08

08

தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு தமிழ் மக்கள் பற்றி சிந்திக்க வேண்டியது இத்தருணத்திலாவது அவசியம் – கடற்றொழில் அமைச்சர்

felixperera.jpgதமிழ் மக்களைப் பிரதிநிதி த்துவப்படுத்தும் 22 தமிழரசுக் கட்சி எம்.பிக்களும் தமிழ் மக்களின் சுகதுக்கங்கள் பற்றி சபையில் பேசாமல் யுத்த வெற்றி பற்றி பேசியமையே தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணம். இன்று பத்மினி சிதம்பரநாதன் எம்.பி- சபையில் வேதனையுடன் கூறும் விடயங்கள் எமக்கும் கவலையையே தருகிறது. எனினும் இதற்குக் காரணமானவர்கள் யார்?

இன்றைய நாளிலும் அகதிமுகாம்களில் மக்கள் அவதிப்படும்போது வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் செளகரியமாக வாழ்கின்றனர். லண்டனிலும் மலேசியாவிலும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். நான் முழுமையாக நம்புகின்றேன் தமிழ், மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உச்ச அளவிலான தீர்வைப் பெற்றுக்கொடுப்பார். இத்தருணத்திலாவது தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு தமிழ் மக்கள் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். இனவாதம் இனியும் தலைதூக்க இடமளிக்க முடியாது.

எமது நாட்டில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் அகதி முகாம்கள் உள்ளன. எனினும் எமது அகதி முகாம்கள் போன்று சிறப்பாக எதுவும் பராமரிக்கப்படவில்லை. அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கடற்றொழில் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா: மேற்கண்டவாறு கூறினார்.

சீனாவின் சின் சியாங்க் பிராந்தியத்தில் வன்முறை தொடருகிறது

சீனாவின் சின் சியாங்க் பிராந்தியத்தின் தலைநகர் உரும்கியில் தொடரும் வன்முறை காரணமாக சீன அதிகாரிகள் அங்கே இரண்டாவது நாளாக இரவு நேர ஊரடங்கு உத்தரவை மீண்டும் கொண்டுவந்துள்ளனர். உள்ளூர் உய்குரிகளுக்கும் ஹான் சீனர்களுக்கும் இடையில் இந்த மோதல்கள் நடந்துவருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை துவங்கிய இந்த வன்முறைகளில் இதுவரை 150க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.அந்த நகரின் இணைய தொடர்புகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உரும்கியின் தெருக்கள் தற்போது அமைதியாக காணப்படுவதாக, அங்கே இருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

முன்னதாக, நீண்ட கத்திகள், கம்புகள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தாங்கிய ஹன் சீன இனமக்கள் தெருக்கள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.  முஸ்லிம் உய்குரி இனமக்களின் தாக்குதல்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் முகமாகவே தாங்கள் இப்படி ஊர்வலமாக சென்றதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 27ஆம், 28ஆம் திகதிகளில்!

election.gifஊவா மாகாண சபை,  யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தபால்மூல வாக்குப் பதிவு எதிர்வரும் 27ஆம்,  28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. இத்தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிப்போருக்கான வாக்காளர் அட்டைகள் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண சபை,  யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  ஊவா மாகாணத்துக்கு மொத்தம் 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களில் 21 பேர் பதுளை மாவட்டத்திலிருந்தும் 11 பேர் மொனராகல மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படுவர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க தினமும் ரூ. 25 கோடி செலவு

வடக்கில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க தின மும் 25 கோடி ரூபா செலவிடப்படுவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இடம்பெயர்ந்த மக்களுக்கு தினமும் உணவு, உடை, மருத்துவ வசதிகள், கல்வி மற்றும் நலன்புரி சேவைகள் அளிப்பதற்காக அரசாங்கம் தினமும் 25 கோடி ரூபா செலவிடுகிறது.

அந்த மக்களுக்கு சகல வசதிகளையும் வழங்க அரசாங்கம் சகல நடவடிக் கைகளையும் எடுத்து வருகிறது. வடக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் மறைத்து வைக்க ப்பட்டுள்ள ஆயுதங்களை கண்டுபிடிப்பதிலும் நிலக் கண்ணி அகற்றுவதிலும் படையினர் பெரும் பங்காற்றி வருகின்றனர். அவர்கள் உயிரை அர்ப்பணித்து இந்தப் பணிகளை செய்து வருகின்றனர். நிலக்கண்ணி அகற்றும் பணிகளுக்கு வெளிநாடுகளும் உதவி வருகின்றன.

வளங்கள் கூடிய பாடசாலைகள் வளம் குறைந்த பாடசாலைக்கு உதவ வேண்டும் – பிரதியமைச்சர் பாயிஸ்

schoolgirls-sri-lanka.jpgஎனது பாடசாலை என்ற உணர்வை மறந்து எமது பாடசாலை என்று நாம் கருதி செயல்பட்டால் நிச்சயம் எமது வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் கல்வியில் வளர்ச்சியும் அபிவிருத்தியும் அடையும். இவ்வாறு கால் நடை அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

புத்தளம் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் அண்மையில் பிரதியமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு கூறினார்.

பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ் அங்கு தொடர்ந்து பேசுகையில்; “இன்று அதிபர்களும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களும் தமது பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி போன்ற விடயங்களையே சிந்திக்கின்றனர். இது தவறு ஆகும். கல்வி வளர்ச்சி பற்றி சிந்திப்பதில்லை. ஆகவே வளங்கள் அதிகமாகக் காணப்படும் பாடசாலைகள் வளங்கள் குறைந்த பாடசாலைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும்.

வளங்கள் என்று கூறும் போது அது ஆசிரியர்களாக இருக்கலாம். முக்கியமான பாடத்திற்கு எமது பாடசாலையில் ஒருவர் இருந்தால் அவரை வேறு பாடசாலையில் அப்பாடத்தைக் கற்பிக்க கிழமையில் ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் அனுப்பினால் அப்பாடசாலையின் மாணவர்கள் முன்னேறுவார்கள். இலக்கை அடைய முடியும். எதிர்காலத்தில் எமது வலயம் கல்வியில் நல்லதொரு முன்னேற்றப் பாதையை சென்றடையும். ஆகவே அதிபர்களும் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ‘ என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சக்திமிக்க வெடிபொருள் மீட்பு

மட்டக்களப்பின் மாமாங்கம் மற்றும் சித்தாண்டி பிரதேசங்களிலிருந்து அதிசக்தி வாய்ந்த அமுக்க வெடி குண்டுகள் கிளேமோர் குண்டுகள் மற்றும் ஆயுதங்களை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்ப டையில் 10 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த அமுக்க வெடி ஒன்றை மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். மாமாங்கம் பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றை சோதனையிட்டபோதே இந்த அமுக்க வெடி குண்டை மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, வாழைச்சேனை, சித்தாண்டி பிரதேசத் தில் சுமார் 23 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள் உட்பட ஆயுதங்களை மீட்டெடுத் துள்ளனர். 20 கிலோ எடையுள்ள கிளேமோர், 2 கிலோ எடையுள்ள கிளேமோர், ஒரு கிலோ எடையுள்ள கிளேமோர், வயர் ரோல் மற்றும் ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளனர்.

மேலும் கிண்ணியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மூதூர் பிரதேசத்தில் பாரிய தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு கிலோ எடையுள்ள வெடிமருந்து, ரி-56 ரக துப்பாக்கிகள் -02, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் – 29, வெடிக்க வைக்கும் கருவி -01, ரி-56 ரக துப்பாக்கி பாகங்களையும் மீட்டெடுத்துள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.