December

December

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் மூலம் ஐ.தே.கவின் வலதுசாரி சர்வாதிகாரம் அம்பலம்

ஐ. தே. க. சம்மேளனத்தில் வைத்து ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் ஐ. தே. க.வின் வலதுசாரி சர்வாதிகாரத் தோற்றம் அம்பலமாகியுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார். ஊடகங்களை அடக்கி, ஒடுக்கிய ஐ. தே. க.வின் கடந்த கால போக்கு இன்னும் மாறவில்லை என்றும் தனது சுயரூபத்தை ஐ. தே. க. வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று  நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது:- ஐ. தே. க. சம்மேளனத்திற்கு செய்தி திரட்டச் சென்ற ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஊடகவியலாளர்கள் அறுவர் நேற்று முன்தினம் ஐ. தே. க. தலைவரின் ஆதரவாளர்களால் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் கெமரா உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதோடு, வீடியோ ஒளிநாடாக்களும் பறிக்கப்பட்டுள்ளன. மலசலகூடத்தினுள் புகுந்து தப்ப முயன்ற இந்த ஊடகவியலாளர்கள் துரத்தித் துரத்தி தாக்கப்பட்டுள்ளனர். ஊர்மக்கள்தான் இவர்களை காப்பாற்றியுள்ளனர். இவர்களை பாரிய கும்பலொன்றே தாக்கியுள்ளது. தமது கடமையை நிறைவேற்றச் சென்ற வேளையிலேயே இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் செய்தி திரட்டுவதற்காக ஊடகவியலாளர்கள் சென்று வருகின்றனர். தமது உயரதிகாரிகளின் பணிப்பின் படியே இவர்கள் செய்தி திரட்டச் சென்றனர். இவர்கள் அரசியல் செய்வதற்காக ஐ. தே. க. மாநாட்டிற்குச் செல்லவில்லை.

இந்த மாநாட்டிற்கு அரசாங்க ஊடகங்களுக்கு அழைப்பு வழங்கவில்லையெனவும், ஊடகவியலாளர்கள் சிலர் தாக்கப்பட்டது தெரியாது எனவும் ஐ. தே. க. செயலாளர் கூறியுள்ளார். ஜனநாயகம், ஊடக சுதந்திரம் பற்றி பேசும் ஐ. தே. க. செயலில் அதற்கு மாறாகவே செயற்படுகிறது. கட்சியொன்றின் மாநாட்டில் செய்தி திரட்டச் செல்வதற்கு அனுமதி தேவையில்லை. ஐ. தே. க. வும் ஜே. வி. பி. யும் ஊடக சுதந்திரம் குறித்து பேசினாலும் ஊடக சுதந்திரத்திற்கு எதிராகவே செயற்படுகின்றன. கடந்த ஐ. தே. க. ஆட்சியில் பத்திரிகைகள் “சீல்” வைக்கப்பட்டபோது பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் தாக்கப்பட்டனர். ஆனால் ஐ. தே. க. தனது கடந்தகால போக்கை இன்னும் மாற்றவில்லை. ஐ. தே. க. வின் இந்த போக்கினால் மிகவும் பயங்கரமான நிலை உருவாகியுள்ளது.

தமது கூட்டங்களுக்கு அரச ஊடக நிறுவனங்களிலிருந்து யாரும் வரக் கூடாது எனவும், அவ்வாறு வந்தால் திரும்பிச் செல்ல மாட்டார்கள் எனவும் ஜே. வி. பி. அச்சுறுத்தியுள்ளது. மறுபக்கம் செய்தி திரட்ட வந்த அரச ஊடக நிறுவன ஊடகவியலாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் ஐ. தே. க. கூட்டங்களுக்கு செய்தி திரட்டச் செல்வதற்கு அரச ஊடக நிறுவனங்களில் பணி புரியும் ஊடகவியலாளர்களை அனுப்ப முடியாது. ஐ. தே. க. வினர் அவர்களை கொலை செய்து விடலாம். இந்தத் தாக்குதல் ஊடக சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் அச்சுறுத்தலாகும். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது சில தொலைக்காட்சி சேவைகள் 24 மணித்தியாலமும் அது குறித்து செய்தி வெளியிட்டன. ஆனால் தனியார் ஊடகம், அரசாங்க ஊடகம் என வேறுபாடு கிடையாது. அனைத்தும் ஊடகங்களே. அவற்றின் சுதந்திரத்தை பாதுகாக்கவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐ. ரீ. என். மற்றும் ரூபவாஹினி ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

பாதுகாப்பு செயலாளர் நியமனத்துக்குப்பின் எந்தவொரு சொத்தையும் வாங்கவில்லை – கோத்தாபய ராஜபக்ஷ

gothabaya.jpgஎதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஜனாதிபதி அபேட்சகர் சரத் பொன்சேகாவும் விடுக்கும் அனைத்து குற்றச் சாட்டுக்களையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார். ரூபவாஹினி தொலைக்காட்சிக்கு கடந்த சனிக்கிழமை வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார்.

புலிகளின் சொத்து மற்றும் அந்த சொத்துக்களை பயன்படுத்துதல் மற்றும் ஊழல் மோசடி உட்பட விடுக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கும் மக்கள் மற்றும் படையினரின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் விடுக்கப்பட்ட பொய்க் குற்றச் சாட்டுக்களாகும் என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

தான் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டது. முதல் எந்தவொரு சொத்தையும் கொள்வனவு செய்யவில்லை என்று இப் பேட்டியின் போது கூறிய பாதுகாப்பு செயலாளர், அவ்வாறு கொள்வனவு செய்திருந்தால் அதனை நிரூபித்துக் காட்டுமாறு அவர் சவால் விடுத்தார்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு வங்கியிலும் தனது பெயருக்கு உள்ள சொத்துக்களை தேடிப் பார்க்க அனுமதி வழங்கும் பகிரங்க கடிதமொன்றை வழங்க தான் தயாராக இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.

அப்பேட்டியில் அவர் தொடர்ந்து கூறியதாவது:- ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 60 வருடங்களில் நாட்டுக்கு இழைத்திருக்கும் மிகப் பெரிய துரோகம் விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையை செய்து கொண்டதாகும். அந்த உடன்படிக்கையின் படி சட்ட பூர்வமாக உருவாக்கப்பட்ட படையினருடன் புலிகள் இயக்க தீவிரவாதிகள் சமமாகக கருதப்பட்டனர். படை அதிகாரிகள் தீவிரவாதிகளுடன் கை குலுக்கி சமாதானம் பற்றிப் பேசவும் நேர்ந்தது என்று பாதுகாப்பு செயலாளர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை கிட்டத்தட்ட 3 ஆயிரம் தடவைகள் மீறப்பட்ட நிலையில் பாதுகாப்பு படையினர் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதிருந்தது. புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலையமைப்புத் தலைவர் கே. பி. கைது செய்யப்பட்டதையடுத்து அவரிடம் இருந்து பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக பொது மக்களுக்கு அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இப்போது கூறிவருகிறார் என்று பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

அரசாங்கத்தினால் நம்பிக்கை மீறப்பட்டிருந்தால் கே. பி. யை கைது செய்திருக்க முடியாது. ஏனெனில் அதற்கு சில வாரங்களுக்கு முன் செனல் 4 தொலைக்காட்சி சேவை கே. பி. யை பிரபாகரனின் வாரிசு என அறிவித்திருந்தது.  எனவே எமது புலனாய்வு அதிகாரிகள் கே. பி. யை கையாளுவதுடன், அவரை விசாரித்தும் வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் சிக்கலானவை. இதில் சில சட்டபூர்வ வர்த்தகங்களாகவும் உள்ளன. சில நாடுகளில் புலிகளின் தொடர்புகளை எம்மால் கையாள முடிந்திருக்கிறது. ஆனால் சில நாடுகளில் அது கஷ்டமாக உள்ளது. விரைவில் கே. பி. யின் சொத்து பற்றிய விபரங்களை எம்மால் வழங்கக் கூடியதாக இருக்கும். சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் கொழும்பில் 90 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த 25 பேர்ச் காணித் துண்டொன்றை ஒதுக்கியுள்ளது.

எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்று பொன்சேகா கூறி வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியின் போது கூறியுள்ளார். சரத் பொன்சேகா ஓய்வு பெறுவதற்கு முன் காணி ஒதுக்குவது தொடர்பாக கேட்டுக் கொண்டிருந்தார்.  இராணுவ தளபதிக்கு மட்டுமன்றி கடற்படை மற்றும் விமானப் படை தளபதிகளுக்கும் கொழும்பில் காணி ஒதுக்கப்பட வேண்டுமென இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசியபோது அவர் கூறியிருந்தார்.  இந்த யோசனையை ஜனாதிபதி அங்கீகரித்ததையடுத்து பாதுகாப்பு அமைச்சு காணிகளை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான கொழும்பு கிரிமண்டல மாவத்தையில் தலா 10 பேர்ச் வீதம் மூன்று காணித் துண்டுகளை ஒதுக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரித்தது. குறிப்பிட்ட காணி அமைத்துள்ள இடத்தில் ஒரு பேர்ச் 3.8 மில்லியன் ரூபா பெறுமதியாகும். இந்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை அங்கீகரித்ததும் அது பற்றி பொன்சேகாவுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் தனது எண்ணத்தில் இருக்கும் வகையிலான வீட்டை கட்டுவதற்கு 10 பேர்ச் காணி போதாது என்று அவர் கூறியதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து தான் மீண்டும் ஜனாதிபதியிடம் சென்று பொன்சேகாவின் நிலையை எடுத்துக் கூறி அதே விலையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிட மிருந்து தலா 15 பேர்ச் வீதம் மூன்று காணித் துண்டுகளை பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய குறிப்பிட்டார்.

எனினும் அமைச்சரவை 20 பேர்ச் காணித்துண்டுக்கான அங்கீகாரத்தை வழங்கியபோதும் பொன்சேகா திருப்தி அடைந்ததாக தெரியவில்லை.  அதனையடுத்து இன்றையகாணிப் பெறுமதியில் 90 மில்லியன் ரூபா பெறுமதியான 25 பேர்ச் காணித்துண்டை அரசாங்கம் ஒதுக்கியது. எனினும் தற்போது தனது காணி ஒதுக்குவது தாமதமாவதாக குற்றம் சாட்டி அவர் சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறார். ஆனால் குறிப்பிட்ட காணித்துண்டு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; விசாரணையில் 3 பொலிஸ் குழு

வெலிசறை – நவலோக மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன.

ஜாஎல, கந்தானை மற்றும் பேலியகொட ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளே இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

வெலிசறை – நவலோக மைதானத்தில் நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்.

திசாநாயக்கவின் இல்லத்தில் ஜனாதிபதி, எஸ்.பி.திசாநாயக்க இடையில் நேற்று சந்திப்பு

sb-dissanayake.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க இன்று திங்கட்கிழமை தனது எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எஸ்.பி.திசாநாயக்க ஆதரவளிப்பாரென ஊகங்கள் வெளிப்படுத்தப்படும் நிலையில் இன்று செய்தியாளர் மாநாடு இடம்பெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சன்டே ரைம்ஸ் நேற்று ஞாயிறு மாலை தெரிவித்தது. 

இதேவேளை, ஹங்குரான்கெத்தவிலுள்ள திசாநாயக்கவின் இல்லத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எஸ்.பி.திசாநாயக்கவுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் வெலிசறையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கட்சியின் பிரதம அமைப்பாளரான எஸ்.பி.திசாநாயக்க கலந்துகொள்ளவில்லை. தனது தீர்மானத்தை அறிவிப்பதற்காக இன்று திங்கட்கிழமை திசாநாயக்க கொழும்பில் செய்தியாளர் மாநாட்டைத் திட்டமிடுவதாக அவரின் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சன்டே ரைம்ஸ் தெரிவித்தது. எஸ்.பி.திசாநாயக்க தற்போது மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை வகித்திருந்த எஸ்.பி.திசாநாயக்க பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பு செவ்வாய் தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பாக அக்கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை.அதேசமயம், தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்தும் முடிவெடுக்கப் படவில்லையென அக்கட்சியின் திருமலைமாவட்ட எம்.பி. பி.துரைரெட்ணசிங்கம் சனிக்கிழமை கூறியுள்ளார்.ஆயினும் நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதித்தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறினால் சுயேச்சை வேட்பாளராக தான் போட்டியிடப் போவதாக யாழ்.மாவட்ட எம்.பி. எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தியாவில் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியான நிலையிலேயே துரைரெட்ணசிங்கம் இந்தக் கருத்துகளை கூறியுள்ளார்.

இதேநேரம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலர் வெவ்வேறான கருத்துக்களை வெளியிட்டாலும் இத்தேர்தல் தொடர்பாக கூட்டமைப்பு விரைவில் உறுதியான முடிவொன்றை எடுக்குமென கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த முடிவுக்கு அனைத்து எம்.பி.க்களும் கட்டுப்படுவரெனவும் அதனால் தற்போது கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்படும் கருத்துக்கள் குறித்து மக்கள் குழப்பமடையத் தேவையில்லையென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது.

3-test.jpgஇலங் கைக்கு எதிரான 3 வது டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் சகீர்கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இந்திய, இலங்கை அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்தது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை 393 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 726 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்தியா 333 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. 3 ஆம் நாள் ஆட்ட நேர இறுதியில் இலங்கை விக்கெட் இழப்பின்றி 11 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பரணவித்தாரன 8 ஓட்டங்களுடனும், டில்ஷன் 3 ஓட்டங்களுடனும் ஆட்டத்தைத் துவங்கினர். 4 ஆம் நாள் ஆட்டம் சூழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று தலைவர் தோனி எதிர்பார்த்தார்.

அவரது எதிர்பார்ப்புக்கு பலனும் கிடைத்தது. ஆரம்பம் முதலே ஹர்பஜனும், பிரக்யான் ஓஜாவும் பந்து வீசினர். இன்னிங்ஸின் 9 வது ஓவரிலேயே இதற்கு பலன் கிடைத்தது. ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசி டில்ஷானை ஆட்டமிழக்கச் செய்தார். அவர் 16 ஓட்டங்கள் எடுத்தார்.

அவரைத் தொடர்ந்து பரணவித்தாரனவுடன் அணியின் தலைவர் சங்கக்கார ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் பொறுமையாக விளையாடி இந்திய வீரர்களின் பொறுமையை சோதித்தனர். பரணவித்தாரன நிதானமாக விளையாடி அரைச் சதம் எடுத்தார். அவர் 54 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளையில் ஸ்ரீசாந்த் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து சங்கக்காரவுடன் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ஜோடி சேர்ந்தார்.

ஜயவர்தன-சங்கக்காகர ஜோடி, அனுபவ ஜோடி என்பதால் தோனி பந்து வீச்சை மாற்றி மாற்றி இருவரையும் ஆடுகளத்தில் நிலைத்திருக்க விடாமல் தடுக்க முனைந்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஜயவர்தன விக்கெட்டை சகீர் கான் வீசிய பந்து பறித்தது. அவர் 12 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தார்.

இதைத் தொடர்ந்து ஆடவந்த சமரவீரவும் ஓட்ட கணக்கைத் துவங்காமலேயே சகீர் கான் பந்தில் வீழ்ந்தார். பின்னர் வந்த மெத்யூஸ் 10 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஓஜா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

4 ஆம் நாள் ஆட்டதிலேயே இலங்கையை சுருட்டிவிடலாம் என்று தோனி மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் 6 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரசன்ன ஜயவர்தனவும் சங்கக்காரவும் அபாரமாக விளையாடினர். ஜயவர்தன அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 32 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும். அவரும் ஓஜா பந்தில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிவதைக் கண்ட சங்கக்கரா அணியை சரிவிலிருந்து மீட்க நங்கூரமிட்டார்.

மிகவும் நிதானமாக விளையாடிய அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது 21 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆட்டநேர இறுதியில் சங்கக்கார 133 ஓட்டங்களுடனும், குலசேகர 9 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இறுதிநாள் ஆட்டம் நேற்று நடந்தது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்கிற நிலையில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் அபாரமாகப் பந்து வீசினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சங்கக்கார ஆட்டமிழந்தார். இதன் பிறகு வந்த யாரும் நிலைத்து நின்று ஆடாததால், இலங்கை அணி 309 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியத் தரப்பில் சகீர்கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

மு.கா. அதியுயர்பீட உறுப்பினர் உட்பட 7 முக்கியஸ்தர்கள் அரசுடன் இணைவு

மு. கா. மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் காத்தான்குடி நகர சபைத் தலைவருமான மர்சூக் அகமது லெப்பை உட்பட மு. கா. வின் மட்டக்களப்பு மாவட்ட ஆறு உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ. தே. க. உறுப் பினர் ஒருவருமாக ஏழுபேர் நேற்று ஐ. ம. சு. மு.வில் இணைந்து கொண்டனர்.

மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் எம். பி. முன்னிலையில் இவர்கள் இணைந்துகொண்டனர்.

மர்சூக் அகமது லெவ்வையுடன் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் நாகூர்கான் றமழான், காத்தான்குடி நகர சபை மு. கா. உறுப்பினர் ஹயாத்து முகம்மது, வாழைச்சேனை பிரதேச சபை மு.கா. உறுப்பினர் அப்துல் றபீக், ஏறாவூர்பற்று பிரதேச சபை மு.கா. உறுப்பினர் அப்துல் வாஹித், ஏறாவூர் நகர பிரதேச சபை உறுப்பினர் ஜே. எம். பிர்தெளஸ், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நந்தசிறி ஆகியோரே இணைந்து கொண்டவர்களாவர்.

தரிசனம்! : நோர்வே நக்கீரா

criticsதரிசனம் – (தத்துவார்த்தக் கவிதை)

உன்முகத்தையே தரிசிக்க முடியாத நீயும்
என்றுமே உன்முகத்தையே தரிசிக்கும் நானுமாகத்தானே
இந்த உலகம் உருண்டு கொண்டிருக்கிறது.
நீ உனக்குரியவனே அல்ல.

முகத்தையே தரிசிக்க முடியாத நீ
அகத்தை எப்படித் தரிசிப்பாய்?
என்விமர்சனங்கள் மட்டுமே
உன் தரிசனம்.

கண்ணாடி முன்னாடி நின்று
பின்னாடியல்லவா தேடுகிறாய்
முன்னாடி நிற்பவனே!

அலங்காரம் செய்கிறாய்
யார் யாருக்கோ அழகாய் இருக்க.
உனக்காக நீ
எப்போ அழகாய் இருக்கப்போகிறாய்?

அது நீயே அல்ல
மாயையின் விம்பம்
நீயாக நீ நினைக்கும்
உன் எதிரி

கண்ணாடியின் பின்னாடி நிற்பவனை
எட்டி அடித்துப்பார்
மறுகையால் உன்னை அறைவான்.
இனியாவது புரிந்து கொள்வாயா
உனக்கு நீயேதான் எதிரி

நீ கண்ணாடியில் காண்பதெல்லாம்
நிதர்சனமே இல்லா தரிசனங்களே.

சுயவிமர்சனம் செய்
மனக்கண்ணாடியாவது தெழிவாகும்

உன்விம்பத்தை காண்பதற்கே
கண்ணா! உனக்கு
கண்ணாடியின் சேவை தேவை.
உன்னை நீ காண்பதற்கு
சுயவிமர்சனம் தேவை.

யார் யாரோ அழகுபார்க்க
மனச்சாட்சியைக் கொன்று
அலங்காரம் செய்யும் நீ
மனமெனும் கோயிலில்
மனச்சாட்சி முன் நின்று
உனக்கு நீயே அழகு செய்
சுயவிமர்சனம் எனும் பூசை செய்

உனக்கு நீயே பூசை செய்
செய்த பாவங்களுக்கு
கண்ணீரால் அபிசேகம் செய்;
சுயமாகும்; நிதர்சனம்
உன் சுயதரிசனம்.

ஆம் நீதானே கடவுள்
நீயே தான் கடவுள்.
கடந்தும் உள்ளவன் தானே கடவுள்
கடப்பாய் உன்னை கடவுளாக.

நோர்வே நக்கீரா
4.12.2009

ஐ.தே.க.வின் சுயரூபம் அம்பலம்: அமைச்சர் யாப்பா கண்டனம்

anura.jpgஐ.தே.க. மாநாட்டில் நேற்று ஊடகவி யலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கண்டித்துள்ளார். இந்தத் தாக்குதலின், மூலம் ஐ.தே.க.வின் ஊடக சுதந்திரம் தொடர்பான நிர்வாணம் மீண்டும் முழு உலகிற்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாடு நடந்த போதும் ஏனைய அனைத்து சந்திப்புகளின் போதும் தாம் விரும்பியவாறு செய்திகளை வெளியிடுவதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்நாட்டில் ஊடக சுதந்திரமில்லையெ னக் கூறி ஐ.தே.க. தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பிரசாரம் இன்று அவர்களிடமே சுற்றி வந்துள்ளதோடு, உண்மையில் ஊடக சுதந்திரத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் யார் என்பது நேற்றைய தாக்குதல் மூலம் தெரியவந்து ள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியு ள்ளார்.

ஜனநாயகம் பற்றிப் பெரிதாகப் பேசும் ஐ.தே.க. தமது மாநாட்டு வளாகத்திலேயே ஊடகவியலாளர்கள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தியதையும் அவர்கள் உபகரணங்களை சேதப்படுத்தி யதையும் ஜனநாயகத்தை விரும்பும் எவரும் விரும்பமாட்டார்கள். ஜனாதிபதித் தேர்தல் பிரசார ஆரம்பத்தின் போது வன்மமாகவும், மிலேச்சத்தனமாகவும் செயற்பட்டு ஐ.தே.க. மேற்கொண்ட இந்தத் தாக்குதலானது அவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தேர்தலில் ஈடுபட முயல்கிறார்கள் என்பது புலனாகின்றது. இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிராக பொது மக்கள் குரல் எழுப்ப வேண்டுமெனவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

செலியூலர் தொலைபேசியூடாக ரயில்களில் ஆசன முன்பதிவு – எதிர்வரும் 9 இல் ஆரம்பம்

handphone.jpgசெலியூலர் தொலைபேசிகளூடாக ‘365’ என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் ஊடாக ரயில்களில் உங்கள் இருக்கைகளைப் பதிவு செய்யும் புதிய நடைமுறை எதிர்வரும் 9ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகிறது.

முதற்கட்டமாக கொழும்புக் கோட்டை முதல் கண்டி வரையிலும், கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை வரையுமான கடுகதி ரயில் சேவையில் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு கோட்டை நிலையத்தில் ஆசனப்பதிவு பிரிவு கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதுடன் வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கக் கூடியது. முன் ஆசனப்பதிவு பகுதி இயங்கவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் நிகழ்வு நடைபெறவுள்ளது.