06

06

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற்றம்

யுத்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்து முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தற்காலிகமாகக் குடியிருக்கும் குடும்பங்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு குடியமர்த்தும் பணி கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானது.  திருக்கோவில் பிரதேச செயலாளர் வீ. அழகரெட்ணம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காஞ்சிராங்குடாவைச் சேர்ந்த 125 குடும்பங்களும் சாகாமத்தைச் சேர்ந்த 141 குடும்பங்களும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

வட,கிழக்கு அபிவிருத்தியில் படையினரை முழுமையாக ஈடுபடுத்த பிரதமர் யோசனை

ratnasri-wickramanayake.jpgவடக்கு, கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் படையினரை முழுமையாக ஈடுபடுத்த வேண்டுமெனத் தெரிவித்த பிரதமரும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க, காட்டுத் தர்பாருக்கோ அல்லது ஜனநாயகத்துக்கோ பங்கம் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்துக்கோ இனிமேல் இடமளிக்கப்படாதெனவும் கூறினார்.

தியத்தலாவை இராணுவ பயிற்சிக் கல்லூரியில் சனிக்கிழமை இடம்பெற்ற பயிற்சி முடித்து வெளியேறும் படை வீரர்களுக்கான நிகழ்வில் பிரதமர் அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இந்த நாட்டிலுள்ள ஒருபகுதி மக்களுக்கு அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மக்களை படுகொலை செய்யும் இராணுவம் எம்மிடம் இல்லை.  இந்த நாட்டில் எந்தவொரு பகுதியிலும் காட்டுத் தர்பார் அதிகாரம் செலுத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டோம். அதே போன்றே ஜனநாயகத்துக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்துக்கும் இடமளிக்க மாட்டோம்.

பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் முடிவடைந்துவிட்டது. தற்போது எம் முன்னால் உள்ளது அபிவிருத்தி யுத்தமே. இதனையும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகொள்வோம். வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் படையினரை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். அபிவிருத்தி திட்டமொன்றை முடிக்க ஒப்பந்தக் காரர்கள் மூன்று வருடங்கள் கோரினால் அதனை எமது படைவீரர்கள் சில தினங்களில் முடித்து விடுவார்கள்.

நீண்டகால வரலாறு கொண்ட எமது தாய்நாட்டை, அதன் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டியது படையினரின் பொறுப்பு. எமது படைவீரர்கள் உலகிலேயே சிறந்த வீரர்களாகவும் மிகவும் ஒழுக்கம் உள்ளவர்களாகவும் உள்ளனர்.  எந்தவொரு சமூகத்திற்கும் ஒழுக்கம் இருக்க வேண்டும். அப்படியான சமூகமே முன்னேறும். ஒழுக்கமுடையவர்களால் ஒருபோதும் சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படாது. இளைஞர்கள் அனைவருக்கும் எமது படைவீரர்களின் ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும். அதற்காக இளைஞர்கள் அனைவரையும் படையில் சேருமாறு நான் கூறுவதாக நினைக்கக் கூடாது.

பிரபாகரனின் செயற்பாடுகளினால் எமது நாடு 30 வருடங்கள் பின் தங்கிவிட்டது. மனிதப் படுகொலைகளில் ஈடுபட்ட கலிங்க மகான் என்ற மன்னருக்கு அடுத்த படியாக மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டவர் பிரபாகரன். உலகில் நிகழும் கொடூரமானவராக இருந்த அவரின் பயங்கரவாதத்திற்கு எம்மால் முடிவுகட்ட முடிந்திருக்கின்றது. இதற்கு படைவீரர்களின் அர்ப்பணிப்பே காரணமாகும்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்துக் கொண்ட 281 படைவீரர்கள் நேற்று அங்கிருந்து வெளியேறினர். இவர்களின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வும் இடம்பெற்றது.

நாளை நாடளாவிய ரீதியில் அரச மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளின் டாக்டர்கள் நாளை செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் சுகாதாரத்துறை மிக மோசமாகியுள்ளதாகவும் பொது மக்களுக்கு உரிய மருத்துவ சேவையை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை, மருத்துவம் தொடர்பாக தமது சங்கம் தெரிவிக்கும் ஆலோசனைகளை சுகாதார அமைச்சின் செயலாளர் ஏற்றுக்கொண்டாலும் சுகாதார அமைச்சர் அதனை ஏற்பதில்லை எனவும் இச் சங்கத்தின் பேச் சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வரும் உள்ளக நியமனங்கள், இடமாற்றங்கள் என்பன அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படுவதாகவும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

எனவே, நாட்டிற்கு சிறந்த மருத்துவ சேவை இடம்பெற வேண்டுமானால் சுகாதார அமைச்சர் அப்பதவியில் இருந்து விலக்கப்பட்டு புதியவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் சங்கம் மேலும் தெரிவித்தது.

நாளை நடைபெறவுள்ள இப் போராட்டத்தில் காசல் வைத்தியசாலை, லேடி றிச்வே ஆஸ்பத்திரி, மகரகம புற்றுநோய் ஆஸ்பத்திரி ஆகியவற்றின் டாக்டர்களும் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

1 கோடி 20 இலட்சம் ரூபா கொள்ளை தொடர்பான பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது

_arrested.jpgமாதம்பை யிலுள்ள இந்தியாவிற்குச் சொந்தமான இரும்புத் தொழிற்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட 1 கோடி 20 இலட்சம் ரூபா பணம் கொள்ளை தொடர்பில் பிரதான சந்தேக நபரான ஆனமடு பிரதேசசபை உறுப்பினரொருவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதன்போது அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவையும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட இரு வான்களையும் மோட்டார் சைக்கிளொன்றையும் கொஸ்வத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; மாதம்பை நகரிலுள்ள இந்தியாவுக்குச் சொந்தமான இரும்புத் தொழிற்சாலைக்கு கடந்த மே மாதம் 21 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட 1 கோடி 20 இலட்சம் ரூபா சம்பளப் பணம் லுணுவில பாலத்தில் வைத்து பொலிஸ் சீருடையணிந்த சிலரால் கொள்ளையடிக்கப்பட்டது.

இக் கொள்ளையுடன் தொடர்புடைய 9 சந்தேக நபர்களை கொஸ்வத்தை பொலிஸார் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டதைத் தொடர்ந்து பிரதான சந்தேக நபராக ஆனமடு பிரதேசசபை உறுப்பினர் இருப்பதாக சிலாபம் விசேட குற்றப்புலனாய்வு அதிகாரிகள் இனங்கண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்வத்த பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு வன்னி பாதுகாப்பு படைப் பிரிவு கட்டளைத் தளபதி விஜயம்

வவுனியாவிலுள்ள இரண்டு புனர்வாழ்வு நிலையங்களுக்கு வன்னி பாதுகாப்புப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

பூந்தோட்டம் மற்றும் பம்பைமடு பிரதேசங்களிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களின் நிலைமைகளை கேட்டு அறிந்து கொண்டனர்.

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சிறுவர் படைப் பிரிவைச் சேர்ந்தார்களும் பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண்கள் படைப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருகின்றன.இரு புனர்வாழ்வு நிலையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து அவர்களது குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்ட வன்னி படைப் பிரிவின் கட்டளைத் தளபதி தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

யுனிசெப் அமைப்பின் ஒத்துழைப்புடனும் இந்த புனர்வாழ்வு நிலையங்களிலுள்ளவர்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.வன்னி பாதுகாப்புப் படைப் பிரிவு தளபதியுடன் இராணுவத்தின் 211வது படையணியின் கட்டளைத் தளபதி லெப்டினன்ற் கேர்ணல் ஜகத் ரத்நாயக்க, யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதிகள், இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

யாழ். இந்துவிலிருந்து 93 மாணவர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு

jaffna-hindu-college.jpgயாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து பொறியியல் பீடத்திற்கு 25 பேரும் மருத்துவபீடத்திற்கு 12 பேரும் உட்பட 93 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி அதிபர் வி.கணேசராஜா தெரிவித்துள்ளார்.கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 2008 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான “Z”வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையிலேயே இம்மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

இதனடிப்படையில் கணிதப் பிரிவிலிருந்து பொறியியல்  20, பொறியியல், பொறியியல் 1, கணிய அளவையியல் 2, கணினி விஞ்ஞானம் 4, அளவையியல் விஞ்ஞானம் 1, தகவல் தொழில்நுட்பம்8, பௌதீக விஞ்ஞானம் 5, கனிப்பொருள் வளங்களும் தொழில்நுட்பமும்4 என்ற அடிப்படையில் 49 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

விஞ்ஞான பிரிவிலிருந்து மருத்துவம் 12, மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் 1, உணவு விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் 1, உணவு விஞ்ஞானமும் போசாக்கும் 1, விலங்கு விஞ்ஞானமும் மீன்பிடியும்1, விவசாயம்7, பிரயோக விஞ்ஞானம்1, உயிரியல் விஞ்ஞானம் 3, யுனானி மருத்துவமும் அறுவை சிகிச்சையும் 1, நீர்வாழ் வளங்கள் தொழில்நுட்பம்1, சித்த மருத்துவம் 3 என்ற அடிப்படையில் 32 பேர் தெரிவாகியுள்ளனர்.

அத்துடன் வர்த்தக பிரிவிலிருந்து சொத்து முகாமைத்துவமும் மதிப்பீடும் 1, வணிகவியல் 1 என்ற அடிப்படையில் 2 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். மேலும் கலைப்பிரிவிலிருந்து கலை2, கலை (வெகுஜன ஊடகம்) 4, கலை (அரங்கக்கலை) 4 என்ற அடிப்படையில் 10 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.

யாழ், வவுனியா மற்றும் ஊவா தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டை 15இல் அஞ்சல் அலுவலகத்துக்கு அனுப்ப ஏற்பாடு

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கும், ஊவா மாகாண சபைத் தேர்தல்களுக்குமான தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் 15ஆம் திகதி அஞ்சல் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படுமென உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபை மற்றும் ஊவா மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்புகள் எதிர்வரும 27ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக யாழ். மாநகரசபைக்கு கிடைக்கப்பெற்ற 473 விண்ணப்பங்களுள் 335 ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் தெரிவித்தார்.

சரியான தகவல்களை சமர்ப்பிக்காத காரணத்தினால்138 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தபால்மூல வாக்களிப்பை முன்னிட்டு எதிர்வரும் 08ஆம் திகதி யாழ். கச்சேரியில் அஞ்சல் அத்தாட்சிப்படுத்தும் அலுவலகர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படவிருப் பதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை வவுனியா நகரசபைத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்புக்காக கிடைக்கப்பெற்றுள்ள 197 விண்ணப்பங்களுள் 183 விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சரியான தகவல்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால்14 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி கூறினார்.

வவுனியா நகரசபைத் தேர்தலுக்காக சுமார் 500 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புக்களும் நடாத்தப்படவுள்ளன.  எதிர்வரும் 07ஆம் திகதி சிரேஷ்ட தலைமை அலுவலகர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். 8ஆம் திகதி கிராம அலுவலகர்கள் மற்றும் அஞ்சல் அத்தாட்சிப்படுத்தும் அலுவலகர்களுக்கான பயிற் சிகள் நடத்தப்படுமெனவும் 09ஆம் திகதி பிரதம கணக்கீட்டு மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான பயிற் சிகள் வழங்கப்படுமெனவும் உதவித் தேர்தல் ஆணையாளர் கூறினார்.

மேலும் பதுளை மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்ற 17 ஆயிரத்து 418 விண்ணப்பங்களுள் 16 ஆயிரத்து 54 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் உதவித் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

மூன்றாவது முறையாக செரீனா சாம்பியன்

shereena.jpgவிம்பிள் டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் தனது சகோதரி வீனஸை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடந்தது. வில்லியம்ஸ் சகோதரிகளான அமெரிக்காவின் செரீனாவும், வீனஸும் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்புடன் 5 முறை சாம்பியனான வீனஸ் தனது தாக்குதலை தொடங்கினார். முதல் செட்டில் இருவரின் செயல்பாடும் சம பலத்துடன் தெரிந்தது. அதாவது தாங்கள் “செர்வ்’ செய்யும் கேமை மட்டுமே வென்றபடி வந்தனர். இதனால் கடைசி வரை (66) சமநிலை நீடித்தது. இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்க கொண்டு வரப்பட்ட டைபிரேக்கரில் செரீனா, வீனஸின் சவாலை முறியடித்து, அந்த செட்டை தனதாக்கினார்.  ஆனால் 2ஆவது செட்டில் கடுமையான போட்டி இல்லை. இந்த செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி தனது கட்டுக்குள் கொண்டு வந்த செரீனா, அதனை எளிதாக வென்று விம்பிள்டன் பட்டத்துக்கும் சொந்தக்காரியானார்.

மொத்தம் 12 “ஏஸ்’ சர்வீஸ்களை வீசியது அவரது இலக்கை சுலபமாக்கியது. 85 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் செரீனா 7-6, (7-3), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து, விம்பிள்டன் பட்டத்தை 3 ஆவது முறையாக கைப்பற்றினார். முன்னதாக 2002, 2003 ஆம் ஆண்டுகளிலும் அவர் விம்பிள்டனை முகர்ந்து உள்ளார்.

ஆனால், இந்த மூன்று முறையும் அவர் தனது சகோதரி வீனஸையே வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தத்தில் இது செரீனாவின் 11 ஆவது கிராண்ட்ஸ்லாம் (விம்பிள்டன் 3, அவுஸ்திரேலிய ஓபன் 4, அமெரிக்க ஓபன் 3, பிரெஞ்ச் ஓபன் 1) பட்டமாக அமைந்துள்ளது.

வெற்றி பெற்ற செரீனாவுக்கு ரூபா 6 கோடியே 75 இலட்சமும், 2 ஆவது இடம் பிடித்த வீனஸுக்கு ரூபா 3 கோடியே 37 இலட்சமும் பரிசுத் தொகையாக கிடைத்தது. அமெரிக்காவில் நேற்று முன்தினம் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதே தினத்தில் பெற்ற வெற்றியை செரீனா மேலும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார். இது தவிர, வில்லியம்ஸ் சகோதரிகள் விம்பிள்டன் இரட்டையர் பட்டத்தையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

“ஊவா, வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களை நவீனப்படுத்த அரசு 320 கோடி ரூபா ஒதுக்கு’

ஊவா, வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களை நவீனமயப்படுத்த அரசாங்கம் 320 கோடி ரூபா நிதி ஒதுக்கியுள்ளதாக முன்னாள் ஊவா மாகாண அமைச்சரும் வேட்பாளருமான எம்.ஏ.புத்ததாச தெரிவித்தார்.
ஊவா மாகாணத் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;  இன்றைய அரசு நான்கில் மூன்று பங்கு பலத்தைப் பெற்று ஊவாவின் ஆட்சியைக் கைப்பற்றும்.

ஐ.ம.சு.கூ. ஊவா மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பாக அதிக நிதியினை ஒதுக்கி உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள அதேவேளை நாட்டை கொடிய யுத்தத்தில் இருந்து மீட்டுள்ளது. எனவே இவ்விரு காரணங்களால் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் மூன்றாவது முறையாகவும் ஊவா மாகாண சபையினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே பெறும் என்பதில் ஐயமில்லை. பதுளை மாவட்டத்தில் ஐ.ம.சு.கூ. தலைமை வேட்பாளராக நானும், மொனராகலை தலைமை வேட்பாளராக சசீந்திர ராஜபக்ஷவும் போட்டியிடுவதாலும் நாட்டின் யுத்த வெற்றியை கருத்திற் கொண்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஐ.ம.சு.கூ.வுக்கு ஆதரவாக வாக்களிக்க இணைந்துள்ளனர்.

இன்று ஊவா, வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களை நவீனப்படுத்தும் முகமாக ரூபா 320 கோடியினை அரசு ஒதுக்கியுள்ளது. இது தவிரவும் பதுளை பெரியாஸ்பத்திரியினை முழுமையான வைத்திய உபகரணங்கள் வழங்கி அதனை கொழும்பு வைத்தியசாலையின் தரத்திற்குக் கொண்டு வந்தால் இங்குள்ள 15 இலட்சம் மக்களுக்கு நன்மை கிடைக்கும்.

அதுமாத்திரமின்றி கொழும்பில் இருந்து ஊவா மாகாணத்துக்கு, ஊவா மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு மிக குறுகிய நேரத்தில் செல்லும் நீண்ட வீதிகளை செப்பனிட்டுள்ளது. இங்குள்ள தோட்ட வீதிகள், கிராமிய வீதிகள் போன்றவை மகநெகும, கமதிரிய வேலைத்திட்டத்தினூடாக மகிந்த சிந்தனையின் அடிப்படையில் கொங்கிரீட் இடப்பட்டுள்ளது.

ஐ.தே.கட்சியின் பிரபல பிரதேச சபை உறுப்பினர்கள் அறுவர் உட்பட 6,000 பேர் இணைந்து ஐ.ம.சு.கூ.வுக்கு வாக்களிக்கவுள்ளனர். இதனால் ஜே.வி.பி. மற்றும் தமிழ், முஸ்லிம் பெயர்களைத் தாங்கி வரும் கட்சிகளிலிருந்து ஒரு உறுப்பினராவது ஊவா மாகாண சபைக்குத் தெரிவாகுவது சந்தேகமே. இவற்றினை ஊவாவில் வாழும் மக்கள் நன்கு புரிந்துள்ளனர் என்றனர்.

சப்ரகமுவ ஆளுனராக ஜனக பிரியந்த பண்டார நியமனம்

sabaragamuwa.jpgஜனாதிபதி மஹிந்த ராஜாக்ஷவினால் சப்ரகமுவ மாகாண ஆளுனராக ஜனக பிரியந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ் ஆளுனராக இருந்த மொஹான் சாலிய எல்லாவல உயிரிழந்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜனக பிரியந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.