‘துர்ப்பாக்கிய துப்பாக்கிகள்’. ‘தம்பி வருவான்’ – நோர்வே நக்கீரா

warpoems-pict.gif

துர்ப்பாக்கிய துப்பாக்கிகள்

கண்ணீராலே கருக்கட்டி
கருத்துக்களைச் சப்பித்துப்பி
தலைகீழாய் நின்று துள்ளும்
பத்திரிகைகளில் இரத்தம் சொட்டும்
பேனாக்களை ஏன் சுட்டீர்கள்.

கருத்தில்லாதவன் களத்தில் நின்றால்
கருகிப்போவது கருத்துக்கள் மட்டுமல்ல
உயிர்களுக்கும் உலைவைப்புத்தான்.
ஏட்டறியாதவன் எடுத்த துப்பாக்கியால்
ஏழுலகெங்கும் போர்க்களமாகும்

கருத்தற்றவனே உருக்கெடுப்பான்
கருவின்றிப் பிறந்தவர்களா நீங்கள்?

நீதியின் வாசலைத் திறந்தது குற்றமா?
உண்மையை உலகிற்கு உணர்த்துவது குற்றமா?
ஏழைகள் உடலிலும் வயிறுண்டு என்பது குற்றமா?
ஆழியில் போய் அழிந்து விடும் ஆற்றினை
அள்ளுரைக் கழுவத் திருப்பியது குற்றமா?

பெண்களையும் நாங்கள்; மனிதர்கள் என்றோம்
பாமரமக்களுக்குப் பகுத்தறிவு கொடுத்தோம்
ஆதிக்க வெறியரின் ஆணிவேரை உடைத்தோம்.
மதங்களைக்காட்டி மதங்கொண்டு திரிவோரை
மக்களுக்குக்காட்டினோம்.
அறிவை ஊட்டினோம்.
எது குற்றம்?

சுடுகோல் கொண்டு
நாட்டைச் சுடலையாக்கும்
கொங்கோலர் கொடுமையை சுட்டிக்காட்டினால்
சுடுகோல் ஏன் சுடுகிறது?

பாட்டில் கிடந்த சுடுகோல்களை
தூக்கி நிறுத்திய தூண்கள் நாங்கள்.
எழுத்துக்களாலே எழுந்தவர்கள் நீங்கள்
கைகொடுத்தவன் கைகளை அறுக்கும்
கயமையை நீர் எங்கு கற்றீர்.

எம்பேனாக்கள் முன்னால்
உம் பேய் நாக்கு பொய்யாகும்.
எழுத்துக்களின் எழுச்சியில்
ஏழு உலகும் உயிர்க்கும்.
பேனாவில் நின்றே சேவல்கள் கூவும்
பேனாவின் கூர்மையில் சூரியன் சிவக்கும்
அறியாமை இருள் அன்றே அகலும்.

மண்ணில் வீழ்ந்த எழுத்தாளர் உதிரம்
போனாவூடு புறப்படுமானால்
துப்பாக்கியரே!
பேனாய்போவீர்.
தலைகள் தேடும் பேனாப்போவீர்
நகங்களிடையே நசிங்கிப்போவீர்.

துப்பாக்கிச் சிறைக்குள்ளும்
பேனாக்கள் உயிர்க்கும்.
எம் எழுத்துக்கள் எங்கும் எழுந்து சிரிக்கும்.
மீண்டும் துப்பாக்கிகள் குப்புறக்கிடக்கும்
புதியதொருயுகம் பெருமையுடன் பிறக்கும்.

தம்பி வருவான்

இருண்ட குடிலுக்குள் என்றும்
ஈரமான இரவுகள்
ஈரமான இதயத்தால் ஒழுகும்
கண்ணூடு வெள்ளங்கள்
நேசம் நெஞ்சை நெருட
பாசம் வழியும் கண்களால்

நம்பிக்கை எனும் நூல்திரியில்
நடுங்காது சுடர்விடும் விழிவிளக்குகள்
“தம்பி வருவான்”
விழிச்சுடரை இமைமூடி அணைத்தாலும்
பாசச்சுடர் சுட்ட
இமை அணைய மறுக்கும்.
இரவும் பகலுமாக எரிந்து கொண்டிக்கும்
அகல்விளக்காய் விழிவிளக்குகள்.

தாடைகளுள் பிடிபட்டாலும்
நாக்கு நடக்கிறதே வதந்தி கொண்டு.
தாடைகளில் இல்லாவிடில்.. .. ..
நாடே காடுதான்.

“படிக்க முடியாதாதவன் ஓடிப்போனான்”
“எந்தப் பெட்டையோடையோ.. .. ?
“வங்கிக் கொள்ளையாம்”
“பொலிஸ் தேடுது”
“.. .. .. .. .. .. .. .. .. .. .. ”

கேள்வி கேள்விகளாய் வேள்விகள்..?..?..?
நாக்குகள் வெத்த வெடிகளில்
காதுகள் சிதறின.

நம்பிக்கை மட்டும் கண்வித்திருந்தது
“தம்பி வருவான்”

பேயாடும் நடுநிசியில் நாயோடி வரவேற்கும்
சப்பாத்துச் சத்தங்கள் சருகுக்குள் சத்தம் கேட்கும் வேளை
தாயைத்தேடிக் கன்று “அம்மா.. அம்மா”
தம்பி வந்திட்டான்.. .. தம்பி வந்திட்டான்
அம்மாவின் ஒருசிறங்கை சாதத்துக்காய்
தம்பி வந்தான்

சோற்றுக்குள் சிக்கியது தொண்டை.
விக்கல் தக்கியது தாயின் விம்மலுக்குள்.
தண்ணீர் கொடுத்தாள்; தாய்
கண்ணெனும் உப்புப்பாறையில் எடுத்து.

உரையாடலைக் கேட்க இரவுக்கு நிசப்தம்
காற்றுக்குக் கூடக் காது முளைத்துக் கொள்கிறது.
“ஏன், எங்கே, எதற்கு போனாய்”
“என்ன செய்கிறாய், செய்யப்போகிறாய், என்ன குறை உனக்கு”
கேள்விகள் வளர
காது கேள்வியாகியது?.?. ?

“விடுதலை, போராட்டம், எதிர்காலம், சமூகம், மண், மக்கள்,
அஜாரம், ஆதிக்கம், வெறி, பாசிசம், மார்கிசம், நாகரீகம், உயிர்
ஊழல், தரப்படுத்தல், தமிழ்ஈழம், அரசியல்.. .. ”

தாயின் தமிழ் அகராதியில் இல்லாத சொற்களை
அவள் எங்கே தேடுவாள்
சருகுகள் காற்றில் அகராதிதேட
காலனின் நினைவு அவன் கருத்துள்.

கருநிழலாய் கலைக்கும் காலன் கைவிடுவது இரவில் மட்டும்தானே
நாய்களின் செய்தியால் நகரத்தொடங்கினான்

“இனி எப்படா வருவாய்”
“தமிழ்ஈழத்தோடை”
“அது என்ன தமிழ்ஈழம்.. என்ன சாதி பெட்டை”
“பெட்டையோ”?
“யாரெண்டாலும் நல்லவளா, குடும்பப்பாங்காய் கொண்டுவா”
அவனை இருள் விழுங்கியது.

இருள் அகற்றும் அகல்விளக்குடன்
விடியும் வரை காத்திருக்கும் விதவைத்தாய்
“தம்பி வருவான்”
காத்திருப்பு தொடர்கிறது.

ஓமந்தையின் ஒரு கொட்டிலில் ஒரு வெடிச்சத்தம்.
நிசப்த்தத்துள் ஒரங்க நாடகம் நிறைவேறியது
நாடகம் “ஒர் உயிரின் நிசப்தமானது”.
தமிழ்ஈழம் தரையில்.
ஈழத்தரையில் விதைக்கப்பட்டான்
முளைக்கவில்லை.
எதிரி வென்றுவிட்டான் தோழனாக.

காதில் விழுந்த வெடிச்சத்தம்
தாயின் நெஞ்சைச் சேராது.
நம்பிக்கை.. ..
நம்பிக்கை தானே வாழ்க்கை.
“தம்பி வருவான்”
என்ற நம்பிக்கை இன்றும் அவளுக்கு.

முப்பது வருடங்கள் முடிந்தும்
தமிழ்ஈழத்துடன் “தம்பி வருவான்” என்ற நம்பிக்கையுடன்
மூச்சுவிடுகிறாள் அந்த முதிர்ந்த தாய்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 Comments

  • சந்தனம்
    சந்தனம்

    நக்கீரா இப்ப துணிவு வந்தென்ன
    காலம் கடந்த துணிவு உயிர் மேல் உனக்கு ஆசை.
    காலம் கடந்த கவிதை துணிந்தவனிற்கு தூக்குமேடை
    பஞ்சனை வாரிசை எங்கேயோ துளைத்து விட்டு
    தமிழனை பற்றி உமக்கென்ன அக்கறை.

    Reply
  • susai
    susai

    தொல்லை தகர்ந்தது
    முட்டுக்கட்டை உடைந்தது
    திறந்தது பரந்த வெளி
    புதுக்கருத்துக்கள் வரட்டும்
    புதுயுகம் திறக்கட்டும்

    Reply
  • Nackeera
    Nackeera

    சந்தனத்திற்குப் பதில்:
    காலங்கடந்து வந்த கவியல்லவிது
    தராக்கி தகர்ந்ததால் எழுத்தாடிய விதியிது
    பற்குணத்தைப் பாடையில் போட்டது கேட்டு
    அறம்பாடிய அன்று அரங்கேற்றிய கோட்டு
    30 வருடங்களின் பின்னும்
    புறமுதுகு காட்டாது மின்னும்
    வெறும் கதவியல்லவிது
    தமிழனின்விதி என்று விதி

    Reply
  • msri
    msri

    உலகில் எத்தனையோ
    விடுதலைப்போர்கள்
    நடந்தன! வென்றன! ஆனால்
    தம்பியின் போருக்கு மட்டும்
    தலைமண்டையில்
    கோடரிக்கொத்தும்;
    கருங்காலிக் கட்டையடியும?
    மக்களை போராடும்
    சக்தியெனக் கணிக்காது;
    “சப்ளையர்கள்” என
    சப்பை கட்டியதாலேயே!

    Reply
  • Nackeera
    Nackeera

    என்காதலில் கருக்கட்டிய என் கரு- விதைகளே
    என்கவிதைகள் சந்தானம்
    துளைய விட்டது நீங்களா?
    துலைய விடவில்லையே நாங்கள்

    சூசைக்கு என் சூச்சிமமான நன்றி
    ஆசைக்கு எழுதினேன் வேறுவழியின்றி

    Reply
  • Nackeera
    Nackeera

    எம் சிறீ!
    போர்கள் நடந்தன
    ஊரோடு வென்றன-எம்நாட்டில்
    பேய்கள் நடந்தன
    பேயாடி முடித்தன
    மண்டையில் கொத்து மாண்டது நாமெல்லோ
    தொண்டையில் தமிழைத் திறக்காத தாலெல்லோ.
    நாட்டில் நடந்ததைப் போரென்று யார் சொன்னார்- அரசுக்கு
    கூட்டிக் கொடுத்த கருணா புலிகள் செயலெல்லோ.
    விடுதைலை என்பது மக்களுக்கென்று உணரா
    தறுதலைகள் செயலென் றுணர்வாய் காண்.

    Reply
  • uma
    uma

    நக்கீரா போராட்டம் என்று ஆரம்பித்த விடயம் யுத்தம் என்ற பரிமாணத்திற்கு மாற்றம் பெற்றதால் பிராந்திய நிலைப்பாடு கவனத்திற்கெடுக்கப்பட்டு பயங்கரவாதம் அழிக்கப்பட்ட நிகழ்வே இலங்கையில் நடைபெற்றது. இதில் கருணாவின் பகுதி தற்செயலாக இடையில் அரசுக்குக் கிடைத்த கருவியாகவே நான் பார்க்கிறேன். கருணா பிரிந்திராவிட்டாலும் புலி அழிக்கப்பட்டிருக்கும் என்பது நிச்சயம்.

    உங்களின் கவிதைகள் அருமை. தொடர்ந்தும் எழுதுங்கள். அரசியலில்தான் தேவையென்றில்லை. அனைத்து தலைப்பையும் தொட்டுச் செல்லுங்கள். இலைமறைகாயாக எம்முள் இருக்கும் எழுத்தாளர்களை வெளிக்கொணரவும் இது உதவும்.நன்றி.

    Reply
  • மாயா
    மாயா

    அருமை நக்கீரா…தொடருங்கள்.

    Reply
  • Nackeera
    Nackeera

    உமா;மாயா ஆதரவுக்கு நன்றிகள்

    Reply
  • Kulan
    Kulan

    //கூட்டிக் கொடுத்த கருணா புலிகள் செயலெல்லோ// பின்னோட்டக் கவியில். கருணாவை மட்டும் எப்படிக் குறை சொல்ல முடியும். புலிகள்தானே அரசடன் சேர்ந்து இயங்கியிருகிறார்கள். இராஜபக்சவை சிம்மாசனத்தில் இருத்தியவர்களே புலிகள் தானே. பிறேமாதாசாவுடன் சேர்ந்து ஆயுதவியாபாரம் செய்தது புலிகள் தானே. கருணாவுடன் புலிகளையும் கவிதையில் சேர்த்தது தான் கவிதையின் சிறப்பு. பின்நோட்டக்கவிதைகளும் நன்றக இருக்கின்றன

    Reply
  • indiani
    indiani

    கருக்கொண்ட ஈழம்
    கருகியதேனோ?
    கருத்தொருமித்த தோழர்
    கருகியதேனோ?

    வட-கிழக்கு மக்கள்
    மாண்டது ஏனோ?
    வந்த பல தீர்வுகள்
    மறைந்தது ஏனோ?

    பார் எல்லாம் பல்
    இளித்தது ஏனோ?
    பரிதவி மக்கள்
    முகாமில் ஏனோ?

    எல்லாம்
    தம்பி வந்ததால்
    போன தம்பி
    திரும்பி வந்ததால்

    தம்பி
    இனி வரமாட்டான்
    வரும்மதி
    வளரும் நிம்மதி

    கருக்கொள் கருத்தால்.
    கூடிக் குழுமிடு
    பிரிவிலும்
    ஒன்றாய் இயங்கிடு
    இன்றே!

    மானிடம் ஓம்பும்
    மானிடம் காத்திடு!

    ஒன்றாய் வாழலாம்
    ஒரு!
    வணங்கா தீவில்
    மனிதரில்
    ஒருவனாய்.

    Reply
  • palli.
    palli.

    இக்கவியை பல்லி
    விமர்சிப்பதா பாராட்டவா
    என எண்ணிய போதுதான்
    பாராட்டு மட்டுமே
    கவி இதுக்கு வேண்டும்

    பல்லியின் செயலோ
    விமர்சனம் என்பதால்
    விமர்சிக்க முயன்றேன்
    விருப்பின்றி நகர்ந்தேன்:

    பல்லி….

    Reply
  • Nackeera
    Nackeera

    கனங்கொண்ட கவிகளை
    தினந்தினம் தரும்
    மனங்கொண்டு மானிடனின்
    சிந்தனைக் களைய
    கவிகொண்ட வந்தேன்
    கவி யான் இல்லாது (கவி என்பது ஆண்குரங்கு சோமசுந்தப்புலவரின் பாடலில் பார்க்கலாம்)

    இந்தியானி!
    தம்பி வரமாட்டான் -இனி
    தம்பி சுட்ட தம்பி வரமாட்டான்
    இனித்தம்பி வரமாட்டான்
    சுட்டவனும் போட்டான்
    சுடுபட்டபவன் வருவானோ?

    காலைப்பொழுதில் கனன்ற வெடியில்
    மாலைகள் மாலையாய் மாமலையாகுமென
    மண்ணோடு மண்ணாய்
    பற்குணத்தை
    சொற்குணம் காட்டாது
    மண்ணுள் மறைந்தான் தம்பி.

    தோழோடு தோழனின்ற
    தோழன் மேல் விழுந்த
    முதல்வெடி இது
    இதுவே மனிதத்துக்கு விழுந்த முழுவெடி

    பல்லி சொல்லிப் போனால்
    பலிக்காத ஒன்றுண்டோ

    பாராட்டுக்கள் பல
    ஆராட்டுக்கள் ஆவதுண்டு
    போராடும் பூமியின் புத்திரர் நாம்
    போராடுவோம் பேனா புனைந்து.

    வாழ்வுயர்த்தும் விமர்சனங்களை
    மக்களுக்காய் வரவேற்போம்
    வாழ்க விமர்சனங்கள்
    விமர்சனங்கள் சனங்களுக்கு
    விசனங்களாக ஆகா வரை
    வாழ்க விமர்சனங்கள்

    நட்புடன் நக்கீரா

    Reply
  • ramesh
    ramesh

    போராட்ட சன்யாசி
    கமண்டல துப்பாக்கி

    அர்த்தமற்ற மதம் அல்ல
    மாற்றம் கொள்ளும் கொள்கை
    புதியசமூகம் மாற்றம் பெறும்
    சமூக விஞ்ஞானத்தால்

    வேறுஏதும் உண்டோ
    இல்லை
    எல்லாமே பரீட்சித்து
    தோற்றுப்போன
    பழையபாடம்
    தமிழீழப்பாடல்

    செஞ்சூரியன் எம்வழிஎன
    புதியபாதை தேடுவோம்
    சமமாய் வாழ்வோம்
    சகோதர மொழியுடன்
    ஒன்றிப் பிணைவோம்
    சிங்களதமிழ்
    இலங்கையராய்
    சிறீலங்கனாய்

    Reply
  • Nackeera
    Nackeera

    ரமேஸ்!
    சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை
    நிந்தனம் செய்வதா அரசகடமை?
    சமமனிதனாய் தமிழனை மதிக்கும் வரை
    போராட்டம் நடைபெறும் அதுவரை
    ஆயுதம் தாங்கியது மட்டுமல்லப் போராட்டம்
    அரசியலும் உரிமைக்கான போராட்டமே.

    Reply
  • palli.
    palli.

    //ஒன்றாய் வாழலாம்
    ஒரு!
    வணங்கா தீவில்
    மனிதரில்
    ஒருவனாய்.//

    இதமான வரிகள்
    பதமான கருத்து
    இருந்தாலும் எதுக்கு.?
    வணங்காத தீவு?
    வணங்குபவன் எல்லாம்
    கோளையா? என்ன
    பிறரை மதித்து
    பார் தெரியும்
    வணக்கத்தின் அருமை;
    பின்னரே தெரியும்
    வணங்காத வலிகள்.

    Reply
  • ramesh
    ramesh

    வணங்கா தீவு
    உரிமை கேட்ட தமிழர்க்கு
    உரிமை அளித்த தீவு
    ஒன்றா இரண்டா
    பல ஒப்பந்தங்கள்
    அளித்த தீவு

    இளித்து இளித்து புலிகளை
    வணங்கிய தமிழர்
    பெற்றது பூச்சியம்

    பல தீர்வுகள்
    கொடுத்தாதரித்த
    இந்திய- இலங்கைத் தீவு
    தமிழரை காத்த தீவு
    புலியிடமிருந்து காத்த தீவு

    இன்றோ நாளையோ
    புதிய பொதி
    புக உள்ள
    இலங்கைத் தீவு

    தமிழர் சிங்களவர்
    வணங்கும் தீவு
    இலங்கைத் தீவு
    புலிக்கு மட்டும்
    வணங்காத் தீவு

    சிங்களர் அல்ல
    தமிழரும்
    புலிக்கு
    வணங்காத் தீவு
    இலங்கைத் தீவு.

    Reply
  • Karthiha
    Karthiha

    காலத்தால் கருகிய
    காளைகள் இருவருக்காய்
    கவிதை இரு தந்த
    கவிஞனுக்காய்

    தளம் ஒன்றளித்தாயோ
    தளமேயுனக்கு நான் முதல்
    தலைவணங்குறேன் நானுமெழுத
    தளம் ஒன்றளித்தமைக்காய்

    பேசமுடியாதொரு தேசத்தில் பிறந்து
    பேசும் ‘தேசம்’ அதில் வலம்வந்து

    கட்டுரையாளனோ கருத்தாளனோ
    கட்டுரையாகவோ கவிதைவழியாகவோ
    எடுத்துரைக்கலாம் எம்கருத்தை
    என்பதற்கோர் எடுத்துக்காட்டாய்

    அமைந்ததோர் பக்கமாம் அதில்
    அரங்கேறுமென் கவிதையிதில்
    அடுக்கடுக்காய் முகிழ்த்த
    அழகான பின்னூட்டத்தில்

    நட்பான நக்கீராவிற்கு
    நல்வாழ்த்துக்கள்!!

    Reply
  • Nackeera
    Nackeera

    கார்த்திகா!
    வாழும் போது வாழ்தா மனிதன்
    மாழும் போது மாலையிடுகிறான்
    வாழும் போது வாழ்த்துங்கள்
    கார்த்திகாவிடம் கேழுங்கள்

    அந்தரத்தில் திரிந்த தம்பியின் சுடுகோல்
    சுந்தரத்தின் கைச்சுடுகோலைச் சுட்டதம்மா
    பற்றியெழுந்த பொறாமைத் தீயில்
    பற்குணத்தையும் போட்டானம்மா.

    கண்முன்னே நடந்த நிகழ்வு
    காதுகளுக்கு வரமுன்னே
    மண்ணுக்குள் போனானம்மா
    பற்குணம் என்றொரு சற்குணன்
    பொற்குணனான சுந்தனுடன்
    அற்றுணை ஈழமும் போனதம்மா போ

    Reply