கொழும் பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ9 வீதிவழியாக 84 லொறிகளில் கடந்தவாரம் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் 80 லொறிகளில் பொருட்கள் ஏற்றப்பட்டு அனுராதபுரத்தில் இராணுவ பாதுகாப்பு சோதனைகள் நடைமுறையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனுராதபுரத்திலிருந்து இந்த லொறிகள் இன்று அல்லது நாளை இராணுவத்தினரால் அனுப்பி வைக்கப்படலாம் என்று கொழும்பு வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் யாழ்ப்பாணத்திற்குப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறிகளில் 3லட்சம் கிலோ சின்ன வெங்காயமும், சுமார் ஒரு லட்சம் கிலோ வரையிலான புகையிலை 8 லொறிகளிலும், பச்சை மிளகாய், நண்டு, றால் உட்பட்ட கடலுணவுப் பொருட்கள் என்பனவும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஏற்றி வரப்பட்டிருப்பதாக கொழும்பு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 4 லொறிகளில் வெற்று மென்பான போத்தல்களும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.