24

24

தேசிய விவசாய வாரம் ஒக்டோபர் 11ஆம் திகதி ஆரம்பம்

images-padi.jpgதேசிய விவசாய வாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை பொலன்நறுவையில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, தேசிய ஏர் பூட்டும் விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வவுனியா, நெடுங்குளம் வயல்வெளியில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுகள் தொடர்பாகக் கலந்துரையாடும் கூட்டமொன்று விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அண்மையில் வவுனியாவிலுள்ள விவசாயக் கல்லூரியில் நடைபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘அரச துறை வெற்றிடங்கள் நிரப்புவதை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தவில்லை’

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென பெருமளவிலான வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் தேவைக்கேற்ப அரச துறையில் வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படும். அரசாங்கம் ஒருபோதும் அரசசேவைக்கு ஆட்சேர்பை நிறுத்தவில்லை என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கா கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நிகழ்த்திவரும் போராட்டம் தொடர்பாக கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கையின் பின்னர் ஜே.வி.பி. எம்.பி. அனுரகுமார திஸாநாயக்க விசேட அறிக்கையொன்றின் ஊடாக கேள்வியொன்றை முன்வைத்தார்.

இதற்கு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதிலளிக்கும் போது :-அரச துறையிலுள்ள வெற்றிடங்களை நிர ப்புவதை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தி வைக்கவில்லை. வெற்றிடங்கள் ஏராளம் இருந்தாலும் வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய திறமையுள்ளவர்களை தெரிவு செய்வது கஷ்டமாகவுள்ளது.வெற்றிடங்கள் உள்ள பதவிகளுக்கு பட்டதாரிகளுக்கு பட்டம் பெற்றமைக்கு மேலதிகமாக வேறு தகைமைகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு.

அரச துறைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு தமது கடமையை சரிவர செய்வதற்கும், தொழில்சார் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகிறது. 2004/2005 விண்ணப்பித்த அனைத்து பட்டதாரிகளுக்கும் அரசதுறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஊடாக வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் போது அந்தப் பகுதி களிலுள்ள பட்டதாரிகளுக்கு தகைமையடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். இந்தப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களின் ஊடாக பெருமளவிலான நேரடியான, மறைமுகமான வேலை வாய்ப்புகள் ஏற்படும். 2004 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 57,764 பட்டதாரிகளுக்கு அரச துறையில் வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப் பட்டுள்ளன என்றும் நிதி மற்றும் அரச வரு வாய்த்துறை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

யாழ்.வைத்தியசாலையின் குறைபாடுகளை நீக்க ஏற்பாடு

jaffna-teaching-hospital.jpgயாழ்ப் பாணம் போதனா வைத்தியசாலையில் பல குறைபாடுகள் அவதானிக்கப்பட்டிருப்பதால் அதனை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.  யாழ்.வைத்தியசாலையைப் பார்வையிட்டபோது பல குறைபாடுகள் இருப்பதை அவதானித்துள்ளேன். இவை உடனடியாக மேற்கொள்ள வேண்டியதால் சுகாதார அமைச்சருடன் தொடர்பு கொண்டு செயல்படுத்தவுள்ளேன் எனத் தெரிவித்தார்.

அவசரமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் சகல பிரிவுகளும் வர்ணம் தீட்டி அழகுபடுத்த வேண்டியுள்ளது எனவும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். தீவு பகுதியில் 6 இந்திய மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கின

இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது காணாமற்போனதாக கூறப்படும் இந்திய மீனவர்கள் அறுவரின் சடலங்கள் இலங்கையின் வடக்கு கடலில் கரையொதுங்கியிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார்.

நெடுந்தீவு மற்றும் ஊர்கா வற்றுறை பகுதிகளில் கடந்த 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் கரையொங்கிய ஆறு இந்திய மீனவர்களின் சடலங்களை கடற்படையினர் மீட்டிருப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். இந்திய மீனவர்கள் ஏழு பேரைக் கொண்ட படகு கடலில் கடந்த வாரம் கவிழ்ந்துள்ளது.

இதனையடுத்து இம் மீனவர்கள் பற்றிய தகவல்கள் தெரியவரின் அறிவிக்குமாறு இந்திய பொலிஸார் எமக்கு அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நாம் வடக்கு கடலில் கூடுதல் அவதானத்துடன் இருந்தோம். இதன்போதே கரையொதுங்கிய ஆறு சடலங்களும் மீட்கப்பட்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார்.

இந்திய மீனவர்கள் அறுவரின் சடலங்களும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்தியப் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட கடற்படை பேச்சாளர், சடலங்கள் குறித்த மேலதிக விடயங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு முழுமையான ஓய்வூதியம்

mahinda_raajapakse11.jpg யுத்த நடவடிக்கைகளின் போது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளினால் அல்லது சட்டத்தை செலுத்தும் போது அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு முழுமையான ஓய்வூதியம் வழங்க அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அரச பாதுகாப்பு. மக்கள் பாதுகாப்பு,  சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதன்படி படைத்தரப்பைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு 55 வயதில் கிடைக்கக்கூடிய சம்பளத்தையும் பெண் ஒருவருக்கு 45 வயதில் கிடைக்கக் கூடிய சம்பளத்தையும் மதிப்பீடு செய்து ஓய்வூதிய சம்பளத்தொகை நிர்ணயிக்கப்படவுள்ளது.

திருமணம் முடிக்காத நிலையில் கடமையிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் அதன் பின்னர் திருமணம் முடித்திருந்தால் அவரின் மனைவியையும் இதில் இணைத்துக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.

நெருக்கடி நிலை வழக்கு; முஷர்ரப் ஆஜராக வேண்டுமென்று ஆணை

பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்படுத்தி உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அதிரடியாக பதவி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரபை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது.

நெருக்கடி நிலை, நீதிபதிகள் பதவி நீக்கம் தொடர்பான தனது நடவடிக்கை குறித்து ஜுலை 29ல் நீதிமன்றத்தில் ஆஜராகி முஷாரப் தனது விளக்கத்தை அளிக்குமாறும் தலைமை நீதிபதி இப்திகர் செளத்ரி தலைமையிலான பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

முஷாரப் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்பதில்லை. தனது தரப்பில் வழக்கறிஞரைகூட ஆஜர்படுத்தி உரிய விளக்கத்தை அளிக்கலாம் என்றும் அந்த நோட்டீஸில் நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முஷாரப் அதிபராக இருந்த போது திடீரென நெருக்கடி நிலையை அமுல்படுத்தினார். இதற்கு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி இப்திகர் செளத்ரி உட்பட நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் அனைவரையும் அதிரடியாக பதவி நீக்கம் செய்தார்.

இதையடுத்து ஜர்தாரி அதிபரானதும் அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் வலியுறுத்தலால் இப்திகர் கெளத்ரி உட்பட பதவிநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில் முஷாரப் தனது ஆட்சியில் எடுத்த நடவடிக்கை குறித்து இப்திகர் செளத்ரி தலைமையிலான பெஞ்ச், மறுஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரிட்டனில் முஷாரப்: முஷாரப் தற்போது பிரிட்டனில் உள்ளார். அவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வதற்காகச் சென்றுள்ளார். இதனால் அவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சர் அம்மானுக்கு மனைவி வித்யா ஒரு மாத காலக்கெடு

Karuna_ColVidyawadi_Muraleetharanகருணா அம்மான் என்று அறியப்பட்ட இலங்கையின் தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு அவருடைய மனைவி ஒரு மாத காலக்கெடு வழங்கி உள்ளார். அமைச்சர் முரளீதரன் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக சிறிலங்கா கார்டியன் இணையத் தளத்திற்கு வழங்கிய பேட்டியில் (July 22)தெரிவித்துள்ள வித்தியாவதி முரளீதரன் அவர் ஒரு மாத காலத்திற்குள் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளத் தவறினால் அவர் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாகத் தெரிவித்து உள்ளார்.

கருணா அம்மான் 2007 நவம்பர் 2ல் தனது குடும்பத்தினரைக் காண லண்டன் வந்திரந்த வேளையில் ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு போலிக் கடவுச்சீட்டு மோசடிக்காக 9 மாதங்கள் சிறை வைக்கப்பட்டு 2008 யூலை 3 ல் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின் இலங்கை சென்ற கருணாவிற்கு முதலமைச்சர் பதவிக்குப் பதிலாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே தற்போதைய முதலமைச்சர் பிள்ளையானுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே கருணா வெளிநாடு செல்ல வேண்டிய நிர்ப்பங்தம் ஏற்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியாகி இருந்தது.

தாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து வந்த போது தனது கணவரிடம் தீர்க்கமான நோக்கம் இருந்ததாகக் குறிப்பிடும் வித்தியாவதி முரளீதரன் தற்போது முரளீதரன் தமிழ் மக்களுக்கும் தமிழ் தலைமைக்கும் துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டி உள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘ஓம்’ போடும் ஒரு தலையாட்டியாக சுயநலத்துடன் செயற்படுவதாகத் தெரிவித்து உள்ளார். பீடில் வாசித்துக் கொண்டிருக்கும் நீரோ மன்னனின் நிலையில் தனது கணவர் இருப்பதாகவும் வித்தியாவதி முரளீதரன் குறிப்பிட்டு உள்ளார்.

Vidyawadi_Muraleetharanவித்தியாவதி சாதாரண குடும்பத் தலைவி மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவின் தலைவிகளில் ஒருவர். கணவர் கருணாவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்தவர். தற்போது இவர் தனது மூன்று பிள்ளைகளுடன் ஸ்கொட்லன்ட் பகுதியில் வசிக்கின்றார். கடைசியாக லண்டன் கென்சிங்ரன் பகுதியில் குடும்பத்தினருடன் இருந்த வேளையிலேயே கருணா கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

கருணா லண்டனில் இருந்து கடந்த யூலையில் திருப்பி அனுப்பபட்ட பின்னர் கடந்த ஒரு வருடமாக தனது குடும்பத்தினரை நேரடியாகச் சந்திக்கவில்லை. அவருடைய பதவியும் அதையொட்டிய நடவடிக்கைகளும் குடும்ப உறவைப் பாதித்துள்ளதை வித்தியாவதி முரளீதரனின் நேர்காணலில் வெளிப்பட்டு உள்ளது. தொலைபேசியூடாக நான்கு மணிநேரம் இடம்பெற்ற நேர்காணலில் பல பகுதிகளை ஊடக நாகரீகம் கருதி வெளியிடவில்லை என ஸ்ரீலங்கா கார்டியன் இணையத் தளம் தெரிவித்து உள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து சென்ற குழுவினரைச் சந்திக்க வந்திருந்த முரளீதரன் மது போதையில் காணப்பட்டதாகவும் அவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிட்டதாகவும் அக்குழுவில் சென்ற சிலர் கருத்து வெளியிட்டு இருந்தனர். அமைச்சர் முரளீதரனுடைய கவனம் செக்ரிறரியில் இருந்த அளவிற்கு ஏனைய விடயங்களில் இருக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசன் சந்திரகாந்தன் 13வது திருத்தச்சட்டங்களில் உள்ள அதிகாரங்களைக் கோரி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார். கிழக்கு மாகாண சபையின் அங்கிகாரம் இன்றி அரசு தனியாருக்கு நிலங்களை வழங்குவதற்கு எதிராக கிழக்கு முதல்வர் நேற்று (யூலை 23) மாகாண சபையில் தீர்மானமும் இயற்றி உள்ளார். ஆனால் அமைச்சர் முரளீதரன் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் அவசியமில்லை என அரசுக்கு ஒத்திசைவாக செயற்பட்டு வருகின்றார்.

தொடரும் கருணா – பிள்ளையான் முரண்பாடு கிழக்கு மாகாண சபையை பலவீனப்படுத்துவதாக கிழக்கு முதல்வர் பிள்ளையானுக்கு நெருங்கிய ஒருவர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். கருணா அம்மானின் நிலைப்பாடு மாகாண சபைக்கு கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதில் தடைக்கல்லாக இருப்பதாகவும் அவர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

இதுவரை பிள்ளையானிடம் இருந்து எதிர்ப்பை எதிர்கொண்டு வந்த அமைச்சர் அம்மான் தற்போது மனைவி பிள்ளைகளிடம் இருந்து காலக்கெடுவை எதிர்நோக்கி உள்ளார். ஸ்கொட்லன்டில் வாழும் வித்தியாவதி முரளீதரனின் காலக்கெடுவை வெறும் அடுப்பு ஊதும் குடும்பப் பெண்ணின் மிரட்டலாக அமைச்சர் அம்மானால் தட்டிக் கழிக்க முடியுமா?