ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை நீடிக்கவில்லை என்பதற்காக ஐரோப்பிய நாடுகளை நாம் எதிராளிகளாகப் பார்க்க மாட்டோம் என்று ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணம் நீடிக்கப்படாவிட்டாலும் ஐரோப்பிய நாடுகளுடனான எமது நட்புறவு தொடரும். ஐரோப்பிய நாடுகள் இலங்கையின் நட்பு நாடுகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜி. எஸ். பி. நிவாரண விவகாரத்தை வைத்து அரசாங்கத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையில் நிரந்தரப் பகைமையை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சி முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தை ஆளும் தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணத்தை நீடிப்ப தற்காக ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை களை முன்வைத்திருக்கின்றது. அதனை நாம் மறுக்கவில்லை.
இலங்கை இறைமையும், சுயாதிபத்தியமும் தனித்துவம் மிக்க ஒரு நாடு என்ற வகையில் நாம் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணம் நீடிக்கப்படாவிட்டாலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வேறு உதவி ஒத்துழைப்புக்களை நாம் பெற்றுக் கொள்ளுவோம்.
நாம் ஜனநாயகத்தைப் பாதுகாத்து மேம்படுத்தியுள்ளோம். எமது பொருளாதாரம் வளர்ச்சி பெற்று வருகின்றது. இதற்கு வடக்கும் கிழக்கும் பெரிதும் பங்களிப்பு செய்யும் வெளிநாணய கையிருப்பு பாரியளவு அதிகரித்துள்ளது. இந்த வரவு – செலவு திட்டத்தில் குடிநீர் வழங்கலுக்காக 25 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமிய பொருளாதார, கூட்டமைப்பு மேம்பாட்டுக்கு மஹிந்த சிந்தனை அடிப்படையில் முக்கிய இடமளிக்கப்படுகின்றது.
புலிப் பயங்கரவாதிகளால் அச்சம், பீதி கொண்டிருந்த மக்களை அந்த பீதியிலிருந்து விடுத்துள்ளோம். அச்சம் பீதியின்றி சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை முழு நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். புலிகளின் பிடியில் சிக்கி இருந்த மக்களை விடுவித்து அவர்களை ஜனநாயக வழிக்குக் கொண்டு வந்துள்ளோம்.
புலிகளின் பிடியில் சிக்கி இருந்த சுமார் 2 இலட்சத்து 75 ஆயிரம் மக்கள் கடந்த வருடம் அரசாங்கத்திடம் சரணடைந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி சகல வசதிகளையும் செய்து கொடுத்தோம்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு உலகில் எந்த நாடும் செய்யாத அளவு நாம் சேவை செய்துள்ளோம். இது வரலாறாகும். புலிகளுடன் தொடர்புடையவர்கள் சிறுதொகையினர் மாத்திரமே தற்போது விசாரிக்கப்படுகின்றனர். விசாரணைகள் முடிவுற்றதும் அவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர்.