07

07

ஜாக்சன் இன்றுடன் இந்த உலகுக்கு பிரியா விடை கொடுக்கிறார்

maical-jak.jpgபாப் உலகின் முடி சூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் இன்றுடன் இந்த உலகுக்கு பிரியா விடை கொடுக்கிறார். அவரது உடல் இன்று லாஸ் ஏஞ்சலெஸில் அடக்கம் செய்யப்படுகிறது.

லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. இதையொட்டி ரசிகர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக டிக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுடன் வருவோர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். டிக்கெட் இல்லாமல் வர முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கான டிக்கெட் கோரி ஆன்லைன் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் விண்ணப்பித்தனர். ஆனால் 17 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்பபட்டுள்ளது. டிக்கெட் கிடைக்காதவர்கள் தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பில் இறுதிச் சடங்குகளைக் காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரசிகர்கள் பெருமளவில் கூடி வருவதால் பாதுகாப்புக்காக ஏகப்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் ஏற்பட்டால் தடுக்கவும் போலீஸார் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.  ஜூன் 25ம் தேதி ஜாக்சன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 50. அவரது மரணத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவுகின்றன.

அவரது பிரதேப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்னும் கூட வெளியாகவில்லை. இரண்டு முறை அவருக்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதையும் தனது இசையாலும்இ நடனத்தாலும் கட்டிப் போட்ட ஜாக்சன் இன்று நிரந்தரமாக இந்த உலகத்தை விட்டு பிரிகிறார். இதனால் அவரது கோடானு கோடி ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

அமைச்சர்கள், முக்கியஸ்தர்களின் பெயரைப் பயன்படுத்தி நிதி சேகரிப்பு சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது

அமைச்சர்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களின் பெயரை பயன்படுத்தி சட்ட விரோதமாக நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குழு ஒன்றை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்தக் குழுவில் ஐவர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்று தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவரில் தொழில் அமைச்சில் கடமை புரியும் இருவர், தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்கள் இருவர் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் ஊழியர் ஒருவரும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் ஆகியவர்களின் பெயர்களை பயன்படுத்தியே இவர்கள் நிதிச் சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அமைச்சர்களிடம் பல்வேறு வேலைகளை செய்து தருவதாக பொய் வாக்குறுதிகளை கூறியே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் பெயரை பயன்படுத்தி பல்வேறு மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சில அமைச்சுக்கள் பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்ததோடு இது தொடர்பான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் பொலிஸ் தலைமையகத்திற்கு அறியத் தருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இது தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளும் அனுமதியை கொழும்பு குற்றப் புலனாய்வு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றும் முன்தினம் ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி

cricket_sl_won_itest_pakistan.jpgபாகிஸ் தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.  நான்கு நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் 168 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸக்காகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இலங்கை வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து வெற்றியைப் பறிகொடுத்தது.

கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இந்த முதலாவது டெஸ்ட் போட்டி காலி, சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமானது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்ட இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய தரங்க பரணவிதான 72 ஓட்டங்களைப் பெற்றார். தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பரணவிதான இப்போட்டியில் தனது முதலாவது அரைச் சதத்தைப் பெற்றதோடு அதிகூடிய ஓட்டத்தையும் பதிவு செய்துகொண்டார்.

தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 342 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணிக்காக யூசுப் யொஹானா 112 ஓட்டங்களையும் மிஸ்பாஉல் ஹக் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவன் குலசேகர 71 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சுக்காக ஆடிய இலங்கை அணி 217 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக முதலாவது இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றிருந்த பரணவிதானவே இரண்டாவது இன்னிங்ஸிலும் கூடிய எண்ணிக்கையாக 49 ஓட்டங்களைப் பெற்றார்.

50 ஓட்டங்கள் மேலதிகமாகப் பெற்ற நிலையில் 168 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி இன்றைய நான்காவது நாளின் பகற்போசன இடைவேளைக்கு முன்னதாகவே சகல விக்கட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இலங்கை அணி சார்பாக அபாரமாகப் பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.

இலங்கை அணி அதன் புதிய தலைவரான குமார் சங்கக்கார தலைமையில் தனது முதலாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக்கொண்டதோடு இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணியின் ரங்கன ஹேரத் தெரிவானார்.
இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

வவுனியா முகாம்களிலுள்ள உண்மை நிலையினை மூடிமறைக்கவே எமக்கு அனுமதி மறுக்கப்படுகிறது -ரோசி

rosy.jpg“பயங்கர வாதிகளை முறியடித்து யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டுள்ள இன்றைய சமகாலத்தில் வடக்கில் பாதிக்கப்பட்டு வவுனியா முகாம்களில் தங்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்களைச் சென்று பார்வையிட எமக்கு அனுமதி தர மறுப்பதானது அரசாங்கத்தின் சூழ்ச்சியையே எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் அங்குள்ள யதார்த்தபூர்வ உண்மை நிலவரத்தை அரசு மூடிமறைப்பதாகவே எமக்கு எண்ணத் தோன்றுகிறது” என்று மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவி ரோசி சேனநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு இவர் தொடர்ந்தும் கூறியதாவது:

“இலங்கையில் மேல் மாகாணத்திலேயே அதிகமாக பல்லின மக்கள் வாழ்கின்றனர். அதுபோலவே மேல் மாகாணத்திலேயே அரச தரப்பில் பல்வேறு வகையிலான துஷ்பிரயோக செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அரச வளங்கள், சொத்துக்கள் என இன்னோரன்ன அம்சங்களில் அரசாங்கம் துஷ்பிரயோகம் செய்து வருகின்றது. டாக்டர் ராஜித சேனாரட்ன துஷ்பிரயோக நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஊடகங்களுக்கு அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். எனினும், அரச தரப்பே அதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. வாசுதேவ நாணயக்காரவும் இது விடயமாக அண்மையில் ஜனாதிபதியிடம் இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.

அரச வளங்களையும், உடைமைகளையும் துஷ்பிரயோகம் செய்பவர்களைக் கைது செய்வதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. இன்றைய ஆட்சியாளர்கள் தமது குடும்ப நலன்களுக்காகவும் சுயதேவைகளுக்காகவுமே அரசாட்சி புரிகின்றனர். மக்கள் குறித்து எவ்வித அக்கறையும் இவர்களுக்குக் கிடையாது. மக்களிடமிருந்து வரிகளை பெற்று இன்றைய அரசாங்கத்தின் அமைச்சர் களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பொக்கட்டுக்களை நிரப்புகின்றனர்.

அதேநேரம் எண்ணெய், காஸ் உட்பட அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளையும் காலவரையறையின்றி தமக்கேற்றாற்போல் அடிக்கடி அதிகரிக்கின்றனர். இதன் மூலம் மக்களது பணமே சூறையாடப்படுகின்றது.

மூன்று தசாப்த காலத்திற்கு பின்னர் நாட்டை அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்ல நல்ல சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த அரிய சந்தர்ப்பத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுவே எமது வேண்டுகோள். காலத்தை இழுத்தடிக்காது உடனடியாகவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசு பெற்றுக் கொடுப்பதோடு நாட்டில் இடம்பெறும் லஞ்ச ஊழல் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். அவற்றில் ஈடுபடுவோரை அரசு சட்டத்தின் முன் கொண்டு வந்து உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஊடக செயற்பாட்டுக்கு இடையூறினை ஏற்படுத்தாது சுதந்திரமான முறையில் ஊடகவியலாளர்கள் தமது ஊடகப் பணியினை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். நாட்டில் இடம்பெறும் மிக மோசமான செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியும் அவரது சகபாடிகளும் தமது இதயங்களை ஒருகணம் தொட்டுப் பார்த்துச் சிந்திக்க வேண்டும். மக்களுக்கான வாழும் உரிமையை அரசு வழங்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன்

Jaffna_Map1. 

தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு பெரும்பாலும் அழிக்கப்பட்ட போதும் சர்வதேச வலைப்பின்னல் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை. 2007 ஓகஸ்ட்டில் வெளியான Jane’s Intelligence Review, என்ற புலனாய்வுச் சஞ்சிகை விடுதலைப் புலிகளின் ஆண்டு வருமானத்தை 200 – 300 மில்லியன் டொலர்கள் என மதிப்பிட்டு உள்ளது. அதன்படி  Revolutionary Armed Forces of Colombia (FARC),  என்ற கொலம்பியாவைச் சேர்ந்த ஆயுதக் குழுவிற்கு அடுத்தபடியாக எல்ரிரிஈ செல்வந்த இயக்கம் என்ற நிலையில் இருந்தது. சர்வதேச கப்பல் வர்த்தகத்தில் இருந்து போதைப் பொருள் கடத்தல் வரை எல்ரிரிஈ உடைய வியாபாரம் பல்வகைப்பட்டது என்று Jane’s Intelligence Review தெரிவிக்கின்றது.

குறிப்பாக ரிஆர்ஓ மற்றும் எல்ரிரிஈ இன் முன்னிலை அமைப்புகளினூடாக நிதி திரட்டல்கள் இடம்பெற்றுள்ளது. இக்குற்றச்சாட்டை எல்ரிரிஈ மறுத்தே வந்தள்ளது. சர்வதேச நாடுகளில் உள்ளவர்கள் தங்களுக்கு மனமுவந்து நிதியை வழங்குவதாகத் தெரிவித்தனர்.

ஒவ்வொரு அழிவையும் நிதிதிரட்டுவதற்கான உபாயமாகவே எல்ரிரிஈ பயன்படுத்தி வந்தது. சுனாமி – சுனாமி நிதி, வெள்ளம் – கண்ணீர் வெள்ளம், வன்னி அவலம் – வணங்கா மண் என்று நிதி திரட்டலில் எல்ரிரிஈ க்கு நிகராக யாரும் இருக்கவில்லை. தங்களுடைய ஒட்டு மொத்த தலைமையே அழிந்த போதும் அதை வைத்தும் இன்னமும் நிதி சேகரிக்கப்படுகிறது. வன்னி முகாம்களில் உள்ளவர்களை வெளியே எடுக்க நிதி சேர்க்கின்றனராம்.

மாவீரர் நிகழ்வில் கார்த்திகைப் பூ விற்றல் முதல் ஊர்வலங்களில் புலிக்கொடி, தமிழீழ பச், ரீசேட் என ஒரு வர்த்தக நிறுவனமாகவே அவர்கள் செயற்பட்டனர். இவ்விடயங்களில் எல்ரிரிஈ இன் வர்த்தக தொழில் தேர்ச்சி குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன் லண்டனுக்கு வந்திருந்த இந்தியப் பொருளியலாளரும் இராஜதந்திரியுமான கிருஸ்ணனுடன் ஹரோ நகரசபை அறையொன்றில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. அதில் எல்ரிரிஈ இன் பொருளாதாரம் பற்றிக் குறிப்பட்ட கிருஸ்ணன், வரியை எப்படி அறவிடுவது என்று எல்ரிரிஈ இடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நகைச்சுவையாகத் தெரிவித்தார். அப்போது நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு ‘இந்தியாவில் வாழ்பவர்களையே வரி செலுத்த வைக்க முடியவில்லை. ஆனால் ஈழத் தமிழன் ஒருவன் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவனுடைய வருமானத்தையும் அவன் செலுத்த வேண்டிய வரியையும் கணித்து வைத்து வரியை அறவிடும் அளவுக்கு நிர்வாகத் திறனுடைய அமைப்பு எல்ரிரிஈ’ என்று கிருஸ்ணன் விபரித்து இருந்தார்.

எல்ரிரிஈ வரி அறவிடுவதிலும் வியாபாரத்தைப் பெருக்கி வருமானத்தை பெருக்குவதிலும் காட்டிய ஆர்வத்தை அரசியலில் காட்டவில்லை. அரசியல் வங்குரோத்து ஒட்டுமொத்த அமைப்பையும் ஒரே நாளில் அழித்தொழிக்க வழிகோலியது. அன்று அழிந்தொழிந்தது புலிகளின் தலைமை மட்டுமல்ல புலிகளின் ஆவணங்களும் தான்.

200 – 300 மில்லியன் வருமானத்தை ஈட்டும் அமைப்பினுடைய வர்த்தகப் பெறுமதி – அவ்வமைப்பின் அசையும் அசையாச் சொத்துக்களின் பெறுமதி ஒரு பில்லியனுக்கும் அதிகமானது என மதிப்பிடப்படுகிறது. எல்ரிரிஈ தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருந்ததால் இந்தச் சொத்துக்கள் அனைத்தும் தனிநபர்களின் பெயர்களிலேயே பதிவு செய்யப்பட்டு இருந்தன. சர்வதேச நிதி விடயங்கள் நீண்ட காலமாக கே பி இன் கட்டுப்பாட்டில் இருந்த போதும் சமாதான காலத்தில் பொட்டம்மானின் உளவுத்துறையால் கே பி ஓரம்கட்டப்பட்டு கஸ்ரோவிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கே பி அனைத்து கட்டுப்பாடுகளையும் இழந்து தற்காலிகமாக ஓய்வுபெற்றார்.
 
எல்ரிரிஈ இன் சர்வதேச நியமனங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். வன்னியில் இருந்து ஐரோப்பாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இறக்குமதி செய்யப்பட்ட எல்ரிரிஈ உறுப்பினர்கள் – கஸ்ரோவுக்கு நெருக்கமானவர்கள் – பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நிதி மற்றும் அனைத்து விடயங்களையும் பெறுப்பேற்றனர். ஒரு பில்லியன் டொலர் வரையான அசையும் அசையாச் சொத்துக்களும் அதன் ஆண்டு வருமானமான 200 – 300 மில்லியன் டொலர்களும் கஸ்ரோவின் பொறுப்பிற்கு வந்தது.

இப்புதிய நபர்களுடன் நெருங்கிப் பணியாற்ற வேண்டிய ஒருவர் அன்று கூறுகையில், ‘வன்னியில் துவக்கைப் போட்டுவிட்டு அப்படியே இங்கே வந்திருக்கிறார்கள்’ என்று அவர்களின் இயல்பை விபரித்தார்.

புதிதாக பொறுப்பெடுத்துக் கொண்ட கஸ்ரோ செப்ரம்பர் 11க்குப் பின்னான சூழலைப் புரிந்துகொள்ளாமல் புதியவர்களை வைத்து மேற்கொண்ட ஆயுதக் கொள்வனவுகள் தோற்றப் போய் மிகப்பெரும் நிதி இழப்புகளையும் ஏற்படுத்தியது.

2006ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அரசின் புரொஜக்ற் பீக்கன் இராணுவ நடவடிக்கையும் நெருக்குவாரத்தை வழங்கியது. 2009 முற்பகுதியில் கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் கைகளில் வீழ்ச்சியடைய மறைந்த எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரன் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக மீண்டும் கே பி யை நியமித்தார். ஆயினும் நிதி விடயங்கள் அவற்றின் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் கஸ்ரோவிற்கு நெருக்கமானவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

இந்நிலையில் மே 18ல் எல்ரிரிஈ இன் ஒட்டுமொத்த தலைமையும் அழிக்கப்பட்டு விட்டது. ஒரு பில்லியன் டொலர் வரையான அசையும் அசையாச் சொத்துக்களும் அதன் ஆண்டு வருமானமான 200 – 300 மில்லியன் டொலர்களும் கஸ்ரோவினால் நியமிக்கப்பட்டவர்களின் கைகளில் உள்ளது.

2.

தற்போது எல்ரிரிஈ இன் சர்வதேச வலைப்பின்னல் பாரிய அதிகார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை அனைவருக்கும் தெரிந்த இரகசியம். இந்த அதிகாரப் போட்டிக்குக் காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதல்ல. புலிகளின் தலைவர் உயிருடன் நலமாக இருக்கின்றார் என்று சொல்லும் எல்ரிரிஈ பொறுப்பாளர்களுக்கும் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது மிக நன்றாகவே தெரியும். ஆனால் ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்களையும் அதன் 200 – 300 மில்லியன் டொலர் வருமானத்தையும் தற்போது வைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் பிரபாகரன் உயிரிழந்ததை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் புதிய தலைமையிடம் – கே பி இடம் எல்ரிரிஈ இன் சொத்துக்களையும் வருமானத்தையும் கையளிக்க வேண்டும். ஆனால் இவர்கள் அதற்குத் தயாரில்லை. அதனாலேயே இவர்கள் தமிழக அரசியல் வாதிகளைத் தூண்டிவிட்டு கே பி க்கு எதிராக அறிக்கைவிடத் தயங்கவில்லை. அதனால் சொத்துக்களையும் வருமானத்தையும் தங்கள் கைகளில் வைத்துக்கொள்ள கடைசிவரை முரண்டு பிடிக்கின்றார்கள்.

மறைந்த புலிகளின் தலைவர் பிரபாகரனால் அவர் உயிருடன் இருக்கும்போதே சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்ட கே பி மட்டுமே பிரபாகரன் உயிரிழந்ததை அறிவித்து உள்ளார். முன்னர் கே பி யின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை வெளியிட்ட எல்ரிரிஈ சர்வதேச புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் பிரபாகரன் உயிரிழந்ததை ஏற்றுகொண்டு அஞ்சலி செய்துள்ளார். அதே போன்று வழுதி என்கின்ற புலிகளின் மற்றுமொரு முக்கிய உறுப்பினர் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தி உள்ளதுடன் கே பி இன் கரங்களைப் பலப்படுத்தும்படி கேட்டுள்ளார். ஆனால் இவர்கள் யாரும் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர்கள் அல்லர்.

ஆனால் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட சர்வதேச விடயங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட நெடியவன் என்கின்ற பேரின்பநாயகம் சிவபரன் – நோர்வே, ரிஆர்ஓ தலைவர் ரெஜி – லண்டன், ஒவ்வவொரு நாடுகளுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்கள் எவருமே இதுவரை உயிரிழந்த தலைவருக்கோ முக்கிய போராளிகளுக்கோ அஞ்சலி செலுத்துவதற்கே முன்வரவில்லை. அதற்கு முக்கிய காரணம் கே பி க்கு எதிரான அணி ஒன்றை அவர்கள் அமைத்துள்ளனர். பெரும்பாலும் கஸ்ரோவினால் நியமிக்கப்பட்ட இவர்கள் வல்வெட்டித்துறையை – வடமராட்சியை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். பெரும்பாலும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

வே பிரபாகரன் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டதால் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலங்களில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டனர். நம்பகமானவர்களாகக் கருதப்பட்டனர். ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பின் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலும் அந்த குலக் குழுமமாகவே புலிகள் இயக்கம் இயங்க முற்பட்டுள்ளது.

கே பி யும் கே பியை எதிர்க்கின்ற அணியினரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களானாலும் கே பி வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரல்ல. அவர் காங்கேசன்துறையைச் சேர்ந்தவர். அதனால் வல்வெட்டித்துறை குலக் குழுமத்தினால் அவர் நிராகரிக்கபட்டு உள்ளார். தற்போது கே பி உடன் சமரசத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது. ஆனால் புலிகள் இயக்கத்தின் அசையும் அசையாச் சொத்துக்களையும் அதன் வருமானத்தையும் வல்வெட்டித்துறைக் குழுமமே நிர்வகிக்கின்றது. இதில் பல நபர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அவ்வளவு இலகுவில் அவற்றை விட்டுக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளர்கள்
முகிலன் – நோர்வே
அப்துல்லா – சுவிஸ்
பிரியன் – டென்மார்க்
வாகீசன் – ஜேர்மன் (மற்றும் ஐவர் அந்தந்த மாநிலங்களுக்கு பொறுப்பாக உள்ளனர்.)
மேத்தா – பிரான்ஸ்
தனம் – பிரித்தானியா
தமிழ் – கனடா
நெடியவன் – சர்வதேசப் பொறுப்பாளர்.
ரெஜி – சர்வதேச நிதிப் பொறுப்பாளர். (ரிஆர்ஓ ஊடாகவே புலிகள் அமைப்பின் நிதி பரிமாற்றங்கள் இடம்பெற்றது.)

இவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லது முற்றாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது எழுந்தமானமான ஒரு நிகழ்வு அல்ல. இது புலிகளின் குலக் குழு மனோநிலையின் வெளிப்பாடே. புலிகள் அரசியல் ரீதியில் முதிர்ச்சி அடையாமையினால் இந்தக் குலக் குழு மனோநிலையில் இருந்து அவர்களால் வெளியே வரமுடியவில்லை. வல்வெட்டித்துறை – வடமராட்சியில் இருந்து ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலும் புலிகள் இயக்கம் குலக் குழுவுக்குள்ளேயே தன்னை அடக்கிக் கொண்டது. புலிகள் இன்று தங்கள் குலத் தலைவனைப் பறிகொடுத்துவிட்டு அவரது பெயரை மட்டும் வைத்து அசையும் அசையாச் சொத்துக்களைப் பரிபாலனம் செய்ய முற்படுகின்றனர். அவர்களது அகராதியில் தமிழ் மக்கள் அசையும் சொத்துக்கள் என்ற வரையறைக்குள் வந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

3.

கே பி – வல்வெட்டித்துறை (வடமராட்சி) அணிகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டி புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலைப்பின்னலை பலவீனப்டுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் வே பிரபாகரன் உயிருடன் இருக்கம் போதே சில மாதங்களுக்கு முன்னதாகவே கே பி சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டதும் ஏற்கனவே சர்வதேசரீதியில் தமிழ் மக்கள் மத்தியில் அறியப்பட்டவராக கே பி இருப்பது அவருக்கு சாதகமாக உள்ள விடயங்கள். ஆனால் மறைந்த தலைவர் வே பிரபாகரனுடன் இறுதி வரையும் இலங்கையில் உள்ள போராளிகளுடன் இன்னமும் உறவுகளைக் கொண்டிருந்த போதும் புலம்பெயர்ந்த நாடுகளில் எந்த ஒரு நாட்டிலும் கே பி க்கு ஒரு ஆதரவுத்தளம் இல்லை. புலி ஆதரவு ஊடகங்களிலும் புலி ஆதரவு அமைப்புகளிலும் கூட அவருக்கு கட்டுப்பாடு இல்லை. காரணம் அவையனைத்தும் அந்தந்த நாடுகளின் பொறுப்பாளர்களின் கட்டுப்பாட்டிலேயே செயற்படுகின்றன. அதனாலேயே தனக்கென ஒரு இணையத் தளத்தை அவர் உருவாக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்.

புலிகளுடைய உத்தியோகபூர்வ இணையத் தளமாக செயற்பட்ட தமிழ்நெற் கூட கே பி க்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. அதன் பொறுப்பாளரான ஜெயா என்ற ஜெயச்சந்திரன் சர்வதேச இணைப்பாளர் பொறுப்பு தனக்கு கிட்டும் என்று எதிர்பார்த்து இருந்தவர்.

கேபிக்கு எதிரான அணி பலமாக இருந்த போதும் தலைமைத்துவ ஆளுமையுடன் ஒரு குலத் தலைவனை முன்னிறுத்த முடியாத நிலையிலேயே உள்ளனர். அவ்வாறு ஒருவரை முன்னிறுத்தம் போதும் அவர்கள் சாதாரண புலி ஆதரவாளர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும். ஏற்கனவே போட்டி போட்டுக்கொண்டு பொய் மூட்டைகளை கொட்டி உள்ளதால் அதற்கான விளக்கங்களைக் கொடுக்க நேரிடும். மேலும் இவர்களில் பலர் கடுமையான புலிப் போக்கையும் கொண்டுள்ளனர். இவர்களால் தற்போதுள்ள அரசியல் சூழலில் தங்களைத் தக்க வைத்துக் கொள்வது மிகவும் சிரமமாக அமையும்.

மாறாக கே பி புலிகளின் சில கடும்போக்குகளைக் கைவிடுவதாக அறிவித்துள்ளார். யூன் 14ல் அவர் தேசம்நெற்றுடனான உரையாடலிலும் அதனை உறுதிப்படுத்தி இருந்தார். அந்த உரையாடலில் ஏகபிரதிநிதித்துவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். பல்வேறு தமிழ் அரசியல் அமைப்புகளுடனும் அவர் தொடர்பை ஏற்படுத்தி இருப்பதை உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

ஆயினும் புலிகள் மீதான விமர்சனம் கடந்தகாலம் பற்றிய மதிப்பீட்டை அவர் முன்வைத்தால் பெரும்பான்மையான புலிகளிடம் இருந்து அவர் அன்னியப்படும் நிலையேற்படும். அதனால் அவ்விடயங்களில் அவர் அடக்கியே வாசிப்பது எதிர்பார்க்கக் கூடியது. ஆனாலும் விவாதங்கள் உரையாடல்கள் எதுவும் இன்றி நாடுகடந்த தமிழீழ அரசுக்கான செயற்குழு நியமிக்கப்பட்டமை மற்றும் அவை தொடர்பான விடயங்கள் அவரால் உடனடியான ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்த முடியாமல் உள்ளதனை வெளிப்படுத்தி நிற்கிறது.

தமிழ் மக்களுடைய உரிமைக்கான போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்ற விவாதம் தற்போது பரவலாக இடம்பெற்று வருகின்றது. இலங்கை அரசு அரசியல் ரீதியான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன் வைக்காமல் தொடர்ந்தும் வன்னி மக்களை முட்கம்பிகளுக்குள் தடுத்த வைத்திருப்பது தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது. இந்நிலையில் வல்வெட்டித்துறை (வடமராட்சி) குலக் குழு மனோ நிலைக்குள் இருந்து கொண்டு பரந்தபட்ட தமிழ் மக்களை பரிபாலனம் செய்ய முற்படுவது வேடிக்கையானது.

கடந்த காலம் பற்றிய எவ்வித மதிப்பீடும் இன்றி மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைமை கொடுக்கும் கனவை தமிழ் மக்களைப் பரிபாலனம் செய்யும் கனவை புலம்பெயர்ந்து வாழும் புலிகளும் புலிகளது ஆதரவு அமைப்புகளும் கைவிட வேண்டும். மக்களை ஒருமுறை ஏமாற்றிவிட்டிர்கள் என்பதற்காக எப்போதும் ஏமாறுவார்கள் என முடிவு கட்டிவிடக் கூடாது.

மேற்குலக தலையீடு குறித்து கமெனெய் எச்சரிக்கை

தமது நாட்டின் உள்விவகாரங்களில் மேற்குலக நாடுகள் தலையிடுவது குறித்து இரானின் அதியுயர் மதத்தலைவர் அயோத்துல்லா கமெனெய் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அப்படியான தலையீடுகளுக்கு எதிராக தமது நாடு பதிலடி கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளதாக இரானின் அரச தொலைக்காட்சி தெரிவிக்கிறது. நாட்டின் அண்மையில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலுக்கு பிறகு இடம்பெற்ற அமைதியின்மைக்கு மேற்குலக நாடுகளே காரணம் என்று இரான் அரசு குற்றம் சுமத்துகிறது.

அதிலும் குறிப்பாக பிரிட்டனையும், அமெரிக்காவையும் இது தொடர்பில் இரான் விமர்சித்திருந்தது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வீதி போராட்டங்களை இரானிய அதிகாரிகள் அடக்கினர்.

கரையோர பாதுகாப்பு திணைக்களம்

மீன்பிடி நீரியல் வள அமைச்சின் கீழ் இயங்கிவரும் கரையோர பாதுகாப்பு பிரிவை தனியாக கரையோர திணைக்களமாக மாற்றி செயற்பட வைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திணைக்களம் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இயங்கவுள்ளது.

இது தொடர்பான சட்டமூலம் இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படுமென மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.  சட்டவிரோத மீன்பிடி, கள்ளக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், ஆட்களை கடத்தல் போன்ற குற்றங்களை தடுப்பதற்கும், கடலில் சந்தேகத்துக்குரியவாறு நடமாடுபவர்களை கைது செய்வதற்கும் இத்திணைக்களத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகத்துக்கிடமான படகுகளை சோதனையிடுவதற்கும் இத்திணைக்களத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குள் கடல்வழியாக போதைப்பொருட்கள், கடத்தல் பொருட்கள் கடத்திவரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இத்திணைக்களம் அவசியம் செயற்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மீனவர்கள் இந்தியக்கடல் எல்லைக்குள் செல்லும் சம்பவங்கள் அதிகரிப்பதாலும் வெளிநாட்டு மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி வருவதாலும் இந்தப்பிரிவை திணைக்களமாக மாற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நலன்புரிநிலைய பாடசாலைகளுக்கு வழிகாட்டி நூலும், வினாப்பத்திரங்களும் அனுப்பி வைப்பு – த. ஜெயபாலன் & புன்னியாமீன்

04.jpgவவுனியா நலன்புரிநிலைய பாடசாலைகளில் தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக சிந்தனைவட்டம், தேசம்நெற் இணைந்து வழங்கிவரும் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் 1057 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 1 முதல் 4 வரையும் மொத்தம் 4 செயல்நூல்களும், 30 விசேட மாதிரிவினாப்பத்திரங்களும்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரிவினாப்பத்திரங்களும், செயல்நூல்களும் மாணவர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்டு நலன்புரிநிலைய ஆசிரியர்கள் மூலமாக மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுவதாக நலன்புரிநிலைய பாடசாலைகளின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வன்னி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து நலன்புரிநிலையங்களில் தரம் 05 இல் பயிலும் மேலதிக மாணவர்களின் எண்ணிக்கை 3900ஆக உயர்ந்துள்ளது. நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 53 பாடசாலைகளில் இம்மாணவர்கள் பயில்கின்றனர். நலன்புரிநிலைய பாடசாலை இணைப்பாளரும்,  கல்வி அதிகாரியுமான திரு.த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மாணவர்களுக்கான மாதிரிவினாப்பத்திரங்களையும், செயல்நூல்களையும் அனுப்பும் பணியை தற்போது சிந்தனைவட்டமும், தேசம்நெற்உம் ஆரம்பித்துள்ளது. இப்பணிக்கு லண்டனில் அகிலன் பவுண்டேசன் அமைப்பினரும், இலங்கையில் மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியமும்,  மேலும் சில பரோபகாரிகளும் உதவி வருகின்றனர்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள 4872 நலன்புரிநிலையங்களிலுள்ள மாணவர்களுக்கும் சிந்தனைவட்டம் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இப்பரீட்சை முடிந்த பின்பு க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க சிந்தனைவட்டமும் தேசம்நெற் உம் முடிவெடுத்துள்ளது. குறுகிய காலத்தில் மாணவர்களை வழிநடத்தக்கூடிய வகையில் இதற்கான செயல்பாட்டு திட்டமொன்றை பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் இணைந்து சிந்தனை வட்டமும், தேசம்நெற் உம் வகுத்து வருகிறது.

சட்டவிரோத ஆயுதங்களை கையளித்த இளைஞர்களுக்கு பிரதிபொலிஸ் மா அதிபர் பாராட்டு

kattankudy_arms.gifகிழக்கு மாகாணத்தில் சட்ட விரோத ஆயுதங்களை களையும் நடவடிக்கையில் முதற் கட்டமாக காத்தான்குடி பிரதேசத்தில் ஆயுதங்களை எம்மிடம் ஒப்படைத்தது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இதனை முன்னுதாரணமாக எடுத்து ஏனைய பிரதேசங்களிலுமுள்ள சட்டவிரோத ஆயுதங்களைகளையும் பணி படையினரால் தீவிரப்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் எரிசன்குணதிலக தெரிவித்தார்.

காத்தான்குடியில் நடைபெற்ற ஆயுதம் கையளிப்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த 3 வருடங்களாக இடம்பெற்ற கொடூர யுத்தத்தை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். இதன் மூலம் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் உருவாக்கியுள்ளது.

இதன் அடிப்படையில் முப்படையினரைத் தவிர எந்த ஒரு தனிநபரிடமும் சட்டவிரோத ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்கப்போவதில்லை. இந்த சட்டவிரோத ஆயுதங்களையே நாம் களைந்து வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டத்தையும், அமைதியையும், ஒழுங்கையும் நிலை நாட்டுவதில் பொலிஸார் தீவிரமான முறையில் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக காத்தான்குடியில் சட்ட விரோத ஆயுதங்களை ஒப்படைத்த இளைஞர்களையும், இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய பள்ளிவாசல் சம்மேளனத்தினரையும், அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வையும் பாராட்டுகின்றேன்.

நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள். எமக்கிடையே எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாடு. இனிவரும் காலங்களில் இந்தப் பிரதேசங்களில் எவ்விதமான கொலைகளோ, கொள்ளைகளோ, கப்பம் பெறும் நடவடிக்கைகளோ இடம்பெற ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் இதற்கான சகல நடவடிக்கைகளும் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

யாழ். வவுனியா உள்ளூராட்சித் தேர்தல்; கண்காணிப்புப் பணிகளில் பெப்ரல் இயக்கம்

யாழ்ப் பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை கண்காணிப்பதற்குப் பெப்ரல் இயக்கம் முடிவு செய்துள்ளது.

இரு உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் சுமார் நூறு உள்ளூர் கண்காணிப்பார்களை ஈடுபடுத்தத் தீர்மானித்திருப்பதாக பெப்ரல் இயக்கத்தின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி நேற்றுத் தெரிவித்தார்.

இதேநேரம் ஊவா மாகாண சபைத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் சுமார் எழுநூறு பேரை ஈடுபடுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ஊவா மாகாண சபைக்கும், யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் என தேர்தல் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி நடைபெறவிருக்கின்றது.

இத்தேர்தலைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றோம். அந்தடிப்படையில் யாழ். மாநகர சபைக்கான தேர்தலை கண்காணிக்கும் பணியில் 75 பேரையும், வவுனியா நகர சபைக்கான தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் 25 பேரையும் ஊவா மாகாண சபைத் தேர்தலைக் காண்காணிக்கும் பணியில் 700 பேரும் ஈடுபடுத்தப்படவிருக்கின்றனர்.

அதேநேரம் தேர்தல் தினத்தில் யாழ்.மாநகர சபைக்கான தேர்தலை கண்காணிக்கும் பணியில் மூன்று நடமாடும் வாகனங்களும், வவுனியா நகர சபைத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் இரண்டு நடமாடும் வாகனங்களும், ஊவா மாகாண சபைத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் 20 நடமாடும் வாகனங்களையும் ஈடுபடுத்தவுள்ளோம்.