02

02

500 வீடுகளை பகிர்ந்தளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை அடிப்படை உரிமை மீறலாகும் -உயர் நீதிமன்றம்

02supreme.jpgஅம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தீகவாவியை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீடமைப்புத் திட்ட வீடுகளை புதிதாக விண்ணப்பங்கள் கோரி சட்டத்தின் கீழ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை அரசாங்க அதிபர் உட்பட பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என சவுதி அரசாங்கத்தின் உதவியுடன் தீகவாவியை அண்மித்த பகுதியில் 500 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் வீடுகள் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருந்த வேளையில் பௌத்த அமைப்புகளினால் அந்நேரம் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டது.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான எல்லாவெல மேத்தானந்த தேரோ இது தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அம்பாறை அரசாங்க அதிபர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ,வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட இம்மனு மீதான தீர்ப்பை நேற்று பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான நீதியரசர்கள் வழங்கினர்.

தீகவாவியை அண்மித்த பகுதியில் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை குடியேற்றும் எண்ணத்துடன் 500 சுனாமி வீடுகளை பகிர்ந்தளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அந்த தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த மீதான தாக்குதலுக்கு லக்ஷ்மன் யாப்பா கண்டனம்

33222.jpgஊடக வியலாளரான போத்தல ஜெயந்த மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலை வண்மையாகக் கண்டிப்பதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

நேற்று இனந்தெரியாத குழுவொன்றினால் தாக்கப்பட்ட போத்தல ஜெயந்த தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு விடுவிக்கப்பட்டு நாட்டில் அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் உழைத்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது மிகவும் கவலையானதாகும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஜோன்மேரி யூலியா, ஜனனி ஆகியோருக்கு ஆதரவு

01-janani.jpgதமிழரின் சார்பில் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திரு ஜோன்மெரி யுலியா (பிரான்ஸ்) ஜனனி ஜனநாயகம் (பிருத்தானியா) ஆகியோருக்கு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, பிரான்ஸ் தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
 
பிரான்ஸில் தமிழர் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு. ஜோன் மெரி யூலியா அவர்கள் வெற்றிபெற தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு பிரான்ஸ் தனது வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறது.

கடந்த பலவருடங்களாக தமிழர்களின் விடுதலையில் தன்னை இணைத்து கொண்டு உழைத்து வரும் திரு. யூலியா அவர்கள் இன்று தோன்றியுள்ள இறுக்கமான நிலையில் தமிழர்களின் நீதியான போராட்டத்தை உலக அரங்கில் வலுவான நிலையில் உரைக்கும் முகமாக ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இவர் வரலாற்றுத்துறை ஆசிரியராக பணிபுரிந்துகொண்டு இருக்கும்போதே எமது நாட்டின் போராட்ட வரலாற்றை பிற சமூகத்திடம் கொண்டு செல்வதற்கு தனது மொழி அறிவையும், வரலாற்று அறிவையும் அர்பணித்துக் கொண்டவர். 83ல் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பை பிரஞ்சு மக்கள் அறியும் வகையில் பிரஞ்சு மொழியில் “ஜெனசிட் தமிழ்” என்னும் நூலை வெளிக்கொணர்ந்தார்.

அதேபோல் இங்கு பல அரசியல் பிரமுகர்களின் சந்திப்பில் எம்மினத்தின் விடிவிற்கான போராட்டத்தை ஆணித்தரமாக முன்வைத்து அவர்களின் ஆதரவையும், கவனத்தையும் எம் பக்கம் திருப்பியவர்.

இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் எமது நிலைப்பாட்டை தெரிவிக்க முன்வந்துள்ளார்கள். தமிழர்களாகிய நாம் அதற்கான ஆதரவை தெரிவித்து வெற்றிபெற செய்தல்வேண்டும்.

இன்று இலங்கையில் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் சுதந்திரமாக இயங்கமுடியாத நிலையில். புதிய அரசியல் சூழலில் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு, அவ்விடங்களில் தேர்தல் நடத்த சிங்கள அரசு திட்டமிட்டு வரும்நிலையில்,

எமக்கான அரசியல் பிரதிநிதிகளை எம்மால் தெரிவுசெய்ய முடியாத நிலையில் எமக்கான பிரதிநிதியை ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு புலம்பெயர்ந்த நாங்கள் தெரிவுசெய்து அனுப்பும் சந்தர்பம் எமக்கு கிடைத்துள்ளது. இதனை புலம்பெயர்ந்து வாழும் நாம் சரியாக உபயோகித்துக் கொள்வதினூடாக எமது சுதந்திரத்தை உறுதிசெய்ய முடியும்.

எம்மில் பலர் எத்தனையோ தேசிய கட்சிகளிற்கு ஆதரவாய் இருந்தாலும் எமது பொதுப் பிரச்சனையை முன்வைத்து ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு.யூலியா அவர்களை கட்சி பேதமின்றி ஆதரித்து எமது மக்களின் விடுதலையை முனைப்பு பெறவைக்க வேண்டும்.

இவரின் வெற்றிக்காக அனைத்து தமிழ்ச் சங்கங்களையும் ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொள்வதுடன் பிறநாட்டு நண்பர்களின்; ஆதரவையும் திரட்ட உழைக்கவேண்டுமென தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

இதே வேளையில் லண்டனில் போட்டியிடும் இளம்தலைமுறை செல்வி. ஜனனி ஜனநாயகத்தின் வெற்றிக்கும் எமது வாழ்த்துடன் கூடிய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு – பிரான்ஸ்

இராணுவத் தளபதிக்கு ரஷ்யத் தூதுவர் பாராட்டு

russian_ambassador.pngஇலங் கையில் கடந்த 30 வருடங்களாக நீடித்திருந்த புலிப் பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமைக்காகவும் அதற்காக இராணுவத்தில் ஜெனரல் தரத்துக்குப் பதவி உயர்த்தப்பட்டமைக்காகவும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுக்கு இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் விளாடிமிர் பி. மிகாய்லொவ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

வடபகுதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கையளிப்பு

susil_prem_minister.jpgஇடம் பெயர்ந்த வடபகுதி மாணவர்களுக்கு 46 மில்லியன் ரூபா பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் உத்தியோகபூர்வ வைபவம் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் இன்று (2) கல்வி அமைச்சில் நடைபெறறது. இதன் போது வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக சேகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேலதிக புத்தகங்கள், சீருடைகள், கல்வி உபகரணங்கள், மேசை, கதிரை மற்றும் உணவு வகைகள் என்பவற்றை கல்வி அதிகாரிகள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி பொருட்கள் 25 லொறிகளில் வவுனியா நலன்புரி கிராமங்களுக்கு அனுப்பப்பட உள்ளதோடு அவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நலன்புரிக் கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு கூறியது. இதனையொட்டி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அடங்கலான குழுவினர் வவுனியாவுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

இடம்பெயர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேவைகள் குறித்து ஆராய கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார இருவாரங்களுக்கு முன் வவுனியா சென்றிருந்தார். இதன் போது மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க உடனடியாக தேவைப்படும் உபகரணங்கள் குறித்து ஆராயப்பட்டது. இதன்படி 25 ஆயிரம் சீருடைகள், 500 மேசைகள், 1500 கதிரைகள், 5 இலட்சம் பாடநூல்கள் உள்ளிட்ட உபகரணங்கள் 5 ஆம் திகதி பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.

இதேவேளை 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப்பரீட்சை என்பவற்றுக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவதற்கான விசேட வகுப்புகளும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன. பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இதற்காக நியமிக்கப்பட உள்ளனர்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் – இரண்டு தொழிற்பயிற்சி நிலையங்கள்

piyasena_gamagesss.jpgவடக்கில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தொழிற்பயிற்சி அளிப்பதற்காக இரண்டு வாரங்களுக்குள் இரண்டு தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் அமைக்கப்படும் என தொழில் மற்றும் தொழில் நுட்பப் பயிற்சி அமைச்சர் பியசென கமகே தெரிவித்தார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வவுனியா நிவாரணக்கிராமங்களை அன்மித்து இவை அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தேற்கில் இளைஞர்கள் யுவதிகள் பெற்றுக்கொள்ளும் பயிற்சிகளை வடக்கிலுள்ளவர்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

‘இயலாது என்ற சொல்லுக்கு இனி அரசின் அகராதியில் இடமில்லை’ – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgமுடியாது என கைவிடப்பட்ட பலவற்றை நாம் சாத்தியமாக வெற்றி கொண்டோம். இயலாது என்ற சொல்லுக்கு இனி அரசின் அகராதியிலேயே இடமில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தீவிரவாதம், போதை ஒழிப்பு உட்பட பல்வேறு வெற்றிகளை ஈட்டியுள்ள யுகமிது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தீவிரவாதிகளுக்கு அஞ்சிய யுகமொன்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இனி அபிவிருத்தியும் ஒழுக்கமும் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கென 959 புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நியமனக் கடிதங்களைக் கையளித்து உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பிரதியமைச்சர் எம். சச்சிதானந்தன் உட்பட கல்வித்துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியும் வேலையில்லாத் திண்டாட்டமும் நிலவுகின்ற இத்தருணத்தில் நாம் புதிய தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிலையில் உள்ளோம். எதிர்காலம் குறித்து சிந்தித்து பொருத்தமான தீர்மானங்களை நாம் எடுத்தமையே இதற்குக் காரணம். எமது நாட்டுக்குப் பொருத்தமான திட்டங்களை வகுத்து எதிர்காலத்தில் அவற்றை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

கல்வித் துறையில் சுமார் ஆயிரம் பட்டதாரிகளுக்கு புதிய நியமனம் வழங்கப்படும் மகிழ்ச்சியான நாளிது. நாம் பதவிக்கு வந்த மூன்று வருடகாலத்தில் 28,000 புதிய ஆசிரிய நியமனங்களை எம்மால் வழங்க முடிந்துள்ளது.

அரச துறையில் ஆறரை இலட்சம் பேரே தொழில் புரிந்ததுடன் சுற்று நிருபம் மூலம் அத்துறையின் வளர்ச்சியைத் தடுத்து புதிய நியமனங்களை நிறுத்திய யுகம் ஒன்றிருந்தது. அரச துறையை மட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அத்துறையை 12 இலட்சம் பேர் கொண்டதாக வளர்த்தெக்க முடிந்துள்ளமை எமது திட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகிறது.

அரச துறையில் ஆசிரியர் தொழில் என்பது உன்னதமானதும் கெளரவமானதுமானதொரு தொழிலாகும். நாட்டின் தலைவராயினும் கூட தமது ஆசிரியரைக் கனம் பண்ணுவது கெளரவமானதாகும். இத்தகைய உன்னதமான பணி செய்பவர்கள் நாட்டைப் பற்றிய தெளிவுடன் அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்குவது அவசியமாகும்.

2004ம் ஆண்டு இந்நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை 8.3 வீதமாக இருந்தது. எனினும் அது இன்று 5.1 வீதமாகக் குறைந்துள்ளது. எந்த அழுத்தமோ நிபந்தனைகளோ இன்றி நாம் நாட்டை அபிவிருத்தியில் இட்டுச் செல்கிறோம். பயங்கரவாதத்தைப் போன்றே போதையற்ற இலங்கையை உருவாக்குவதிலும் நாம் காத்திரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். புகையிலை, மது போன்றவற்றினால் அரசாங்கத்தின் திறைசேரிக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் குறைவடைகின்ற போதும் நாம் பணம் பற்றி சிந்திக்காமல் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்கின்றோம்.

நுரைச்சோலை, மேல்கொத்மலை மின்திட்டங்கள் உட்பட கைவிடப்பட்டிருந்த பாரிய அபிவிருத்திகள் பலவற்றை நாம் நடைமுறைப்படுத்தி வருகிறோம். துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றைப் புதிதாக நிர்மாணிப்பதுடன் நகரங்களுக்கு மட்டுப்படுத்தியிருந்த அபிவிருத்தியை கிராமங்களின் அடிமட்டத்திற்கும் எடுத்துச் செல்ல முடிந்துள்ளது.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பிரதேசங்களும் அபிவிருத்தி கண்டு வருகின்றன. நாம் பதவியேற்ற போது 5 வீதமாக விருந்த தகவல் தொழில் நுட்ப அறிவை 28 வீதமாக அதிகரிக்க முடிந்துள்ளது. வடக்கு கிழக்கில் நாம் சகோதரத்துவத்தினைக் கட்டியெழுப்புவதுடன் நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக அவசியமானது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த கடைசி பயணியான மில்வினா டீன் மரணம்

02-titanic.jpgடைட்டா னிக் கப்பலில் பயணம் செய்தவர்களில் உயிருடன் இருந்த கடைசி பயணியான மில்வினா டீன் என்ற பெண் இங்கிலாந்தில் தனது 97வது வயதில் மரணமடைந்தார். கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்து சென்று கொண்டிருந்த டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் பனிபாறையில் மோதி அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் 1,517 பேர் மரணமடைந்தனர். 706 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். விபத்தில் அவரது தந்தை மரணமடைந்துவிட்டார். அப்போது இரண்டு மாத கை குழந்தையாக இருந்த மில்வினா டீன், அவரது தாயார் மற்றும் சகோதரர்கள் உயிர் பிழைத்தனர்.

தற்போது விபத்து நடந்து கிட்டதட்ட நூறு ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் மில்வினாவை தவிர்த்து மற்ற அனைவரும் ஏற்கனவே இறந்துவிட்டனர். திருமண பந்தத்தில் இணையாமல் தனிமையில் வாழ்ந்து வந்த மில்வினா கடைசி காலத்தில் வறுமையில் வாடினார். இதையடுத்து இவர் தனது வீட்டு பொருட்களை ஏலத்துக்கு விட்டு வாழ்க்கை நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதை கேள்விப்பட்ட டைட்டானிக் திரைப்பட நாயகன் டீ கேப்ரியோ, நாயகி கேட் வின்ஸ்லெட் மற்றும் இயக்குனர் ஜேம்ஸ் காம்ரூன் ஆகியோருக்கு அவருக்கு ரூ. 17 லட்சம் உதவி செய்தனர். மேலும் அவர் வறுமை காரணமாக ஏலத்தில் விட்ட அவரது பொருட்கள் அனைத்தும் அவரிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் 97 வயதான மில்வினா நேற்று முன்தினம் வயது முதிர்வு மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக இங்கிலாந்து மருத்துவமனையில் மரணமடைந்தார்.

கொழும்பில் இன்றும் நாளையும் பல பிரதான வீதிகள் பூட்டு

02colombo.jpgகொழும்பு காலிமுகத் திடலில் நாளை நடைபெற உள்ள படையினரின் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் கொழும்பிலுள்ள பல பிரதான வீதிகள் போக்குவரத்துக்காக மூடப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. மூடப்படும் பாதைகளுக்கு பதிலாக மாற்றுப் பாதைகளினூடாக பயணம் செய்யுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

இன்று இரவு (02) 10.00 மணி முதல் தேசிய வைபவம் முடிவடையும் வரை பாதைகள் மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பிலிருந்து கரையோரப் பகுதிக்கான ரயில் சேவை இன்று (02) நள்ளிரவு முதல் நாளை பிற்பகல் 4.00 மணிவரை பம்பலப்பிட்டி வரையே இடம்பெற உள்ளது. மருதானைக்கும் பம்பலப்பிட்டிக்குமிடையில் ரயில் சேவைகள் எதுவும் இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மூடப்படும் பாதைகள்

* காலிமுகத்திடலில் இருந்து பம்பலப்பிட்டி வரையான காலி வீதி.

* அப்துல் கபூர் மாவத்தை – காலி வீதி சந்தியில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான பாதை

* கிரீன்பாத் – பிளவர் வீதி சமிக்ஞை விளக்கு சந்தியில் இருந்து லிபர்டி சுற்றுவட்டம் வரை

* ஸ்ரீமத் ஜேம்ஸ் பீரிஸ் வீதி – பித்தளை சந்தியில் இருந்து கொம்பனித் தெரு சமிக்ஞை விளக்கு வரை * பெரஹர வீதி – ஸ்ரீமத் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் இருந்து பெரஹர வீதி வரை

* நவம் வீதி – ஸ்ரீமத் ஜேம்ஸ் பீரிஸ் வீதியில் இருந்து பெரஹர வீதி வரை

* நீதிபதி அக்பர் மாவத்தை – மாக்கான் மாக்கார் மாவத்தை கொம்பனித்தெருவில் இருந்து காலிமுகத்திடல் வரை

* இப்பம்வெல சந்தியில் இருந்து யூனியன் பிளேஸ் வரை

* டீ. ஆர். விஜேவர்தன மாவத்தையில் இருந்து காமினி சுற்றுவட்டம் மற்றும் ரீகல் சுற்றுவட்டம் வரை.

* லோட்டஸ் வீதி, சீ. ரீ. ஓ. சந்தி, செரமிக் சந்தி என்பவற்றில் இருந்து பழைய பாராளுமன்றம் வரை

* யோர்க் வீதி – செரமிக் சந்தியில் இருந்து யோர்க் வீதி வரை.

* செத்தம் வீதி – சீ. ரீ. ஓ. சந்தியில் இருந்து யோர்க் வீதி வரை

* வை. எம். பீ. ஏ. சந்தியில் இருந்து பாரென் ஜெயதிலக மாவத்தை வரையான வீதி.

மாற்று வீதிகள்

* புறக்கோட்டையில் இருந்து காலி வீதிக்கு செல்லும் வாகனங்கள் புறக்கோட்டை, ரெக்லமேசன் வீதி, லோட்டஸ் வீதி, சீ. ரீ. ஓ. சந்தி, ஒல்கட் மாவத்தை, தொழில் நுட்பக் கல்லூரி சந்தி, மருதானை வீதி, பாலம் சந்தி, டார்லி வீதி, இப்பம்வல சந்தி, லிப்டன் சுற்றுவட்டம், சி. டபிள்யு. டபிள்யு. கன்னங்கர வீதி, நந்தா மோட்டார் சந்தி, ரீட் வீதி, தும்முள்ள சந்தி, புளர்ஸ் வீதி, பம்பலப்பிட்டிய சந்தி ஊடாக காலி வீதியை வந்தடையலாம்.

* காலி வீதி ஊடாக புறக்கோட்டை வரை வாகனங்கள் பம்பலப்பிட்டிய சந்தி, புளர்ஸ் வீதி.

தும்முள்ள சந்தி, ரீட் மாவத்தை, தேர்ஸ்டன் வீதி, ரோயல் கல்லூரி சுற்று வட்டம், கேம்பிரிஜ் பிளேஸ், கட்டுகே சந்தியால் வலதுபக்கமாக திருப்பி நந்த மோட்டார் சந்தி, ஹோர்டன் சுற்று வட்டம், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், யூனியன் பிளேஸ், இப்பம்வெல சந்தி, டார்லி வீதி, காமினி சுற்றுவட்டம், பாலம் சந்தி, முதலாவது மருதானை வீதி, தொழில்நுட்பக் கல்லூரி சந்தி, ஹில்டன் மாவத்தையூடாக புறக்கோட்டையை வந்தடையலாம்.

வடக்கின் இரு பாதுகாப்புத் தலைமையகங்களுக்கு புதிய தளபதிகள் நியமனம் – பாதுகாப்பு அமைச்சு தகவல்

வடக்கில் மீட்கப்பட்டுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்ட இரு பாதுகாப்புத் தலைமையகங்களுக்கு இரண்டு புதிய கட்டளைத் தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி பாதுகாப்புத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஷன்ன குணதிலகவும் முல்லைத்தீவு பாதுகாப்புத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் நந்தண உடவத்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நியமனங்கள் இன்று முதல் அமுலுக்கு வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.