05

05

ஆஸ்ட்ரேலியா 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி

shane_watson.jpgலண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்ட்ரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நாட்வெஸ்ட் ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் பூவா-தலையா வென்ற இங்கிலாந்து அணி, ஆஸ்ட்ரேலியாவை பேட் செய்யப் பணித்தது.

ஆஸ்ட்ரேலிய அணியின் துவக்க வீரர்களாக ஷேன் வாட்சன், பெய்ன் களமிறங்கினர். இதில் பெய்ன் ஓட்டங்கள் எடுக்காமல் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய கேமரூன் வொய்ட், ஷேன் வாட்சனுடன் இணைந்து நிதானமாக விளையாடினார்.  இந்த இணை 2வது விக்கெட்டுக்கு 82 ஓட்டங்கள் சேர்த்தது.

வாட்சன் 46 ஓட்டங்களிலும், வொய்ட் 53 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் 45 ஓட்டங்களும், மைக் ஹஸ்ஸி 20 ஓட்டங்களும், ஃபெர்கூசன் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களும், ஹோப்ஸ் ஆட்டமிழக்காமல் 18ஓட்டங்களும் எடுத்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஆஸ்ட்ரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பால் கோலிங்வுட் 2 விக்கெட்டுகளும், சைடு பாட்டம் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து வெற்றி பெற 261 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி துவக்கத்திலேயே தடுமாறியது. அணித்தலைவரும், துவக்க வீரருமான ஆண்ட்ரூ ஸ்டிராஸ் 12 ஓட்டங்களில் பிரெட்லீ பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ரவி போபாரா 49 ஓட்டங்கள் எடுத்தார்.

முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய மேத்யூ ப்ரியார் 28 ஓட்டங்களும், ஷா 40 ஓட்டங்களும், கோலிங்வுட் 23 ஓட்டங்களும், லூக் ரைட் 38 ஓட்டங்களும், ரஷித் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களும், பிராட் 2 ஓட்டங்களும், ஸ்வான் 4 ஓட்டங்களும், சைடுபாட்டம் ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களும் எடுத்தனர்.

இன்னிங்சின் கடைசி (50வது) ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை பிராக்கன் வீச, இங்கிலாந்து வீரர் ரஷித் எதிர்கொண்டார். முதல் பந்தில் ஓட்டங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனினும் 2வது பந்தில் பவுண்டரி விளாசி ஆஸ்ட்ரேலிய அணிக்கு ரஷித் நெருக்கடி ஏற்படுத்தினார்.

மூன்றாவது பந்தில் ரஷித் ஒரு ஓட்டங்கள் எடுக்க, சைடுபாட்டம் பேட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். 4வது பந்தில் ஓட்டங்கள் எடுக்கப்படவில்லை. இன்னும் 2 பந்துகள் மேட்டுமே மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து வெற்றி பெற 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

5வது பந்தில் சைடுபாட்டம் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில், சைடுபாட்டம் ஒரு ஓட்டங்கள் மட்டும் சேகரித்ததால் ஆஸ்ட்ரேலியா 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்கள் எடுத்தது.

ஆஸ்ட்ரேலியா தரப்பில் மிட்செல் ஜான்சன் 3 விக்கெட்டுகளும், ஹாவ்ரிட்ஸ் 2 விக்கெட்டுகளும், பிரெட்லீ, வாட்சன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஆஸ்ட்ரேலிய வீரர் ஃபெர்கூசன் ஆட்டநாயகன் விருது பெற்றார். 

சம்பந்தன் தலைமையில் 7 பேர் ஜனாதிபதியுடன் திங்களன்று சந்திப்பு

TNA Leader R Sampanthanதமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் திங்கள்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது அக் கட்சியின் சார்பில் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் 7 பேர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்

நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு கூடி இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா,  பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோ சார்பில் என்.ஸ்ரீகாந்தா ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி கதிர்காமர், சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஐ.எம்.இமாம் ஆகியோரே மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரகள் ஆவர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரசைச் சேர்ந்த கஜேந்திரன் பொன்னம்பலம தற்போது வெளிநாட்டில் தங்கியிருப்பதால் இக் குழுவில் இடம் பெறவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் இடம் பெறவிருக்கும் சந்திப்பில் பேச வேண்டிய விடயங்கள் குறித்து நேற்று கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்ததாகவும், இடம் பெயர்ந்த வன்னி மக்களின் மீள் குடியேற்றம், 1990 ல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம், அண்மைக் காலமாக வடக்கு கிழக்கில் இடம் பெற்று வருவதாகக் கூறும் அத்து மீறிய குடியேற்றங்கள் போன்ற விடயங்களுடன் அரசியல் தீர்வு தொடர்பாகவும் பேசுவதென்றும் அக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் சிம்பாப்வேக்கு கடன்

ro-mu.jpgகடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக சர்வதேச நாணய நிதியம் சிம்பாவேவுக்கு கடன் வழங்கவுள்ளது.

சிம்பாப்வே தனது வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் மிகக் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுவரும் நிலையில் அதனை ஈடுகட்டும் நோக்கில் அந்நாட்டுக்கு 50 கோடி டாலர்கள் வழங்கப்படவுள்ளதாக பிபிசி அறிந்துள்ளது.

இந்தப் பணம் அந்நியச் செலாவணிக் கையிருப்புக்காக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டுமே ஒழிய வேறு திட்டங்களில் செலவழிக்கப்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் சர்வதேச நாணய நிதியம் கடன் தொகையை வழங்கபோவதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

சிம்பாப்வேயின் பொருளாதார நெருக்கடிக்கு அந்நாட்டின் மத்திய வங்கியில் நடந்த மோசமான நிதி நிர்வாகமும் ஒரு காரணம் என்று எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மிதிவெடி அகற்றும் இயந்திரங்கள் விமான நிலையத்தில் கையேற்பு

demining_tools.jpgவடக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை விரைவு படுத்தும் வகையில் செலோவாக்கிய அரசாங்கத்திடமிருந்து இலங்கை அரசு 250 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து மிதிவெடியகற்றும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்துள்ளது.

இந்த இயந்திரங்களை மிதிவெடியகற்றும் பணிகளுக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வைபவம் நேற்றுக் காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது.

அமைச்சர்கள் ரிசாட் பதியுதீன், சரத்குமார குணரத்ன,  தேச நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவி ருத்தி அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி ஆகியோர் மேற்படி இயந்திரங்களை பாது காப்பு உயரதிகாரி மேஜர் ஜெனரல் தீபால் அல்விஸிடம் இவ்வியந்திரங்களைக் கையளித்தனர்.

இந்நிகழ்வின்போது கருத்துத் தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை விரைவாக மீள அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமெனத் தெரிவித்தார்.

கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தற்போது இடம் பெற்று வருவதாகத் தெரிவித்த அமைச்சர் அதனை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளுக்காகவே ஐந்து புதிய இயந்திரங்களை அரசாங்கம் செலோவாக்கியாவிலிருந்து கொள்வனவு செய்துள்ளதாகவும் மேலும் சில இயந்தி ரங்களைக் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டு ள்ளதாகவும் தெரிவித்தார்.

மலையகத்தில் கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0000rain.jpgமலைய கத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் அடைமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இதன் காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே தோட்டங்களில் தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நீரோந்தும் பகுதிகளில் அடைமழை பெய்து வருவதால் காசல்ரீ, மவுசாகலை,கெனியன் போன்ற நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்றது.

அதேவேளை, தொடர்ச்சியான அடைமழையினால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயப் பயிர்ச் செய்கையும் பாதிப்படைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

450 யாழ். மாணவர்கள் ஏ-9 வழியாக கொழும்பு வருகை

bus-2222.jpgகொழும்பில் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறும் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் யாழ்ப்பாணத்திலிருந்து 450 மாணவர்கள் பங்குபற்றவுள்ளளனர்.

இவர்கள் நேற்று ஏ-9 ஊடாக கொழும்பு புறப்பட்டனர்.

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து 10 பஸ்களில் நேற்றுக் காலை புறப்பட்ட இவர்கள் நேற்று இரவு கொழும்பை வந்தடைய ஏற்பாடாகியிருந்தது.

புனர்வாழ்வளிக்கும் திட்டத்திற்கு பிரிட்டன் 17 மில்லியன் உதவி

britain.jpgயுத்தத்தில் ஈடுபட்ட முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்தில் மீள இணைக்கும் செயற்திட்டத்துக்கு பிரிட்டன் 17 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டது. பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகனி கர் பீற்றர் ஹேய்ஸ் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் அப்திகெர் ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர். நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட முன்னிலையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மிலிந்த மொரகொட, பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலய த்தால் இலங்கைக்கு வழங்கப் பட்டு வரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இது போன்ற செயற் திட்டங்களுக்கு பிரிட்டன் ஒத்துழைப்பு வழங்கும் என பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் கூறினார். இதற்கான நிதி மோதல் தவிர்ப்பு மையத்திலிருந்து (cpp – Conflict prevenfion pool) வழங்கப்படுகிறதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் மாளிகாவத்தை பகுதியில் பல முஸ்லிம்களை இலங்கைப் பொலிஸார் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றதாகக் கூறி அப்பகுதி முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

பல முஸ்லிம்கள் இவ்வாறு பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அல்லது காணாமல் போயுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

ஆனால், அந்தப் பகுதியில் திட்டமிட்டு நடத்தப்படுகின்ற குற்றச்செயல்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளையே தாம் மேற்கொண்டதாக பொலிஸார் கூறுகிறார்கள்.

வெள்ளிக்கிழமை மதியம் பள்ளிவாசலில் தொழுகை முடிந்ததை அடுத்து மாளிகாவத்தை பகுதியில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்களும், பெண்களுமாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த அரசாங்கம் முகாபேயின் வழியையே பின்பற்றுகின்றது: லக்ஸ்மன் கிரியெல்ல

இந்த அரசாங்கம் சிம்பாப்வே ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் வழியையே பின்பற்றுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்துடனான உறவுகளை முறித்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நெருக்கடி நிலைமைகள் உருவாகக் கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்தால் மட்டுமே சர்வதேச நாணய நிதியத்தின் முழுக் கடன் தொகையையும் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, இவ்வாறான ஓர் பின்னணியில் அப்பாவி பொதுமக்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அடுத்தவரின் பணத்தை தனது வங்கிக் கணக்கில் இட்டு தான் செல்வந்தர் என வெளிக்காட்டிக் கொள்ளும் ஓர் நடவடிக்கையையே அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 

‘மன உளைச்சல் உலகில் மோசமான நோயாக உருவெடுக்கும்’ – உலக சுகாதார ஸ்தாபனம்

mental_pick.jpgஅடுத்த இருபது வருட காலத்தில் ஏனைய நோய்களை விட உலகில் அதிகம் பேரை பாதிக்கும் நோயாக மன உளைச்சல் நோய் உருவெடுக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் கணித்துள்ளது.

ஏனைய உடல் நலப் பிரச்சினைகளைவிட மன உளைச்சல் என்பது சமுதாயத்தின் மீது பெரிய சுமையாக இருக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது.

2030ஆம் ஆண்டு அளவில் உலக சமுதாயத்தில் மிகப் பெரும் சுமையை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாக மன உளைச்சல் உருவெடுக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளி விபரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

இருதய நோய் எய்ட்ஸ் போன்ற நோய்களைக் காட்டிலும் அதிக உயிரிழப்புகளையும் அதிக உடற் திறன் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் நோயாக மன உளைச்சல் உருவெடுக்கும் என்று தெரிகிறது.