இன்று (யூன் 25) காலை 5 மணியளவில் யாழில் இருந்து வெளிவரும் உள்ளுர் பத்திரிகைகள் தீக்கிரையாக்கபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் வலம்புரி உதயன் தினக்குரல் ஆகிய பத்திரிகைகளே தீக்கிரையாக்கபட்டு உள்ளது. யாழ் புறநகர்ப் பகுதிகளான ஆணைப்பந்தி, கன்னாதிட்டி ஆகிய பகுதிகளில் வைத்து இப்பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன.
கன்னாதிட்டியில் நடந்த இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி ஒருவர் இது பற்றி தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்துபேர் வரையானோர் விநியோகத்தரிடம் இருந்து பத்திரிகைகளைப் பறித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகத் தெரிவித்தார். வந்தவர்கள் தீ வைத்துவிட்டுச் செல்ல மக்கள் அத்தீயை அணைத்ததாகவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
வலம்புரி உதயன் தினக்குரல் ஆகிய மூன்று பத்திரிகைகளும் ஒரே நிறுவனத்தினூடாகவே விநியோகிக்கப்படுவதால் மூன்று பத்திரிகைகளுமே ஒரே நேரத்தில் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது. மேலும் சாவகச்சேரி பருத்தித்துறை ஆகிய பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்ட பத்திரிகைகளும் தீக்கிரையாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தேசம்நெற்க்கு தகவல் தருகையில் யாழ் நகரில் உதயன் தினக்குரல் ஆகிய இரு பத்திரிகைகளினது விற்பனையையும் தன்னால் காணக் கூடியதாக இருந்ததாகவும் ஆனால் வலம்புரி பத்திரிகையை நகரில் எங்கும் காணக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்கான காரணம் இன்னமும் சரியாகத் தெரியவில்லை எனத் தெரிவித்த அவர் இப்பத்திரிகைகளில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சிலருக்கு எதிரான செய்தியை பிரசுரிக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் அது பிரசுரிக்கப்படாததனால் இப்பழிவாங்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று பேசப்படுவதாகவும் தெரிவித்தார்
இன்று யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பதிவு செய்யும் இறுதிநாளாகும். தேர்தல் களம் சூடாகி உள்ள நிலையில் எதிர்கால நிகழ்வுகளை கட்டியம் கூறும் நிகழ்வாக இத்தீவைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
சென்ற வாரம் இலங்கை ஊடக அடக்குமுறை காரணமாக சிறந்த ஊடகவியலாளர்களை இழந்துள்ளதென அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு Committe to Protect Journalist – CPJ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து உரிய கவனம் செலுத்தப்படாதமை மிகவும் வேதனையளிப்பதாக அவ்வமைப்பிக் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜோல் சிமோன் தெரிவித்திருந்தார்.
இவ்வாண்டில் மட்டும் உலகெங்கும் 17 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கா சுயாதீன ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்தி ஆகிய இருவரும் இலங்கையர்கள். மே 31 வரையான ஓராண்டு காலத்தில் உலகின் பலபாகங்களிலும் இருந்தும் 37 ஊடகவியலாளர்கள் தங்களது நாடுகளை விட்டு அச்சம்காரணமாக வெளியேறி உள்ளனர். அவ்வாறு வெளியேறியவர்களில் மூன்றில் ஒருவர் – 11 பேர் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது இலங்கையின் மோசமடைந்துவரும் ஊடக நிலைமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.
அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொண்டுள்ளதாகக் கூறிக்கொண்டிருக்கையில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாக ஊடகவியலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
1992 முதல் 2009 வரையான காலப்பகுதியில் இலங்கையில் 18 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இலங்கை ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான முதல் இருபது நாடுகளில் 11வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் ஊடகங்களின் நிலை மிகவும் துயர்மிக்கது. சர்வதேச சமூகத்தை எட்டாத யாழ் தமிழ் ஊடகங்கள் பற்றிய மேலதிக விபரங்களை அறிய விரும்புபவர்கள் அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும். – Fact-finding report by the International Press Freedom Mission to Sri Lanka : Jaffna’s media in the grip of terror – August 2007. தற்போதைய தீ வைப்புச் சம்பவம் ஊடக சுதந்திரம் இலங்கை ஊடகங்களுக்கு வெகு தொலைவில் உள்ளதையே வெளிக்காட்டுகிறது.