லண்டன் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தின் நாடக நிகழ்வு ஒன்று இன்று (யூலை 22 2010) சென்னையில் இடம்பெற்றது. பெசன்நகர் எலியற்கடற்கரை சாலையில் உள்ள ஸ்பேஸ் அரங்கில் ‘மழை’ ‘பிரத்தியேகக் காட்சி’ ஆகிய இரு நாடகங்கள் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தினால் மேடையேற்றப்பட்டது. கூத்துப்பட்டறை மூன்றாம் அரங்கு என்ற இரு அரங்கியல் அமைப்புகளின் அனுசரணையோடு இம்மேடையேற்றம் இடம்பெற்றதாக அவைக்காற்றுக்கழகக் கலைஞர் வாசுதேவன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.
250 பேர் வரை இவ்வரங்க நிகழ்வை காண வந்திருந்தனர். தமிழக நாடகக்கலை மற்றும் கலைஇலக்கிய தளங்களில் அறியப்பட்டவர்களான ந முத்துசாமி இந்திரா பார்த்தசாரதி ஞானி ரங்கராஜன் பாரதிமணி சதானந்த மேனன் ரி அண்ணாமலை பிரசன்னா ராமசாமி புரசை கண்ணப்பகாசி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும் முன்னாள் கூத்துப்பட்டறை மாணவர்களாக இருந்து சினிமாவுக்குள் அறியப்பட்டுள்ள பசுபதி கலைவாணி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அரங்கியல் தொடர்பான தம் தேடலுக்காக சென்னை சென்றிருந்த தமிழ் அவைக்காற்றுக்கழகம் அங்குள்ளவர்களின் ஏற்பாட்டில் இம்மேடையெற்றங்களை மேற்கொண்டனர். மூன்றாம் அரங்கு குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் இந்நாடகங்களை மேடையேற்றுவதற்கான சகல ஒத்துழைப்பையும் வழங்கியதாகவும் அவர்களது நட்பு தாங்கள் தங்கள் ஊரிலேயே நாடகத்தை மேடையேற்றுவது போன்ற உணர்வையூட்டியதாகவும் வாசுதேவன் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் கலைப் பரிமாற்றங்களை மேற்கொள்ள இப்பயணம் உதவியுள்ளதாகவும் வாசுதேவன் தெரிவித்தார். க பாலேந்திரா ஆனந்தராணி பாலேந்திரா மனோ வாசுதேவன் ஆகியோர் அடங்கிய தமிழ் அவைக்காற்றுக்கழகக் குழுவினரே சென்னை சென்றிருந்தனர்.