July

July

தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களுள் 51 பேர் 12 ஆம் திகதி நாடு திரும்புவர் – பிரதியமைச்சர் நியோமல்

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 164 இலங்கை மீனவர்களில் 51 பேர் எதிர்வரும் 12 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக கடற்றொழில் நீரியல்வள பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

ஏனையோர் அவர்களுக்குரிய விசாரணைகள் நிறைவடைந்ததும் படிப்படியாக நாடு திரும்புவார்கள். இதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் நீரியல் வள அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

ஏனையோர் அவர்களுக்குரிய விவாரணைகள் நிறைவடைந்ததும் படிப்படியாக நாடு திரும்புவார்கள். இதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் நீரியல் வள அமைச்சும் வெளி விவகார அமைச்சும் இணைந்து மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியக் கடல் எல்லையில் அத்துமீறிப் பிரவேசித்துள்ளமை உட்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக பிரதியமைச்சரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திய அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கமைய விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த இவர்கள் ஒவ்வொரு கால கட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என்பதால் அதற்கேற்பவே அவர்களது விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கிணங்க படிப்படியாக அவர்கள் விடுவிக்கப்படுவர் எனவும், இவர்களை விடுவிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நுரைச்சோலை அனல் மின் திட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்வுக்கு பாதிப்பில்லை – ஜனாதிபதி ராஜபக்ஷ

he_at_norochcholai-2009-07-05.jpgநுரைச் சோலை அனல் மின்நிலைய நிர்மாணத்தினால் அப் பிரதேசத்திலுள்ள சொத்துக்களுக்கோ அல்லது பிரதேசவாசிகளின் இயல்பு வாழ்க்கைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாதென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருக்கிறார்.  நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளை நேரில் பார்வையிட சனிக்கிழமை அங்கு சென்றிருந்த போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.

மின் உற்பத்தி நிலையத்தை சூழவுள்ள பகுதிகள் பசுமை பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுமென்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ இதன் போது குறிப்பிட்டிருக்கிறார். இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் நாட்டின் மின் விநியோகத்திற்கு மேலும் 900 மெகாவற் மின்சக்தி சேர்க்கப்படுமென்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.

அத்துடன், அந்தந்த பிரதேசங்களில் உரிய அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்த வேண்டியது முக்கியமென்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அனைத்து துறையிலும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்றும் நிகழ்வில் பங்கு கொண்ட மதகுருமார்கள் உள்ளிட்ட பிரதேசவாசிகள் மத்தியில் மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம், மின்உற்பத்தி நிலைய நிர்மாணத்திட்டதுடன் அந்த பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ இதன் போது மேலும் தெரிவித்திருக்கிறார்.

தவறான அறிக்கைக்காக தமிழரிடம் மன்னிப்புக் கோரியுள்ள ஏ.பி.சி.

தவறான விதத்தில் செய்தி வெளியிட்டதற்காக அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி.தொலைக்காட்சி தமிழர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
மே 18 இல் 7.30 இல் ஒளிபரப்பான செய்தி அறிக்கையில் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பாக தவறான விதத்தில் அறிக்கையிட்டதாக பார்வையாளர் ஒருவர் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து ஏ.பி.சி.தொலைக்காட்சி மன்னிப்புக் கேட்டுள்ளது.

200 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டிஷாரால் பெருந்தோட்டத் துறைக்கு கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களின் பரம்பரையினர் இலங்கைத் தமிழர்கள் என்று ஏ.பி.சி.தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களில் ஒருபகுதியினர்

தொழிலாளர்களின் வம்சாவளியினராக இருக்கின்ற போதும் அநேகமானோர் 2 ஆயிரம் ஆண்டுகால இலங்கைத் தமிழ் கலாசார பரம்பரையினராகும். ஏ.பி.சி.யின் கெய்ரன் டொய்ல் இந்தத் தவறை ஏற்றுக்கொண்டுள்ளார். உங்கள் கவலையை ஏ.பி.சி. ஏற்றுக்கொள்கிறது. தமிழ் மக்களின் வரலாறு தொடர்பாக தவறாக குறிப்பிடப்பட்டதையும் தவறான வழிகாட்டலுக்கு இட்டுச்செல்வதாக அமைந்திருந்ததையும் ஏ.பி.சி.ஏற்றுக்கொள்கிறது. இதற்கு ஏ.பி.சி.மன்னிப்புக் கோருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக கிரீன் லெவ்ற் வீக்லியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கி.பி.2 ஆம் நூற்றாண்டிலிருந்தே தீவில் இலங்கைத் தமிழ் மக்கள் இருந்து வருவதை ஏ.பி.சி.விளங்கிக்கொள்கிறது. அநேகமான இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தின் வம்சாவளியினர் என்றும் ஏ.பி.சி.குறிப்பிட்டுள்ளது.

பிரபல குத்துச் சண்டை வீரர் அலெக்ஸிஸ் அர்கில்லோ மரணம்

_arguello.jpgதென் அமெரிக்க நாடானா நிகராகுவாவைச் சேர்ந்த பிரபலமான குத்துச் சண்டை வீரர் அலெக்ஸிஸ் அர்கில்லோ தனது வீட்டில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அலெக்ஸிஸ் மூன்று முறை உலக குத்துச் சண்டை பட்டத்தை வென்றவர். 1995 ஆம் ஆண்டு குத்துச் சண்டை போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அவர் உலகளவில் 82 வெற்றிகளை பெற்றுளார். அதில் 65 முறை எதிரிகளை முழுதாக வீழ்த்தியும் உள்ளார்.

மூன்று பிரிவுகளில் உலகப் பட்டத்தை வென்றுள்ள ஆறு பேரில் அலெக்ஸிஸும் ஒருவர் என்பது குறிப்பிட்த்தக்கது.1968 ஆம் ஆண்டு தொழில்முறை ரீதியில் போட்டியிட தொடங்கிய இவர் உலகப் போட்டிகளில் ஃபெதர் வெயிட், சூப்பர் ஃபெதர் வெயிட் மற்றும் லைட் வெயிட் பட்டங்களை வென்றவர்.

கண்ணிவெடி அகற்றும் பதினாறு தொழிலாளர்கள் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டனர்;

ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் பதித்து வைத்த கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஐ. நா. சபை உதவி பெற்ற நிறுவனம்ஒன்று ஈடுபட்டு உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் 16 பேர் கோஸ்ட் மாநிலத்தில் இருந்து பக்டியா மாநிலத்துக்குச் செல்வதற்காக பயணம் செய்த போது கடத்திச் செல்லப்பட்டனர்.

அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கியவர்கள் தான் அவர்களை கடத்திச் சென்றனர். இந்த கடத்தல் லோகார் கார்டெஸ் சாலையில் நடந்தது. தலிபான்களின் வேலையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆட்களை கடத்துவது என்பது தீவிரவாதிகளுக்கு லாபம் தரும் தொழிலாக இருக்கிறது. கடத்தப்பட்டவர்களை மீட்ப தற்காக பெரும் தொகையை பணயத் தொகையாக அவர்கள் பெறுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் கண்ணிவெடியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பலியானார்கள். அல்லது காயம் அடைந்தனர். பாகிஸ் தானுக்கு அருகாமையிலுள்ள பகிற்ரா மாகாணத்திலே இக்கடத்தல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஸ்வாட் பிரதேச ராணுவ நடவடிக்கைகளில் தோல்வியை நெருங்கும் தலிபான்கள் இத்தொழிலாளர்களைக் கடத்தியுள்ளனர்.

இதனூடாக ஆப்கான் பாகிஸ்தான் அரசுகளைப் பணியவைக்கும் வேலைகளில் தலிபான்கள் ஈடுபடலாம். கடத்தப்பட்டோர் உள்ளூர் தொழிலாளர்களாகவுள்ளதால் சர்வதேச சமூகம் இக்கடத்தல் விடயத்தில் அதிக அக்கறை செலுத்தாது எனக் கருதப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானிய கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் 1800 வெளிநாட்டுப் பணியாளர்களும் எட்டாயிரம் உள்ளூர் வாசிகளும் ஈடுபட்டுள்ளனர். இது வரை மூன்றில் இரண்டு பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப் பட்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளன. 2001 ஆம் ஆண்டிலிருந்து இது வரை 21 வெளிநாட்டு தொழிலாளர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் களூடாக கடத்தப்பட்டோரை விடுவிக்க முயற்சிகள் செய்யப்படவுள்ளன.

பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்கள்

yusuf.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முன்றாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக ஆடிய இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணியின் சார்பாக பரணவித்தான 49 ஓட்டங்கள் பெற்றதே அதி கூடிய ஓட்டமாக இருந்தது. பந்து வீச்சில் அமீர், சஹிட் அஜ்மல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைப் பெற்றனர். கான் 2 விக்கெட்டையும் அப்துர் ரவுப், உமர் குல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதே வேளை 168 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்று பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 71 ஓட்டங்கக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணி சார்பாக மெண்டிஸ், மெத்திவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடரும்.

முள்ளி வாய்க்கால் : விஜி

Nanthi_Kadal_lagoon
புல் வெளியும்
கொஞ்ச மரங்களும்
கொண்ட இடங்களெல்லாம்
முள்ளிவாய்க்காலாய்தான்
கண்முன் விரிகிறது.

கடலின் நினைவு
அச்சம் தருகிறது
அதன் ஓ வென்ற
இரைச்சல்; தாண்டி
மனிதர்களின்
மரண ஓலம் மேலெழுகின்றது!

கடல் அறியுமோ
எங்கள் மனிதர்களின்
கண்ணீரின் உப்பையும்
குருதியின் அடர்த்தியையும்!

எந்தக் குழந்தை
தன் இறுதி மூச்சை
எங்கு நிறுத்தியதோ?
இன்னும் குழந்தைகள்
வழிதவறி அங்கு
அலைந்து திரியுமோ?

நீர்க்கரையில்
பாத்திரங்கள் பண்டங்கள்
சிதறிக் கிடக்கின்றன.
யாருக்காய் அவை காத்திருக்கின்றனவோ?

தனியே தொங்கும்
கைப்பை
சோகமாய் பார்த்திருக்கிறதே
போனவர் எப்போது
திரும்பி வருவாரோ?

புலம்பெயர் தெருக்களில்
இப்போது
சுடு சாம்பல்
காற்றில் மணக்கிறது!
சுற்றிலும்
மரண ஓலம் ஓயாது
துரத்துகிறது!

எந்தக்காலம் இனி
முள்ளிவாய்க்கால்
தன்
கதை பேசும்?

 விஜி

இறுதி ஆட்டத்தில் இந்தியா : சீன ஆதிக்கத்தில் இலங்கை – வீரகேசரி

Indo - Lanka Accordநூற்றாண்டு காலமாக புலம் பெயர்ந்திருந்த ஓரினம், இரண்டாம் உலகப் போருக்குப் பின், தங்களுக்கென்றொரு தாய் திருநாட்டைப் பெற்றதும், அதை எப்படி உலக அரங்கில் முன்னிலைப்படுத்தியிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென தமிழக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி கூறியுள்ளார்.

இவர் அழுத்திக் கூறியிருக்கும் விடயம், புலம்பெயர்ந்த ஈழத் தமிழனத்தை நோக்கி, முன்வைக்கப்பட்டிருப்பதாகக் கருதலாம்.சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்ட நிலையில், சர்வதேசப் பரப்பெங்கும், அதன் நீட்சியை அசைத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு, எவ்வாறு மேற்கொள்ளப்படலாமென்பதை வரலாற்றுப் பதிவுகள் உணர்த்துகின்றன.

இத்தகைய களநிலை மாற்றங்களின் பௌதிக தன்மைகளை அவதானிக்கும் அதேவேளை, சுயநிர்ணய உரிமை சார்ந்த அடிப்படைக் கருத்துருவத்தையும் அதன் பண்புகளையும் உயிர்ப்புடன் தக்க வைக்க புவிசார் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவையொன்றும் புரிந்து கொள்ளப்பட முடியாத கடினமான விடயமல்ல.இந்திராகாந்தி முதல் சோனியா காந்தி வரை ஈழப்பிரச்சினை குறித்தான அவர்களின் பார்வையினையும், வெளியுறவுக் கொள்கையினையும், ஒரு மதிப்பீட்டு ஆய்விற்கு உட்படுத்தினால், தற்போதைய களநிலைவரத்தின் நிஜத் தன்மையை புரிந்து கொள்ளலாம். 80களில், போராட்ட இயக்கங்களுக்கு படைக்கல உதவி மற்றும் பயிற்சிகளை வழங்கிய இந்தியா, 1987 இல் இலங்கையுடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தில், தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்க முயலவில்லை.

இந்திய மத்தியஸ்தத்தில் நடைபெற்ற திம்பு மகாநாட்டில், சகல இயக்கங்களினாலும் முன்வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளையும் அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கவுமில்லை. அது குறித்து பரிசீலிக்கவுமில்லை. ஏற்கனவே இலங்கையினால் நிராகரிக்கப்பட்ட திம்புக் கோரிக்கைகளை முன்வைத்து அழுத்தம் கொடுத்தால், தனது பிராந்திய நலனை முன்னிறுத்தும் ஒப்பந்தம், நிறைவேறாமல் போகும் வாய்ப்பு ஏற்படலாமென்பதை அன்று இந்தியா உணர்ந்து கொண்டது.

உண்மையாகவே ஈழ மக்களின் மீது இந்தியாவிற்கு அக்கறை இருந்திருந்தால், போராட்டச் சக்திகளை அந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் இணைத்து, தனது உறுதியான நிலைப்பாட்டினை நிரூபித்திருக்க முடியும்.இலங்கையின் வான்பரப்பு இறையாண்மை மீறி, பூமாலை நடவடிக்கை மூலம், குடாநாட்டில் உணவுப் பொட்டலங்களை வீசிய காந்திதேசம், இலங்கைத் தமிழ் மக்களுக்கான பிறப்புரிமை அரசியல் கோட்பாடு சார்ந்த விடயத்தில், மேலதிக அழுத்தத்தை பிரயோகித்திருக்கலாம்.

ஆனாலும், இலங்கையை தனது இராஜதந்திரப் பிடிக்குள் கொண்டு வர, தமிழ்மக்களுக்கு அன்று பூமாலை போட்டது. இன்று இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைககளுக்கு பக்க பலமாக நின்ற இந்தியா, தமிழ் மக்களுக்கு புதிய பூமாலையைப் போடுமென்று எண்ணியது தவறானதாகும்.

பூமாலை தொடுப்பதும், எதை மற்றவர்களின் கழுத்தில் போடுவதும், உள்நோக்கம் கருதி நிறைவேற்றப்படும் விவகாரமென்பதை பலர் புரிந்து கொள்ளவில்லை. பல்லின மக்கள் வாழும் இந்திய பெருநிலப்பரப்பில், தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டங்கள் தொடர்ந்த வண்ண முள்ளன. இரணுவப் பலத்தை ஏவிவிட்டு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

தேசியக் கட்சிகளுக்கு மாற்றீடாக பல மாநிலக் கட்சிகள் புதிதாக உருவாகுவதன் காரணிகளை, இந்தியக் கட்டமைப்பின் பலவீனத்திலிருந்து உணரலாம். இத்தகைய நிலப்பிரபுத்துவ தன்மை அழியாத, இந்திய அதிகார வர்க்க அரசியல் கட்டமைப்பானது இனத்துவ தேசியத்தின் உள்ளார்ந்த பண்புகளை உள்வாங்கிக் கொள்ளுமென்று கற்பிதம் கொள்ள முடியாது.

ஆளும் இந்திய அதிகார பீடமானது, தனது மாநிலங்களைக் காலனிகளாகப் பார்க்கும் அரசியல் சூத்திரத்தை, ஈழத் தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ளவில்லை. தமிழகத்தினூடாக இந்திய அரசியல் பற்றிய புரிதல் வெளிப்படுத்தும் செய்தி, பிராந்திய நலன் சார்ந்த பார்வையினையும், அந்நாட்டின் அதிகார பீட அசைவியக்கத்தையும் உணர்ந்து கொள்ள முடியாதவாறு தடுக்கின்றது.

தமிழக மக்களின் ஈழத்தமிழர் ஆதரவு எழுச்சிகளும், போராட்டங்களும் சர்வதேச அளவில் புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்படும் சுயநிர்ணய உரிமை முழக்கத்திற்கு ஒரு உந்து சக்தியாக அமையுமே தவிர, இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் துளியளவு மாறுதல்களையும் ஏற்படுத்த உதவாது.

இலங்கை குறித்த மத்திய அரசின் கொள்கையே தமது கொள்கையென சில தமிழக அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்தியிருந்ததை தமிழ் மக்கள் கவனிக்கவில்லை. அவர்களை இனவிரோத சக்திகளென்றும் யுத்தமொன்று நடைபெறும் போது பொது மக்கள் கொல்லப்படுவது இயற்கை என்று கூறியவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதுமாக, தமிழ்நாட்டு அரசியல் பாணியில், விடுதலைப் போராட்ட அரசியலை முன்னெடுத்த தவறுகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்னமும், இந்திய இரட்சகர்களின் கைகளிலேயே ஈழத் தமிழனத்தின் வாழ்வு ஒப்படைக்கப்பட்டிருக்கிறதென்று கூறும், வரலாற்று உண்மைகளை மூடிமறைக்கும் சக்திகள் குறித்தும் மிகுந்த அவதானம் தேவைப்படுகிறது.

சீனா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகள், இலங்கையினுள் கால்பதிக்கக் கூடாதென்பதற்காக ஈழத் தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறைக்கு இந்தியா உதவி புரிகிறதென்று பெருமை கொள்வது மிகக் கேவலமானது. அதேவேளை இலங்கையில், இனப்பிரச்சினை என்கிற விவகாரமொன்று இல்லாதிருந்தால், எவ்வாறு இந்தியாவால் இலங்கையில் கால் பதித்திருக்க முடியும்?

இதற்கான பதிலில்தான், சகல முடிச்சுகளும் ஒன்று குவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் உதவிகளினால் ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்குலக நாடுகளும் படைக்கல உதவி புரிந்ததாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்போடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் இந்தியாவின் அடுத்த கட்ட நிகழ்ச்சி நிரல் என்ன?  ஏற்கெனவே இப்போரினால் பாதிப்புற்ற தாயக, புலம்பெயர்ந்த ஈழத் தமிழினம், இந்தியா மீது, வன்மம் கலந்த வெறுப்புணர்வோடு இருப்பதாக ஆய்வாளர் பி.ராமன் எச்சரிக்கின்றார்.

புலம்பெயர்ந்த நாட்டில் பிறந்து வளரும் புதிய தலைமுறையினர் இந்தியாவின் பிராந்திய சுயநலன் குறித்து தெளிவாகப் புரிந்துள்ளார்கள். இந்நிலையில் ஈழத் தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகள் மீது, கரிசனை கொண்டவர்கள் போன்று சித்திரிப்பதற்காக, இந்தியா சில நகர்வுகளை மேற்கொள்ள எத்தனிக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு சங்கமிக்க விரும்பாத ஏனைய அரச சார்பு தமிழ் கட்சிகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைத்து விடும் முயற்சிகளில் இந்தியா ஈடுபடலாம்.

இந்திய அமைதிப்படைக் காலத்தில் இவ்வகையான நகர்வொன்றில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றிருந்தது. அப்போது மாகாண சபைத் தேர்தலில் இச் சூத்திரம் நிறைவேற்றப்பட்டாலும், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இந்திய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஈரோஸ், அமைப்பு தனியாகப் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய இந்திய நகர்வினை, இலங்கை ஆட்சியாளர்கள் கவனிக்கவில்லையென்று நினைப்பது தவறு.

இலங்கை நாடாளுமன்றத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெளியேற்றுவோமென அரசாங்க உயர் மட்டத்தினர் விடுக்கும் எச்சரிக்கைகளிலிருந்து, இந்திய இலங்கையின் புதிய உரசல் போக்குகளை அவதானிக்கலாம். ஏனைய தமிழ்க் கட்சிகள், தமது ஈழம் என்கிற பெயர் கொண்ட கட்சிகளை கலைத்து விட வேண்டுமென மேற்கொள்ளப்படும் அதிரடி நகர்வுகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முயலும் எத்தனிப்புகளும் பல செய்திகளை இந்தியாவிற்கு வழங்குமென்று எதிர்பார்க்கலாம்.

அதாவது ஜனநாயக அரசியல் முகமில்லாத மனிதர்களாக, ஈழத் தமிழர்களை ஆக்கும் முயற்சியில், பேரினவாத சக்திகள் ஒருமித்து செயல்படுகின்றன. ஆனாலும், விடுதலைப் புலிகளின் இராணுவப் பலத்தை சிதைப்பதில் பேருதவி புரிந்த, இந்தியாவை விட்டு அகல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னமும் போர்க்குற்றம், மனித உரிமை மீறல், இனப்படுகொலை என்கிற அரசாங் கத்தின் மீதான குற்றச்சாட்டுகள், சர்வதேச மட்டத்தில் உயிர்ப்புடன் உலா வருகின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சீனாவைவிட, இந்தியாவின் சர்வதேச இராஜதந்திரப் பலமே இலங்கை அரசாங்கத்துக்குத் தேவை.

அதுவரை இந்தியாவுடன் அனுசரித்துச் செல்லும் தந்திரோபாயத்தை, இலங்கை மேற்கொள்ளுமென்பதை ஊகிப்பது கடினமான விடயமல்ல.கடந்த மாதம் 47 நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், லத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகள் அரசிற்கு ஆதரவளித்தன.

இந்தியாவின் இராஜதந்திர நகர்விற்கு கிடைத்த வெற்றியாகவே பல சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஆனாலும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மறுபடியும் இவ்விவகாரம் முன்னெடுக்கப்படக் கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றன. இதில் அமெரிக்காவும் இணைந்து கொள்ளலாம். யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்த இறுதி மூன்று நாட்களில், அங்கு என்ன நடந்தது என்பது தமக்கு நன்றாகத் தெரியுமென அமெரிக்கா தரிவித்த கருத்து இங்கு கவனிக்கத்தக்கது.

சீனாவைப் பொறுத்தவரை அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு அண்மைக்காலமாக தெரிவித்து வரும் கருத்துகளையும் அவதானிக்க வேண்டும். இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் அண்டை நாடோ (இந்தியா) அல்லது சர்வதேசமோ தலையிடக் கூடாதென சீனா எச்சரிக்கிறது. அத்தோடு மனிதாபிமான உதவியினை மட்டுமே இவர்கள் இலங்கைக்கு வழங்கலாமென நிபந்தனைகளையும் விதிக்கின்றது.

இந்நிலையில் இந்திய நலனிற்காக, விரும்பியோ அல்லது விரும்பாமலோ தமது வாழ்வாதாரங்களை தொலைத்த ஈழத் தமிழ் மக்களுக்கு காந்தி தேசம் என்ன செய்யப் போகிறது?

சர்வதேச அரங்கில் முன்னெடுக்கப்படும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு, இந்தியா தொடர்ந்தும் உதவி புரிந்தால், இடைவெளி நீளும், தென்னாசியாவில் எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களின் ஆதரவினையும் இந்திய அரசு இழக்கும்.

வவுனியா அகதிமுகாம்களில் மூளைக்காய்ச்சல் தொற்றுநோய் – இது வரை 34 பேர் உயிரிழப்பு

brain-fever.jpgவடக்கே இடம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் மூளைக்காய்ச்சல் தொற்று நோய்பரவுவது அவதானிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 3 மாதங்களில் இதனால் பாதிக்கப்பட்ட 64 பேரில் 34 பேர் உயிரிழந்துள்ளனர் என வவுனியா அரச வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய நிபுணர் மகேஸ்வரன் உமாகாந்த் நேற்றிரவு பி.பி.ஸி.தமிழோசைக்கு  தெரிவித்தார்.  உயிரிழந்தவர்களில் 24 பேர் இளவயதினர் என்றும், வைரஸ் மூலம் தொற்றுகின்ற  இந்த நோயைக் கண்டுபிடிப்பதற்கான வசதிகள் வவுனியாவில் இல்லாத நிலையில் கண்டியில் உள்ள வைத்திய நிபுணர்களின் உதவியோடு இந்த நோயை ஆரம்ப நிலையில் அடையாளம் காண்பதற்கான வசதிகள் தற்பொழுது கிடைத்துள்ளன எனவும் அவர் பி.பி.ஸிக்கு கூறினார்.

அதிஉயர் பாதுகாப்பு வலயமாக முல்லைத்தீவு பிரகடனம் : அரசாங்க அதிபர்

mullai-ga.jpgமுல்லைத் தீவு நகர் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி மேரி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார் என இணைய தள செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.  அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

திருகோணமலை புல்மோட்டையிலுள்ள ‘சகனகம’ நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட இடம்பெயர் மக்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை நேரில் வந்து பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வன்னியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையையடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது புல்மோட்டை சகனகம நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்தித்த அரச அதிபர் அந்த மக்களின் குறை,நிறைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதன்போது அவர் கூறுகையில்,

“தற்போதைய நிலையில் குறைந்தது அடுத்த மூன்று மாதங்களுக்கு இங்குள்ள முகாம்களிலேயே நீங்கள் தங்க வேண்டியிருக்கும். அதன்பின் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பணிமனை மாங்குளம் பகுதியிலேயே அமையவுள்ளது.

இடம்பெயர்ந்த முல்லைத்தீவு மக்கள் அனைவரும் மாங்குளம் பகுதிக்கே அழைத்துச் செல்லப்படுவர். முல்லைத்தீவு நகர் அதிஉயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே முல்லைத்தீவுக்கு எவரையும் அழைத்துச் செல்ல முடியாது. அதனால் அனைவரையும் மாங்குளத்திற்கே அழைத்துச் செல்வோம்” என்றார். இவ்வாறு அச்செய்தியில் குறிப்பிடப்படுகின்றது.