றுஹுணு பல்கலைக்கழக மாணவனொருவர் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பு பொலிஸாருக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
எனினும் இராணுவத்தினரும் மேலதிக பொலிஸாரும் நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். பொலிஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர் ஒருவர் பதுளை ஆஸ்பத்திரியில் மரணமான சம்பவத்தையடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த மாதம் 18 ஆம் திகதி மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பையடுத்து பொலிஸார் அங்குவந்து மாணவர்களை அடித்து விரட்டியுள்ளனர். இதன்போது படுகாயமடைந்த மாணவனொருவர் பதுளை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த மாணவர் மரணமானதாக றுகுணு பல்கலைக்கழகத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
றுஹுணு பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட மாணவனான பண்டார என்பவரே மரணமானார்.இந்த மாணவன் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலே அவரின் மரணத்துக்குக் காரணமென மாணவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலிருந்து மாத்தறை பஸ் நிலையம் அருகில் பிரதான வீதியில் நின்று நேற்று மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் மாத்தறையில் இருந்து கதிர்காமம், அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாரõம, தங்காலை, திக்குவல்ல பகுதிகளுக்கான பஸ் சேவைகளும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டன. இதேவேளை, இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய இரு விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தென்மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.