலிஸாரும் பணியில் ஈடுபட்டனர்.

காலி டெஸ்ட்: 2ம் நாள் ஆட்டம் மழையால் தடை

muralitharan.jpgஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கப்டன் சங்கக்கார, பரனவிதனா சதமடித்து கைகொடுக்க, இலங்கை அணி முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் உள்ளது. இலங்கை – இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலியில் நேற்று துவங்கியது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை கப்டன் சங்கக்கார துடுப்பெடுத்தாட தேர்வு செய்தார்.

முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு டில்ஷான், பரனவிதனா சுமாரான துவக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ஓட்டங்கள் சேர்த்த போது அபிமன்யூ மிதுன் வேகத்தில் தில்ஷான் (25) அவுட்டானார். பின்னர் இணைந்த கப்டன் சங்கக்கார பரனவிதனா ஜோடி இந்திய பந்து வீச்சை எளிதாக சமாளித்தது.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சங்கக்கார, டெஸ்ட் அரங்கில் தனது 22வது சதமடைத்தார். இவர் 103 ஓட்டங்கள் எடுத்த நிலையில் செவாக் சுழலில் சிக்கினார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய பரனவிதனா டெஸ்ட் அரங்கில தனது முதல் சதமடித்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்கு 256 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பரனவிதான (110) மஹேல ஜயவர்தன (8) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய சார்பிபல் அபிமன்யூ மிதுன் செவாக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.