துர்ப்பாக்கிய துப்பாக்கிகள்
கண்ணீராலே கருக்கட்டி
கருத்துக்களைச் சப்பித்துப்பி
தலைகீழாய் நின்று துள்ளும்
பத்திரிகைகளில் இரத்தம் சொட்டும்
பேனாக்களை ஏன் சுட்டீர்கள்.
கருத்தில்லாதவன் களத்தில் நின்றால்
கருகிப்போவது கருத்துக்கள் மட்டுமல்ல
உயிர்களுக்கும் உலைவைப்புத்தான்.
ஏட்டறியாதவன் எடுத்த துப்பாக்கியால்
ஏழுலகெங்கும் போர்க்களமாகும்
கருத்தற்றவனே உருக்கெடுப்பான்
கருவின்றிப் பிறந்தவர்களா நீங்கள்?
நீதியின் வாசலைத் திறந்தது குற்றமா?
உண்மையை உலகிற்கு உணர்த்துவது குற்றமா?
ஏழைகள் உடலிலும் வயிறுண்டு என்பது குற்றமா?
ஆழியில் போய் அழிந்து விடும் ஆற்றினை
அள்ளுரைக் கழுவத் திருப்பியது குற்றமா?
பெண்களையும் நாங்கள்; மனிதர்கள் என்றோம்
பாமரமக்களுக்குப் பகுத்தறிவு கொடுத்தோம்
ஆதிக்க வெறியரின் ஆணிவேரை உடைத்தோம்.
மதங்களைக்காட்டி மதங்கொண்டு திரிவோரை
மக்களுக்குக்காட்டினோம்.
அறிவை ஊட்டினோம்.
எது குற்றம்?
சுடுகோல் கொண்டு
நாட்டைச் சுடலையாக்கும்
கொங்கோலர் கொடுமையை சுட்டிக்காட்டினால்
சுடுகோல் ஏன் சுடுகிறது?
பாட்டில் கிடந்த சுடுகோல்களை
தூக்கி நிறுத்திய தூண்கள் நாங்கள்.
எழுத்துக்களாலே எழுந்தவர்கள் நீங்கள்
கைகொடுத்தவன் கைகளை அறுக்கும்
கயமையை நீர் எங்கு கற்றீர்.
எம்பேனாக்கள் முன்னால்
உம் பேய் நாக்கு பொய்யாகும்.
எழுத்துக்களின் எழுச்சியில்
ஏழு உலகும் உயிர்க்கும்.
பேனாவில் நின்றே சேவல்கள் கூவும்
பேனாவின் கூர்மையில் சூரியன் சிவக்கும்
அறியாமை இருள் அன்றே அகலும்.
மண்ணில் வீழ்ந்த எழுத்தாளர் உதிரம்
போனாவூடு புறப்படுமானால்
துப்பாக்கியரே!
பேனாய்போவீர்.
தலைகள் தேடும் பேனாப்போவீர்
நகங்களிடையே நசிங்கிப்போவீர்.
துப்பாக்கிச் சிறைக்குள்ளும்
பேனாக்கள் உயிர்க்கும்.
எம் எழுத்துக்கள் எங்கும் எழுந்து சிரிக்கும்.
மீண்டும் துப்பாக்கிகள் குப்புறக்கிடக்கும்
புதியதொருயுகம் பெருமையுடன் பிறக்கும்.
தம்பி வருவான்
இருண்ட குடிலுக்குள் என்றும்
ஈரமான இரவுகள்
ஈரமான இதயத்தால் ஒழுகும்
கண்ணூடு வெள்ளங்கள்
நேசம் நெஞ்சை நெருட
பாசம் வழியும் கண்களால்
நம்பிக்கை எனும் நூல்திரியில்
நடுங்காது சுடர்விடும் விழிவிளக்குகள்
“தம்பி வருவான்”
விழிச்சுடரை இமைமூடி அணைத்தாலும்
பாசச்சுடர் சுட்ட
இமை அணைய மறுக்கும்.
இரவும் பகலுமாக எரிந்து கொண்டிக்கும்
அகல்விளக்காய் விழிவிளக்குகள்.
தாடைகளுள் பிடிபட்டாலும்
நாக்கு நடக்கிறதே வதந்தி கொண்டு.
தாடைகளில் இல்லாவிடில்.. .. ..
நாடே காடுதான்.
“படிக்க முடியாதாதவன் ஓடிப்போனான்”
“எந்தப் பெட்டையோடையோ.. .. ?
“வங்கிக் கொள்ளையாம்”
“பொலிஸ் தேடுது”
“.. .. .. .. .. .. .. .. .. .. .. ”
கேள்வி கேள்விகளாய் வேள்விகள்..?..?..?
நாக்குகள் வெத்த வெடிகளில்
காதுகள் சிதறின.
நம்பிக்கை மட்டும் கண்வித்திருந்தது
“தம்பி வருவான்”
பேயாடும் நடுநிசியில் நாயோடி வரவேற்கும்
சப்பாத்துச் சத்தங்கள் சருகுக்குள் சத்தம் கேட்கும் வேளை
தாயைத்தேடிக் கன்று “அம்மா.. அம்மா”
தம்பி வந்திட்டான்.. .. தம்பி வந்திட்டான்
அம்மாவின் ஒருசிறங்கை சாதத்துக்காய்
தம்பி வந்தான்
சோற்றுக்குள் சிக்கியது தொண்டை.
விக்கல் தக்கியது தாயின் விம்மலுக்குள்.
தண்ணீர் கொடுத்தாள்; தாய்
கண்ணெனும் உப்புப்பாறையில் எடுத்து.
உரையாடலைக் கேட்க இரவுக்கு நிசப்தம்
காற்றுக்குக் கூடக் காது முளைத்துக் கொள்கிறது.
“ஏன், எங்கே, எதற்கு போனாய்”
“என்ன செய்கிறாய், செய்யப்போகிறாய், என்ன குறை உனக்கு”
கேள்விகள் வளர
காது கேள்வியாகியது?.?. ?
“விடுதலை, போராட்டம், எதிர்காலம், சமூகம், மண், மக்கள்,
அஜாரம், ஆதிக்கம், வெறி, பாசிசம், மார்கிசம், நாகரீகம், உயிர்
ஊழல், தரப்படுத்தல், தமிழ்ஈழம், அரசியல்.. .. ”
தாயின் தமிழ் அகராதியில் இல்லாத சொற்களை
அவள் எங்கே தேடுவாள்
சருகுகள் காற்றில் அகராதிதேட
காலனின் நினைவு அவன் கருத்துள்.
கருநிழலாய் கலைக்கும் காலன் கைவிடுவது இரவில் மட்டும்தானே
நாய்களின் செய்தியால் நகரத்தொடங்கினான்
“இனி எப்படா வருவாய்”
“தமிழ்ஈழத்தோடை”
“அது என்ன தமிழ்ஈழம்.. என்ன சாதி பெட்டை”
“பெட்டையோ”?
“யாரெண்டாலும் நல்லவளா, குடும்பப்பாங்காய் கொண்டுவா”
அவனை இருள் விழுங்கியது.
இருள் அகற்றும் அகல்விளக்குடன்
விடியும் வரை காத்திருக்கும் விதவைத்தாய்
“தம்பி வருவான்”
காத்திருப்பு தொடர்கிறது.
ஓமந்தையின் ஒரு கொட்டிலில் ஒரு வெடிச்சத்தம்.
நிசப்த்தத்துள் ஒரங்க நாடகம் நிறைவேறியது
நாடகம் “ஒர் உயிரின் நிசப்தமானது”.
தமிழ்ஈழம் தரையில்.
ஈழத்தரையில் விதைக்கப்பட்டான்
முளைக்கவில்லை.
எதிரி வென்றுவிட்டான் தோழனாக.
காதில் விழுந்த வெடிச்சத்தம்
தாயின் நெஞ்சைச் சேராது.
நம்பிக்கை.. ..
நம்பிக்கை தானே வாழ்க்கை.
“தம்பி வருவான்”
என்ற நம்பிக்கை இன்றும் அவளுக்கு.
முப்பது வருடங்கள் முடிந்தும்
தமிழ்ஈழத்துடன் “தம்பி வருவான்” என்ற நம்பிக்கையுடன்
மூச்சுவிடுகிறாள் அந்த முதிர்ந்த தாய்.