புனர்வாழ்வு முகாமில் ஒரு வருடமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (10-07-2010) விடுவிக்கப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கபட்டிருந்தவர்களில் குறிப்பிட்ட ஏழு பேரே விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு ஆண்களும், மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.
நேற்று தெல்லிப்பழை பிரதேசச் செயலகத்தில் புனர்வாழ்வு மற்றும், மறுசீரமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் சேவையின் போதே புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.யூ. குணசேகரவால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இம்மாணவர்கள் ஏழு பேரும், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் போரினால் பாதிக்கப்பட்டு சொத்துக்களை இழந்த பத்துப்பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன.
தெல்லிப்பழை பிரதேசச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் டி.யூ, குணசேகர உரையாற்றுகையில் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது சுலபமானது அல்ல அவைப் படிப்படியாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் எனக்கூறினார். 40ஆயிரம் பேரே இன்னமும் மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.