July

July

யாழ். நலன்புரி நிலையம் – 215 முதியவர்கள் நேற்று உறவினரிடம் ஒப்படைப்பு

யாழ்.  குடாநாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர் களில் 60 வயதுக்கு மேற்பட்ட 215 முதியவர்கள் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டனர்.

இதேவேளை, இந்த நலன்புரி நிலையங்களுக்குள் குடும்ப உறவினர்களை பிரிந்து வாழும் 245 நபர்களை ஒன்று சேர்க்கும் நடவடிக்கைகளும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளினாலேயே இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமைச்சரின் யாழ். பணிமனையோடு தொடர்புகொண்டு நலன்புரி நிலையங் களில் உள்ள தமது முதிய உறவினர்களை அழைத்துச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நலன்புரி நிலையங்களுக்குள் உறவினர்களை பிரிந்து வாழ்பவர்களை ஒன்று சேர்க்கும் நடவடிக்கைகளையும் நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.வெவ்வேறு நலன்புரி நிலையங்களில் பிரிந்து வாழும் 245 பேரை ஒன்று சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நலன்புரி நிலையங்களில் பிரிந்து வாழும் குடும்பங்கள் தொடர்பில் மேலதிக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சரியான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் எஞ்சியிருப்பவர்களையும் அவர் களது குடும்பங்களுடன் ஒன்று சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமை ச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு : காஷ்மீர் முதல்வர் ராஜினாமா

omar-abdullah.jpgதன் மீது பாலியல் புகார் கூறப்பட்டதையடுத்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

2006ஆம் ஆண்டு சோபியான் பாலியல் விவகாரம் வெளியில் வந்தது. இளம் பெண்கள், சிறுமிகள் ஆகியோரை மிரட்டி விபசாரத்தில் தள்ளிய கும்பல், அவர்களைப் பொலிஸார், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்தனர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்தவுடன் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தன.

இந்த வழக்கு இப்போது சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்ட இந்த வழக்கு மீண்டும் வேகம் பிடித்துள்ளது. இந்த வழக்கு விவகாரம் காஷ்மீ்ர் சட்டசபையில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு வன்முறை நடந்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹ்பூபா முப்தி சபாநாயகரின் மைக்கை பறித்து வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந் நிலையில் இன்று சட்டசபையில் மக்கள் ஜனநாயக கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான முஸாபர் பேக் பேசுகையில், முதல்வர் உமர் அப்துல்லா மீது திடுக்கிடும் புகாரைக் கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் பேசுகையில்,

“இதைச் சொல்லவே எனக்கு வருத்தமாகத் தான் உள்ளது. ஆனால், காஷ்மீரை உலுக்கிய சோபியான் பாலியல் வழக்கில் முதல்வர் உமர் அப்துல்லாவும் சம்பந்தப்பட்டிருக்கிறார். 102 பேர் கொண்ட குற்றவாளிகள் பட்டியலில் அவருடைய பெயரும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதனால் அவர் பதவியில் நீடிக்கக் கூடாது. உடனே ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

இவரது பேச்சு சட்டசபையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. அப்போது எழுந்த முதல்வர் உமர் அப்துல்லா, “இது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு. இருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டு உண்மை அல்ல என்று நிரூபிக்கும் வரை முதல்வர் பதவியில் நீடிக்க நான் விரும்பவில்லை. இது எனது நற்பண்புகளுக்கு ஏற்பட்ட களங்கம்.

நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் வரை என்னால் தொடர்ந்து முதல்வராக செயல்பட முடியாது. எனவே முதல்வர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன். இது போன்ற அசிங்கமான குற்றச்சாட்டுகளை என்னால் தாங்க முடியவில்லை.

நிரபராதி என்று நிரூபிக்கும் வரை பதவி வேண்டாம்

நான் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை நான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. எனவே கவர்னரை சந்தித்து எனது ராஜினாமாவை கொடுக்கப் போகிறேன்” என்று கூறிவிட்டு வெளியேற முற்பட்டார்.

அதிர்ச்சியடைந்த அமைச்சர்களும், அவரது தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏக்களும் அவரை எவ்வளவோ தடுத்தும் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

ஒமர் அப்துல்லா நேராக ஆளுநர் என்.என். வோராவின் இல்லத்துக்குச் சென்று அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தைத் ஒப்படைத்தார். ராஜினாமாவை ஏற்பதாக வோராவும் அறிவித்துவிட்டார்.

இந்த சம்பவங்களால் காஷ்மீர் சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது.  இப்போது உமருக்குப் பதில் புதிய ஒருவரை தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி தேர்வு செய்ய வேண்டும். இந்த இரு கட்சிகளின் கூட்டணி ஆட்சி தான் காஷ்மீரி்ல் இப்போது நடந்து வருகிறது.

உமரின் ராஜினாமாவையடுத்து அவரது கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இடம்பெயர்ந்துள்ள மக்களை விரைவாக மீள்குடியேற்ற வேண்டும்- அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் தெரிவிப்பு

us_ass_sec.pngமோதல் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை சாத்தியமான அளவு விரைவில் மீளக் குடியேற்ற வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாகும். இவ் விடயம் தொடர்பில் அமெரிக்கா மிகுந்த கரிசனை காட்டுகின்றது என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் சனத்தொகை, அகதிகள் மற்றும் குடிவரவு தொடர்பான உதவி இராஜாங்க செயலாளர் எரிக் ஷ்வர்ட்ஸ் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை வெகுவிரைவில் மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக எம்முடன் கலந்துரையாடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கையின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வெகுவிரைவில் குறிப்பிடத்தக்க அளவு மக்களை மீள்குடியேற்றுவதாகவும் அவர்கள் எம்மிடம் உறுதியளித்தனர் என்றும் அவர் தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தீர்வுத்திட்ட யோசனைக்கு 13 அரசியல் கட்சிகள் இணக்கம்

tisswitharana111.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாரம் நேரம் ஒதுக்கித்தந்தால், சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தயாரித்துள்ள தீர்வு யோசனையை அவரிடம் சமர்ப்பிக்க முடியும். ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை நாம் கோரியுள்ளோம் என்று சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனைத்திட்டத்தை ஜனாதிபதியிடம் கையளிப்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,

“தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தயாரிக்கும் நோக்கில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. தற்போது 13 அரசியல் கட்சிகள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில் அரசியல் தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. பொதுவாக அனைத்து விடயங்களிலும் 13 அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் எமது யோசனையை தயாரித்துள்ளோம். அதனை ஜனாதிபதியிடம் கையளிப்பதே தற்போதைய தேவையாகும்.

எனினும் நாங்கள் தயாரித்துள்ள தீர்வுத்திட்டத்தில் 13 அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் இதுவரை கையொப்பம் இடவில்லை. ஆனால் தீர்வுத்திட்டத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதுடன் ஜனாதிபதியின் அபிப்பிராயத்தை கேட்ட பின்னர் கையொப்பம் இடலாம் என்ற நிலைப்பாட்டில் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

எனவே தீர்வுத்திட்டத்தை கையளிப்பதற்கு நாங்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். இவ்வாரம் ஜனாதிபதி நேரம் ஒதுக்கித் தந்தால் தீர்வு யோசனையை ஜனாதிபதியிடம் கையளிப்போம். அதன் பின்னர் ஏனைய கட்சிகளின் யோசனைகள் கோரப்படும்”என்றார். அதேவேளை சர்வகட்சிக் குழு தயாரித்துள்ள தீர்வுத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து அதில் பங்குபற்றும் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் கருத்து வெளியிடுகையில்,

“தீர்வுத்திட்டத்தில் முக்கிய சில விடயங்கள் உள்ளடங்குகின்றன. நாம் பார்க்கவேண்டிய முக்கிய விடயமாக பொலிஸ் விவகாரம் காணப்படுகின்றது. இவ்விடயமானது புதிய அம்சமாக இருக்கும். அதாவது பொதுவாக பொலிஸ் சேவையில் பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படுவார். அவருக்கு கீழ் இரண்டு பொலிஸ்மா அதிபர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒருவர் மாகாண பொலிஸ் விவகாரங்களை ஆராயவும் மற்றவர் தேசிய பொலிஸ் விவகாரங்களை ஆராயவும் நியமிக்கப்படுவார்.

மாகாண மட்டத்தில் உப பொலிஸ் பரிசோதகர்களும் அதற்குக் கீழ்ப்பட்டவர்களும் நியமிக்கப்படுவார்கள். தேசிய மட்டத்தில் அதற்கு ஏற்றவாறு நியமனங்கள் அமையும். மாகாணங்களுக்குத் தனித்தனியாக பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் நேரடியாக முதலமைச்சர்களின் கீழ் வருவார்கள். மாகாண மட்டத்தில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் மத்திய அரசின் கீழான பொலிஸார் தலையிடுவர். அடுத்த விடயமாக அரசியலமைப்பு நீதிமன்றம் காணப்படுகின்றது. இந்த நீதிமன்றம் ஊடாகவே அரசியலமைப்பு தொடர்புபட்ட விடயங்கள் ஆராயப்படும். அத்துடன் காணி மற்றும் நீர் விவகாரம் தொடர்பில் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படும். தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் காணி மற்றும் நீர் விவகாரம் தொடர்பில் இந்த ஆணைக்குழு பரிந்துரைகளைச் செய்யும்.

செனட் சபை ஒன்றும் அமைக்கப்பட பிரேரிக்கப்பட்டுள்ளது. அதாவது மாகாணம் ஒன்றில் நான்கு உறுப்பினர்கள் வீதம் 36 உறுப்பினர்கள் செனட் சபைக்கு நியமிக்கப்படுவார்கள். மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் உள்ள அதிகாரங்களை குறைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. இவ்வாறு சர்வகட்சி குழு தயாரித்துள்ள தீர்வுத்திட்டத்தில் பல யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு சர்வகட்சி பிரதிநிகள் குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. இதில் தற்போது 13 அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக்க ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அகதிமுகாமை பார்வையிட அனுமதிக்க கோரும் வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு

supremecourtphoto.jpgவன்னியில் அகதி முகாம்களிலுள்ள மக்களைப் பார்வையிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பிரதான எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 24 ஆம் திகதி வரை ஒத்திவைத்தது.

அரசாங்கத்தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு பிரமுகர்களுக்கு அகதி முகாம்களுக்குச் செல்ல எந்தவிதமான தடைகளும் போடப்படவில்லை. ஆனால், எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்குமே அனுமதி வழங்கப்படாமையானது அடிப்படை உரிமை மீறல் என்று தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு உள்ளிட்ட பல எதிரணிக் கட்சிகள் தாக்கல் செய்த மனுமீதான விசாரணையின் தீர்ப்பை நேற்று திங்கட்கிழமை வழங்குவதாக உயர்நீதிமன்றம் முன்னர் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று உயர் நீதிமன்றம் கூடிய போது அரசதரப்பு சட்டத்தரணி இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளருடனும் சட்டமா அதிபருடனும் கலந்துரையாட வேண்டியிருப்பதால் அதற்கு காலஅவகாசம் தருமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இக் கோரிக்கையை கவனத்திலெடுத்த உயர்நீதிமன்றம் அதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி வரை தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வெலி அமுன இங்கு வாதிடுகையில், அமைச்சர்கள், ஆளும் தரப்பு எம்.பி.க்கள், வெளிநாட்டு பிரமுகர்களுக்கெல்லாம் அகதி முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்கும் அரசாங்கம், எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பது அநீதியான செயலென வலியுறுத்திக் கூறியதோடு, இந்த விடயத்தை இழுத்தடிக்கும் நோக்கிலேயே பிரதிவாதிகள் தரப்பு மேலும் கால அவகாசம் கோருவதாகவும் கவலை தெரிவித்தார்.

சிறைக் கைதிகளைப் பார்க்கக் கூட எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி வழங்கும் நிலையில், சாதாரண அகதி மக்களைப் பார்க்க அனுமதி மறுப்பதானது அடிப்படை மனித உரிமை மீறலெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மனுதாரர்கள் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத்ஜயவர்தன, ஐ.தே.க.தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

ஸ்லோவேனியா டெனிஸ் போட்டி சபீனா சாம்பியன் கிண்ணத்தை வென்றார்

sabeena.jpgரஷ்யாவைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை தினாரா சபீனா இத்தாலி வீராங்கனை சாரா எர்ரானியை 6-7,6-1,7-5 என்ற செட்களில் இறுதிப் போட்டியில் போராடி வீழ்த்தி ஸ்லோவேனியா ஓப்பன் டெனிஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த தொடரின் தரவரிசையில் 5 ஆவது இடத்திலும் உலகத் தரவரிசையில் 38 ஆவது இடத்திலும் உள்ள சாரா எர்ரானி, முதல் செட்டில் டைபிரேக் வரை சென்று 7-6 என்று சபீனாவை வீழ்த்தினார்.

மூன்றாவது செட்டில் சாரா எர்ரானி தனது ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்க 54 என்று முன்னிலை வகித்தார். ஆனால், அதற்கு அடுத்த தன் சர்வை சபீனாவிடம் இழக்க தோல்வியடைந்தார்.

சனா 172 நிமிடங்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்

பாடசாலை மாணவி தற்கொலை : பாடசாலைகளுக்கு மாணவர் கையடக்கத் தொலைபேசி கொண்டுசெல்லத் தடை

0000.jpgகறுவாத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் தற்கொலைக்கு முயற்சிசெய்த மாணவி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவத்தை அடுத்து பாடசாலைகளுக்குள் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகளைக் கொண்டுசெல்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற்கான அறிவிப்பினை நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவியொருவர் பாடசாலை வளாகத்துக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.

குறித்த மாணவி வைத்திருந்த கையடக்க தொலைபேசி தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினர் நடத்திய விசாரணையை அடுத்து ஏற்பட்ட மன வேதனையின் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்று இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மாலபே பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒன்பதாம் தரத்தில் கல்வி பயின்றுவரும் 14 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்தவராவார். குறித்த சம்பவத்தை அடுத்து இவர் சிகிச்சைகளுக்காக பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த சிகிச்சைகள் பலனின்றி அவர் நேற்று முன்தினம் வைத்தியசாலையிலேயே உயிரிழந்தார். இவரது இறுதிக்கிரியைகள் பொரளை பொது மயானத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் கறுவாத்தோட்டம் பொலிஸார் குறித்த மாணவி கல்வி பயின்ற பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் மாணவியின் பெற்றோர் என அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களையும் பதிவு செய்தள்ளனர்.

இதேவேளை இச்சம்பவத்தையடுத்து பாடசாலைகளுக்குள் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது. இந்தத் தடையையும் மீறி மாணவர்கள் பாடசாலைகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வார்களாயின் அவர்களின் பெற்றோரே அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் இலங்கை வந்தார்!

bandaranaikeairport.jpgஇலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஜோசுவோ பொக்குடா நேற்று இரவு இலங்கை வந்தார். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இவரை விமான நிலையத்தில் வரவேற்றார். சீகிரியாவில் இன்று இடம்பெறவுள்ள அரும்பொருட் காட்சியகத் திறப்பு விழாவிலும் பொக்குடா கலந்துகொள்ளவுள்ளார்.

இவர் கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில்  அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

தென் மாகாணசபை அடுத்த வாரம் கலைக்கப்படும் – அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு

galle-district.jpgதென் மாகாணசபை அடுத்த வாரம் கலைக்கப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று அறிவித்தார். கொழும்பு மகவெலி மத்திய நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார்.

தென் மாகாண சபைக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுவிட்டனர் என்றும் அமைச்சர் கூறினார். வடக்கிலும் ஊவா மாகாணத்திலும் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் முதலாவது சதொச நிலையம் – அமைச்சர் பந்துல இன்று திறந்து வைத்தார்

sathosa-outlet.jpgயாழ்ப் பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் (சதொச) இன்று காலை திறந்து வைக்கப்பட்டதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ். வின்சர் திரையரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூ.மொ.வி. நிலையத்தை வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன வைபவரீதியாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சமூக சேவைகள்,  சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் சதொச தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

யாழ். குடாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொழும்பு விலைகளில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களை விற்பனை செய்வதற்காக 3 கூ.மொ.வி. நிலையங்களை அமைக்க வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.  யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள ஏனைய இரு கூ.மொ.வி. நிலையங்களும் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.