12

12

டுவென்டி 20 உலககோப்பை கிரிக்கெட்’சூப்பர் 8′ சுற்றுப் போட்டியில் இலங்கை வெற்றி

muralitharan-sri-lankas.jpgஇங்கி லாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் சற்றுமுன் நடைபெற்று முடிந்த ‘டுவென்டி 20’ உலககோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றுப் போட்டியில், குரூப் ‘எப்’ பிரிவில் இடம் பெற்ற பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது

டாஸ் வென்ற இலங்கை அணி 20 வது ஓவரில் 7விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 வது ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இலங்கை 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

வட பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற வற்புறுத்துங்கள்: இலங்கை தமிழ் எம்.பி.க்கள் இந்தியாவிடம் கோரிக்கை

tna-india.jpgஇலங்கை வட பகுதியிலிருந்து ராணுவம் விரைவில் வெளியேற நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசுக்கு இலங்கை தமிழ் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  விடுதலைப் புலிகளின் ஆதரவு கட்சி என்று கருதப்படும் தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் 4 எம்.பி.க்கள் தில்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு அரசின் அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்தியா அளிக்கும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில் தமிழ் தேசியக் கட்சி பிரதிநிதி ஒருவர் இடம் பெற வேண்டும் என்று எம்.பி.க்கள் கோரினர்.

தமிழர்களை மீண்டும் அவர்களது வசிப்பிடங்களில் குடியமர்த்த இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை தமிழ் எம்.பி.க்கள் குழு தலைவர் சம்பந்தன் பாராட்டினார்.

அமைச்சர் கிருஷ்ணாவைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு தமிழ் எம்.பி.க்கள் பேட்டியளித்தனர். இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கு முன்பாக அங்கிருந்து ராணுவம் முழுவதுமாக வெளியேற்றப்பட வேண்டும். இதற்கு இந்தியா இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தோம் என்றனர். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும். ராணுவ முகாம்கள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப் பட வேண்டும். ராணுவம் தொடர்ந்து இருந்தால் மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ முடியாது என்று தமிழ் எம்.பி. மாவை சேனாதிராஜா கூறினார்.

வட பகுதியில் தமிழர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லவும் மறுவாழ்வு பணிகளுக்கும் இந்தியா இன்னும் அதிக நிதி ஒதுக்க தயாராக உள்ளது என்று அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்ததாக அவர்கள் கூறினர்.மறுவாழ்வுப் பணிகளுக்கு இந்தியா அளித்து வரும் உதவிகள் திருப்தியளிப்பதாக உள்ளது என்று சேனாதிராஜா கூறினார்.வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனையும் தமிழ் எம்.பி.க்கள் சந்தித்துப் பேசினர்.

லசந்த விக்ரமதுங்க படுகொலை : அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

lasantha.jpgசண்டே லீடர் பத்திரிகையின் பிரதமர் ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பவம் குறித்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மிரிஹான மற்றும் கல்கிஸை காவல்துறையினரால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

லசந்த விக்ரமதுங்கவின் செல்லிடத் தொலைபேசியைத் திருடிய சந்தேக நபரைத் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தப் படுகொலை சம்பவம் குறித்த விசாரணைகளை இரகசிய காவல்துறையினரோ அல்லது உயர் காவல்துறை அதிகாரிகளோ மேற்கொள்ள பணிக்குமாறு அமரர் லசந்த விக்ரமதுங்கவின் குடும்பம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறெனினும், சட்டத்தின் பிரகாரம் அவ்வாறான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என கல்கிஸை நீதவான் தெரிவித்துள்ளார். 

இறுதிப் போர் குறித்து வெளிப்படையான பன்னாட்டு விசாரணை வேண்டும்: பான் கீ மூன்

06bankimoon.jpgவிடு தலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிப் போரில் சர்வதேச போர் விதிமுறைகள் மீறப்பட்டது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த பன்னாட்டு குழுவிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறிலங்க அரசை ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா.வில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பான் கீ மூன், “போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சர்வதேச சட்ட விதி முறை மீறல்களை கண்டறிந்து அதற்குக் காரணமானவர்களைப் பொறுப்பாக்க வெளிப்படையான விசாரணை நடத்துவது தொடர்பாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி அதிபர் ராஜபக்சவுக்குத் தான் இன்று (நேற்று) கடிதம் எழுதப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம் 22,23ஆம் தேதிகளில் இலங்கைக்குச் சென்ற பான் கீ மூன், பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பான் கீ மூன், “அங்கு கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை ஒப்புக் கொள்ள முடியாத அளவிற்கு அதிகமானது” என்று கூறியிருந்தார்.

வரலாறு திரும்பக் கூடாது என்றால்…

போர் முடிந்துவிட்டது என்று சிறிலங்க அரசு அறிவித்துவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் தேவையான நிவாரணம், மறுவாழ்வு, மீள் குடியமர்த்தல், அவர்களுக்கு அரசியல் ரீதியான உரிமைகளை உறுதி செய்யும் இணக்கப்பாடு ஆகியன குறித்து அளித்த உறுதிமொழிகளை சிறிலங்க அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய பான் கீ மூன், “இரு தரப்பு அறிக்கையில் ஒப்புக் கொண்டு அளித்த உறுதிமொழிகளை சிறிலங்க அரசு நிறைவேற்றுவது அவசியம்” என்று கூறினார்.

இலங்கையின் சிறுபான்மை மக்களான தமிழர்களுக்கு உரிய அரசியல் ரீதியான அதிகாரப் பகிர்வை அளிக்கும் நடவடிக்கைகளை துவக்க வேண்டும் என்று கூறிய பான் கீ மூன், அதனைச் செய்யத் தவறினால் வரலாறு திரும்புவதை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

“தமிழ் சிறுபான்மை மக்களையும், மற்றவர்களையும் சிறிலங்க அரசு உடனடியாக அணுகி அவர்களிடையே இணக்கப்பாட்டை உருவாக்கும் முதல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வரலாறு மீண்டும் திரும்பக் கூடாது என்று நினைத்தால் இதனைச் செய்ய வேண்டும், உடனடியாகச் செய்ய வேண்டும். மீண்டும் சொல்கிறேன் அதனை உடனடியாகச் செய்ய வேண்டு்ம்” என்று பான் கீ மூன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

தற்பொழுது இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களி்ல் 80 விழுக்காட்டினரை அந்த ஆண்டின் இறுதிக்குள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்த சிறிலங்க அரசு உறுதியளித்துள்ளது நம்பிக்கையளிக்கிறது என்றும் பான் கீ மூன் கூறியுள்ளார்.

“(இடம் பெயர்ந்த தமிழர்கள்) தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலை மிகக் கடினமானதாகவுள்ளது. அங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும், அவர்கள் தங்கள் பகுதிகளுக்குள் சென்று வர சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும், தங்கள் குடும்பாத்தாருடன் சேர்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்றும் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

டபிள்யு.டி.ஏ., ஏகான் கிளாசிக் டென்னிஸ் – சானியா மிர்சா அரையிறுதிக்கு முன்னேற்றம்

27-saniamirza.jpgஇங்கி லாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யு.டி.ஏ., ஏகான் கிளாசிக் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஹங்கேரியின் மெலிண்டா ஜின்க்கை 6 1, 7 6 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்

கலாநிதி தங்கத்துரை வில்லியம் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்.

parliament-of-sri-lanka.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதன் மரணமானதை தொடர்ந்து உருவான வெற்றிடத்திற்கு கலாநிதி தோமஸ் தங்கத்துரை வில்லியம் அவர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கப்பெற்ற விருப்பு வாக்குகளின் அடிப்படையில் பதவியேற்றுள்ள இவர் பாண்டிருப்பு பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரபாகரனின் மரணச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

02supreme.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் குமுதினி விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலைச் சம்பவம் குறித்த விசாரணைகளின் முதலாம் பிரதிவாதியான பிரபாகரனது மரணச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ள அவர் நீதிமன்ற கோப்பு பராமரிப்புக்குக் குறித்த மரணச் சான்றிதழ் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் சிலரும்,லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர்கள் மீதும் தாக்குதல்

australia.jpgஅவுஸ் திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது, அண்மைக்காலத்தில் அடிக்கடி நிறவெறியர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், மெல்போர்ன் நகரின் ஒரு பகுதியான மெக்குரைன் என்ற இடத்தில் 3 இலங்கை மாணவர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. அவர்கள் தங்கி இருந்த வீட்டின் கண்ணாடிகளையும், அவுஸ்திரேலிய வன்முறை கும்பல் அடித்து நொறுக்கியது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த காரையும் சேதப்படுத்தினார்கள்.

20-20 உலகக் கிண்ணம். இன்றைய போட்டியில்…….

muralitharan-sri-lankas.jpgஇன்றைய இருபது-20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியுடன் மாலை 6.00 மணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியுடன் இரவு 10.00 மணிக்கும் மோதுகின்றன. இங்கிலாந்து செயின்ட் ஜோன்ஸ்வுட், லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன.

த. தே. கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை : சபாநாயகர் அறிவிப்பு

parliament-of-sri-lanka.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம். லொக்குபாண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாடுகளில் தங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.கஜேந்திரன் மற்றும் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் தமக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனக் கோரி அனுப்பியுள்ள மருத்துவச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனையடுத்து இவர்களுக்கு மூன்று மாத விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை விடுமுறை கோரியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் இன்று நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.