இனங்களுக் கிடையில் புரிந்துணர்வு, நல்லெண்ணம் ஏற்படுவதன் மூலம் சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும். கருத்துக்களை பரிமாறி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறினார். கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் நேற்று முன்தினம் (11) நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய கருத்தரங்கினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜம்மியதுல் இஷாஅதுல் அஹ்லுஸ் ஸ¤ன்னா அமைப்பு ஏற்பாடு செய்த இக் கருத்தரங்கிற்கு மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா தலைமை வகித்தார்..இந்தியா, மாலைதீவு, பாகிஸ்தான், கட்டார், எகிப்து, சவூதி அரேபியா, யமன், லிபியா உட்பட பல இஸ்லாமிய நாடுகளில் மார்க்க அறிஞர்கள் இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட உலமாக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட அரசியல் பிரமுகர்கள், முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் பங்குபற்றிய இக் கருத்தரங்கில் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தொடர்ந்து உரையாற்றும் போது; தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7.1 ஆக காணப்படுகின்றது. நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை காணப்படுவதன் காரணமாக இந்த வளர்ச்சி வீதம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்து வதன் மூலம் எமக்கிடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வும் நல்லுறவும் ஏற்படுவதன் மூலமாக நாட்டில் சமாதானத்தை இலகு வாக கட்டியெழுப்பலாம். இனங்களுக் கிடையே முரண்பாடுகளை கலைப்பதற்கு ஒவ்வொருவரிடமும் நல்லெண்ணத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
ஆயுதக் கலாசாரமும், போராட்டங்களும் உலகில் சமாதானத்திற்கு தடையாக உள்ளது. சமய விழுமியங்களின் அடிப்படையில் செயல்பட்டால் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள முடியும். இன்றைய கால கட்டத்தில் இது போன்றதொரு உலக சமாதான மாநாடு இலங்கையில் நடைபெறுவது மிகப் பொருத்தமானது. மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் அமைதியான சூழ்நிலையில் சமாதானத்தை வலியுறுத்தும் இந்த மாநாடு எமது நாட்டிற்கு மிகவும் அவசியமானதொன்றாகும்.
இஸ்லாம் சாந்தி சமாதானத்தை வலியுறுத்துகிறது. புனித அல்குர்ஆனும், இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாக்கும் உலகில் முழுமையாக பின்பற்றப்படுமேயானால் எந்தப் பிரச்சினைகளுக்கும் வழி ஏற்படாது. புனித அல்குர்ஆனையும், அல்ஹதீஸையும் முழுமையாக படிக்கும் ஒரு மனிதன் ஒரு போதும் வழிதவற மாட்டான் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு.
எமக்கிடையேயான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் என்பதை புனித இஸ்லாம் வலியுறத் துகின்றது. அதற்காகவே ‘சூறா’ அமைப்பு முறை இஸ்லாம் சமயத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அயல் வீட்டாரை நேசிக்கும் பண்பும் நட்புறவும் மனித சமுதாயத்தை மேம்பாடடைய செய்யும். அயலாரை நேசிக்கும் இஸ்லாத்தின் உயரிய பண்பை கற்றுக்கொண்ட எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமது அயல் நாடான மாலைதீவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு சுமுகமான தீர்வை பெற்றுக்கொடுத்தார்.
இது எம் அனைவரிற்கும் சிறந்ததொரு முன்னு தாரணமாகும். இந்த வழியில் பயணித்து அனைத்து தரப்புக்களும் ஒன்றுபட்டு புரிந்துணர்வுடன் செயல்பட முடிந்தால் எமது நாட்டிலும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்று சமாதானத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த சமாதான மாநாட்டில் பங்குபற்ற வருகைதந்துள்ள இஸ்லாமிய நாடுகளின் அறிஞர்களை இலங்கை அரசு சார்பில் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இந்த மகாநாட்டினை சிறப்பாக ஒழுங்கு செய்தமை குறித்து நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.