இடம் பெயர்ந்த வடபகுதி மாணவர்களுக்கு 46 மில்லியன் ரூபா பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் உத்தியோகபூர்வ வைபவம் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் இன்று (2) கல்வி அமைச்சில் நடைபெறறது. இதன் போது வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக சேகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேலதிக புத்தகங்கள், சீருடைகள், கல்வி உபகரணங்கள், மேசை, கதிரை மற்றும் உணவு வகைகள் என்பவற்றை கல்வி அதிகாரிகள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
மேற்படி பொருட்கள் 25 லொறிகளில் வவுனியா நலன்புரி கிராமங்களுக்கு அனுப்பப்பட உள்ளதோடு அவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நலன்புரிக் கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு கூறியது. இதனையொட்டி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அடங்கலான குழுவினர் வவுனியாவுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
இடம்பெயர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேவைகள் குறித்து ஆராய கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார இருவாரங்களுக்கு முன் வவுனியா சென்றிருந்தார். இதன் போது மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க உடனடியாக தேவைப்படும் உபகரணங்கள் குறித்து ஆராயப்பட்டது. இதன்படி 25 ஆயிரம் சீருடைகள், 500 மேசைகள், 1500 கதிரைகள், 5 இலட்சம் பாடநூல்கள் உள்ளிட்ட உபகரணங்கள் 5 ஆம் திகதி பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.
இதேவேளை 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப்பரீட்சை என்பவற்றுக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவதற்கான விசேட வகுப்புகளும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன. பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இதற்காக நியமிக்கப்பட உள்ளனர்.