ஐ.ரீ.என். தொலைக்காட்சிச் சேவை வழங்கும் தனித் தமிழ் தொலைக் காட்சி அலைவரிசையான வசந்தம் ரீ.வி. இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழ் பேசும் மக்களுக்காக இந்த தொலைக் காட்சிச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.40 அளவில் உத்தியோகபூர்வமாக இந்தத் தொலைக்காட்சிச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அமைச்சர்களான அதாஉல்லாஹ். அமீர் அலி. விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஐ.ரீ.என். தொலைக்காடசிச் சேவையின் தலைவர் அநுர சிறிவர்தன இதற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் எஸ்.குலேந்திரன் இதன் உதவி முகாமையாளராகவும் எம்.சித்தீக் ஹனீபா செய்தி ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றனர். வசந்தம் ரீ.வி.யின் ஒலி ஒளிபரப்பு வீ.எச்.எப். 9 அலை வரிசை ஊடாக தற்போது மேல் மாகாணத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் விரைவில் நாடளாவிய ரீதியில் சேவையை இடம்பெறச்செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை வசந்தம் தொலைக்காட்சிச் சேவை ஊடாக நிகழ்ச்சிகள் ஒலி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளன. தமிழ் பேசும் இரசிகர்களைக் கவரும் வகையில் பொழுது போக்கு அம்சங்கள் செய்திகள் அரசியல் விவகாரங்கள் சிறுவர் நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகளை ஒலி ஒளிபரப்புச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. மதியம் 1.00 மணி மாலை 6.00 மணி இரவு 8.00 மணி என செய்திகள் இதன் ஊடாக ஒலி ஒளிபரப்பப்படுகின்றன.