தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தாவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எஸ்.சுமந்திரன், அ.விநாயகமூர்த்தி, மாவை சேனாதிராஜா ஆகியோர் கடந்த செவ்வாய்க் கிழமை இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. இதன் போது இந்திய அரசுத் தலைவர்களுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இப்பேச்சுவார்த்தைகள் எப்போது நடைபெறும் என்கிற விபரங்கள் இன்னும் முடிவாகவில்லை.
03
03
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனிக் கட்சியாக பதிவு செய்யப்பட்டமை துரோகம். இதற்காக இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொ.செல்வராசா ஆகியோர் பதவியிலிருந்து விலக வேண்டும்.
தமிழரசுக்கட்சிக்குத் துரோகம் செய்யும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழரசுக்கட்சிக்கு துரோகம் செய்த திருவாளர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொ.செல்வராசா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் வகிக்கும் பதிவிகளிலிருந்து விலக வேண்டும் எனவும் தமிழரசுக்கட்சியின் நிர்வாகச் செயலர் எஸ்.எக்ஸ். குலநாயகம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலொ ஆகிய கட்சிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பாக செயற்படலாமேயன்றி இவை தனி அரசியல் கட்சியாக செயற்படுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒருபோதும் பங்கு வகிக்க முடியாது எனவும், அதனைத் தமது கட்சி ஒருபோதும் அனுமதிக்காது எனவும் திரு. குலநாயகம் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனை எந்தவொரு தமிழசுக் கட்சிக்காரனும் ஏற்கப்போவதில்லை எனவும், இலங்கையில் தமிழ் பேசும் இனத்தை இணைத்த தந்தை செல்வாவினால் கட்டி வளர்க்கப்பட்ட தமிழசுக்கட்சியின் அழிவை தமிழ்பேசும் இனம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழரசுக் கட்சியின் உபதலைவரும், 1956ஆம் ஆண்டிலிருந்து கட்சியில் அங்கம் வகித்து வருபவரும், அக்கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான யாழ். பலகலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் சி.க.சிற்றம்பலமும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு கட்சியாக பதிவு செய்வதற்கு முதல்நாள் இவர் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
அநுராதபுரம் விமானத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்று சந்தேக நபர்களின் பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான தடயப் பொருட்களையும் சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் மாகாண அலுவலகம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இது மத்திய வங்கியின் நான்காவது மாகாண அலுவலகம் என்பது குறிப்பித்தக்கது. யுத்தம் முடிவடைந்ததையடுத்து பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்கள், குத்தைகை நிறுவனங்கள் என்பன மிக வேகமாக யாழ்ப்பாணத்தில் தங்கள் கிளைகளைத் திறந்து வருகின்றமை குறிப்பிடத்க்கது. இந்நிலையில் இலங்கை மத்தியவங்கி அதன் வடமாகாண கிளை நிறுவனத்தைத் திறந்து வடமாகாண மக்களின் நிதியியல் தேவைகளை நிறைவு செய்யவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காணப்படும் எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வில் ஈடுபட உக்ரேன் அரசாங்கம் இணக்கம் தெரிவத்துள்ளது. நான்கு நாள் விஜயமாக கடந்த செவ்வாய்க் கிழமை உக்ரேனுக்குப் பயணமாகியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் அந்நாட்டு ஜனாதிபதி விக்ரர் யனுகோவிஸ்குமிடையில் நேற்று முன்தினம் சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது அவ்வேளையிலேயே இது தொடர்பான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் எண்ணெய் வள ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒப்பந்தமொன்றும் இரு நாட்டு ஜனாதிபதிகளினால் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த உக்ரேன் ஜனாதிபதி, இலங்கையில் எண்ணெய் வள ஆய்வில் ஈடுபடுவது குறித்தும், அது தொடர்பான பங்களிப்புகளை இலங்கைக்கு வழங்குவது குறித்தும் தாம் மகிழ்வடைவதாக தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில் வெற்றி பெறும் வாய்ப்பை கானா அணி நூலிழையில் பறிகொடுத்தது.
உலகக் கோப்பை வரலாற்றில் காலிறுதியில் நுழைந்த மூன்றாவது அணி என்ற பெருமையைப் பெற்ற கானா அணி, நேற்றைய முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. பிற்பாதியில் உருகுவே அணியில்ன ஃபோர்லன் கோலடிக்க சமநிலையானது.
90 நிமிடங்களில் வேறு கோல் அடிக்கப்படாததால், கூடுதல் நேரம் தரப்பட்டது. கடைசி நிமிடத்தில் கானா அணி வீரர்கள் உருகுவே கோலை ஆக்கிரமித்திருந்தார்கள்.
கிட்டத்தட்ட ஒரு நிமிடம் பந்து உருகுவேயின் கோலைச் சுற்றிச் சுற்றியே வந்தது. இதனால் கோலுக்கு அருகே உருகுவே வீரர் லூயிஸ் சுவாரேஸ் நின்று கொண்டார். கோலுக்குள் பந்து வந்த போது தனது புறங் கையால் அவர் பந்தைத் தடுத்தார். இதை நடுவர் கவனிக்கத் தவறிவிட்டார். அடுத்த முறை பந்து கோலுக்குள் சென்றபோது பந்தைக் இரு கைகளாலும் தடுத்துவிட்டார். அவர் தடுக்காமல் இருந்திருந்தால் அந்த நிமிடமே கானா வெற்றி பெற்றிருக்கும்.
கையால் பந்தைத் தடுத்தால், சுவாரேஸுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதுடன், கானாவுக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது. ஆனால் பந்து கோல்கம்பத்தில் பட்டு வெளியேறியதால், அதன் பிறகு பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.
அந்த வாய்ப்பிலும் கானா வீரர்கள் இருமுறை கோலுக்குள் பந்தை அடிக்கத் தவறினர். இதனால், 4-2 என்கிற முறையில் உருகுவே வெற்றி பெற்றது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் வருடாவருடம் ஜூலை மாதம் 13ம் திகதிமுதல் 16ம் திகதிவரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினர் பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றனர்.
இந்தவகையில் சுவிஸ்லாந்தின் சூரிச் மாநிலத்தில் எதிர்வரும் 04.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00மணியளவில் புளொட்டின் 21வது வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அன்றையதினம் மெளன அஞ்சலி மற்றும் மலராஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து வரவேற்புரை> அஞ்சலிக் கூட்டம் என்பன இடம்பெறவுள்ளன. இக்கூட்டத்தில் கழகத் தோழர்கள்> தோழமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் உரைகளும் இடம்பெறவுள்ளன. மற்றும் விநோதவுடைப் போட்டி> சிறுவர்களின் நாட்டியம்> நாடகம்> இசைநிகழ்ச்சிகள்> பாட்டுக்கேற்ற அபிநயம்> நகைச்சுவைக் கதம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதுடன்> இதில் பங்கேற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுறவுள்ளன. இந்நிகழ்வுகளில் அனைத்துத் தமிழ் மக்களையும் பங்கேற்குமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
Gemeinschaftszentrum unter Affoltern, Bodenacker 25, 8046 Zürich
விடுதலைப் புலிகளின் தலைவர் என அழைக்கப்பட்ட கே.பி. (குமரன் பத்மநாதனை) வடமாகாண முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்: கே.பியை கைது செய்த விதம் பற்றி குறிப்பிட்டால், அரச பாதுகாப்பு இரகசியங்களை வெளியிட்டதாக என் மீது குற்றஞ் சுமத்துவார்கள் என்பதனால் அதனை கூற நான் விரும்பவில்லை. இராணுவ வீரர்கள் சிறைக்கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கே.பி.வடக்கில் சுற்றுலா செய்கின்றார்.
அவரது கணக்கில் பில்லியன் டொலர்கள் இருக்கின்றன. வடக்கில் மாவட்ட செயலாளர்களை அழைத்து அவர் கூட்டங்களை நடத்துகிறார். கே.பியை. வடமாகாணத்தின் முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றார்.
ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை நீடிக்கவில்லை என்பதற்காக ஐரோப்பிய நாடுகளை நாம் எதிராளிகளாகப் பார்க்க மாட்டோம் என்று ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணம் நீடிக்கப்படாவிட்டாலும் ஐரோப்பிய நாடுகளுடனான எமது நட்புறவு தொடரும். ஐரோப்பிய நாடுகள் இலங்கையின் நட்பு நாடுகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜி. எஸ். பி. நிவாரண விவகாரத்தை வைத்து அரசாங்கத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையில் நிரந்தரப் பகைமையை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சி முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தை ஆளும் தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணத்தை நீடிப்ப தற்காக ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை களை முன்வைத்திருக்கின்றது. அதனை நாம் மறுக்கவில்லை.
இலங்கை இறைமையும், சுயாதிபத்தியமும் தனித்துவம் மிக்க ஒரு நாடு என்ற வகையில் நாம் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணம் நீடிக்கப்படாவிட்டாலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வேறு உதவி ஒத்துழைப்புக்களை நாம் பெற்றுக் கொள்ளுவோம்.
நாம் ஜனநாயகத்தைப் பாதுகாத்து மேம்படுத்தியுள்ளோம். எமது பொருளாதாரம் வளர்ச்சி பெற்று வருகின்றது. இதற்கு வடக்கும் கிழக்கும் பெரிதும் பங்களிப்பு செய்யும் வெளிநாணய கையிருப்பு பாரியளவு அதிகரித்துள்ளது. இந்த வரவு – செலவு திட்டத்தில் குடிநீர் வழங்கலுக்காக 25 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமிய பொருளாதார, கூட்டமைப்பு மேம்பாட்டுக்கு மஹிந்த சிந்தனை அடிப்படையில் முக்கிய இடமளிக்கப்படுகின்றது.
புலிப் பயங்கரவாதிகளால் அச்சம், பீதி கொண்டிருந்த மக்களை அந்த பீதியிலிருந்து விடுத்துள்ளோம். அச்சம் பீதியின்றி சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை முழு நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். புலிகளின் பிடியில் சிக்கி இருந்த மக்களை விடுவித்து அவர்களை ஜனநாயக வழிக்குக் கொண்டு வந்துள்ளோம்.
புலிகளின் பிடியில் சிக்கி இருந்த சுமார் 2 இலட்சத்து 75 ஆயிரம் மக்கள் கடந்த வருடம் அரசாங்கத்திடம் சரணடைந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி சகல வசதிகளையும் செய்து கொடுத்தோம்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு உலகில் எந்த நாடும் செய்யாத அளவு நாம் சேவை செய்துள்ளோம். இது வரலாறாகும். புலிகளுடன் தொடர்புடையவர்கள் சிறுதொகையினர் மாத்திரமே தற்போது விசாரிக்கப்படுகின்றனர். விசாரணைகள் முடிவுற்றதும் அவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர்.