வேலணை அரசினர் வைத்தியசாலையில் குடும்பநல மாதவாகப் பணியாற்றிய பெண்ணொருவர் கயிற்றில் சுருக்கிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுக் (July 10 2010) காலை 7.30 மணியளவில் வைத்தியசாலையில், இவரது தங்கும் அறையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. வேலணை வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த கைதடி தெற்கைச் சேர்ந்த சரவணை தர்சிகா (வயது 27) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் வேலணைப் பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது: வேலணை அரசினர் வைத்தியசாலை பிரசவ விடுதியில் பணியாற்றிய குடும்பநல உத்தியோகத்தர் விடுமுறையில் சென்றதையடுத்து பதில் கடமையாற்றும் பணிக்காக தர்சிகா வேலணைக்குச் சென்றார். நேற்று முன்தினம் இரவுக் கடமையில் இருந்த போது அவர் கையடக்கத் தொலைபேசியில் உரையாடியதைக் குற்றம் சாட்டி வைத்தியசாலையின் பொறுபதிகாரி டொக்ரர் பிரியந்த செனவிரட்ண என்பவர் கோபத்தில் பல தடைவைகள் சத்தமிட்டு அவரைத் திட்டியதோடு, அவரது கையக்கத் தொலைபேசியையும் பறித்துள்ளார்.
இதனால் பயந்துபோன தர்சிகா மயக்கமுற்றுள்ளார். அவருக்கு சக ஊழியர்கள் முதலுதவி சிகிச்சையளித்துள்ளனர். பின்னர் நேற்று அதிகாலை அப்பெண் தனது கடமையை ஆரம்பித்த போதும் குறிப்பட்ட வைத்திய அதிகாரி அவரை மேலும் திட்டியுள்ளார். தனது கையடக்கத் தொலைபேசியைத் தருமாறு தர்சிகா கேட்டபோது, அதனைக் கொடுப்பதற்கு அதிகாரி மறுத்துள்ளார்.
இதனையடுத்து நேற்றுக்காலை சில மணிநேரம் தர்சிகாவைக் காணவில்லை என வைத்தியசாலைப் பணியாளர்கள் தேடியுள்ளனர். பின்னர் அவரது விடுதி யன்னலைத் திறந்து பார்த்தபோது. மின்விசிறியில் தொடுக்கப்பட்ட கயிற்றில் சீருடையணிந்த நிலையில் சடலமாக தர்சிகா தொங்குவதைப் பணியாளர்கள் கண்டுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து. ஊர்காவற்றுறை பதில் நீதவான் யாழ்.பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டொக்ரர் கேதீஸ்வரன், மற்றும் ஊர்காவற்றுறைப் பொலிஸார் நேரில் சம்பவ இடத்திற்குச் சென்று விசாணைகளை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைகளுக்காக பின்னர் சடலம் யாழ்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நான்கு மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியசாலைக் கட்டப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரைத் தாக்கியதாகவும், அதனால் அக்கட்டடப்பணி இடைநிறுத்தப்பட்டதாகவும், இதனையடுத்து யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேரில் சென்று சமரசம் செய்ததாகவும் கூறப்படுகின்றது.