26

26

இருபது வருடங்களில் அழித்ததை இரு வருடங்களில் கட்டியெழுப்புவோம் – அமைச்சர் டக்ளஸ்

21deva.jpgகடந்த இருபது வருடங்களில் அழிவடைந்த எமது பிரதேசத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து இரு வருடங்களில் கட்டியெழுப்புவோமென யாழ். வர்த்தகர்களுடன் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் புதன் மாலை யாழ். வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக சமூகப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பொது சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏறக்குறைய ஐநூறிற்கும் மேற்பட்ட யாழ். வர்த்தகர்கள் பங்குகொண்ட இச்சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘நாங்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆள்வதற்காக அல்ல, மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும் வர்த்தகர்களாகிய நீங்கள் சுதந்திர மாகவும் நிம்மதியாகவும் தொழில் செய்வதற்குமே ஆகும்.

இதன் அடிப்படையிலேயே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்தை நாம் ஏற்றிருக்கின்றோம். மகிழ்ச்சி தரும் மாற்றங்களையே நாம் விரும்புகின்றோம்.

இதில் ஏமாற்றங்கள் நிகழுமாயின் அதற்கான அனைத்து பொறுப்பையும் நாமே ஏற்றுக்கொண்டு எமது தீர்மானங்களைத் திருத்தி எழுதவும் நாம் என்றும் தயாராக இருப்போம். ஆனாலும், நாம் எடுத்திருக்கும் இந்தத் தீர்மானம் ஒரு போதும் தோற்றுப் போகாது’ என்றும் தெரிவித்தார்.

ஈ. பி. டி. பி. யினராகிய நாம் தமிழ் பேசும் மக்களுக்கான ஒரேயொரு தனித்துவமான அரசியல் கட்சி என்ற ரீதியில் எமது தனித்துவங்களோடு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போடு தோழமை கட்சியாக இணைந்து எமது மக்களின் இலட்சியக் கனவுகளை விரைவாகவும், இலகுவாகவும் எட்டுவதற்காக இந்தத் தீர்மானத்தை ஒரு பரீட்சார்த்த முயற்சியாக எடுத்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து யாழ். வர்த்தகர்களினால் கேட்கப்பட்ட கேள்விகள், சந்தேகங்கள் அனைத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரிவாக விளக்கமளித்தார்.

சொகுசு வாகன வரி அறவீடு

25dallas_alahapperuma.jpgசொகுசு வாகனங்கள் மற்றும் அரைச்சொகுசு வாகனங்களுக்கான வரி அறவீட்டை பிரதேச செயலகங்கள் ஊடாக அறவிடுவது குறித்து ஆராய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட வரி தனியார் காப்புறுதி நிறுவனங்களாலேயே அறவிடப்பட்டு வந்தது. இதனை வருடாந்த வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது பிரதேச செயலகங்கள் மூலம் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆராய குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் டளஸ் அலகப்பெரும இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

த.வி.கூ, மு.கா, சுயேச்சை வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

images-elc.jpgயாழ்.  மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைகளுக்காக ஏழு அரசியல் கட்சிகளும் ஐந்து சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இதேவேளை யாழ். மாநகர சபைக்கான வேட்பு மனுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினதும், சுயேச்சைக் குழுவொன்றினதும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வவுனியா ந. சபைக்கான வேட்பு மனுவில் தமிழர் விடுதலைக் கூட்டணியினது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க யாழ். மாநகர சபைத் தேர்தலுக்காக நான்கு அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுயேட்சைக் குழுக்கள் இரண்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன் மற்றுமொரு சுயேச்சைக் குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக அதன் தலைவர் வீ. ஆனந்தசங்கரி வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளதுடன் சுயேட்சைக் குழு இலக்கம் ஒன்றிற்கு கப்பல் சின்னமும் இரண்டாம் குழுவிற்குப் பூட்டுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாநகர சபைக்கு 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

500 ரயில்வே ஊழியர்களுக்கு நாளை நிரந்தர நியமனம்

25dallas_alahapperuma.jpgஒப்பந்த அடிப்படையிலான மற்றும் தற்காலிக ரயில் ஊழி யர்கள் 500 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை (27) வழங்கப்ப டவுள்ளன. இது தொடர்பான வைபவம் போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழஹப்பெருமவின் தலைமையில் நாரஹேன் பிட்ட சாலிகா மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் அமைச்சர் லசந்த அழகியவன்ன, ரயில்வே பொதுமுகாமையாளர் பீ. பீ. விஜேசேகர உட்பட பலர் பங்கேற்கவுள்ளனர்.

இன்புளுவன்சா (ஏ) எச்1 என்1 ஐ பன்றிக் காய்ச்சல் என்று அழைக்க வேண்டாம் – உலக சுகாதார அமையம் அறிவுறுத்தல்

19swine-flu.jpgபன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் இன்புளுவன்சா (ஏ) எச்1 என்1 (Influenza (A) H1N1) வைரஸானது பன்றிகளிலிருந்து பரவுவதில்லையென்றும் அது மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோயென்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகம் தெரிவித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, பன்றிக் காய்ச்சல் என இந்த வைரஸை அடையாளம் காட்டுவதை விடுத்து நவல் இன்புளுவன்சா (ஏ) எச்1 என்1 (Novol Influenza (A) H1N1) என பெயர் குறிப்பிடுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதியான டாக்டர் வசிர்தோஷி ரேஸ்டமி தெரிவித்திருப்பதாக சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, கடந்த 5 மாதங்களில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த 2,906 நோயாளர்களிடம் வைத்திய ஆராய்ச்சி மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அதில் 1,667 பேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த தலைவர் அஷ்ரப்பின் நினைவுகள் மக்கள் மத்தியில் நிலைக்கவே நான் அரசியலில் நுழைந்தேன் – அமைச்சர் பேரியல் அஷ்ரப்

மறைந்த தலைவர் அஷ்ரப்பின் நினைவுகள் எதிர்கால சந்ததியினர் மத்தியில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே தான் அரசியலில் பிரவேசித்ததாக வீடமைப்பு அமைச்சரும் “நூஆ’ தலைவியுமான பேரியல் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கவிஞர் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; தலைவர் அஷ்ரப்பின் திடீர் மறைவின் பின்னர் அவரது நாமம் மக்கள் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலில் நுழைந்தேன். எனது நோக்கம் முழு அளவில் நிறைவேறி வருவதுடன் மக்கள் மனதில் தொடர்ந்தும் தலைவர் அஷ்ரப் வாழ்ந்து வருகின்றார் என்பதைக் காணும்போது எனது உள்ளம் பூரிப்பு அடைந்து வருகின்றது.

அன்று தலைவர் திடீர் விபத்தில் மரணித்தவுடன் அவர் பற்றிய நினைவு நாட்கள் செல்லச்செல்ல எதிர்கால சந்ததியின் மத்தியில் இருந்து மறைந்து விடுமோ என்ற நினைப்பிலேதான் எனது மகன் என்னிடம் தலைவரின் பெயர் தொடர்ந்து மக்கள் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் நீங்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க வேண்டும் என வற்புறுத்தினார். அவ்வாறு அவர் கூறியதில் ஒரு அர்த்தம் இருப்பதை உணர்ந்துதான் அன்று நான் பாராளுமன்றம் சென்றேன். அது மட்டுமல்லாமல் அதன் யதார்த்தத்தை இன்று நான் கண்கூடாக காண்கிறேன்.

பல வைபவங்களின் போதும் மேடையில் என்னை கண்டவுடன் தலைவரையும் அவர் மக்களுக்காகச்செய்த பணிகளும் ஞாபகம் வருவதாக கூறுவதுடன், அவரைப் பற்றிய நினைவுகளையும் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் ஞாபகப்படுத்துகின்றனர். இன்று கூட வேறு மதங்களைச் சேர்ந்த பல கவிஞர்கள் என்னைக் கண்டவுடன் மறைந்த தலைவரின் ஞாபகம் வருவதாகக் கூறியதுடன், அவரைப் பற்றியும் அவர் இலக்கியத் துறையில் காட்டிய ஈடுபாடு பற்றியும் ஞாபகப்படுத்தினர்.

மறைந்த அஷ்ரப் இலக்கியத்துறையில் பெரும் ஈடுபாடு காட்டியதுடன், கலையுலகத்தினருடனும் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தார். மேலும் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் விதமாகப் பல்வேறு கவிதைகளைப் புனைபவராகவும் இருந்தார். அவரது இலக்கிய ஆர்வத்திற்கும் கவிதை எழுதும் திறமைக்கும் எழுதி வெளியிட்ட “நான் எனும் நீ’ நல்லதோர் சான்றாகும் எனவும் தெரிவித்தார்.

உலக முன்னோடிகளின் பொன்மொழிகளை லண்டன் சுரங்க ரயிலில் அறிவிக்க முடிவு

tube-train_pa.jpgஐன்ஸ்டின், காந்தி, ஷான் போல் சார்த்ர் போன்ற உலகின் முன்னோடி சிந்தனையாளர்களின் பொன்மொழிகளை லண்டன் சுரங்க ரயிலின் ஒரு மார்க்கத்தில், போக்குவரத்து நிலவரம் குறித்த அறிவிப்புகளுடன் அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

லண்டன் சுரங்க ரயில் வலையமைப்பில், ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் பாதையை உள்ளடக்கிய, பிக்கடில்லி மார்க்கத்தில் பணியாற்றும் ரயில் ஓட்டுநர்களுக்கு, பயணிகளுக்கு அறிவிப்புகளைத் தரும் போது, இந்த பொன்மொழிகளை எடுத்துக்கூற உதவ, பொன்மொழிப் புத்தகம் ஒன்று தரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு உந்துதலாக இருந்த பிரிட்டிஷ் கலைஞர், ஜெரிமி டெல்லர், இந்த முயற்சி பயணிகளுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.

சாவகச்சேரி மகளிர் கல்லூரி புதன்கிழமை முதல் இயங்கும்

இரண்டு மாதகாலமாக சாவகச்சேரி டிறிபேக்கல்லூரியிலும் தனியார் கல்விநிலையத்திலும் இயங்கிவந்த சாவகச்சேரி மகளிர்கல்லூரி புதன்கிழமை முதல் சொந்தக் கட்டிடத்தில் இயங்கவுள்ளது.  இப் பாடசாலையில் வன்னியில் இருந்துவந்த 354 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டிருந்தமையால் இப்பாடசாலை தனியார் கட்டிடங்களில் இயங்கிவந்தன. சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் கொடிகாமம் இராமாவில் புனர்வாழ்வுக்கிராமத்துக்கு மாற்றப்பட்டமையால் பாடசாலை முழுமையான தொற்றுநீக்கிக்கு உட்படுத்தப்பட்டபின்னர் பாடசாலை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஊவா, யாழ், வவுனியா தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப திகதி நீடிப்பு

images-elc.jpgஊவா மாகாண சபை, யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள் ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க எதிர்வரும் 30 ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வழங்கியிருந்த திகதிக்கமைய நேற்றைய தினத்துடன் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நிறைவடைகின்றது. எனினும் எதிர்வரும் 30ம் திகதி வரை இதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதுடன் அதற்குப் பின்னர் நேரடியாகவோ, தபால் மூலமோ தாமதமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், வவுனியா பகுதிகளில் தபால் மூல விண்ணப்பம் மற்றும் இடம்பெயர்ந்தோரின் விண்ணப்பமும் ஜூன் 30 ம் திகதி வரையே ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. அதற்குப் பின்னரான தாமதமாகும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுமெனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

2011இல் வட மாகாணத்திற்கு முழுமையான மின்சார விநியோகம்

வன்னி உட்பட வடமாகாணத்திற்கு 2011 இல் முழுமையாக மின்சார விநியோகம் வழங்கப்படும் என்றும் 32.6 மில்லியன் டொலர் நிதியில் இத்திட்டம் பூரணப்படுத்தப்படுமெனவும் இலங்கை மின்சார சபை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வீடுகளுக்குத் தற்போது 1 சதவீதமும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 சதவீதமுமே மின்சார வசதி தற்போது உள்ளது. அதேசமயம், மன்னார் மாவட்டம் 37 சதவீத மின்சார விநியோகத்தைப் பெற்றுவருவதுடன் யாழ்ப்பாண மாவட்டம் 52 சதவீத மின் விநியோகத்தையும் வவுனியா மாவட்டம் 67 சதவீத மின் விநியோகத்தையும் பெற்றுள்ளன. தற்போது வவுனியா சுன்னாகம் இடையே கேபிள்கள் பொருத்தப்படும் பணிகள் இடம்பெறுகின்றன.

வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்கும் இடையே 132 கிலோவாட்ஸ் மின் பரிவர்த்தனையை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 39 பில்லியன் டொலர் செலவிலான இத்திட்டத்திற்கு ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவரமைப்பு உதவி வழங்குகின்றது.

கிளிநொச்சிக்கும் சுன்னாகத்துக்கும் இடையில் மற்றொரு மின் பரிவர்த்தனையை மேற்கொள்ள 19.5 மில்லியன் டொலர் தேவையாகும். இதற்கும் மேலதிகமாக 45 மில்லியன் டொலர் செலவில் நடுத்தரதாழ்ந்த மட்ட வோல்டேஜ் விஸ்தரிப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. மின் விநியோகக் கட்டமைப்பை அமுல்படுத்த இந்தத் தொகை தேவைப்படுகிறது.

இதேவேளை, வழமையான நடவடிக்கையில் ஈடுபடாமல் சூரியசக்தி, தொலைபேசி வசதிகள் வடக்கில் ஏற்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் அகதி முகாம்களில் நாணயக் குற்றிகளைப் பயன்படுத்தும் சூரிய சக்தி தொலைபேசி வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன