ஐ. தே. க. சம்மேளனத்தில் வைத்து ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் ஐ. தே. க.வின் வலதுசாரி சர்வாதிகாரத் தோற்றம் அம்பலமாகியுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார். ஊடகங்களை அடக்கி, ஒடுக்கிய ஐ. தே. க.வின் கடந்த கால போக்கு இன்னும் மாறவில்லை என்றும் தனது சுயரூபத்தை ஐ. தே. க. வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது:- ஐ. தே. க. சம்மேளனத்திற்கு செய்தி திரட்டச் சென்ற ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஊடகவியலாளர்கள் அறுவர் நேற்று முன்தினம் ஐ. தே. க. தலைவரின் ஆதரவாளர்களால் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் கெமரா உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதோடு, வீடியோ ஒளிநாடாக்களும் பறிக்கப்பட்டுள்ளன. மலசலகூடத்தினுள் புகுந்து தப்ப முயன்ற இந்த ஊடகவியலாளர்கள் துரத்தித் துரத்தி தாக்கப்பட்டுள்ளனர். ஊர்மக்கள்தான் இவர்களை காப்பாற்றியுள்ளனர். இவர்களை பாரிய கும்பலொன்றே தாக்கியுள்ளது. தமது கடமையை நிறைவேற்றச் சென்ற வேளையிலேயே இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் செய்தி திரட்டுவதற்காக ஊடகவியலாளர்கள் சென்று வருகின்றனர். தமது உயரதிகாரிகளின் பணிப்பின் படியே இவர்கள் செய்தி திரட்டச் சென்றனர். இவர்கள் அரசியல் செய்வதற்காக ஐ. தே. க. மாநாட்டிற்குச் செல்லவில்லை.
இந்த மாநாட்டிற்கு அரசாங்க ஊடகங்களுக்கு அழைப்பு வழங்கவில்லையெனவும், ஊடகவியலாளர்கள் சிலர் தாக்கப்பட்டது தெரியாது எனவும் ஐ. தே. க. செயலாளர் கூறியுள்ளார். ஜனநாயகம், ஊடக சுதந்திரம் பற்றி பேசும் ஐ. தே. க. செயலில் அதற்கு மாறாகவே செயற்படுகிறது. கட்சியொன்றின் மாநாட்டில் செய்தி திரட்டச் செல்வதற்கு அனுமதி தேவையில்லை. ஐ. தே. க. வும் ஜே. வி. பி. யும் ஊடக சுதந்திரம் குறித்து பேசினாலும் ஊடக சுதந்திரத்திற்கு எதிராகவே செயற்படுகின்றன. கடந்த ஐ. தே. க. ஆட்சியில் பத்திரிகைகள் “சீல்” வைக்கப்பட்டபோது பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் தாக்கப்பட்டனர். ஆனால் ஐ. தே. க. தனது கடந்தகால போக்கை இன்னும் மாற்றவில்லை. ஐ. தே. க. வின் இந்த போக்கினால் மிகவும் பயங்கரமான நிலை உருவாகியுள்ளது.
தமது கூட்டங்களுக்கு அரச ஊடக நிறுவனங்களிலிருந்து யாரும் வரக் கூடாது எனவும், அவ்வாறு வந்தால் திரும்பிச் செல்ல மாட்டார்கள் எனவும் ஜே. வி. பி. அச்சுறுத்தியுள்ளது. மறுபக்கம் செய்தி திரட்ட வந்த அரச ஊடக நிறுவன ஊடகவியலாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஐ. தே. க. கூட்டங்களுக்கு செய்தி திரட்டச் செல்வதற்கு அரச ஊடக நிறுவனங்களில் பணி புரியும் ஊடகவியலாளர்களை அனுப்ப முடியாது. ஐ. தே. க. வினர் அவர்களை கொலை செய்து விடலாம். இந்தத் தாக்குதல் ஊடக சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் அச்சுறுத்தலாகும். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது சில தொலைக்காட்சி சேவைகள் 24 மணித்தியாலமும் அது குறித்து செய்தி வெளியிட்டன. ஆனால் தனியார் ஊடகம், அரசாங்க ஊடகம் என வேறுபாடு கிடையாது. அனைத்தும் ஊடகங்களே. அவற்றின் சுதந்திரத்தை பாதுகாக்கவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐ. ரீ. என். மற்றும் ரூபவாஹினி ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.