வடமராட்சிக் கிழக்கிலுள்ள விநாயகர் ஆலயத்தின் பெறுமதி வாய்ந்த விக்கிரகங்கள் சில பருத்தித்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட விநாயகர் ஆலயம் ஒன்றிலிருந்தே பழமை வாய்ந்ததும். பெறுமதி வாய்ந்ததுமான இரு விநாயகர் விக்கிரகங்கள் மற்றும், வேல் போன்றவை அவற்றின் பாதுகாப்பு கருதி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்குப் பகுதிகள் யுத்தத்தினால் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றன. அப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் வன்னியிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். வன்னியில் இடம்பெயர்ந்திருந்தவர்கள் தற்போது வவுனியா முகாம்களிலும் வேறு பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் மீள்குடியேற்றம் இன்னமும் நடைபெறவில்லை. எனவே, குறிப்பிட்ட ஆலயத்தின் விக்கிரகங்கள் பாதுகாப்பு கருதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் வைக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் குறித்த ஆலயத்திடம் ஒப்படைக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.