போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமான சட்டமூலத்தில் புதிய திருத்தங்களை மேற்கொண்டு தண்டனைகள், அபராதங்கள் போன்றவற்றை மேலும் கடுமையானதாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான புதிய திருத்த சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வருவதுடன் சர்வதேச போதை தடுப்பு தினமான இம்மாதம் 26ம் திகதி அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவும் ஜனாதிபதியின் மூலமாக அதற்குப் பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வும் நடவடிக்கை எடுக்கப்படு மென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித் தார்.
அத்துடன் சட்டம், ஒழுங்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமை ச்சின் கீழுள்ள ஐந்து நிறுவனங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய வேலைத் திட்டமொன்றை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.
எதிர்வரும் 26ம் திகதியில் அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி இலங்கையில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் பற்றி ஊடகங்களுக்கு விளக்கும் செய்தியாளர் மாநாடு பிரதமர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
சுங்கத் திணைக்களம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபை, குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு உட்பட பல அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேற்படி வேலைத் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு போதைக்கு முற்றுப்புள்ளி (மத்தடதித்த) திட்டம் மட்டுமே போதுமானதல்ல, சகலரும் பூரண ஒத்துழைப்பின் மூலமே போதைப் பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுகக் முடியும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்ததுடன் இதற்கு ஊடகங்களின் பங்களிப்பு மிக அத்தியாவசியமானதெனவும் தெரிவித்தார்.
போதைக்கு அடிமையானோரை அதிலிருந்து மீட்டெடுப்பது, புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சந்ததியினரைப் பாதுகாப்பது என்ற இலக்கிலேயே அரசாங்கம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
போதைப் பொருள் தடுப்பு அதிகார சபையின் தலைவர் மென்டிஸ் இதுபற்றி விளக்குகையில் :- இன்று நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்தவரை இந்நடவடிக்கைக்கு அவை போதியதாக இல்லை. உதாரணமாக ஒரு ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் 10 ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் அதற்கான தண்டனை ஒரே விதமாகவே தற்போதுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஹெரோயின் ஒரு கிலோ மூன்று மில்லியன் ரூபா பெறுமதியானது. ஹெரோயினைப் பொறுத்தவரை 2 கிராமை சுமார் 500 பேர் பாவித்து போதை ஏற்றிக்கொள்ள முடியும். வெளிநாடுகளில் வருடாந்தம் இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். பருத்தித்துறையிலிருந்து சிலாபம் வரைக்கும் முன்னர் புலிகள் போதைப் பொருட்களைக் கடத்தி வந்துள்ளனர்.
இப்போது இது நிறுத்தப்பட்டுள்ள போதும் மீன் பிடிப் படகுகளின் மூலம் இப்போதும் இக்கடத்தல் இடம்பெற்று வருவதாக அறிய முடிகிறது. கடந்த மாதத்தில் மாத்திரம் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 555 சுற்றி வளைப்புகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது 1,202 கிலோ கஞ்சாவை குற்றத் தடுப்புப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.