15

15

”வன்னியில் 13 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.” பாராளுமன்றப் பிரதித் தலைவர் சந்திரகுமார்

Chandrakumar_MP_Jaffna_EPDPவன்னிப் பகுதிகளில் தற்போதுள்ளதை விடவும் மேலும் 13 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வுள்ளதாக ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் தற்போது சீர் செய்யப்பட்டு வருவதாகவும், அவற்றில் எரிபொருள் தேவைகள் ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 13 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க அமைச்சர் சுசில் பிறெம்ஜெயந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

”காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை எந்த நாட்டிற்கும் வழங்கப்பட மாட்டாது” அமைச்சர் பி.தயாரட்ண

KKS_Cement_Factoryகாங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை இந்தியாவிற்கோ அல்லது வேறு எந்தவொரு நாட்டிற்கோ வழங்கப்பட மாட்டாது என அரச சொத்துடமைகள் மற்றும் கைத்தொழில் அமைச்சர் பி.தயாரட்ண தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்த அமைச்சர் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் வைத்து செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அவ்வேளையிலேயெ இவ்வாறு அவர்  தெரிவித்தார். வெகு விரைவில் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை கட்டம் கட்டமாக இயங்கச் செய்யப்படும் எனவும், உடனடியாக இதனை இயங்கச்செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அடுத்து வரும் சந்ததியும் இத்தொழிற்சாலையை பயன்படுத்த வேண்டும். இத்தொழிற்சாலை இந்தியாவிற்கு விற்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்ததோடு, எந்தவொரு நாட்டிற்கும் இத்தொழிற்சாலை வழங்கப்படப் போவதில்லை எனவும் அமைச்சர் தெரவித்துள்ளார்.  பல வருடங்களாக பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலையை பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொண்டு மீளவும் இயங்கவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மலையகம் நாவலப்பிட்டியில் போக்குவரத்துப் பயணிகள் திடீர் சோதனைக்குட்பட்டனர்!

கண்டி மாவட்டத்திலுள்ள நாலப்பிட்டியில் நேற்று பாதுகாப்புப் படையினரின் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாவலப்பிட்டி நகரூடாகச் சென்ற சகல போக்குவரத்து வாகனங்களும் இடைநிறுத்தப்பட்டு, பயணிகள் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். பயணிகளின் தேசிய அடையாள அட்டைகள் இராணுவத்தினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் தென்னிலங்கைப் பகுதிகளிலோ, மலையகப் பகுதிகளிலோ போக்குவரத்து வாகனங்கள் இடைமறிக்கப்பட்டு பயணிகள் சோதனையிடப்படும் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டிருந்தன. தற்போது சிறிது சிறிதாக இந்நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக தெரிய வருகின்றது.  இது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் ஒரு அச்ச நிலையை எற்படுத்துவதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைகோ, நெடுமாறன் சிறையில் அடைப்பு

yko_03.jpgதமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் தொடர் கொலை செய்து வருவதைக் கண்டித்தும், இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களை மூடக்கோரியும் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து இலங்கை தூரதகத்தை மூடக் கோரி ஊர்வலமாக அனைவரும் துணைத் தூதரகத்தை நோக்கி கிளம்பினர். இதையடுத்து போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர், வைகோ, பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் உள்ளிட்ட 282 பேரை மட்டும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது, 188, 341, 153(A), 143, 7 I (A), 145,285,506(I), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப் போடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். வைகோ உள்ளிட்ட சிலரை திருச்சிக்கும், நெடுமாறன் உள்ளிட்ட சிலரை கடலூருக்கும், நடராஜன் உள்ளிட்ட சிலரை மதுரைக்கும் கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். பெண்களை வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியர் நதீகாவின் மரணம்; அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

mosquito.jpgடெங்கு நோய்க்கு உள்ளாகி உயரிழந்த பதுளை ஆஸ்பத்திரி வைத்தியரின் மரணம் தொடர்பாக தமக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பதுளை பொது வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய வைத்தியர் நதீகா லக்மாலி விஜயநாயக்க டெங்கு நோய்க்கு உள்ளாகி பதுளை ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிறன்று உயிரிழந்தார். இவ்வாறான நிலையில் இவரது தந்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று முன்தினம் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு பதுளை ஆஸ்பத்திரியில் தமது மகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததன் விளைவாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வைத்தியர் நதீகாவின் மரணம் தொடர்பாக தமக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். டெங்கு நோய்க்கு உள்ளான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்ட்டுக்குப் பொறுப்பான வைத்தியரான நதீகா அந்த ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்றுள்ளார்.  இருப்பினும் இவரது ஆரோக்கியத்தில் அங்கு பணியாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் உரிய கவனம் செலுத்தினார்களாக என உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதேநேரம் டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி டெங்கு ஒழிப்பு தொடர்பான துரித வேலைகளை ஆரம்பித்திருக்கின்றது. “இவ்வேலைத்திட்டம் தொடர்பான பொறுப்புக்கள் மாகாண சபை களுக்கும், உள்ளூராட்சி மன்றங் களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பொறுப்புக்களை எவரும் தவிர்ந்து நடக்க முடியாது.  டெங்கு நோயை ஒழிப்பதற்காக எல்லோரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

இதேவேளை டெங்கு நுளம்பு ஒழிப்புக்கென பி.ரி.ஐ. பக்aரியா நுண்ணங்கியைப் பாவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சின் மேலதிக செய லாளருக்கு அறிவுறுத்தல் வழங்கி யுள்ளார்.

அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டாது – அமைச்சர் கெஹலிய

வட பகுதியில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட மாட்டாது என, இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதுவரையில் 2,91,198 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இதுவரையில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 198 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய மெதவெல தெரிவித்துள்ளார். குறிப்பாக பொலன்னறுவை அனுராதபுரம் உள்ளிட்ட 1746 சதுர பரப்பளவைக்கொண்ட நிலப்பகுதியிலேயே கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய மெதவெல தெரிவித்துள்ளார்

மகள் மீது பாலியல் வல்லுறவு; தந்தைக்கு 10 வருட கடூழியச் சிறை

தனது 14 வயதான மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர் ஒருவருக்கு 10 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை வழங்கி புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புத்தளம் மேல்நீதிமன்ற நீதவான் எஸ்.டி. அப்ரா தாஸிம் இந்த தீர்ப்பை நேற்று முன்தினம் வழங்கினார்.

2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி மேற்படி தந்தை தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் சந்தேக நபரான ஆனமடுவ திறல்வெவ வட்டகெதர வாசியான சோமதாஸ என்பவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்தத் தவறின் மேலதிகமாக மூன்று மாதம் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25,000 ரூபாவை நஷ்டஈடாக வழங்கவும், நஷ்ட ஈட்டை செலுத்தத்தவறின் மேலதிகமாக ஆறுமாதகால கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் புத்தளம் மேல் நீதிமன்ற நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

4 குழந்தைகளின் தந்தையான இவர் தனது மனைவி வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுச் சென்றுள்ள சமயம் பாட்டியின் பாதுகாப்பிலிருந்த தனது மூத்த மகளையே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

பாங் கி மூனின் ஆலோசனைக் குழுவை எதிர்த்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்

ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கை தொடர்பில் நியமித்த ஆலோசனைக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐ. நா. தலைமை அலுவலகம் முன்பாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஜெனீவாவில் நேற்று நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நோர்வே உட்பட ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கையர்கள் சுவிஸ் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்கான அமைப்பொன்றினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதேவேளை, நியூயோர்க், பிரித்தானியா, ஜேர்மன், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடல் மட்டம் உயர்வு

இலங்கை, இந்தோனேஷியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் கடல் மட்டம் அதிகரித்துள்ளதால் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவின் Colorado பல்கலைக்கழகம், அந்நாட்டு தேசிய சுற்றுச் சூழல் ஆய்வு மையம் ஆகியன இந்து சமுத்திரம் தொடர்பாக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தின.