காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை இந்தியாவிற்கோ அல்லது வேறு எந்தவொரு நாட்டிற்கோ வழங்கப்பட மாட்டாது என அரச சொத்துடமைகள் மற்றும் கைத்தொழில் அமைச்சர் பி.தயாரட்ண தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்த அமைச்சர் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் வைத்து செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அவ்வேளையிலேயெ இவ்வாறு அவர் தெரிவித்தார். வெகு விரைவில் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை கட்டம் கட்டமாக இயங்கச் செய்யப்படும் எனவும், உடனடியாக இதனை இயங்கச்செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
அடுத்து வரும் சந்ததியும் இத்தொழிற்சாலையை பயன்படுத்த வேண்டும். இத்தொழிற்சாலை இந்தியாவிற்கு விற்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்ததோடு, எந்தவொரு நாட்டிற்கும் இத்தொழிற்சாலை வழங்கப்படப் போவதில்லை எனவும் அமைச்சர் தெரவித்துள்ளார். பல வருடங்களாக பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலையை பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொண்டு மீளவும் இயங்கவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.