July

July

சிங்கப்பூரிலிருந்து வந்த இரு இளைஞர்கள் கைது

_arrested.jpgசிங்கப் பூரிலிருந்து நாடு திரும்பிய இரண்டு தமிழ் இளைஞர்கள் சீதுவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதிச் சோதனைப் பொலிஸார் இவர்களின் பொதிகளைச் சோதனையிட்டனர்.

அதன்போது அவற்றில் 72 கையடக்கத் தொலைபேசிகள், உதிரிப்பாகங்கள், மூன்று டிஜிற்றல் கமெராக்கள், 12 விஸ்கி போத்தல்கள், ஒரு லப்டொப், இரண்டு காட்டுன் சிகரட்டுகள் என்பனவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைக்காக இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இப்பொருட்களின் பெறுமதி 15 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் பெண்ணுக்கு இரண்டாம் தாரமாக வாழ்வு சலுகையாகக் கருதுகிறாரா மகிந்தானந்த?

mahindanandaaluthgamage.bmpமின்சக்தி எரிசக்தி பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையானது தமிழ்ப் பெண்களையும் அவர்களின் பாரம்பரிய கலாசார விழுமியங்களையும் இழிவுபடுத்துகின்ற வகையில் அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக் கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தலைமை வகித்த யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

பாராளுமன்றத்தில் பிரதியமைச்சர் மஹிந்தானந்த ஆற்றிய உரையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. அதேநேரம், தமிழ் மக்களும் இந்த கூற்றை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

போரின் கெடுபிடிகளால் தமிழ் மக்கள் மிகப்பெரும் துயரங்களை அனுபவித்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் அல்லல்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு கூறியிருப்பது வெட்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.

தனது மனைவியின் சம்மதத்துடன் யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண்ணொருவரை தான் திருமணம் செய்யவுள்ளதாக கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் மகிந்தானந்த அளுத்கமகே கூறியமையையானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.

தமிழ்ப் பெண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரத்துடன் வாழ்பவர்கள். ஆனால், தனது மனைவிக்கு அடுத்ததாக இரண்டாவது மனைவியாக தான் தமிழ்ப் பெண்ணொருவரைத் திருமணம் செய்யவுள்ளதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

அவரின் கருத்தானது தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. தமிழ்ப் பெண்களுக்கு இரண்டாம் தரமாக வாழ்வழிப்பதையும் தமிழர்களுக்கான சலுகையாக அவர் கருதுவதாகவே தெரிகிறது. இக்கருத்தைத் தமிழ் மக்களை ஒரு போதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

முதலாம் தர மாணவர்களைச் சேர்க்க ஆகஸ்ட் விடுமுறையில் நேர்முகப் பரீட்சை – கல்வியமைச்சு அறிவிப்பு

school-children.jpgஅரசாங்க பாடசாலைகளில் அடுத்த ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கு புதிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் ஆகஸ்ட் விடுமுறை காலத்தில் நடத்தப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நேர்முகப் பரீட்சைகளை நடத்தும் குழுக்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள்  நியமிக்கப்பட்ட பின்னர் விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்படவுள்ளனர். இக்குழுக்களுக்கான தலைமை அதிகாரியாக கல்வி நிருவாக சேவை கல்விப் பணிப்பாளர் செயற்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணி

வடக்கில் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட நிபுணர் குழுவினருடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் (23) மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்தியாவிலிருந்து வந்த நிபுணர்களும் இலங்கை இராணுவப் பொறியியலாளர் பிரிவினரும் கலந்துகொண்டனர்.

மூன்று விதமான கண்ணி வெடிகளை அகற்றுவது குறித்த இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டதுடன், முன்னுரிமை அடிப்படையில் பணிகளை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டதாக அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

மக்களை மீளக் குடியமர்த்தி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துமுகமாகக் கண்ணிவெடிகளை அகற்றும் மனித நேயப் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதுடன், அதற்கான அட்டவணையைத் தயாரித்து வழங்கவுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். இதன்படி, அரச அலுவலகங்கள், குடியிருப்புகள் என முன்னுரிமை அளித்து கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

“கண்ணிவெடிகள் இல்லையென இனங்காணப்பட்ட பிரதேசங்கள் இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படும். முக்கியமான பாதைகள் மற்றும் பிரதேசங்களில் ஏற்கனவே இராணுவத்தினர் கண்ணி வெடிகளை அகற்றிவிட்டனர்” என்றும் அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

இதேவேளை, இடம்பெயர்ந்த மக்களின் நலன்களை மேம் படுத்துவது குறித்து வவுனியா அரச அதிபர், பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சார்க் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்

saarc_colombo_2009.jpgசார்க் பிராந்திய நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாடு இன்று கொழும்பில் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது. சார்க் நாடுகள் அமைப்பின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகட்டலில் இம்மாநாடு இன்று காலை 9.00 மணிக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

கொழும்பிலிருந்து இந்தியாவின் கொச்சின், மற்றும் தூத்துக்குடி வரை படகு சேவைகளை ஆரம்பிப்பது, தலைமன்னாரிலிருந்து சென்னை வரை ரயில் சேவைகளை ஆரம்பிப்பது போன்றவை தொடர்பில் இம்மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

சார்க் நாடுகளின் நல்லுறவு, சார்க் நாடுகள் முகங்கொடுக்கும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது. அத்துடன் நாடுகளுக்கிடையில் பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்துச் சேவை சார்க் நாடுகளின் உள்ளக தொடர்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

பிராந்திய நாடுகளின் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள், இந்நாடுகளின் கடல், தரை மற்றும் வான் போக்குவரத்துச் சேவைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. மேற்படி மாநாட்டை முன்னிட்டு சார்க் நாடுகளின் போக்குவரத்து அமைச்சுச் செயலாளர்களின் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றதாகவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

மடுத்திருப்பதி ஓகஸ்ட் திருவிழாவில் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு ஒழுங்குகள்

madhu_mary.jpgமடு மாதா தேவாலய ஓகஸ்ட் திருவிழாவையும், அதில் கலந்துகொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

மடு மாதா திருவிழாவில் பங்குகொள்ளும் பக்தர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு மடு தேவாலய நுழைவாயில் சந்தியில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் தகவல்களை திரட்டும் பொருட்டு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் பாதுகாப்பு தரப்பினர் விசேட படிவம் ஒன்றை தயாரித்துள்ளனர். தேவாலய நுழைவாயில் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இதற்கான விண்ணப்பம் வைக்கப்பட்டுள்ளது டன் இராணுவத்தினரால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுவர்.

பாதுகாப்புப் படையினர் தயாரித்துள்ள படிவத்தின் பிரதிகளை நேற்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டு வைத்தது. பக்தர்களின் பாதுகாவலரின் பெயர், விலாசம், தேசிய அடையாள அட்டை இலக்கம், வாகன இலக்கம்,செசி இலக்கம், இன்ஜின் இலக்கம், வாகன உரிமையாளரின் பெயர், விலாசம், பினான்ஸ் லீசிங் கம்பனிகளின் விபரம், சாரதியின் பெயர், விலாசம், சாரதி அனு மதி பத்திர இலக்கம், காப்புறுதிப் பத்திர இலக்கம், வருமானப் பத்திரம், எவ்விடத் திலிருந்து வருகின்றார்கள், பக்தர்களின் தொகை ஆகிய விபரங்களே அந்த படிவத்தில் கோரப்பட்டுள்ளது.

பக்தர்கள் குழுவுக்கு பொறுப்பாக வருபவர் மாத்திரம் படிவத்தை பெற்றுக் கொண்டு நிரப்பி பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில் இம்முறை மடு மாதா திரு விழாவை அரச அனுசரணையுடன் மிகவும் கோலாகலமாக கொண்டாட தேவையான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கட்டுநாயக்காவுக்கு ரயில் சேவை

train0000.jpgகட்டு நாயக்கா விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு முதல் முதலாக ரயில் சேவையை நடத்துவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் நலன்கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்து வரும் பயணிகள் மற்றும் விமானம் மூலம் செல்லவுள்ள பயணிகள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இதனை நீக்குவதற்கு இச்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது கட்டுநாயக்கா விமான நிலைய ரயில் நிலையம் திருத்தப்படுவதுடன் புகையிரத வீதிகளின் புனரமைப்பு பணிகளும் ஆரம்பமாகியுள்ளன.

வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரை விடுவிப்பதற்கான வழிவகைகளை ஆராயுமாறு உத்தரவு

supremecourtphoto.jpgவவுனி யாவில் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வெளியேற அனுமதிகோரும் மக்களை விடுவிக்கக்கூடிய வழிவகைகளை ஆராயுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

சட்ட ரீதியான அனுமதி இன்றி விருப்பத்துக்கு மாறாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்று தொடர்பாக ஆராய்ந்த போதே உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வவுனியா முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நால்வர் தொடர்பாக இந்த மனுவை அவர்களது உறவினர் ஒருவர் தாக்கல் செய்திருந்தார்.

100 ஆண்டுகளில் முதல் முறையாக மும்பையைத் தாக்கிய ராட்சத அலைகள்

24-mumbai.jpgகடந்த 100 ஆண்டுகளில் முதல் முறையாக மும்பை மாநகரை இன்று ராட்சத அலைகள் தாக்கின. கடும் சீற்றத்துடன் காணப்பட்ட கடல் மிகக் கொந்தளிப்பாக உள்ளது. ராட்சத அலைகள் தாக்கியதால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை.

மும்பையில் நேற்று முதல் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று பிற்பகலுக்கு மேல் ராட்சத அலைகள் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனால் மும்பை கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அகற்றப்பட்டு வந்தனர்.

பல பகுதிகளில் நகருக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். மும்பையி்ல 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை கடல் சீற்றம் கடுமையாக இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

marine-drive-mumbai.jpgஅதற்கேற்ப நேற்று கடும் சீற்றத்துடன் காணப்பட்டது கடல். கடல் நீர் பல பகுதிகளில் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். கொலாபா, தாதர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.  தாராவி, மாஹிம், பார்லே, சயான், சான்டாக்ரூஸ் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழையும் பெய்தது. பல இடங்களில் கடல் அலைகள் பெரிய அளவில் எழுந்தபடி இருந்தன. பல இடங்களில் கடல் நீர் புகுந்ததால் சாலையில் வெள்ளம் என கடல் நீர் ஓடியது. கொலாபா, கீதா நகர் பகுதியில் புகுந்த கடல் நீரால் பல வீடுகளுக்குள் தணணீர் புகுந்தது. சில குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த நிலையில், இன்று பிற்பகலில் 5 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. கடந்த 100 ஆண்டுகளில் இந்த அளவுக்கு பெரிய அலைகள் வந்ததில்லை என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். மக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், கடற்கரைக்கு யாரும் போக வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

தீயணைப்புப் படையினர், கடலோரக் காவல் படையினர், கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர்.நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். செய்தித் தாள்கள், டிவி, ரேடியோக்கள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கைச் செய்திகள் விடப்பட்டன. இந்த நிலையில் இன்று மதியம் ராட்சத அலைகள் மும்பையை தாக்கத் தொடங்கின. ராட்சத அலைகள் அலை அலையாக வந்து கடலோரப் பகுதிகளைத் தாக்கின. இதனால் கடல் நீர் பெருமளவில் ஊருக்குள் புகுந்தது.  ஆர்ப்பரித்து வந்த அலைகள் தாக்கியதால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடல் நீர் புகுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து தகவல் இல்லை. நகரின் பல இடங்களிலும் கன மழையும் பெய்து வருகிறது. கடலோரத்தில் வசித்து வந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அப்புறப்படுத்தப்பட்டனர்.

நாரிமன் பாயின்ட், கொலாபா, கபே பரேட், மெரைன் டிரைவ், ஹாஜி அலி, ஒர்லி கடல் பாலம், பந்த்ரா பஸ் நிலையம், ஜூஹு, வெர்சோவா, மார்வே, கோராய், பாந்துப், விக்ராலி ஆகிய பகுதிகளில் கடல் நீர் உள்ளே புகுந்துள்ளது. இப்பகுதிகளில் அலைகளின் சீற்றம் மிகக் கடுமையாக காணப்பட்டது. பிரபாதேவி, ஒர்லி, ஜூஹு, பந்த்ரா ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் கடல் நீர் ஓடுகிறது. தாஜ் மஹால் ஹோட்டல் மற்றும் டவர் ஹோட்டல் பகுதிகளிலும் கடல் நீர் புகுந்துள்ளது.

மும்பை அருகே உள்ள கடலோரப் பகுதிகளான தானே, பயாந்தர், உட்டன், பல்கார், போய்சார், தாஹனு ஆகிய பகுதிகளிலும் ராட்சத அலைகள் தாக்கியுள்ளன. பிற்பகல் 2.05 மணிக்கு தாக்க ஆரம்பித்த ராட்சத அலைகள், இன்று இரவு 8 மணி வரை நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ராட்சத அலைகள் தாக்குவதை நகரின் பல்வேறு உயர்ந்த கட்டடங்களிலிருந்து மும்பை மக்கள் பார்த்து வருகின்றனர். இருப்பினும் அலைகளில் யாரும் சிக்கி விடக் கூடாது என்பதற்காக கடற்கரை அருகே செல்ல போலீஸார் தடை விதித்துள்ளனர். பொரிவிலி, கான்டிவிலி, மலத், காரேகான், அந்தேரி, பந்த்ரா, மாஹிம், தெற்கு மும்பையில் உள்ள உயர்ந்த கட்டடங்கள் எங்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் நின்று அலைகளை வேடிக்கை பார்த்தனர்.

இதேபோல நாளை பிற்பகல் 2.43 மணியளவில் 4.94 மீட்டர் உயரத்திற்கு அலைகள் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய நாடுகளுடன் இலங்கை நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருகிறது

mahinda-rajapa.jpgஇந்நாட்டு முஸ்லிம்கள் எனது சகோதரர்கள். நாம் ஒரு தாய் பிள்ளைகள் போல் வாழ்கின்றோம். இனி ஒருபோதும் எமக்குள் எந்தவித பேதமும் இருக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவத்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று (23) நடைபெற்ற வைபவத்தில் தமிழில் உரையாற்றும்போது ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.  இவ்வைபவத்தில் ஜனாதிபதி தொடர்ந்து கூறுகையில்,

தற்போது நமது நாட்டில் எதுவித அச்சங்கள் இன்றி சுதந்திரமாக வாழக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மாகாண சபை மூலம் எதுவித வேறுபாடுகளுமின்றி மக்களுக்கு சிறந்த பல அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருவதை காணக்கூடியதாக உள்ளது. அதுபோன்று ஊவா மக்களின் தேவைகளை பெற்றுக்கொள்ள ஊவா மாகாண சபைக்கு ஆளும் கட்சியினூடாக முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை நியமிப்பது முஸ்லிம் சமூகத்தின் காலத்திற்குத் தேவையான ஓர் பணியாக இருக்கின்றதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாட்டின் எந்த மூலையில் யார் வாழ்ந்தாலும் அனைவரும் எனக்கு ஒன்றுதான். குறிப்பாக சாந்தி, சமாதானம் சகோதரத்துவம் ஆகிய பண்புகளுக்கு புனித இஸ்லாம் முக்கியத்துவம் வழங்குகின்றன. இஸ்லாமிய நாடுகளுடன் எமது நாடு மிகவும் நெருக்கமாகவும் மிகவும் ஐக்கியகமாகவும் இணைந்து செயலாற்றி வருகின்றது.

இன்று எமது நாட்டில் சிறுபான்மையினர் என்று ஒரு இனம் கிடையாது. எனவும் ஜனாதிபதி தமது தமிழ் உரையில் தெரிவித்தார்.