17

17

புளொட் அமைப்பினர் ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம்.

plote-colombo.jpgபுளொட் அமைப்பினர் ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இன்று 16ம்திகதி வியாழக்கிழமை வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் புலிகளால் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதி தொடங்கி புளொட் அமைப்பின் செயலதிபர் க.உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினர் பிரகடனப்படுத்தி வருடாவருடம் அனுஷ்டித்து வருகின்றனர்.

இந்த வகையில் வீரமக்கள் தினம் இடம்பெறும் தினங்களில் அஞ்சலி நிகழ்வுகள் அஞ்சலிக் கூட்டங்களைத் தவிர புளொட் அமைப்பினரால் சிரமதானம், இரத்ததானம், அன்னதானம், தண்ணீர் பந்தல், நலன்புரி நடவடிக்கை என்பனவும் கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக சுவிஸ்லாந்தில் வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த 20வருட காலமாக மிகவும் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. சுவிஸ்லாந்தில் வீரமக்கள் தினத்தினை அனுஸ்டிப்பது மாத்திரமன்றி சுவிஸ்வாழ் தமிழ் மாணவ மாணவியருக்கான போட்டிப் பரீட்சைகள், விளையாட்டுப் போட்டிகள் என்பன நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கி மாணவ மாணவியரை கௌரவிக்கும், ஊக்குவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றுவருகின்றது. சுவிஸ்வாழ் புலம்பெயர் மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகின்றது.

புளொட் அமைப்பினரால் ஜூலை 13முதல் ஜூலை 16வரை அனுஸ்டிக்கப்படும் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், திருமலை, மட்டக்களப்பு, புத்தளம், கொழும்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள புளொட் காரியாலயங்களிலும், கிளைக் காரியாலயங்களிலும் வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த 13ம் திகதிமுதல் இன்று 16ம் திகதிவரை நடைபெற்றுள்ளது. இந்த வகையில் கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள புளொட் தலைமைக் காரியாலயத்திலும் கடந்த 13ம் திகதிமுதல் 16ம் திகதியான இன்றுவரையில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்தது.

வீரமக்கள் தினத்தின் இறுதி நாளான இன்றும் மௌனஅஞ்சலி மற்றும் மலராஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு கொழும்பு பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோவிலில் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களுக்கு விசேட பூசை வழிபாடு இன்றுகாலை 8.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கொழும்பு புளொட் தலைமைக் காரியாலயத்தில் மங்கள விளக்கேற்றல், மலராஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றிருந்தனர். வீரமக்கள் தினத்தை முன்னிட்டு கொழும்பின் பல பாகங்களிலும் வீரமக்கள் தின சுவரொட்டிகளைக் காணக்கூடியதாக இருந்தது.

கொட்டதெனிய கொள்ளைக்கு சிறையினுள் இருந்து திட்டம்? – 3 பொலிஸ் குழுக்கள் தீவிரம்

கொட்டதெனிய கொள்ளைச் சம்ப வம் தொடர்பாக விசா ரணை நடத்துவதற்கென மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

சிறைச்சாலையிருக்கும் முக்கிய புள்ளி ஒருவருக்கு இப்பாரிய கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பிருப்ப தாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவரே இக் கொள்ளையை திட்டமிடுவதில் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டிருக்க வேண்டு மெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் மேற்படி தகவல்களை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டிருக்கும் நால்வரையும் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

அதேவேளை, பணத்தை வான் ஒன்றில் கொழும்புக்கு எடுத்து வந்த ஐந்து பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பாகவும் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதுடன் அவர்களது கையடக்கத் தொலைபேசியிலுள்ள இலக்கங்கள் குறித்தும் பரிசீலித்து வருகின்றனர்.

தப்பியோட முயற்சித்தவேளை கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடமிருந்தும் மயக்க மருந்து, மிளகாய்த்தூள் பொட்டலம் மற்றும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

கொட்டதெனியவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இப்பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குருணாகலில் இருந்து கொழும்புக்கு இரு நிறுவனங்களின் 10 கோடி ரூபா பணம் வாகனமொன்றில் எடுத்து வரப்பட்டபோதே திட்டமிட்டகொள்ளைக் கும்பல் இதனை ஆயுதமுனையில் செய்துள்ளது. அப்போது, அவ்வழியாக பொலிஸ் வாகனமொன்று வந்துள்ளது. அதனைக் கண்டதும் இரு கொள்ளையர்கள் ஒன்றரைக்கோடி ரூபா பணத்தைக் கொண்ட பொதியை எடுத்துக்கொண்டு வாகனமொன்றில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேகம் கொண்ட பொலிஸார் சம்பவ இடத்தை நெருங்கியபோது கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த ஏனைய நால்வரும் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் தப்பியோட முயன்றுள்ளனர்.

பொலிஸார் இந்நால்வரையும் சுமார் 8 1/2 கோடி ரூபா பணத்துடன் மடக்கிப் பிடித்துள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு உரிய நிறுவனத்துக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் புலனாய்வு அதிகாரிகள் கொட்டதெனிய பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.

யாழ். மாநகரசபைத் தேர்தலில் இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க ஆறு மாவட்டங்களில் 17 வாக்களிப்பு நிலையங்கள்

election_cast_ballots.jpgயாழ். மாநகரசபைத் தேர்தலில் இடம்பெயர்ந்து வாழ்வோர் வாக்களிக்க ஆறு மாவட்டங்களில் பதினேழு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுமென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெளி மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் யாழ்.மாநகரசபை வாக்காளர்களில் 6242 பேர் தமக்கு வாக்களிக்க வசதி செய்துதருமாறு தேர்தல் திணைக்களத்திடம் கோரியதையடுத்து இவர்களுக்கு கொத்தணி வாக்குச்சாவடிகளை அமைக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் வாழும் 324 வாக்காளர்கள் வாக்களிக்க மட்டக்குளி சென் ஜேம்ஸ் மகாவித்தியாலயம், பவிலியன் ஒவ் பிளசரணங்கர விளையாட்டு மைதானத்திலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். கம்பஹா மாவட்டத்தில் வாழும் 849 வாக்காளர்கள் வாக்களிக்க சென்பீற்றர்ஸ் முஸ்லிம் மகாவித்தியாலயம், தளுவ கொட்டுவ சென் அன்ரனிஸ் வித்தியாலயம் ஆகியவற்றில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

களுத்துறை மாவட்டத்தில் வாழும் வாக்காளர்கள் 320 பேருக்கு கெனமுல்ல ஜீவன் முஸ்லிம் மத்திய கல்லூரியில் வாக்களிப்பு நிலையம் நிறுவப்படும். புத்தளம் மாவட்டத்தில் வாழும் வாக்காளர்கள் 4550 பேருக்கு இம் மாவட்டத்தில் ஏழு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இவர்களுக்கு புளிச்சங்குளம் சமத்பாறுக் மத்திய மகா வித்தியாலயம், ஸாகிரா பாத்திமா தேசியபாடசாலை, தில்லையடி மகாவித்தியாலயம் பல்விய சிங்கள மகா வித்தியாலயம், நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம், பலப்பிட்டிய அலக்ஸா தேசியப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

அநுராதபுரம் மாவட்டத்தில் வாழும் நூற்றி இருபது வாக்காளர்களுக்கு இங்கிரிகொள்ளாவ முஸ்லிம் மகா வித்தியாலயம், கட்டுகொல பொதுநோக்கு மண்டபம், அநுராதபுரம் விழிப்புலனற்றோர் செவிப்புலனற்றோர் சிறார் பாடசாலை, நச்சன்டுவ முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

இதேவேளை, குடாநாட்டில் தென்மராட்சி கைதடி, கொடிகாமம் நலன்புரி நிலையங்களில் வாழும் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக அரியாலை பார்வதி வித்தியாலயத்தில் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படும். வெளி மாவட்டங்களில் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குப் பெட்டிகள் அந்தந்த மாவட்ட செயலகங்களில் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு அறிவிக்கப்படும்.

யாழ். மாவட்டத்தில் யாழ். மாநர சபை வாக்காளர் வாக்களிக்க எழுபது வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுமென யாழ். மாவட்ட தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் தெரிவித்துள்ளார்.