யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை என்பவற்றுக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் செயலகம் இன்று அறிவித்துள்ளது.
இவ்விரு தேர்தல்களுக்குமான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்ததையடுத்து தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல்களுக்கு வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானது.
இத்தேர்தல்களில் யாழ். மாநகர சபைக்கு 23 உறுப்பினர்களும் வவுனியா நகர சபைக்கு 11 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகியவற்றுக்கு ஐ.ம.சு.முன்னணி நேற்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது. முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் வேட்புமனுக்களைக் கையளித்தார். இதன்போது அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் றிஷாத் பதியுதீன் ஆகியோரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.