July

July

வவுனியா, யாழ்ப்பாணம் மாவட்ட உதவி ஆணையாளர்கள் கொழும்புக்கு அழைப்பு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடலுக்கு வவுனியா, யாழ்ப்பாணம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்களை தேர்தல் ஆணையாளர் கொழும்புக்கு அழைத்துள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி ராஜகிரியவில் உள்ள தேர்தல் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு யாழ்., வவுனியா மாவட்ட உதவி ஆணையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான அறிவுறுத்தல்கள் இவர்களுக்கு வழங்கப்படும் என தெரியவருகின்றது. நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கிடையில் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பிரசார வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளன. பல்வேறு வகையான சுவரொட்டிகள் நகரில் காட்சி தருகின்றன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆனாலும் கட்சிகளிடையே ஆர்வம் காணப்படுகின்றது.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கே நடைபெறும் முதலாவதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான தேர்தல் இதுவாகும். வவுனியா நகர சபைக்கு 135 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். ஆனால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுடைய எண்ணிக்கை 11 ஆகும்.கட்சியினரிடையே ஆர்வம் காணப்பட்ட போதிலும் வாக்காளர் மத்தியில் சோர்வு தன்மை அவதானிக்கப்படுகின்றது.

பிரபாகரன் இடத்தைப் பிடிக்க யாருடனும் சண்டையிடவில்லை : வி. உருத்திரகுமாரன்

rudrakumaaran_v.jpgதமிழ் மக்கள் பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு காண்பதற்கே நாடு கடந்த “தமிழீழ அரசு – பிரபாகரன் விட்டுச் சென்ற கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் மட்டும் தான ஈடுபட்டிருப்பதாக வழக்கறிஞர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.  நியூயோர்க்கைச் சேர்ந்த வழக்கறிஞரும் அரசியல் ஆலோசகருமான விசுவநாதன் உருத்திரகுமாரன் ஜுனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் விபரம் வருமாறு:-

”நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு, புலம் பெயர்ந்த அனைவரின் உதவியும் அவசியம் தேவை. இந்தியாவின் உதவி மிகவும் அவசியம். இந்தியாவை நாங்கள் என்றுமே எதிரி நாடாக பாவித்ததில்லை. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழர்கள்தான் இந்த இயக்கத்தின் தூண். ஆயுதம் எங்கள் குறிக்கோள் அல்ல.

இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்த் தலைவர்கள் அமிர்தலிங்கம், செல்வா போன்றோர் அறவழியில் போராடினார்கள். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். ஆனால், இலங்கை அரசு இதை நசுக்கியது. கயமைத்தனமாக அடியோடு அழிக்க முனைந்தது. வேறு வழியின்றி ஆயுதம் எடுத்தோம். அதன் பின்னரே வெளியுலகுக்கு தமிழினத்தின் துன்பங்கள் தெரியவந்தன. ‘போராட்ட வடிவங்கள் மாறினாலும், லட்சியம் ஒன்றுதான்!’ என்று சுதுமலையில் எங்கள் தலைவர் கூறினார்.

தமிழர்களின் தேசியப் பிரச்னைக்கு சுயநிர்ணய அடிப்படையில் ஒரு தீர்வு காண்பதற்கு இது அமைக்கப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு சமபல நிலை அவசியம். அரசுக்கு சமமாக இருந்தோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, இப்போது அந்த இடைவெளியை நிரப்ப மிகவும் அவசியம். புறநிலை அரசுக்கும் [Government in excile] நாடு கடந்த அரசுக்கும் [Transnational Government] பல ஒற்றுமைகள் இருந்தாலும், சில வேறுபாடுகள் உள்ளன.

ஒரு நாட்டில் அரசு அமைக்க இயலாதபோதே புறநிலை அரசு பிறக்கும். தலாய்லாமா, பாலஸ்தீனர்கள், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்றவை இந்த வகை. நாங்களோ, உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களை ஒருங்கிணைக்க இதைக் கையில் எடுத்திருக்கிறோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு இன்னமும் அமைக்கவில்லை.

அதை அமைப்பதற்காகவே செயற்குழுவை ஏற்படுத்தியுள்ளோம். பலர் இந்தியாவில் இருந்து தொடர்புகொண்டு, ‘உலகத் தமிழர் வரலாற்றில் இது ஒரு புதிய சகாப்தமாயிற்றே. எங்களை ஏன் சேர்க்கவில்லை?’ எனக் கேட்கின்றனர்.  எங்கள் அறிக்கையை இராஜதந்திரிகள், தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி, அவர்களின் கருத்துகளையும் கேட்டிருக்கிறோம். அடுத்தது, ஒவ்வொரு நாடுகளிலும் செயற்குழுவினை அமைக்கவிருக்கிறோம். கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளன. இந்தக் குழுக்களுக்குப் பயிற்சிப் பட்டறையும் நடத்தி வருகிறோம்.

தமிழ் ஈழப் பிரச்னையில், குறிப்பாக கடந்த நான்கு மாதங்களாக நடந்த சம்பவங்களில், இந்தியாவின் பங்கை பல கோணங்களில் ஆராய்ந்து வருகிறோம். எங்கள் திட்டம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றுதான் கூறுகிறோம். இனி ஆயுதப் போராட்டம் இல்லை. இந்தியாவின் இறையாண்மையையோ அல்லது பூகோள நலன்களையோ எம்முடைய செயல்கள் பாதிக்காது என உறுதி அளிக்கிறோம்.

நாங்கள் திட்டமிடுவது, வெறும் வலைதளத்தில் மட்டுமே வாழும் அரசு அல்ல.தலைவருக்குப் பிறகான பதவிச் சண்டையும் அல்ல. எந்த ஒரு குழுவையோ அல்லது தனிநபரையோ இது முன்னிலைப்படுத்தாது. விரைவில் தேர்தலும் நடத்துவோம். ஜனநாயக முறைப்படி, அதில் யாரும் பங்கு பெறலாம். முகாம்களில் சீரழியும் மூன்று இலட்சம் ஈழ மக்களைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம். எங்கள் இலக்கு, தனி ஈழம். அதை இனி ஜனநாயக முறையில் இந்தியா, உலக நாடுகளின் உதவியுடன் பெறுவோம்.

”பிரபாகரன் இடத்துக்கு நான் வர முயற்சிக்கிறேன்  என்பது சரியல்ல. அவர் இடத்தை இட்டு நிரப்புவதற்கு யாருமில்லை. அதற்கான முயற்சியை நான் மட்டுமல்ல, யாருமே எடுக்க மாட்டார்கள். அவருடைய கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சியில்தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம். ஈழ தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்காகவும் உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது இவ்வாறு உருத்திரகுமாரன் கூறியுள்ளார்.

இலங்கை, இந்தியா, நியூஸிலாந்து முத்தரப்பு போட்டி விபரம்

srilanka-cri.jpgஇந்தியா,  நியூஸிலாந்து, இலங்கை அணிகள் பங்கு பெறும் முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான போட்டிகள் நடைபெறும் தின அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 8 ஆம் திகதி தொடங்கும் இந்த கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10 ஆம் திகதி இந்தியா தன் முதல் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது.

செப்டம்பர் 8 ஆம் திகதி இலங்கையும் நியூஸிலாந்தும் மோதுகின்றன. செப்டம்பர் 12 ஆம் திகதி இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதுகின்றன.

இதன் பிறகு இந்தப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகள் செப்டம்பர் 14 ஆம் திகதி இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. இந்த 4 போட்டிகளும் பிரேமதாச விளையாட்டு மைதா னத்தில் நடைபெறும்.

சக்தி வாய்ந்த வலிநிவாரண மாத்திரைகளால் மைக்கல் ஜக்சன் மரணம் அடைந்தார்

maical-jak.jpgமைக்கல் ஜக்சனின் உடலில் டாக்டர்களால் பரிந்துரை செய்யப்பட்ட ஏராளமான வலி நிவாரண மாத்திரைகள் ஒரே சமயத்தில் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. எனவே ஒரே சமயத்தில் அவ்வளவு மாத்திரைகளை பரிந்துரை செய்தவர் யார் என்று பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

பாப் இசையால் உலகையே ஆட்டிப்படைத்த மைக்கல் ஜக்சனின் மரணத்தில் இன்னும் சந்தேகம் நீடித்து வருகிறது. அவருடைய உடல் இரண்டு முறை பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக சந்தேகம் எழுந்ததால் அவருடைய வயிற்றுப் பகுதிகளும் தனியாக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஏற்கனவே அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த சில தகவல்களை இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்டது. அதில் ‘மைக்கல் ஜக்சனின் உடல் முழுவதும் ஊசியால் குத்தப்பட்ட தழும்புகள் இருந்தன என்றும், உடல் பலவீனமான நிலையில் எலும்புகள் நொறுங்கும் படியாக இருந்தது’ என்றும் கூறப்பட்டது.

இந்த சூழ்நிலையில், வயிற்றுப் பகுதியில் இருந்த விஷம் குறித்த பரிசோதனை அறிக்கையின் (டாக்சிகோலோஜி) சில பகுதிகளை லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி சன்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மைக்கல் ஜக்சன் உடலில் கலந்திருந்த மதுபான வகைகளின் அளவுகளை பார்த்தால், சாதாரண மனிதனையே கொன்றுவிடும் அளவுக்கு இருந்தது. எனினும் அதிக அளவு மதுபான பழகத்துக்கு நீண்டகாலமாக அவர் பழகி இருந்ததால் அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அதே நேரத்தில் அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகளை ஒரே சமயத்தில் சாப்பிட்டதால் உயிரிழந்து இருக்கிறார்.

வலி நிவாரண மாத்திரைகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் ‘டெமரொல்’ என்ற மாத்திரையும் ஹெரொயின் போதைப் பொருள் கலந்த ‘மெத்தடோன்’ என்ற மாத்திரையும் மைக்கல் ஜக்சன் உடலுக்குள் இருந்தன.

மேலும், அவரது இரத்தத்தை பரிசோதித்து பார்த்த போது மன அழுத்தத்தை போக்கக்கூடிய சக்தி வாய்ந்த மருந்தான ‘ஜெனாக்ஸ்’ இருந்தது.

இது தவிர அறுவை சிகிச்சை செய்யும் முன்பு நோயாளிகளை மயக்கமடைய செய்வதற்காக தரப்படும் ‘புரோபோபோல்’ என்ற மருந்து அவரது வயிற்றுப் பகுதியில் காணப்பட்டது. ‘இன்சோம்னியா’ என்ற நோய் இருந்ததால், அதை தூக்க மாத்திரையாக மைக்கல் ஜக்சன் பயன்படுத்தியதாக அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி தெரியாமல் இருப்பதற்காக நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ‘டிலவ்டிட்’ என்ற மருந்தும் மைக்கல் ஜக்சன் வயிற்றில் இருந்தது. இறக்கும்போது ஒரே சமயத்தில், ‘டெமரால்’, ‘மெத்தடோன்’, ‘புரோபோபோல்’, இன்சோம்னியா’ என பல்வேறு மருந்துகளை மைக்கல் ஜக்சன் சாப்பிட்டு இருக்கிறார்.

எனவே ஒரு மனிதனுக்கு இதுபோன்று ஏராளமான சக்தி வாய்ந்த மருந்துகளை ஒரே நேரத்தில் சாப்பிட பரிந்துரை செய்து மருந்துச் சீட்டு எழுதிக் கொடுத்த டாக்டர் யார் என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் இருப்பதாக ‘தி சன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தப் பரிசோதனை அறிக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸாரிடம் அளிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பொலிஸ் அதிகாரி வில்லியம் பிராட்டோன் கூறுகையில், “பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் எங்களுக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதன்படி விசாரணை நடத்தி வருகிறோம். அதிக அளவிலான மாத்திரைகளை திட்டமிட்டு வழங்கப்பட்டதா? அல்லது தற்செயலாக அனைத்து மாத்திரைகளையும் மைக்கல் ஜக்சன் குடித்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

அணுசக்தி கருவிகள் வழங்கத் தடை; இந்தியாவுக்கு எதிராக ஜி-8 நாடுகள் தீர்மானம்

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அணுசக்தி உற்பத்திக்கான தொழிநுட்ப மற்றும் கருவிகளை வழங்கக் கூடாது என்று ஜி- 8 நாடுகள் மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு இருப்பதால் இந்திய அரசு திகைப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அணு மின்சார உற்பத்திக்காக அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக அணு உற்பத்திக்கான மூலப் பொருட்களை வழங்கும் என்.எஸ்.ஜி. எனப்படும் 45 நாடுகள் கூட்டமைப்பின் அனுமதியும் பெறப்பட்டது.

அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடாததால் அணு தொழில்நுட்பத்தை வழங்கக் கூடாது என்று அந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், அமெரிக்காவின் தலையீடு காரணமாக அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையழுத்து போடாவிட்டாலும் கூட இந்தியாவுக்கு மட்டும் முழு விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், அணு சக்தியை அபாயகரமாக பயன்படுத்தாது என்று இந்தியாவுக்கு நற்சான்றும் வழங்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இத்தாலியில் நடந்த ஜி-8 வளர்ந்த நாடுகள் மாநாட்டில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அணு ஆயுத பரவலை தடுக்கும் விதமாக அணு மூலப் பொருள் (யுரேனியம்) செறிவூட்டல் மற்றும் மறுசுழற்சி தொடர்பான தொழிநுட்பங்களை பிற நாடுகளுக்கு வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும். இது குறித்து என். எஸ். ஜி. விதிகளை வலுப்படுத்த வேண்டும். அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் கருவியை வழங்குவதில்லை என்ற ஒருமித்த முடிவை இந்த ஆண்டு இறுதிக்குள் என். எஸ். ஜி. எட்ட வேண்டும்.

அடுத்த ஆண்டில் இருந்து இதை அமுல்படுத்த நாங்கள் (ஜி-8) ஒப்புக்கொள்கிறோம். உலகளாவிய அளவில் இந்தத் தடையை அமுலுக்குக் கொண்டு வரும் வகையில் தனது பணிகளை விரைவாக என். எஸ். ஜி. முடுக்கி விட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. தீர்மானத்தில் ஜி-8 நாடுகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட எட்டு நாடுகள் கையெழுத்திட்டு இருக்கின்றன. ஜி-8 மாநாடு முடிந் ததும், தீர்மானம் குறித்த அறிக்கை வெளியானது. அப் போது ஜி-8 மற்றும் ஜி-5 மாநாடுகளில் பங்கேற்பதற்காக சென்ற இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில் அணு ஆயுத பரவல் தடைச் சட்டத் தில் கையெழுத்திடாத இந்தியா போன்ற நாடுகளுக்கு யுரேனியா செறிவூட்டல் மற்றும் மறு சுழற்சி தொழில் நுட்பத்தையும், அணுசக்தி உற்பத்திக் கருவிகளையும் வழ ங்கக் கூடாது என்று தீர்மானத்தில் அமெரிக்காவே கையெ ழுத்திட்டு இருப்பதால் இந்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

மட்டக்களப்பில் யுத்த சூழ்நிலை காரணமாக வீடுகளை இழந்த 118 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

மட்டக்களப்பு செங்கலடி – பதுளை வீதியிலுள்ள கிராமங்களில் கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது இருப்பிடங்களை இழந்த குடும்பங்களுக்கு சர்வோதயத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 118 வீடுகளும் நேற்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. கித்தூள், றூகம், கோப்பாவெளி ,பெரிய புல்லுமலை,கரடியனாறு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கே சகல வசதிகளையும் உள்ளடக்கிய இவ் வீடுகள் கையளிக்கப்பட்டதோடு மேலும் 32 வீடுகள் புனரமைக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டன.

றூகம் சரஸ்வதி வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற வைபவத்தில் சர்வோதயத்தின் நிறைவேற்று இயக்குநர் வின்னி ஆரியரட்ன கலந்து கொண்டு இவ் வீடுகளை கையளித்தார். இந் நிகழ்வில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த 250 பாடசாலை மாணவர்களுக்கும் ,15 பால் உற்பத்தியாளர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன. மேலும் கித்தூள் கிராமத்தில் ஒன்று கூடல் மண்டபமொன்றும் சர்வோதய நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இதே வேளை சத்துருக்கொண்டான் சர்வோதயப் பண்ணையில் தொழில் பயிற்சி முடித்துக் கொண்ட 61 பேருக்கு தொழில் உபகரணங்களை வழங்கும் மற்றுமொரு வைபவமும் நேற்று நடைபெற்றது. ஒக்.ஸ. பார்ம் நிறுவனத்தின் இலங்கைக்கா வதிவிடப் பிரதிநிதி ஜோன் பார்ம் இதில் கலந்து கொண்டு அலுமினியம் பொருள் உற்பத்தி ,தச்சு மற்றும் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் போன்ற துறைகளில் தொழில் பயிறிச்சி பெற்றவர்களுக்கு இந்த உபகரணங்களை வழங்கினார்.

15 பேருடன் இந்திய சரக்குக் கப்பல் கடற்கொள்ளையரால் கடத்தல்

சோமாலியா அருகே போஸாசா என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டதாக ஆஸ்திரேலிய இணையத் தள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் 15 இந்தியர்கள் இருந்தனர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது. 

இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்திய சரக்குக் கப்பல் ஒன்று 15 பேருடன் சென்று கொண்டிருந்தபோது, போஸாசா துறைமுகத்திற்கு 14 கடல் மைல் தொலைவில் கடற்கொள்ளையர்கள் அதனை மடக்கி கடத்திச் சென்று விட்டனர்.

தற்போது அந்தக் கப்பல் சட்டத்தின் ஆட்சி இல்லாத, சோமாலியாவின் வட கிழக்குப் பிராந்தியத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு ராஜ்யத்திலிருந்து இந்தக் கப்பல் சோமாலியாவிலுள்ள துறைமுகத்திற்கு வந்தது. சரக்குகளை இறக்கி விட்டுத் திரும்பும்போதே இது கடத்தப்பட்டது. சவூதி அரேபியாவுக்கும், ஆபிரிக்க நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து சரக்குப் போக்குவரத்தை கையாண்டு வரும் கப்பல் இது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார தனியார் நிறுவனம் தொடர்பாக ஆராய விசாரணைக் குழு!

jhon_senevirathna.jpgஇலங்கை மின்சார தனியார் நிறுவனம் (லெகோ) தொடர்பாக ஆராய விசேட விசாரணைக் குழுவொன்றை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டப்ளியூ. டீ.ஜே.செனவிரத்ன நியமித்துள்ளார். இக்குழு உரிய விசாரணைகளை  மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்குள் அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் இணை நிறுவனமாக கிழக்கிலும் தெற்கிலும் மின்சார விநியோகம்,  அபிவிருத்தி. நுகர்வேர் சேவை  மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட   இலங்கை மின்சார தனியார் நிறுவனம் தொடர்பில் ஊடகங்களில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இக்குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையைக் கண்டறியும் முகமாகவே ஐவர் கொண்ட விசாரணைக் குழுவை அமைச்சர் நியமித்துள்ளார். 

மீன்களை தகரத்தில் அடைக்கும் தொழிற்சாலை தெற்கில்- அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தகவல்

felixperera.jpgமீன்களை தகரத்தில் அடைக்கும் தொழிற்சாலையொன்றை தெற்கில் அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். நியுசிலாந்து நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் இத்தொழிற்சாலை காலி மாவட்டத்திலுள்ள அக்மீமன என்ற இடத்தில் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்துக்கு இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கையில் பயங்கரவாதம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மீன்பிடித்தடைகள் நீக்கப்பட்டதால் இப்போது மீன்பிடித்துறை அபிவிருத்தியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தெருக்கதை: வழிப்போக்கன்

kulan-article2.jpg
தெருக்கதைகள்: 1

நான்: யோசப்பு அண்ணை! எல்லாம் உப்புச்சப்பு இல்லாமல் முடிஞ்சு போச்சுது. நீங்கள்தான் புலிகளின்டை முதல் புள்ளியாக நிண்டனீங்கள்.
யோசப்பு: ஓம் தம்பி எங்கடை காலகஸ்டம் இப்படியாப்போச்சு. யாருக்குத் தெரியும் இவன் உப்பிடிப் படம்காட்டுவான் எண்டு.

நான்: நீங்கள்தான் தலைவரைத் தலையிலை கொண்டு திரிந்தனீங்கள். இப்ப உப்பிடிக் கதைக்கிறியள்.
யோசப்பு: கொண்டு தெரிஞ்சனாங்கள் தான். எங்களுக்கு விடுதலைவேணும் தானே தம்பி.

நான்: நீங்கள் மட்டும்தான் உண்மையைச் சொல்லுறியள். உங்களுக்கு மட்டும்தான் விடுதலை வேணும் எண்டு. புலியள் மக்களுக்கு விடுதலை, மக்களுக்கு விடுதலையெண்டு தங்களுக்குக்குத் தானே நாடு கேட்டவங்கள், நாடு நாடாய் காசு சேர்த்தவங்கள்.
யோசப்பு: நான் எங்களுக்குகெண்டது மக்களுக்குத் தான் தம்பி.

நான்: அப்ப நீங்கள் என்னும் மாறேல்லை?
யோசப்பு: நான் மாறிட்டன் அப்பு. கே.பின்டை பக்கம் மாறிட்டன். நான் இப்ப புலியில்லை.

நான்: அப்ப கே.பின்டை குழுவை என்னெண்டு சொல்லுறது?
யோசப்பு: அது பிரபாகரன் புலி இது கேபியின் புலி.

நான்: உங்கடை புலி என்ன செய்யப்போகுது?.
யோசப்பு: செய்தியள் பாக்கிறதில்லையோ? நாடுகடந்த தமிழ்ஈழத்துக்கான போராட்டம் தொடங்கிட்டம். எங்கடை அரசியல் போராட்டம்தான்.

நான்: நீங்கள் எல்லாரும் வைச்சால் குடும்பி வழிச்சால் மொட்டைதான்? ஒண்டில் ஆயுத போராட்டம் இல்லையெண்டால் அரசியல் போராட்டம்.
யோசப்பு: ஆயுதப்போராட்டம்தான் எல்லாம் முடிஞ்சுபோச்சே. உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து எங்களை நாசம் அறுத்துப்போட்டுதே. போதாதே தம்பி?.

நான்: வெளிநாடுகளைக் குறைசொல்லாதையுங்கோ? நீங்களும் அமெரிக்காவேடையும் சண்டைக்கு நிண்டனியள்தானே. எண்டைக்கு அரசியலைப்பற்றி யோசிச்சனியள்? சரி கிடைச்ச தீர்வுகளையாவது வைச்சுக் கொண்டு தொடர்ந்து போராடியிருக்கலாம் தானே? நீங்களும் எங்கடை மக்களையே கொன்றுபோட்டு இராணுவம் கொல்லுது என்று உலகுக்குப் படம் காட்டினியள் தானே. உங்கடை திருகு தாளங்களையெல்லாம் சற்றலைட்டிலை மற்றநாடுகள் பாத்திருக்கும். சொந்த மக்களையே பயணக்கைதியாக வைத்திருந்த ஒரேயொரு போராட்டம் உங்கடைதான்.
யோசப்பு: நடந்ததைக் கதைச்சுப் பிரயோசனம் இல்லை, நடக்க வேண்டியதைப் பாப்பம்.

நான்: இனி நடக்க என்ன கிடக்கு. ஊரை அடிச்சு அரசாங்கத்துக்குக் குடுத்தியள். போராட்டம் என்று போராடும் சக்திகளான மக்களையே கொன்று குவிச்சியள். மிச்சம் மீதியாய் கொஞ்சச்சனம் தப்பி ஒட்டி இருக்குதுகள். தொடருங்கோ உங்கடை போராட்டுங்களை. கிழக்கிலை நீங்கள் வளத்துவிட்ட நம்பிக்கை நட்சத்திரங்கள் கிளம்பிட்டினம். இனி இந்தியாவும் தன்ரை பங்குக்கு தமிழ்குழுக்களுக்கு காசும் ஆயுதப்பயிற்சியும் குடுத்துவிடும் சீனனை இலங்கையிலை இருந்து எறிய.
யோசப்பு: என்னடா தம்பி நம்பிக்கையைக் கைவிடக்கூடாது. இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்.

நான்: எல்லாம் செய்து முடிச்சுப்போட்டு இப்ப எங்களிட்டை வாறியள். அப்ப சொன்னம் கேட்டனியளோ? இப்பவும் நீயோ நானோ என்று பிரிஞ்சு நின்று அடிபடாமல் எல்லாருமாய் சேர்ந்து சேர்த்த காசுகளை அந்தமக்களுக்குக் கிடைக்கச் செய்கிறதோடை ஆயுதம் அது இது என்று அவசரப்படாமல் நிதானமாய் எப்படி உலகநாடுகளின் அனுசரணையோடை எம்மக்களுக்கு குறைந்தபட்ச அரசியல் தீர்வு ஏதாவது கிடைக்குமோ என்று பாருங்கோ.
யோசப்பு: அதைத்தானே எங்கடை கேபியும் சொல்லுறார். பிரபாகரன் இருக்கிறார் எண்ட மற்றக்குழு பிரபாகரன் வரட்டும் எண்டு பாத்துக் கொண்டிருக்கினம்.

நான்: கேபி சொல்லுறது சரி தமிழீழம் என்றும் சொல்லுறியள். உலகநாடுகளே சொல்லிப்போட்டுது சின்னத்தீவைப் பிரிக்க ஏலாது எண்டு. இப்ப பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ எண்டதில்லை இண்டைய பிரச்சனை. இருந்தா வரட்டும், அவர் வரமாட்டார் சனத்தைப்படுத்தின பாட்டுக்கு சனமே அடிச்சுச் சாக்காட்டிப் போடும். உங்கடை கேபியும் தமிழீழம் எண்டு காலத்தை இழுத்தடிக்கிறதை விட்டுப் போட்டு ஏதாவது உடனடியாக சூட்டோடை சூடா உலகத்தின்ரை பார்வை மற்றப் பக்கங்களுக்கு திரும்பமுன்னம் நடக்க வேண்டியதைப் பாருங்கோ. ஆறினால் கஞ்சி பழங்கஞ்சிதான்.

நான்: (யோசப்புவின் நண்பர் ஒருவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறார்) அண்ணை உங்கடை பிரெண்டு உங்களைக் கண்டும் காணாத மாதிரிப்போறார்.
யோசப்பு: அவர் என்ணோடை கொஞ்சம் மனக்கசப்புத் தம்பி. எல்லாம் புலிப்பிரச்சனைதான். வேறை என்ன காசுதான்.

நான்: புலிக்கெண்டு வாங்கி உங்கடை பொக்கட்டை நிரப்பிப்போட்டியள் போலை?
யோசப்பு: தம்பி உப்பிடிக் கதைக்கப்படாது. நான் புலிக்கு விசுவாசத்தோடைதான் காசு சேத்தனான். எங்களுக்கு, சேர்க்கிற காசிலை 15 விகிதகொமிசன் தந்தவங்கள்தான். நாங்கள் எங்கடை வேலை வில்லட்டியை விட்டுப்போட்டுத்தானே காசு சேர்க்கப் போனனாங்கள். போற இடத்திலை எத்தினை கேள்வி நியாயம். மழை வெய்யில்…காடு கரம்பையெண்டு திரிஞ்சனாங்கள்.

நான்: சரி மனச்சாட்சிப்படி சொல்லுங்கோ உது உதவியோ தொழிலோ?
யோசப்பு: உதவிதான் தம்பி. மற்றவை எல்லாம் வீட்டிலை குளிரிலை நித்திரை கொள்ளேக்கை நாங்கள் மட்டும் உந்தப் பனிக்கிள்ளையும் குளிருக்கிள்ளையும் திரிஞ்சு காசு சேத்தனாங்கள்.

நான்: அதுக்குத்தானே உங்களுக்கு கொமிசன் தந்தவங்கள். உங்களுக்குக் காசு தந்தவங்கள் எல்லாம் வானத்திலை இருந்து கொட்டுண்டதைப் பொறுக்கித்தரேல்லை.
யோசப்பு: நீ என்ன தம்பி உதிலைபோன என்ரை பழைய பிரெண்டு மாதிரிக்கதைக்கிறாய். அவரும் உப்பித்தான்; தந்தகாசைத் திருப்பித்தா எண்டு கேட்கிறார். போராட்டத்துக் கெண்டு கொடுத்துப்போட்டு என்னட்டைக் கேட்டால் நான் எங்கை போறது தம்பி.

நான்; கனக்கவே தந்தவர்? வாங்கின கொமிசனிலை குடுக்கவேண்டியது தானே.
யோசப்பு: ஒரு இலட்சம். அந்தக்காசை ஒவ்பிசிலை குடுத்திட்டன். போய் அவங்களைக் கேட்க வேண்டியது தானே.

நான்: உங்களிட்டைத் தந்த காசை எப்படி அவங்களிட்டைக் கேட்கிறது. உங்களுக்குத் தெரியுமோ அந்தாள் பொலிசுக்குப் போகலாமமெண்டு.
யோசப்பு: அதுதானே முடியாது தம்பி. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு எப்படி காசு குடுப்பாய் என்று கேட்டு அவரையுமெல்லோ உள்ளுக்குப் போடுவாங்கள்.

நான்: ஓகே..கொஞ்சப்பேர் வந்து தன்னை வெருட்டிக்காசு கேட்டது என்று சொல்லலாம் தானே. புலியள் வெருட்டிக்காசு வாங்கிறது ஐரோப்பா முழுக்கத் தெரியும் தானே.
யோசப்பு: அதுக்குத்தானே நான் கே.பின்டை பக்கம் போட்டேனே. பொலிஸ் வந்தால் நான் கூட்டிக் கொண்டுபோய் யாருட்டை காசு கொடுத்தனான் எண்டு காட்டுவன். பேந்து புலிகளும் அவரும் பட்டபாடு. இல்லையெண்டால் சொல்லுவன் நான் இப்ப கேபியின் பக்கம் புலியைப்பற்றி எனக்குத் தெரியாது எண்டு.

நான்: உப்பிடிச் சொல்லி நீங்கள் நழுவேலாது. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு காசு சேர்க்கிறதற்கு சட்டம் இடங்கொடுக்காது. காசுகுடுத்த எல்லாரும் சேர்ந்து பொலிசுக்கோ கோட்டுக்கோ போனால் வாங்கின காசுக்கு நீங்கள் தான் பொறுப்பு.
யோசப்பு: அதுதானே பிரபாகரனின்டை கையெழுத்தோடை றிசீட்டுக் கொடுத்திருக்கிறம். போய் பிரபாகனிட்டைக் கேட்க வேண்டியது தானே.

நான்: நீங்கள் சொல்லுறமாதிரி பிரபாகன் மேசையிலை இருந்து உந்த றிசீட்டுக்களுக்கு கையெழுத்துப் போட்டுக் கொண்டு இருந்ததாலைதான் போராட்டம் தோத்துப் போனதாக்கும். என்ன கதைவிடுகிறியள் அண்ணை. உந்த றிசீட்டே கள்ளவேலை தான். ஒண்டைப் பிடிக்கப்போய் எல்லாம் பிடிபடப்போகுது.
யோசப்பு:அப்ப என்ன தம்பி செய்கிறது.

நான்: போய் பிரபாகரனிட்டைக் கேழுங்கோ.
யோசப்பு: தம்பி என்னை நடுத்தெருவிலை விட்டுவிட்டுப் போகிறீர்.
நான்: நீங்கள் எல்லாரும் கறக்கிறதையெல்லாம் கறந்து போட்டு எங்களையும் மக்களை நடுத்தெருவிலைதானே விட்டுனீங்கள். வருவன் இப்பவில்லை… காசெண்டு வந்தால் பொல்லோடை வருவன்…